Category Archives: Investopedia

தேசிய சேமிப்பு பத்திரம் – அஞ்சலக வரி சேமிப்பு திட்டம்

தேசிய சேமிப்பு பத்திரம் – அஞ்சலக வரி சேமிப்பு திட்டம்  

National Savings Certificate (NSC) – Postal Savings Scheme

வருமான வரி சேமிப்பு(Tax Savings) என்றவுடன் பெரும்பாலானவர்களுக்கு நினைவுக்கு வருவது காப்பீடு திட்டம் தான். இதற்கு அடுத்ததாக நம்மில் பலருக்கு தோன்றுவது அஞ்சலக சிறு சேமிப்பு திட்டங்கள் தான். அஞ்சலக சிறு சேமிப்பு திட்டத்தின் கீழ் பல வரி சேமிப்பு திட்டங்கள் அமலில் உள்ளன.

ஐந்து வருட வைப்பு நிதி, செல்வ மகள் திட்டம், பொது வருங்கால வைப்பு நிதி(PPF), கிசான் விகாஸ் பத்திரம்(KVP), தேசிய சேமிப்பு பத்திரம்(NSC) என வரி சேமிப்பு திட்டங்களை அஞ்சலகத்தில் காணலாம். இங்கு நாம் காணப்போவது தேசிய சேமிப்பு பத்திரம் சார்ந்து.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

என்.எஸ்.சி. எனப்படும் தேசிய சேமிப்பு பத்திர திட்டம்(National Savings Certificate), நாட்டில் உள்ள அனைத்து அஞ்சலகத்திலும் பெறக்கூடிய திட்டமாகும். இது ஒரு நிலையான வருமானத்தை தரக்கூடிய சிறு சேமிப்பு முதலீட்டு திட்டம் எனலாம். தேசிய சேமிப்பு பத்திரம் என்பது பாதுகாப்பான மற்றும் அதே வேளையில் ரிஸ்க் குறைவாக கொண்ட திட்டமாக கருதப்படுகிறது.

அனைத்து இந்திய குடிமக்களும்(Resident Individual) இத்திட்டத்தில் முதலீடு செய்ய தகுதியுள்ளவர். குறைந்தபட்ச முதலீடாக 100 ரூபாயும், அதிகபட்ச முதலீட்டிற்கு வரம்பு ஏதும் இல்லை. தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தில் முதலீடு செய்யும் ஒருவர், அதற்கான வரி சலுகையையும் வருமான  வரிச்சட்டம் 80சி பிரிவின் கீழ் சலுகை பெறலாம்.

தேசிய சேமிப்பு பத்திர திட்டம் பொதுவாக 5 வருட கால அளவை கொண்டிருக்கும். நடப்பில் இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.9 சதவீதம் (October 2019). வட்டி விகித முறை ஆண்டுக்கு ஒரு முறை கணக்கிடப்படும். அதாவது தற்போது முதலீடு செய்யப்படும் 100 ரூபாய், ஐந்து வருட முடிவில் ரூ. 146.25 ஐ பெற்று தரும்.

5 வருடம் மற்றும் 10 வருடம் என இரு வகைகளில் திட்டம் உள்ளதால், இதனை வங்கிகளில் அடமானம் வைத்து கடனும் பெறலாம் என்பது கூடுதல் அம்சம். வரி சேமிப்பிற்கு அதிகபட்சமாக ஒரு நிதியாண்டில் ரூ. 1.50 லட்சம் வரை (u/s 80C) முதலீடு செய்யலாம். அதற்கு மேற்பட்ட முதலீட்டு தொகைக்கு வரி சலுகை பெற இயலாது.

பொதுவாக இது போன்ற வரி சேமிப்பு திட்டங்களில் கால அளவுகள் (5 அல்லது 10 வருடங்கள்) முடிவதற்கு முன்னர், பணத்தை திரும்ப பெற முடியாது. இருப்பினும், திட்டத்தில் முதலீடு செய்த சந்தாதாரர் ஒருவர் எதிர்பாராத நிகழ்வால் உயிரிழக்க நேரிட்டால் அவரது நாமினி கணக்கை முடித்து கொண்டு பணத்தை உடனே பெறலாம்.

தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தின் முடிவில் கிடைக்கப்பெறும் தொகைக்கு டி.டி.எஸ்.(TDS) பிடித்தம் செய்யப்படாது. முழுத்தொகையும் சந்தாதாரர்களின் கையில் கிடைக்கப்பெறும். இருப்பினும் ஒருவர் தனது வருமான வரம்பை கணக்கில் கொண்டு, முதலீட்டின் மூலம் கிடைக்கப்பெற்ற வருவாய்க்கு வரி செலுத்த வேண்டும்.

வரி சேமிப்பு திட்டத்தினை பொறுத்தவரை லாக்-இன்(Lock-in) எனப்படும் விதிமுறை உண்டு. தற்போதைய நிலையில் குறைந்த லாக்-இன் வசதி, பரஸ்பர நிதி திட்டத்தின் கீழ் செயல்படும் வரி சேமிப்பு பண்டுகளுக்கு (Tax Savings Funds – ELSS – 3 Years) மட்டுமே உண்டு. மற்ற முதலீடுகள் 5 வருடம், 10 வருடம், 15 வருடங்களுக்கு மேலாக என லாக்-இன் விதிமுறைகள் மாறுபடும்.

வருமான வரி சேமிக்கிறேன் என நமக்கு பயன்படாத திட்டங்களை தேர்ந்தெடுப்பது நல்லதல்ல. நமது வருமான வரியை நேர்மையான முறையில் சேமிக்க வேண்டும், அதே வேளையில் நீண்ட காலத்தில் பணவீக்கத்தை தாண்டிய வருமானத்தையும் அது தர வேண்டும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பங்குச்சந்தை அலசல் – அனுக் பார்மா

பங்குச்சந்தை அலசல் – அனுக் பார்மா 

Anuh Pharma – Fundamental Analysis – Value Investing

மருந்து துறையில் 80 வருடங்களுக்கு மேலான அனுபவத்தை கொண்டிருக்கும் எஸ்.கே. குழும(SK Group) நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் அனுக் பார்மா. காசநோய்க்கான மருந்து, மலேரியா மற்றும் பாக்டீரியா தொற்றுக்கான மருந்து தயாரிப்பில் நாட்டின் மிகப்பெரிய உற்பத்தி நிறுவனமாக அனுக் பார்மா நிறுவனம் திகழ்கிறது.

மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் ஏற்றுமதியிலும் தனது சேவையை கொண்டுள்ளது இந்த நிறுவனம். நடப்பாண்டில் இதுவரை 483 அவதானிப்புகளுக்கு(USFDA Observations) அமெரிக்க மருந்து மற்றும் நிர்வாக ஆணையத்திடம் இருந்து ஆய்வில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்றுள்ளது.

கடந்த 1960ம் ஆண்டு முதல் மும்பை பங்குச்சந்தையில் மட்டுமே பட்டியலிட்டிருக்கும் அனுக் பார்மா நிறுவனத்தின் சந்தை மதிப்பு 370 கோடி ரூபாய். சிறு நிறுவனமாக இருந்தாலும், தனது சிறப்பான செயல்பாட்டால் நீண்டகால முதலீட்டாளர்களுக்கு நல்ல வருவாயை தந்துள்ளது.

நிறுவனத்தின் கடன்-பங்கு(Debt-Equity Ratio) விகிதம் தற்போது 0.03 புள்ளிகளாக உள்ளது. எனவே கடன் என்று பெரிதாக எதுவுமில்லை. வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 130 மடங்காக உள்ளது நிறுவனத்திற்கு சாதகமானது. நிறுவனர்களின் பங்களிப்பு 72 சதவீதமாகவும், நிறுவனர்கள் தங்கள் பங்குகளை அடமானம் எதுவும் வைக்கவில்லை என்பதும் முதலீட்டாளர்களுக்கு நல்ல விஷயம்.

காலாண்டு விற்பனை மற்றும் நிகர லாபம் சராசரியான வளர்ச்சியை பெற்றுள்ளது எனலாம். கடந்த மூன்று வருட கால அளவில் இதன் விற்பனை மற்றும் லாப வளர்ச்சி குறைந்துள்ளது. பத்து வருடங்களில் விற்பனையும், லாபமும் 10 சதவீத வளர்ச்சியை கொண்டிருக்கின்றன.

பங்கின் மீதான வருவாய்(ROE) கடந்த மூன்று வருடங்களில் 12 சதவீதமும், ஐந்து வருட கால அளவில் இது 15 சதவீதமாகவும், 10 வருடங்களில் 17 சதவீதமாகவும் உள்ளது. பங்கின் விலை கடந்த மூன்று வருடங்களில் 12 சதவீத இழப்பை சந்தித்துள்ளன. பத்து வருட கால அளவில் 15 சதவீத வருவாயை முதலீட்டாளர்களுக்கு தந்துள்ளன.

2018-19ம் நிதியாண்டு முடிவின் படி, நிறுவனத்தின் கையிருப்பு 152 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது. ஸ்மால் கேப்(Small Cap) குறியீட்டில் காணப்படும் இந்த நிறுவனத்தின் அடுத்த சில காலாண்டு முடிவுகளை ஆராய்ந்து பங்கு விலையின் மீது கவனம் செலுத்தலாம்.

நிறுவனம் சார்பாக இதுவரை ஐந்து முறை போனஸ் பங்குகள்(Bonus Issue) வழங்கப்பட்டுள்ளன. சமீப போனஸ் பங்குகளாக கடந்த 2015ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு பங்குக்கு இரண்டு பங்குகள் போனஸாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

தேவைக்கும், விருப்பத்திற்குமான வேறுபாடு – ‘நச்’ புரிதல்கள்

தேவைக்கும், விருப்பத்திற்குமான வேறுபாடு – ‘நச்’ புரிதல்கள்  

Understanding between the Needs and Wants

தேவைக்கும், விருப்பத்திற்குமான இடைவெளியை நம்மால் புரிந்து கொண்டால் மட்டுமே, நிதி சார்ந்த வாழ்க்கையில் எந்த சிக்கலும் இல்லாமல் பயணிக்க முடியும். நமது மனதில் தோன்றியவை எல்லாம் தேவையாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை.

நாம் இன்று உயிர் வாழ தேவையான உணவு, தட்பவெப்ப நிலையை சமாளிக்க தேவையான உடை மற்றும் இருப்பிடம், சுகாதாரம் மற்றும் சுத்தமான காற்று ஆகியவையே நமது இன்றியமையாத தேவையாகும்(Regular Needs). நாம் கற்கும் கல்வி முன்னர் அத்தியாவசியமானதாக சொல்லப்படவில்லை.

இருப்பினும், நாம் மேலே சொன்ன உணவு, உடை, இருப்பிடம் மற்றும் சுகாதாரம் போன்றவற்றை அடைய இன்று கல்வி தேவைப்படுகிறது. அதற்கு குறைந்தபட்ச அறிவை பெறுதலே சிறந்தது. தற்சார்பு வாழ்க்கையை நோக்கி பயணிக்கும் தனிநபர் தனது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொண்டாலே, வாழ்வு இனிமையாக அமையும்.

தேவையை பற்றி சொல்லி விட்டோம். தேவையை நாம் எக்காரணத்திற்காகவும் தவிர்க்க இயலாது. விருப்பம் என்பது நமது மனம் கேட்க துவங்கியது, இவற்றில் தான் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நமது மனம் ஆசைப்பட்ட அனைத்தையும் தேவையாக மாற்றி விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பது அவசியம்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், உங்களுக்கு நான்கு சக்கர வாகனம்(Car) வேண்டுமென்றால் நீங்கள் உடனே அதனை தேவையாக எண்ணி விட கூடாது. உங்களுக்கென்று நிறைய மாற்று வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் வசிக்கும் இடம் நகரமாக இருக்கும் பட்சத்தில், உங்களுக்கு அரசு பேருந்து, ஆட்டோ, கால் டாக்ஸி, ரயில் என பல வாய்ப்புகள் இருக்கலாம்.

வாகனம் வாங்குவதை, உங்களின் விருப்பமாக கொண்டு அதன் தினசரி தேவையென்ன மற்றும் அதனை வாங்குவதற்கு நீங்கள் எந்த மாதிரியான நிதித்திட்டமிடலை செய்துள்ளீர்கள் என்பதை நினைவில் கொள்ளவும். என்னுடன் பணிபுரியும் சக அதிகாரி மற்றும் ஊழியர்கள், நண்பர்கள் இந்தந்த பொருட்களை வாங்கியுள்ளனர். நான் ஏன் வாங்க கூடாது என நிதி சிக்கலில் மாட்டி விட கூடாது.

விருப்பங்களும் விலையேற்றத்துக்கு காரணம்

நாம் சில வருடங்களுக்கு முன்பு, கடைக்கு செல்ல நடந்து சென்றிருப்போம் அல்லது சைக்கிளை பயன்படுத்தியிருப்போம். ஆனால், இப்போது இரு சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனம். இதுவும் நமது விருப்பத்தினால் தான். நமக்கு வயதாகி விட்டது, அதனால் நடக்க முடியாது எனில் நாம் வாங்கிய வாகனத்தை நமது குழந்தைகள் ஏன் அதனை உடனே பயன்படுத்த வேண்டும் ? அவர்களையும் சிறிது காலத்திற்கு நடக்க சொல்லி அல்லது சைக்கிளில் பயணம் செய்து கடைக்கு செல்ல அறிவுறுத்தலாமே. அறிவியல் கண்டுபிடிப்புகள் ஏராளம், ஆனால் அவற்றால் நாம் உற்சாகத்தை இழந்து விடக்கூடாது.

தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் இலவசமாக தண்ணீர் கிடைக்கும் போது, சுத்தமான நீர்(RO Water) வேண்டுமென ஆசைப்பட்டோம். ஆனால் இன்று தண்ணீர் கிடைத்தாலே போதும் என்ற தேவைக்காக தள்ளப்பட்டுள்ளோம்.

உங்களுடைய அனைத்து விருப்பங்களையும் பட்டியலிடுங்கள். அவற்றில் எந்தந்த விருப்பங்கள் முதன்மையாக (உண்மையில்) கருதப்படுகிறதோ, அவற்றை அடைவதற்கான நிதி திட்டமிடலை உருவாக்குங்கள். கடனாக வாங்கி சிரமப்படாதீர்கள்.

நான் எப்போதும் சொல்லும் அந்த கூற்று தான் இங்கேயும், ‘உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் லாட்டரியில் கிடைத்தால் அதனை கொண்டு நீங்கள் என்ன செய்வீர்கள் ? (அதற்காக அதிர்ஷ்டத்தை நம்பி நேரத்தை வீணடிக்க வேண்டாமே).

உங்களுக்கான வாய்ப்புகள்:

  • ஆடம்பரமாக பொருட்களை வாங்கி குவித்து மகிழ்வேன்.
  • எனது கடனை அடைத்து கொள்வேன்.
  • வீட்டிற்குள் பத்திரமாக மறைத்து வைப்பேன்.
  • பாதுகாப்பான வங்கி டெபாசிட்டில் போட்டு வைப்பேன்
  • தொழில் செய்ய பயன்படுத்தி கொள்வேன்
  • நல்ல வருமானம் தரக்கூடிய முதலீட்டை கண்டறிந்து, முதலீடு செய்வேன்.
  • இன்னும் முடிவு செய்யவில்லை / என்ன செய்வதென்று தெரியவில்லை

தேவைகளை ஓரளவு குறைத்து கொள்ளலாம். விருப்பங்களை தேர்ந்தெடுத்து, சரியான நிதி திட்டமிடல் மூலம் அதனை அடைய முயற்சிக்கலாம். தேவைக்கு மட்டும் கடன் பெறுங்கள். அவசியமற்ற பொருட்களை வாங்கி குவிக்காதீர்கள்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பங்குச்சந்தை அலசல் – பெர்கர் பெயிண்ட்ஸ்

பங்குச்சந்தை அலசல் – பெர்கர் பெயிண்ட்ஸ் 

Berger Paints – Paint your imagination – Fundamental Analysis 

ஜெர்மனியை சேர்ந்த லூயிஸ் ஸ்டெய்கன் பெர்கர்(Louis Steigenberger) என்பவரால் துவங்கப்பட்ட நிறுவனம் தான் பெர்கர் பெயிண்ட்ஸ். முதலில் தனது முழுப்பெயரை நிறுவன பெயராக கொண்டிருந்த நிலையில், பின்னர் அதனை லீவிஸ் பெர்கர்(Lewis Berger) என மாற்றம் செய்தார். பெர்கர் பெயிண்ட்ஸ் நிறுவனம் கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. நிறுவனத்தின் தற்போதைய சேர்மனாக திரு. குல்தீப் சிங் உள்ளார்.

பெயிண்ட் துறையில் இயங்கி வரும் இந்நிறுவனம் ரஷ்யா, நேபாளம், போலந்து உள்ளிட்ட ஐந்து நாடுகளில் கிளைகளையும், 3500க்கு மேற்பட்ட பணியாளர்களையும் கொண்டுள்ளது. இதன் பிரதான தொழில் பெயிண்ட் உற்பத்தி மற்றும் விற்பனையே ஆகும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 48,000 கோடி மற்றும் புத்தக மதிப்பு 25 ரூபாய். தற்போதைய பங்கு ஒன்றின் விலை புத்தக விலையில் 20 மடங்காக உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு வருடத்தில் இந்த பங்கின் விலை முதலீட்டாளர்களுக்கு 67 சதவீத வருவாயை தந்துள்ளது.

பெர்கர் பெயிண்ட்ஸ் நிறுவனத்தில் ஒருவர் கடந்த பத்து வருடத்திற்கு முன்பு ரூ. 10,000 ஐ முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு ரூ. 11.70 லட்சமாகும்(Including One Bonus & One Split). சுமார் 117 மடங்கில் இந்த பங்கின் முதலீடு உயர்ந்துள்ளது கவனிக்கத்தக்கது.

நிறுவனத்தின் அடிப்படை பகுப்பாய்வை ஆராய்ந்தால், கடன்-பங்கு(Debt-Equity) விகிதம் 0.20 ஆக உள்ளது. 0.5 க்கு கீழ் இந்த விகிதம் இருக்கும் பட்சத்தில், அந்த நிறுவனத்தின் கடன் தன்மை குறைவாக உள்ளதாக எடுத்து கொள்ளலாம். இது நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு சாதகமான விஷயம்.

நிறுவனர்களின் பங்களிப்பு(Promoters Holding) 75 சதவீதமாக உள்ளது. நிறுவனர்கள் தங்கள் பங்குகளை அடமானம் ஏதும் வைக்கவில்லை. விற்பனை வளர்ச்சி கடந்த 5 வருடங்களில் 10 சதவீதமாகவும், பத்து வருட காலத்தில் 15 சதவீதமாகவும் இருக்கிறது. இது போல லாப வளர்ச்சி(Profit Growth) விகிதம் கடந்த ஐந்து வருட காலத்தில் 15 சதவீதமும், பத்து வருடங்களில் 20 சதவீதமாகவும் உள்ளது.

