டாட்டா குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு என்ன ?
Market Capitalization of Tata Group of Companies
புதிய தொழில்முனைவு புகுதலும், பழையன கழிதலுமாக இருந்தாலும், தொழில்களில் நெறிமுறைகளை ஏற்படுத்தி நீண்டகாலம் பின்பற்றுபவர்கள் சிலரே. அப்படிப்பட்டவர்கள் சிறந்த தொழிலதிபர்களாகவும், மாபெரும் பணக்காரர்களாகவும் உருவெடுக்கின்றனர். உலக பணக்காரர்கள் வரிசையில் உள்ளவர்களின் மதிப்பு என்னவோ முதலீட்டாளர்களை உள்ளடக்கிய (நம்மையும் சேர்த்து) சொத்து மதிப்பாக தான் சொல்லப்படுகிறது. உண்மையில் உலக பணக்காரர்களில் முதலிடம் பிடித்த நபரிடம் உள்ள மதிப்பு அவருடைய சொந்த மதிப்பாக இருப்பதில்லை.
ஆம், அவருடைய நிறுவனத்தின் சந்தை மதிப்பாக தான் உள்ளது. நாம் நினைப்பது போல சந்தை மதிப்பை அவ்வளவு எளிதாக அடைந்து விட முடியாது. அப்படியே பெருமளவிலான சந்தை மதிப்பை பெற்றிருந்தாலும் அதனை பல வருடங்களுக்கு தக்க வைப்பது சவாலான விஷயம் தான். ஒவ்வொரு நாட்டின் அரசுக்கு மக்களின் வரி பணம் எப்படி தேவையோ, அது போல மக்களின் நம்பிக்கையும், முதலீடும் சந்தையில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு தேவை.
பாரம்பரிய தொழிலாக இருந்தாலும், நாணயமாக நீண்டகாலம் தொழில் செய்யும் நிறுவனங்களை தான் சந்தை வரவேற்கிறது. புதிய சிந்தனைகள் மற்றும் தொழில்நுட்பங்களை கொண்டு எளிமையான ஸ்டார்ட் அப் நிறுவனமாக வலம் வந்தாலும், மக்களுக்கு அளிக்கப்படும் சேவை சிறப்பாக இருக்கும் நிலையில் சந்தை அதனை வரவேற்க தயங்குவதில்லை.
ஒவ்வொரு வருடமும் துவங்கப்படும் நிறுவனங்கள் பல, அதனை காட்டிலும் மூடப்படும் தொழில்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக தான் உள்ளது. இதற்கான காரணங்கள் பலவாக இருந்தாலும், நெறிமுறைகளை வகுத்து தொழில் புரிபவர்களை நுகர்வோர் சந்தை எப்போதும் எதிர்பார்த்து கொண்டு தான் இருக்கிறது. அதுவும் நீண்டகாலம் தொழில் புரியும் நிறுவனங்கள் என்றால், மக்களுக்கு அதன் மீதான நம்பிக்கை அதிகம். அப்படிப்பட்ட ஒரு நிறுவனம் தான் டாட்டா குழுமம்(Tata Group).
1868ம் ஆண்டு துவங்கப்பட்ட நிறுவனம் தான் டாட்டா எனும் தனியார் நிறுவனம். இன்று லட்சங்களில் பணியாளர்களையும், பில்லியன் டாலர்களில் வருவாயையும் கொண்டிருக்கிறது. பெரும்பாலும் அனைத்து துறைகளிலும் கால்பதித்த இந்த குழுமத்தின் நிறுவனங்கள் டாட்டா என்ற பிராண்டுடன்(Brand) பெயரை குறிக்கும். உலகளவில் பல நிறுவனங்களை கையகப்படுத்தலும் டாட்டா குழுமத்தின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. இந்திய தொழிற்துறையில் டாட்டா என்ற பெயரை கொண்டிருக்காமல் பல நிறுவனங்கள் டாட்டா குழுமத்திற்கு சொந்தமாக உள்ளன.
பங்குச்சந்தையில் டாட்டா குழும நிறுவனங்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. சந்தையின் முக்கிய குறியீடுகளில்(Index) தவிர்க்க முடியாத இடத்தை டாட்டா குழும நிறுவனங்கள் பெற்றுள்ளது. அப்படிப்பட்ட சில டாட்டா குழும நிறுவனங்களின் தற்போதைய சந்தை மதிப்பை காண்போம்.
நவம்பர் 26ம் தேதியின் படி (ரூபாய் மதிப்பில்),
- டி.சி.எஸ்.(Tata Consultancy Services) – 10.21 லட்சம் கோடி
- டைட்டன் கம்பெனி – 1.18 லட்சம் கோடி
- டாட்டா ஸ்டீல் – 65,000 கோடி
- இன்டெர்குளோப் (இண்டிகோ) – 59,500 கோடி
- டாட்டா மோட்டார்ஸ் – 58,000 கோடி
- டாட்டா கன்ஸ்யூமர் – 48,000 கோடி
- டாடா கம்யூனிகேஷன்ஸ் – 30,500 கோடி
- வோல்டாஸ் – 25,500 கோடி
- ட்ரென்ட் லிமிடெட் – 25,200 கோடி
- டாட்டா பவர் – 20,000 கோடி
- இந்தியன் ஹோட்டல்ஸ் – 13,400 கோடி
- டாட்டா கெமிக்கல்ஸ் – 9,800 கோடி
- டாட்டா எல்எக்ஸி – 9,400 கோடி
- டாட்டா இன்வெஸ்ட்மென்ட் – 4,700 கோடி
- டாட்டா ஸ்டீல் பிஎஸ்எல் – 3,800 கோடி
- டாட்டா ஸ்டீல் லாங் (Sponge Iron) – 2,000 கோடி
- டாட்டா காபி – 1,900 கோடி
- டாட்டா மெட்டாலிக்ஸ் – 1,600 கோடி
- டின்பிளேட்(Tinplate) கம்பெனி – 1,500 கோடி
- தாஜ் GVK – 900 கோடி
- நெல்கோ – 425 கோடி
இன்னும் இங்கு சொல்லப்படாத நிறுவனங்களும் சந்தையில் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது. இந்திய பங்குச்சந்தையில், சந்தை மதிப்பு அடிப்படையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் (ரூ.12.83 லட்சம் கோடி) முதலிடத்தில் இருந்தாலும், ஒட்டுமொத்த சந்தை மதிப்பில் கணிசமான பங்களிப்பை டாட்டா குழுமம் மட்டுமே கொண்டுள்ளது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை