சக்தி குழும நிறுவனங்கள் – நம்ம ஊரு பங்கு கதை
Sakthi Group of companies – Chocolate Investing analysis
பங்குச்சந்தையில் பணம் சம்பாதிப்பது எளிமையாக தெரிந்தாலும், சந்தையில் வர்த்தகமாகும் நிறுவனங்களின் வரலாறு, தொழில் கொள்கை மற்றும் நிதி அறிக்கைகளை நம்மால் புரிந்து கொண்டால் மட்டுமே நீண்டகாலத்தில் செல்வத்தை ஏற்படுத்த முடியும். இல்லையெனில், முதலீடு செய்த பணத்தை இழந்து விட்டு, பங்குச்சந்தை ஒரு சூதாட்டம், அது பணக்காரர்களுக்கு மட்டுமே என பொத்தாம் பொதுவாக சொல்லி விட்டு தான் போக முடியும்.
நம்ம பக்கத்துக்கு வீட்டுக்காரர் நம்மிடம் அவசரத்திற்கு பணம் கேட்டால் நாம் பலவாறு யோசிக்கும் காலமிது. அப்படியிருக்கையில் நிறுவனத்தை பற்றி எதுவும் தெரிந்து கொள்ளாமல் (ஆழம் தெரியாமல்) பங்குகளில் பணம் பண்ண முடியாது. அதிர்ஷ்டம் எப்போதும் கை கொடுப்பதில்லை, கற்று கொள்ள ஆர்வமாக இருப்பவர்களுக்கு மட்டுமே அது செயல்படும் படைக்கலமாக உள்ளது.
கடந்த 1931ம் ஆண்டு பொள்ளாச்சியை சேர்ந்த திரு. நாச்சிமுத்து அவர்களால் துவங்கப்பட்டது சக்தி நிறுவனம். பின்னர் அவரது புதல்வர் திரு. நாச்சிமுத்து மகாலிங்கம் அவர்களால் சக்தி குழுமம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இன்று சக்தி குழுமம் இந்திய பன்னாட்டு நிறுவனமாக உருவாகியுள்ளது. உள்நாடு மட்டுமில்லாமல் சீனா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் அமெரிக்காவில் தனது தொழிலை பரவலாக்கம் செய்துள்ளது.
ஆரம்பத்தில் போக்குவரத்து சார்ந்த தொழிலை துவங்கிய இந்த குழுமம், ஆனைமலைஸ் பஸ் டிரான்ஸ்போர்ட் (ABT) என்ற நிறுவனத்தை துவக்கியது. பின்னர் இந்த நிறுவனம் பார்சல் சேவையில் நுழைந்தது. தளவாடங்கள்(Logistics) தொழிலில் இந்த நிறுவனத்தின் பங்களிப்பு நாடு முழுவதும் பரவியிருந்தது. பின்னர் வாகன தயாரிப்பில் உள்ள பெரிய நிறுவனங்களான மாருதி சுசூகி, டாட்டா, மஹிந்திரா போன்றவற்றுடன் கைகோர்த்து தனது சேவையை அளித்து வந்தது.
21 பேருந்துகளை கொண்டு துவங்கப்பட்ட சக்தி குழுமம், மகாலிங்கம் அவர்களின் தொழில் வருகைக்கு பின்னர் பில்லியன் டாலர் நிறுவனமாக வளர்த்தெடுக்கப்பட்டது. இன்று தனது தொழிலை சர்க்கரை ஆலை, பால் பொருட்கள், காபி, சோயா, வாகன விநியோகம் மற்றும் உதிரி பாகங்கள், குளிர் பானங்கள், எரிசக்தி, தொழில்நுட்பம், ஆடைகள், தொழில்துறைக்கு தேவையான ஆல்கஹால், பத்திரிகை வெளியீடு, கல்வி மற்றும் சுகாதார பராமரிப்பு என பெரிய குழுமமாக மாற்றியுள்ளது.
நிதித்துறையில் சக்தி பைனான்ஸ் முக்கிய அங்கம் வகிக்கிறது. தென்னிந்தியாவில் சேவையை கொண்டிருக்கும் சக்தி பைனான்ஸ் வங்கி அல்லாத நிதி நிறுவனமாக(NBFC) செயல்பட்டு வருகிறது. கோவையில் குமரகுரு தொழில்நுட்ப பொறியியல் கல்லூரி, பொள்ளாச்சியில் டாக்டர். மகாலிங்கம் பொறியியல் கல்லூரி, தமிழகத்தின் பல மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரி நிலையங்களை இந்த குழுமம் ஏற்படுத்தியுள்ளது. இந்திய வாகன உற்பத்தி (Car Manufacturers) நிறுவனங்களுக்கு தேவையான பிரேக் கூறுகளை உற்பத்தி செய்து வழங்கிய முதல் இந்திய நிறுவனமும் இந்த குழுமத்தை சேர்ந்த நிறுவனம்(Sakthi Automotive) தான்.
சுமார் 730 ஏக்கர் பரப்பளவில் காபி, தேயிலை மற்றும் ஏலக்காய் தோட்டத்தினை பராமரித்து உற்பத்தி செய்து வருகிறது. மருத்துவத்திலும் இதன் சேவை தன்னார்வ சுகாதார அடிப்படையில் இயங்கி வருகிறது. பிரபல குளிர்பான நிறுவனங்களுக்கான தயாரிப்பிலும் சக்தி குழுமத்தின் ஏ.பி.டி. இண்டஸ்ட்ரீஸ்(ABT Industries) ஈடுபட்டு வருகிறது. பேருந்து கட்டமைப்புக்கான(Bus Body Building) பணியில் ஆனைமலைஸ் இன்ஜினியரிங் நிறுவனமும், காபி, தேயிலை உற்பத்தியில் சக்தி எஸ்டேட்ஸ் நிறுவனமும் உள்ளது. 90 வருடங்களுக்கு மேலாக தொழில் அனுபவம் கொண்டிருக்கும் சக்தி குழுமத்தின் நிறுவனங்கள் இந்திய பங்குச்சந்தையிலும் தடம் பதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சந்தையில் சக்தி குழுமத்தின் நிறுவனங்கள் சில…
-
சக்தி சுகர்ஸ்
-
சக்தி பைனான்ஸ்
-
சக்தி சோயாஸ் (Merged)
-
ஸ்ரீ சாமுண்டீஸ்வரி சுகர்ஸ் (Not Traded)
சக்தி சுகர்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.110 கோடி. நிறுவனர்களின் பங்களிப்பு 60 சதவீதமாக உள்ளது. நிறுவனர்கள் சார்பில் 15 சதவீத பங்குகள் அடமானம் வைக்கப்பட்டுள்ளது. கடந்த பத்து வருட காலத்தில் 2017ம் ஆண்டு தவிர்த்து மற்ற அனைத்து வருடங்களிலும் நிறுவனம் நஷ்டத்தை மட்டுமே சந்தித்துள்ளன.
சக்தி பைனான்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 90 கோடி ரூபாய். வங்கிகள் அல்லது நிதி நிறுவனமாக செயல்படும் சக்தி பைனான்ஸ்(Sakthi Finance) குறிப்பிடத்தக்க வருவாயை கொண்டுள்ளன. நிறுவனர்கள் சார்பில் 67 சதவீத பங்குகள் உள்ளன. பங்குகள் அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை. இந்த நிறுவனத்தில் ஏ.பி.டி. தனியார் முதலீட்டு நிறுவனம் தன்வசம் 14 சதவீத பங்குகளை கொண்டுள்ளது.
விவசாய துறையை சார்ந்துள்ள சக்தி சுகர்ஸ் நிறுவனம் காலநிலை மற்றும் அரசின் கொள்கை மாற்றங்களால் பாதிக்கப்படும் நிலை உள்ளது. நிறுவனத்திற்கான கடனும் சற்று அதிகரித்து காணப்படுகிறது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை