சன் டி.வி. நிறுவன காலாண்டு லாபம் – ரூ.335 கோடி
Sun TV Network reported a Net Profit of Rs.335 Crore – Q2FY21
தமிழகத்தை தலைமையிடமாக கொண்டு கடந்த 1992ம் ஆண்டு துவங்கப்பட்ட நிறுவனம் தான் சன் குழுமம்(Sun Group). ஊடக துறையில் உள்ள இந்நிறுவனம் நாளிதழ் வெளியீடு, ஒளிபரப்பு, வானொலி, படம், கேபிள் தொலைக்காட்சி, விளையாட்டு உரிமம் ஆகியவற்றில் தொழில் புரிந்து வருகிறது. தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளில் முப்பதுக்கும் மேற்பட்ட டி.வி. சேனல்களையும், பல துணை நிறுவனங்களையும் கொண்டிருக்கிறது.
விமான போக்குவரத்து துறையில் தனது சேவையை கொண்டிருந்த இந்நிறுவனம், கடந்த சில வருடங்களுக்கு முன்பு அந்த நிறுவனத்தில் (Spicejet) உள்ள அனைத்து பங்குகளையும் விற்று வெளியேறியது. நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.17,500 கோடி. கடனில்லா நிறுவனமாக(Debt Free) வலம் வந்து கொண்டிருக்கும் சன் டி.வி. பங்கின் புத்தக மதிப்பு 160 ரூபாயாகவும், வட்டி பாதுகாப்பு விகிதம் 138 மடங்குகளிலும் உள்ளது.
நிறுவனர்களின் பங்களிப்பு 75 சதவீதமாக இருக்கிறது. நிறுவனர்கள் சார்பில் ஒரு சதவீதத்திற்கு குறைவான பங்குகள் அடமானமாக இருந்துள்ளது. இந்திய டி.வி. துறையில் முக்கிய இடத்தை வகிக்கும் இந்த நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) 6,100 கோடி ரூபாயாக உள்ளது. பணவரத்தும், பங்கு மூலதனத்தின் மீதான வருவாயும் நிறுவனத்திற்கு சாதகமாக உள்ளது.
2020-21ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு முடிவுகளை நேற்று(12-11-2020) வெளியிட்டது இந்த நிறுவனம். நிறுவனத்தின் வருவாய் 769 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ.274 கோடியாகவும்(Quarterly results) சொல்லப்பட்டுள்ளது. இதர வருமானமாக 54 கோடி ரூபாய் இருந்துள்ளது. இரண்டாம் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.335 கோடி.
சொல்லப்பட்ட நிகர லாபம், ஜூன் காலாண்டை காட்டிலும் 23 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. அதே வேளையில், முந்தைய வருடத்தின் செப்டம்பர் காலாண்டுடன் ஒப்பிடுகையில் தற்போதைய லாபம் 10 சதவீத குறைவாகும். விற்பனை வளர்ச்சி கடந்த ஐந்து வருடங்களில் 8 சதவீதமாகவும், இதுவே 10 வருட காலத்தில் 9 சதவீதமாகவும் உள்ளது.
லாபம், கடந்த ஐந்து மற்றும் பத்து வருட காலங்களில் 10 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த பங்கின் விலை கடந்த ஒரு வருடத்தில் இறக்கம் கண்டிருந்தாலும், மார்ச் மாத வீழ்ச்சியில் பங்கு ஒன்றுக்கு 300 ரூபாய்க்கு குறைவாக வர்த்தகமானது. அப்போதைய நிலையில், பணப்பாய்வு முறைப்படி(Discounted Cash Flow) பங்கின் விலையும் மலிவாக காணப்பட்டது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை