Tag Archives: gdp india

நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் – 7.80 சதவீதம் – மார்ச் 2023

நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் – 7.80 சதவீதம் – மார்ச் 2023

India’s unemployment rate(CMIE Data) – 7.8 Percent in March 2023

நாட்டில் உள்ள 15 வயதுக்கு மேற்பட்ட சுமார் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான நபர்களை கொண்டு, அவர்களை நேரடியாக சந்தித்து கடந்த 30 நாட்களின் சராசரி அடிப்படையில், வேலைவாய்ப்பின்மை விகிதம் கணக்கிடப்படுகிறது. மாதந்தோறும் வெளியிடப்படும் இந்த அறிக்கையில் மாநிலங்கள் வாரியாகவும், நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் காணப்படும் வேலைவாய்ப்பின்மை விகிதத்தையும் எடுத்துரைக்கிறது. 

ஏற்கனவே வேலையிழந்தோர் தற்போதைய நிலையில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனரா, வேலைக்கு செல்வதற்கான ஆர்வம் அவர்களிடம் காணப்படுகிறதா மற்றும் வேலை கிடைக்காததற்கான காரணம் என்ன போன்ற விவரங்களையும்(Consumer Pyramids Panel) இம்மதிப்பீடு கணக்கில் எடுத்து கொள்கிறது. 

நடப்பு 2023ம் ஆண்டின் மார்ச் மாத முடிவில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம்(Unemployment rate) 7.8 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் 8.51 சதவீதமாகவும், இதுவே கிராமப்புறங்களில் 7.47 சதவீதமாகவும் வேலைவாய்ப்பின்மை விகிதம் உள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.45 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

2022-23ம் நிதியாண்டில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகபட்சமாக டிசம்பர் மாதத்தில் 8.30 சதவீதமாக இருந்துள்ளது. மிகக்குறைவான அளவாக செப்டம்பர் மாதத்தில் 6.43 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. மார்ச் மாத விகிதத்தில் மாநிலங்கள் வாரியாக காணும் போது, ராஜஸ்தான், சிக்கிம், அரியானா, பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகமாக உள்ளது.

வளர்ந்த மாநிலங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதத்தை காணும் போது, தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்திரப்பிரதேசம், தெலுங்கானா, கேரளா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் 7 சதவீதத்திற்கு குறைவாக காணப்படுகிறது. 

நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில்(GDP) மாநிலம் வாரியாக மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் மற்றும் மூன்றாமிடம் முறையே தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் உள்ளது. நான்காம் மற்றும் ஐந்தாம் இடத்தில் கர்நாடகா மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ன்றி, வர்த்தக மதுரை 

வாழ்க வளமுடன்,

www.varthagamadurai.com

2022ம் ஆண்டின் நான்காம் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி –  4.4 சதவீதம்

2022ம் ஆண்டின் நான்காம் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி –  4.4 சதவீதம் 

India’s GDP growth of 4.4 Percent in Q4 (December Quarter) 2022

2022ம் ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான நான்காம் காலாண்டில்(Q3FY23) நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 4.4 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய செப்டம்பர் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக இருந்துள்ளது. 2022-23ம் நிதியாண்டுக்கான ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் காலாண்டில் நாட்டின் முதலீடு 8.3 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது. இவற்றில் தனியார் முதலீட்டு செலவினம் 61.6 சதவீதமாக இருக்கிறது. இது 2021-22ம் ஆண்டின் டிசம்பர் காலாண்டினை காட்டிலும் குறைவே. அதிகரித்து வரும் பணவீக்க விகிதத்தால், வங்கிகளின் வட்டி விகிதமும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே தனியார் பங்களிப்பிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதே வேளையில் அரசு தரப்பில் இம்முறையும் முதலீட்டு செலவினம் பெரிதாக இல்லை. கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு காலத்தில் அரசின் பங்களிப்பு அதிகமாக இருந்தததை அடுத்து, கடந்த சில காலாண்டுகளாக அதனை குறைத்து வந்துள்ளது. நாட்டின் ஏற்றுமதி 11.3 சதவீதமும், இறக்குமதி 10.9 சதவீதம் என்ற அளவிலும் வளர்ச்சி பெற்றுள்ளது. இருப்பினும், இதற்கு முந்தைய காலாண்டில் ஏற்றுமதி 12.3 சதவீதமாகவும், இறக்குமதி 25.9 சதவீதமாகவும் வளர்ச்சி பெற்றிருந்தது.

உற்பத்தி துறை இரண்டாவது முறையாக இறக்கத்திலும், நிதி மற்றும் வீட்டுமனை துறை ஓரளவு வளர்ச்சி பெற்றிருந்த போதிலும், சற்று சுணக்கமாகவே காணப்பட்டுள்ளது. இது போன்ற மந்தநிலை போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு துறையிலும் ஏற்பட்டுள்ளது. விவசாயம் மற்றும் கட்டுமானம் ஆகிய துறைகள் ஏற்றம் பெற்று குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது.

நாட்டின் நுகர்வோர் செலவினம்(Consumer spending) டிசம்பர் 2022 காலாண்டில் ரூ. 24.77 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. நாட்டின் நிதி பற்றாக்குறை(Fiscal Deficit) நடப்பு  ஜனவரி மாத முடிவில் 11.91 லட்சம் கோடி ரூபாயாக இருந்துள்ளது. இது பட்ஜெட் மதிப்பில் 68 சதவீதமாகும். 2022-23ம் நிதியாண்டுக்கான நாட்டின் நிதி பற்றாக்குறை இலக்கு 17.55 லட்சம் கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

2021-22ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.7 சதவீதம் – எப்படி ?

2021-22ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.7 சதவீதம் – எப்படி ?

India’s GDP in the Financial year 2021-22 – 8.7 Percent

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ஏற்பட்ட ஊரடங்கால், 2020-21ம் நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரம் (-6.6) சதவீத வீழ்ச்சியை  சந்தித்திருந்தது. 2021-22ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 20.1 சதவீதமும், இரண்டாம் காலாண்டில் 8.4 சதவீதமும், மூன்றாம் காலாண்டில் 5.4 சதவீதம் மற்றும் நான்காம் காலாண்டில் 4.1 சதவீதமுமாக இருந்தது.

2020-21ம் நிதியாண்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியிலிருந்து காணும் போது, 2021-22ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.7 சதவீதமாக இருந்துள்ளது. இருப்பினும் இந்த வளர்ச்சி, பொருளாதார மந்தநிலையிலிருந்து மீட்கப்பட்ட வளர்ச்சியாகவே பொருளாதார வல்லுநர்களால் பார்க்கப்படுகிறது. 

அதாவது கொரோனாவுக்கு முந்தைய வளர்ச்சியை ஒப்பிடுகையில் இது மிகக்குறைந்த வளர்ச்சியாக அமைந்துள்ளது. 2020ம் ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பு சுமார் 2.62 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்துள்ளது. உலகின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பில் இது 2.32 சதவீதமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் பொருளாதார மதிப்பில்(GVA) சேவை துறை 54 சதவீதமும், விவசாயம் 20 சதவீதமும் மற்றும் தொழிற்துறை 26 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளது. நாட்டின் மொத்த வேலைவாய்ப்பில், விவசாயத்துறை மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 50 சதவீத வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

2021-22ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 4.1 சதவீதமாக சொல்லப்பட்ட நிலையில், இது சந்தை எதிர்பார்த்த அளவினை எட்டியுள்ளது. நடப்பு 2022-23ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கக்கூடும் என மத்திய ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இரண்டாம் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.4 சதவீதம்

இரண்டாம் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.4 சதவீதம் 

India’s GDP of 8.4 Percent in September Quarter – Q2FY22

கடந்த 2020-21ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட ஊரடங்கால் பொருளாதாரம் பெருத்த சரிவை கண்டிருந்தது. 2021ம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் (-24.4) சதவீத வீழ்ச்சியை சந்தித்தது. இதன் தொடர்ச்சியாக அடுத்த காலாண்டிலும் (-7.4) சதவீத வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது.

பெரும்பாலான வளர்ச்சியடைந்த மற்றும் வேகமாக வளரும் நாடுகளில் இது போன்ற தாக்கம் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஓரளவு குறைய குறைய பொருளாதாரமும் மீண்டெழுந்தது. கடந்தாண்டின் டிசம்பர் காலாண்டில் 0.5 சதவீதமும், மார்ச் காலாண்டில் 1.6 சதவீதமுமாக வளர்ச்சி இருந்தது.

நடப்பு நிதியாண்டின் முதல் காலண்டான ஏப்ரல்-ஜூன் காலத்தில் 20.1 சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்த நிலையில், தற்போது ஜூலை-செப்டம்பர் இரண்டாம் காலாண்டின் வளர்ச்சி 8.4 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. இந்த 8.4 சதவீத வளர்ச்சி என்பது கடந்தாண்டு செப்டம்பர் 2020 காலத்துடன் ஒப்பிடப்பட்ட வளர்ச்சியாகும்.

சேவைத்துறை, நிதி மற்றும் வீட்டுமனை, அரசு நிர்வாகம், உற்பத்தி ஆகியவற்றின் வளர்ச்சியால் இரண்டாம் காலாண்டின் வளர்ச்சி சாத்தியப்பட்டுள்ளது. 2021-22ம் நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் என பாரத ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது.

1950ம் ஆண்டு காலகட்டங்களில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பங்களிப்பில் விவசாய துறை 52 சதவீதத்தை கொண்டிருந்த நிலையில், இன்றைக்கு 12 சதவீதமாக உள்ளது. 2021ம் ஆண்டின் பொருளாதார பங்களிப்பில் சேவைத்துறை 60 சதவீதமும், உற்பத்தி 15 சதவீதமும், விவசாயம் 12 சதவீதமும், கட்டுமானம் 8 சதவீதம், குடிநீர் மற்றும் எரிசக்தி 5 சதவீதமுமாக உள்ளது.

விவசாயத்தின் பங்களிப்பு குறைந்திருந்தாலும், தற்போது நாட்டின் 50 சதவீத வேலைவாய்ப்பை விவசாயத்துறை உருவாக்கி தந்துள்ளது குறிப்பிடத்தக்கது. விவசாயத்துறையின் கீழ் விவசாயம், வனவியல் மற்றும் மீன் பிடித்தல் ஆகியவை உள்ளன.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் பொருளாதாரம் – 7.3 சதவீதமாக வீழ்ச்சி – நிதியாண்டு 2020-21

நாட்டின் பொருளாதாரம் – 7.3 சதவீதமாக வீழ்ச்சி – நிதியாண்டு 2020-21

GDP India – Contracts 7.3 Percent in FY 2020-21

2020-21ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(Gross Domestic Product) 24.4 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரம் 2020ம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் மிகுந்த பாதிப்படைந்தது. பின்னர் ஜூலை-செப்டம்பர் காலத்திலும் 7.4 சதவீதம் என்ற அளவில் வீழ்ச்சியை சந்தித்தது.

இதன் காரணமாக கடந்தாண்டு மிகப்பெரிய பொருளாதார மந்தநிலையை நாடு சந்தித்தது. பொருளாதார உலகில் பொதுவாக தொடர்ச்சியாக இரு காலாண்டுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தி எதிர்மறை வீழ்ச்சியை சந்தித்திருந்தால், அதனை பொருளாதார மந்தம்(Economic Recession) என்பர். பொருளாதார மந்தநிலையிலிருந்து சற்று மீண்டு, 2020-21ம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் நாடு 0.5 சதவீத வளர்ச்சியை பெற்றிருந்தது.

நேற்று(31-05-2021) மத்திய அரசால் வெளியிடப்பட்ட அறிக்கையில் நான்காம் காலாண்டின் முடிவில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.6 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக கடந்த நிதியாண்டில்(ஏப்ரல் 2020 – மார்ச் 2021) நாட்டின் பொருளாதாரம் 7.3 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

பெருந்தொற்று காலத்திற்கு முன்பிருந்து(Pre Pandemic) சற்று சுணக்கமாக இருந்த நாட்டின் பொருளாதாரம், கொரோனா பொருளாதார வீழ்ச்சிக்கு பின்பு, தற்போது வளர்ச்சி பாதைக்குள் நுழைந்துள்ளது. எனினும் இரண்டாம் அலையால் ஏற்பட்டு வரும் பொருளாதார இழப்பு மற்றும் மூன்றாம் அலைக்கான எதிர்பார்ப்பு ஆகியவை நடப்பு நிதியாண்டின் பொருளாதாரத்தில் தெரிய வரும்.

2020-21ம் ஆண்டின் நான்காம் காலாண்டில் சந்தை எதிர்பார்த்த ஒரு சதவீத வளர்ச்சியை காட்டிலும் 1.6 சதவீத வளர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. சொல்லப்பட்ட காலாண்டில் தனியார் பங்களிப்பு 2.7 சதவீதம் மற்றும் அரசு பங்களிப்பு 28.3 சதவீதம் என மொத்த செலவில் இருந்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டின் நான்காம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது சொல்லப்பட்ட மதிப்பு சாதகமாக இருந்துள்ளது.

ஏற்றுமதி-இறக்குமதி, உற்பத்தி மற்றும் உட்கட்டமைப்பு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி அமைந்துள்ளது. ஆசியாவின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமாக சொல்லப்படும் நம் நாடு, கடந்த சில காலங்களாக அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதிலும், அரசு நிறுவனங்களின் பங்கு விலக்கல் நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்தி வருகிறது.

மற்ற நாடுகளை பார்க்கையில், அமெரிக்கா 3.5 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஜெர்மனி 4.9 சதவீத வீழ்ச்சி, மெக்சிகோ 8.2 சதவீத வீழ்ச்சியையும், அர்ஜென்டினா 10 சதவீத வீழ்ச்சி என்ற அளவிலும் உள்ளது. ரஷ்யா மற்றும் பிரேசில் முறையே 3.1 % மற்றும் 4.1 சதவீத வீழ்ச்சியை கூறியுள்ளது. பிரிட்டன் 9.9 சதவீத வீழ்ச்சியை சொல்லியிருந்த நிலையில், சீனா 2.3 சதவீத வளர்ச்சியை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இது போல துருக்கி நாடும் 1.8 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. ஜப்பான் 4.8 சதவீதம் மற்றும் கனடா 5.4 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. வளர்ந்த மற்றும் வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் காணும் போது, இந்தியாவின் 2020-21ம் நிதியாண்டுக்கான பொருளாதரம் சற்று மோசமாக தான் பாதிப்படைந்துள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் பொருளாதார வளர்ச்சி – 7.5 சதவீத வீழ்ச்சி

நாட்டின் பொருளாதார வளர்ச்சி – 7.5 சதவீத வீழ்ச்சி 

India technically enters into Recession – Q2FY21 – GDP

கொரோனா பெருந்தொற்றுக்கு பின் உலகளவில் பெரும்பாலான வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பின்னடைவை சந்தித்திருந்தது. நம் நாட்டில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக இருந்து வந்த மந்தநிலை, மார்ச் 2020 க்கு பிறகு மிகவும் பாதிப்படைந்தது.

ஊரடங்கின் காரணமாக வேலைவாய்ப்பு இல்லாமை, உற்பத்தி குறைவு, ஏற்றுமதி-இறக்குமதியில் ஏற்பட்ட தடை ஆகியவை பொருளாதாரத்திற்கு பாதகமாக இருந்தது. எனினும் அரசு சார்பில் பல ஊக்கமளிக்கும் நிதி சலுகைகள் கொரோனா காலத்தில் அறிவிக்கப்பட்டது. 2020-21ம் நிதியாண்டின் முதலாம் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 23.9 சதவீதம் வீழ்ச்சி கண்டது.

நேற்று(27-11-2020) நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி குறியீடு சார்ந்த தகவல்கள் வெளியிடப்பட்டது. சொல்லப்பட்ட காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) 7.5 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது  குறிப்பிடத்தக்கது. எனினும் சந்தை எதிர்பார்த்த 8.8 சதவீத வீழ்ச்சி என்ற அளவை விட இது குறைவாக உள்ளது.

ஜூன் மாதத்திற்கு பிறகான ஊரடங்கில் தளர்வு, வேலைவாய்ப்பு சற்று மீண்டது மற்றும் பண்டிகை காலத்தை ஒட்டி நாட்டின் பொருளாதாரம் மீண்டு வருகிறது. எனினும் பொருளாதாரத்தை முழுவதுமாக மீட்க இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு பாரத ரிசர்வ் வங்கி(RBI) சார்பில் நாட்டின் பொருளாதார வீழ்ச்சி சார்ந்த குறிப்பு சொல்லப்பட்டிருந்தது. இதனை உறுதி செய்யும் வகையில் இரண்டாம் காலாண்டில் 7.5 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில், வரலாற்றின் முதல் பொருளாதார மந்தநிலையாகவும்(First Recession) தற்போது சொல்லப்பட்டுள்ளது.

2013ம் ஆண்டுக்கு பின்னர் ஏற்பட்ட மிகப்பெரிய தொய்வு நிலையாக நடப்பாண்டு இருந்துள்ளது. பொருளாதாரத்தை மீட்க பெரும்பாலான நாடுகள் பணத்தை அச்சடித்து பண புழக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதன் காரணமாக பொருளாதார வளர்ச்சி விரைவில் எட்டப்படும் என ஒவ்வொரு அரசும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. நாட்டின் பொருளாதாரம், முதலாம் காலாண்டு வீழ்ச்சியை காட்டிலும் இரண்டாம் காலாண்டில் சிறிய அளவில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது கவனிக்கத்தக்கது. பண்டிகை காலத்திற்கு பிறகு ஏற்படும் நுகர்வு தன்மை(Consumption) தான் சந்தைக்கு அடுத்தகட்ட நகர்வை ஏற்படுத்தும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 3.1 சதவீதம் – மார்ச் 2020

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 3.1 சதவீதம் – மார்ச் 2020

India’s Q4FY20 GDP to 3.1 Percent and 4.2 Percent in FY2019-20

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சார்ந்த வளர்ச்சி அறிக்கை, தேசிய புள்ளியியல் மையத்தால் இன்று அறிவிக்கப்பட்டது. மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டில் (Jan – Mar 2020) நாட்டின் பொருளாதார வளர்ச்சி 3.1 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. 2019-20ம் நிதியாண்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 4.2 சதவீதமாக அறிவித்துள்ளது.

மூன்றாம் காலாண்டில் 4.7 சதவீதமாக இருந்த நிலையில், நான்காம் காலாண்டான மார்ச் காலத்தில் 3.1 சதவீதமாக குறைந்துள்ளது. இருப்பினும், சந்தை எதிர்பார்த்த அளவை காட்டிலும், மொத்த உள்நாட்டு உற்பத்தி குறியீடு அதிகரித்துள்ளது. மேலும் மார்ச் மாதத்தில் ஏற்பட்ட ஊரடங்கு காலம் ஒரு வாரமாக இருந்ததால், அதனால் பெரிதும் பாதிப்பு ஏற்படவில்லை.

உலகின் மொத்த பொருளாதார உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு 2.31 சதவீதமாக இருக்கிறது. கடந்த நிதியாண்டில் காணப்பட்ட பொருளாதார வளர்ச்சி எண்களும் மற்றும் அதன் மதிப்பீடுகளும் திருத்தப்பட்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி 2019-20ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 5.6 சதவீதமாக இருந்த வளர்ச்சி தற்போது 5.2 சதவீதமாக குறைத்து திருத்தப்பட்டுள்ளது.

இது போல இரண்டாம் காலாண்டில் 5.1 சதவீதத்திலிருந்து 4.4 சதவீதமாகவும், மூன்றாம் காலாண்டில் இருந்த 4.7 சதவீதத்தை 4.1 சதவீதமாகவும் திருத்தப்பட்டுள்ளது. பொருளாதார மொத்த மதிப்பு (GVA) 2019-20ம் நிதியாண்டில் 3.9 சதவீதமாக இருந்துள்ளது கவனிக்கத்தக்கது.

ஏப்ரல் மாத துறை சார்ந்த(Core Sector) தகவல்களும் வெளியிடப்பட்டன. நாட்டின் முக்கிய எட்டு துறைகள் சார்ந்த குறியீடு ஏப்ரல் மாதத்தில் (-38) சதவீதமாக உள்ளது. இது மார்ச் மாதத்தில் (-9) சதவீதமாக இருந்துள்ளது. நிலக்கரி துறை 15.50 சதவீதமும், எஃகு துறை(Steel) 84 சதவீதமும் வீழ்ச்சியடைந்துள்ளது. சிமெண்ட் துறை அதிகபட்சமாக 86 சதவீதமும், இயற்கை எரிவாயு 20 சதவீதமும் வீழ்ச்சி பெற்றுள்ளது. உரம் மற்றும் கச்சா எண்ணெய்யும் 5 சதவீதத்திற்கு மேல் ஏப்ரல் மாதத்தில் இறக்கமடைந்துள்ளது.

சொல்லப்பட்ட மார்ச் காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP growth) 16 வருட குறைவான அளவாக சொல்லப்படுகிறது. பொருளாதார வளர்ச்சி எண்களில் திருத்தம் செய்யப்படாத பட்சத்தில், அது இருபது வருடங்களுக்கு மேலான குறைவாக காணப்படலாம் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

2019-20ம் நிதியாண்டில் வருவாய் மற்றும் நிதி பற்றாக்குறை(Revenue & Fiscal Deficit) அதிகமாக ஏற்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறை பட்ஜெட் மதிப்பில் 122 சதவீதம் அதிகரித்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.59 சதவீதமாக இருந்துள்ளது. ஆனால் அரசு நிர்ணயித்த இலக்கு 3.8 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. இது போல வருவாய் பற்றாக்குறை மூன்று சதவீதத்திற்கு மேலாக இருந்துள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

.

உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு என்ன – 2020 ?

உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு என்ன – 2020 ?

India’s GDP share in the Global Economy – 2020

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) என சொல்லப்படும் பொருளாதார குறியீட்டில் வரும் 2024ம் ஆண்டு ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய வேண்டும் என்ற இலக்கை மத்திய அரசு கடந்த ஆண்டு நிர்ணயித்திருந்தது. இதனை அடைவதற்கான சில திட்டங்களும், அதனை சார்ந்த இலக்கு வரைபடங்களும் சொல்லப்பட்டது.

2019ம் ஆண்டில் சர்வேதச நாணய நிதியம்(IMF) வெளியிட்ட பொருளாதார பார்வையின் படி, நாட்டின் பொருளாதாரம் 2.9 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் என கூறப்பட்டுள்ளது. தற்போது உலக பொருளாதாரத்தில் முதலிடத்தில் இருக்கும் நாடு அமெரிக்கா. அந்நாட்டின் பொருளாதாரம் சுமார் 22 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். இரண்டாவது இடத்தில் இருக்கும் சீனாவின் மதிப்பு 14 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். மூன்றாம் இடத்தில் ஜப்பானும், நான்காம் இடத்தில் ஜெர்மனியும் உள்ளது.

நம் நாடு உலக பொருளாதாரத்தில் ஐந்தாம் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. வேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் நம் நாட்டின் பங்கு முக்கியத்துவமானது. வாங்கும் திறன் சமநிலை(Purchasing Power Parity) அடிப்படையில் உலகளவில் சீனா முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் அமெரிக்காவும், மூன்றாம் இடத்தில் இந்தியாவும் உள்ளது.

நுகர்வு தன்மையை அதிகமாக கொண்டிருக்கும் நம் நாட்டில் விவசாயம் மற்றும் உற்பத்தி துறையை காட்டிலும், சேவை துறையின் பங்கு அதிகமாக உள்ளது. இன்றைய தேதியில் நம் நாட்டின் வளர்ச்சிக்கு சேவை துறையின் மூலம் 60 சதவீத பங்களிப்பும், 28 சதவீத வேலைவாய்ப்புகளும் உருவாகியுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனிநபர் வருவாய் எனும் போது, குறைவாக தான் காணப்படுகிறது.

நம் நாட்டில் விவசாயத்தின் பங்கு குறைந்திருந்தாலும், மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும் போது, கணிசமாக விவசாய உற்பத்தி மற்றும் சேவை இருந்து வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமாக துணைபுரிவது உள்நாட்டில் காணப்படும் நுகர்வு சந்தை, அத்தியாவசிய பொருட்களுக்கான தேவைப்பாடு, அதிகப்படியான சேமிப்பு ஆகியவை. இருப்பினும் உட்கட்டமைப்பு மற்றும் சுகாதாரத்தில் குறிப்பிடத்தக்க அளவை எட்டவில்லை.

பெட்ரோலிய பொருட்கள், விலைமதிப்பற்ற உலோகங்கள் மற்றும் கற்கள், மின் இயந்திரங்கள், ரசாயனங்கள், இரும்பு மற்றும் எஃகு பொருட்கள், மருந்து பொருட்கள் ஆகியவை நமது நாட்டின் முக்கிய ஏற்றுமதியாக உள்ளது. இறக்குமதியில் கச்சா எண்ணெய், தங்கம், முத்துக்கள், பெட்ரோலிய பொருட்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள், மின்னணு பாகங்கள், எண்ணெய், மெழுகு, பிளாஸ்டிக் மற்றும் மருத்துவ இயந்திரங்கள் ஆகியவை உள்ளன.

நாம் அதிகமாக இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் அமெரிக்காவும், மூன்றாவது இடத்தில் ஐக்கிய அரபு நாடும் உள்ளது. நம் நாடு ஏற்றுமதி செய்யும் பொருட்களை வாங்கும் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. ஐக்கிய அரபு மற்றும் சீனா முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் உள்ளது. சீனாவுடனான வர்த்தகத்தில் நமக்கு வர்த்தக பற்றாக்குறை இருந்து வருகிறது. அதே வேளையில் 2018-19ம் நிதியாண்டில் அமெரிக்காவுடன் நமது வர்த்தகத்தில் உபரியாக உள்ளது.

உலக பொருளாதாரத்தில் அமெரிக்காவின் பங்களிப்பு 23.6 சதவீதமாக உள்ளது. சீனாவின் பங்களிப்பு 15.50 சதவீதமும், ஜப்பான் 5.7 சதவீதமும், ஜெர்மனி 4.6 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளது. இந்தியா உலகளவில் உள்ள மொத்த பொருளாதார உற்பத்தியில் 2.31 சதவீத பங்களிப்புடன் உள்ளது. உலகின் பொருளாதார வளர்ச்சியில் முதல் 20 இடங்களில் அங்கம் வகிக்கும் நாடுகளின் மொத்த பங்களிப்பு மட்டும் 78.8 சதவீதமாகும். மீதமுள்ள வெறும் 21.2 சதவீதத்தை 173 நாடுகள் பகிர்ந்துள்ளன.

வேகமாக வளரும் நாடுகளை தவிர்த்து, ஏனைய நாடுகளில் அத்தியாவசிய தேவை கூட பூர்த்தி செய்ய முடியாமல், உலக பொருளாதாரம் திணறி கொண்டிருக்கிறது. பெரும்பாலான வளர்ந்த நாடுகள் தங்களுக்கு அருகில் உள்ள சிறு மற்றும் குறு நாடுகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நடந்த வண்ணம் தான் உள்ளது. பெரும்பாலும் வளரும் நாடுகளின் எல்லை பதற்றத்துடன் தான் காணப்படுகிறது.

வளரும் மற்றும் வளர்ந்த நாடுகள் மூலதன சந்தையை(Capital Market) நோக்கி தான் தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்தி கொண்டிருக்கிறது. சரியான நிர்வாகம் இல்லாததும் இது போன்ற நாடுகளில் ஒரு பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. நாட்டின் நுகர்வு தன்மைக்கு ஏற்ப அதன் கடன் தன்மையும் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான நாடுகள் அன்னிய முதலீடு மற்றும் மத்திய வங்கியின் பண அச்சடிப்பு நடவடிக்கைகளில் தான் பொருளாதாரத்தை ஊக்குவிக்கக்கூடியதாக அமைந்துள்ளது.

நடப்பில் காணப்படும் உலக பொருளாதார மந்தநிலை மற்றும் கோவிட்-19 பெரும்பாலும் மேலை நாடுகளை தான் அதிகமாக பாதித்துள்ளது. ஐரோப்பா மற்றும் அமெரிக்க அரசுகளுக்கு முதலீடாக ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் துணைபுரிகிறது. உலகளவில் வேகமாக வளரும் நாடுகளில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சி எண்கள் எதிர்மறையாக தான் உள்ளது.

வியட்நாம் மட்டும் ஜனவரி-மார்ச் காலாண்டில் நேர்மறையான வளர்ச்சியை கொண்டுள்ளது. ஆசிய பிராந்தியத்தில் வேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் வியட்நாம், இந்தோனேஷியா, தென் கொரியா, ஹாங்காங், சீனா மற்றும் இந்தியாவின் பங்கு முக்கியத்துவமானது.

இருப்பினும், நடப்பில் காணப்படும் பொருளாதார வீழ்ச்சி அடுத்த சில காலாண்டுகள் தொடரும் நிலையில், வேகமாக வளரும் நாடுகளில் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது அவ்வளவு எளிதான செயல்பாடு அல்ல. பொருளாதார ஊக்குவிப்பு சார்ந்த அறிவிப்புகள் பல நாடுகளில் சொல்லப்பட்டிருந்தாலும், உண்மையில் நுகர்வு தேவையை ஏற்படுத்தினால் மட்டுமே அது வளர்ச்சிக்கு துணைபுரியும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் நிதி பற்றாக்குறை சிக்கல் – அபாய சங்கிலியை உடைக்கும் பொருளாதாரம்

நாட்டின் நிதி பற்றாக்குறை சிக்கல் – அபாய சங்கிலியை உடைக்கும் பொருளாதாரம் 

India’s Fiscal Deficit Problem – The economy that breaks the Situation

பொதுவாக நமது குடும்பத்தின் நிதி நிலை சரியான அளவில் இருந்தால் தான், குடும்ப உறவுகளிடம் பிரச்சனை இல்லாமல் சுமூகமான வாழ்வு முறை அமையும். வரவுக்குள் செலவு இருக்கும் போது, சிறு குடும்பமாக இருந்தால் என்ன, பெரிய குடும்பமாக இருந்தால் என்ன… சம்பாதிக்கும் பணம் ஒரு ரூபாயாக இருந்து, செலவு 50 பைசாவாக இருந்தால் சந்தோசம் தானே. இதுவே தலைகீழாக சென்றால், எப்படி இருக்கும் ?

அப்படி தான் நாட்டின் நிதி பற்றாக்குறையும். மத்திய அரசின் நிதி அறிக்கையில் இரு கண்களாக நிதி பற்றாக்குறையும்(Fiscal Deficit), வர்த்தக பற்றாக்குறையும்(Trade Deficit) இருக்கும். இது ஓரளவு கட்டுக்குள் இருக்கும் பட்சத்தில், பொருளாதாரத்தில் பெரும்பாலும் பாதிப்பு இருக்காது. அதே வேளையில், இரண்டில் ஏதாவது ஒன்று பாதிப்படையும் போது, அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பாதகமாக அமையும்.

நாட்டின் நிதி பற்றாக்குறை கடந்த பிப்ரவரி மாத முடிவின் போது மொத்த  உள்நாட்டு உற்பத்தி அளவில்(GDP)  5.07 சதவீதமாக சொல்லப்பட்டது. 2019-20ம் நிதியாண்டில் மத்திய அரசு தனது பட்ஜெட்டில் சொன்ன கணக்கு படி, நிதி பற்றாக்குறை அமையவில்லை. மாறாக, வரவுக்கு மேலாக செலவு அதிகரித்திருந்தது.

இந்நிலையில், கடந்த நிதியாண்டின் முடிவில் (மார்ச் 31, 2020) நாட்டின் நிதி பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4 சதவீதமாக இருந்துள்ளது கவனிக்கத்தக்கது. முன்னர், இந்த விகிதம் 3.8 சதவீதத்திற்குள் இருக்கும் என நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். இப்போது சொல்லப்பட்ட இலக்கை தாண்டி, நாட்டின் நிதி பற்றாக்குறை சென்றுள்ளது.

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக காணப்பட்டு வந்த பொருளாதார மந்தநிலை, தேவை நுகர்வு குறைவு, இதன் காரணமாக வரி வசூலும் வெகுவாக குறைந்துள்ளது. எதிர்பார்த்த வருவாய் அரசுக்கு கிடைக்காத நிலையில், எதிர்மறையாக செலவும் அதிகரித்துள்ளது. அடுத்து வரவிருக்கும் பட்ஜெட்டில் துண்டு விழும் செயலாக இது நிகழ்ந்துள்ளது.

நடப்பில் கொரோனா தாக்கத்தால் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவால், வரக்கூடிய காலாண்டுகளில் பொருளாதார எண்கள் மேலும் சரியலாம். தற்போதைய நிலையில் சுமார் 1.7 லட்சம் கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறையாக ஏற்பட்டுள்ளது.

நிதி பற்றாக்குறையை சமாளிக்க  மற்றும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க பாரத ரிசர்வ் வங்கி, அமெரிக்காவை போல பணத்தை அச்சடிக்கலாம் என சொல்லப்படுகிறது. ஆனால், இந்த நிகழ்வு ஏற்படுமாயின் பணவீக்க விகிதம் அதிகரிக்கும் சூழல் ஏற்படலாம். அதாவது நாட்டின் நிதி பற்றாக்குறையை சரிசெய்ய பாரத ரிசர்வ் வங்கி, மத்திய அரசின் கடன் பத்திரங்களை வாங்க நேரிடும். இதற்காக பணம் அச்சடிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

ஆனால், இந்த விவகாரத்தை மத்திய வங்கி மறுத்துள்ளது. பொதுவாக மத்திய அரசு, தனது நிதி பற்றாக்குறையை சமாளிக்க அரசு கடன் பத்திரங்களை நிதி சந்தையில் விற்கும். இருப்பினும், இதற்கான மதிப்பு குறைவாக இருக்கும் பட்சத்தில் பாரத ரிசர்வ் வங்கி தலையிடும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.7 சதவீதம் – அடுத்து என்ன ?

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.7 சதவீதம் – அடுத்து என்ன ?

India’s GDP of 4.7 Percent in December Quarter – What Next ?

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அக்டோபர் – டிசம்பர் காலாண்டில் 4.7 சதவீதமாக இருந்துள்ளது என கடந்த வாரம் அரசு சார்பில் சொல்லப்பட்டது. சொல்லப்பட்ட பொருளாதார வளர்ச்சி கடந்த ஏழு வருடங்களில் காணப்படாத குறைந்த அளவாகும். 2018ம் வருடத்தின் ஆரம்ப நிலையில் 7.7 சதவீதமாக காணப்பட்ட நாட்டின் பொருளாதார வளர்ச்சி பின்பு குறைய தொடங்கியது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தொடர்ச்சியாக 7 காலாண்டுகளாக இந்த வளர்ச்சி குறைந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 2019 கால பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த வளர்ச்சி குறைவு தான் எனினும், அடுத்து வரும் காலகட்டங்களில் அதன் மாற்றம் தான் சந்தை எதிர்பார்த்து வருவது. பெரும்பாலான வல்லுநர்கள் இது தான் அடிப்பாக பொருளாதார வளர்ச்சியாக(Bottomed out) இருக்கும், அடுத்த காலாண்டுகளில் பொருளாதாரம் மீண்டு எழும் என கூறியுள்ளனர்.

அதே வேளையில், நடப்பு ஜனவரி – மார்ச் காலத்தில் உலகளாவிய பொருளாதார சூழ்நிலைகள் சாதகமாக இல்லை என்பதே உண்மை. டிசம்பர் 2019 காலாண்டை காட்டிலும், மார்ச் 2020 காலாண்டில் பொருளாதார வளர்ச்சி குறைவாக தான் இருக்கும். வாகனத்துறையில் உள்ள பெரும்பாலான பெரு நிறுவனங்கள் தங்கள் பிப்ரவரி மாத விற்பனையில் சுணக்கத்தை சந்தித்துள்ளது.

பொருளாதாரத்தை மீட்கும் பொருட்டு அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பங்குவிலக்கல்(Disinvestment) நிகழ்வும் நடந்த வண்ணம் தான் உள்ளன. ஆனால் குறிப்பிட்ட காலத்தில் இந்த நிகழ்வு வெற்றிகரமாக முடிந்து, அரசின் இலக்கிற்கு உதவினால் தான் சந்தையில் நுகர்வை வேகப்படுத்த முடியும்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் வர்த்தகம், போக்குவரத்து, தகவல் தொடர்பு, நிதி மற்றும் காப்பீடு, வீட்டு மனை, உணவகங்கள், சமூக மற்றும் தனிப்பட்ட சேவைகள் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. வேளாண்மை, காடுகள் மற்றும் மீன்பிடித்தல் ஆகியவை நாட்டின் பொருளாதார உற்பத்தியில் 12 சதவீத பங்கை தான் கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த பிரிவில் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை, நாட்டில் உள்ள மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையில் 50 சதவீதத்திற்கு மேற்பட்டதாக உள்ளது கவனிக்கத்தக்கது.

நிலம் கையகப்படுத்துதல் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விலக்கல் நடவடிக்கை, உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் ஆகியவை தான் அரசுக்கு முன் இருக்கும் சவாலாக உள்ளது. தற்போதைய நிலையில் முதலீடுகளை பெற்று, சரியான முறையில் கையாண்டால் மட்டுமே அது வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இதன் மூலம் வருவாய் பெறும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து, நுகர்வு தன்மையும் சுமுகமாக அமையும்.

கொரோனா வைரஸ் பாதிப்பு எப்போது முடியக்கூடும் என்பது குறித்து தற்சமயம் தெரியாது. அதே நேரத்தில், இதன் பாதிப்பு அடுத்து வரும் இரு காலாண்டுகளில் நிறுவனங்களின் நிதி அறிக்கையில் தெரிய வரும். அமெரிக்க – சீன வர்த்தக போர் இன்னும் முடிவை எட்டவில்லை. 2019-20ம் நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி குறியீடு எதிர்பார்த்த அளவை பெறாது என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

எது எப்படியோ, பொருளாதார மந்தநிலை காலங்களில் சந்தையில் பங்குபெறும் முதலீட்டாளர்கள் சரியான நிறுவனங்களை அலசி ஆராய்ந்து, அதன் உண்மையான விலையில் பங்குகளை வாங்குவது நலம். ஆறு மாதத்திற்கு முன்னர் காணப்பட்ட விலையே பெரும்பாலான பங்குகளில் தற்போது நிலவி கொண்டிருக்கிறது. சில பங்குகளின் விலை மூன்று வருட மற்றும் ஐந்து வருட விலை குறைவில் இருந்தாலும், அவற்றின் மற்ற காரணிகளை கண்டறிவது அவசியம். வெறும் பங்கு விலை எண்களை கொண்டு பங்குகளை வாங்காதீர்கள்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com