பங்கின் விலை கடந்த பத்து வருடங்களில் 38 சதவீத லாபத்தை முதலீட்டாளர்களுக்கு அளித்துள்ளது. பங்கின் மீதான வருவாயும் சராசரியாக 20 சதவீதம் என்ற அளவில் காணப்படுகிறது. 2008ம் ஆண்டில் 299 கோடி ரூபாயாக இருந்த நிறுவனத்தின் கையிருப்பு(Reserves) கடந்த நிதியாண்டின் முடிவில் ரூ. 2,376 கோடியாக உள்ளது.

நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு இதுவரை ஆறு முறை போனஸ் பங்குகளையும், இரு முறை பங்கின் முக மதிப்பையும்(Facevalue Split) மாற்றியுள்ளது. ஒவ்வொரு காலாண்டிலும் நிறுவனத்தின் இயக்க லாபம் சராசரியாக 15 சதவீத வளர்ச்சியில் உள்ளது. நிறுவனத்தின் தொடர்ச்சியான நிகர லாபம் பங்குதாரர்களுக்கு நன்மை தரக்கூடியவையாக அமைந்துள்ளது.

பணப்பாய்வும்(Cash Flow) ஒவ்வொரு நிதியாண்டில் சராசரியாக வரவு வைக்கப்படுகிறது. இது போல நிறுவனம் சார்பாக முதலீடும், சொத்துக்களை வாங்குவதும் நடைபெறத்தான் செய்கிறது.

செப்டம்பர் 2019 காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 1599 கோடியாகவும், நிகர லாபம் 195 கோடி ரூபாயாகவும் சொல்லப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 6,062 கோடி மற்றும் செலவினங்கள் ரூ. 5,181 கோடி. நிகர லாபமாக ரூ. 498 கோடி. இதர வருமானமாக 69 கோடி ரூபாய் உள்ளது.

சமீபத்திய நிறுவனங்களுக்கான வரி குறைப்பு(Corporate Tax), பல பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் லாபத்தை தக்க வைக்க உதவியுள்ளது. அதே வேளையில் விற்பனை வளர்ச்சியில் பெரிய மாற்றம் இல்லை. தற்போது பெர்கர் பெயிண்ட்ஸ் உச்சத்தில் இருப்பதால், விலை குறைவதற்கான வாய்ப்பு இருந்தால் இந்த பங்குகளை கவனிக்கலாம். போனஸ் பங்குகளை அளிப்பதற்கான வாய்ப்பு தெரிந்தாலும், அந்த நடவடிக்கைக்கு பின்னர் இந்த பங்கின் செயல்பாட்டை தேர்ந்தெடுக்கலாம்.

சந்தையில் பங்குகளை வாங்க தயாராகும் ஒருவர், பங்குகளின் அடிப்படை பகுப்பாய்வு(Fundamental Analysis) மற்றும் ரிஸ்க் தன்மையை(Risk Management) அறிந்த பின்னரே, முதலீடு செய்ய வேண்டும். இல்லையெனில், ஒரு சிறந்த நிதி ஆலோசகரை அணுகுவது நன்று.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

வீட்டுக்கடன் வாங்கியவரா நீங்கள் – சாமர்த்தியமாக கடனை செலுத்துவது எப்படி ?

வீட்டுக்கடன் வாங்கியவரா நீங்கள் – சாமர்த்தியமாக கடனை செலுத்துவது எப்படி ?

How to repay your Housing loan Smartly ?

 

இன்றைய காலத்தில் வீடு வாங்குவதோ அல்லது வீடு கட்டுவதோ ஒரு கனவு என்றால், அதனை வீட்டுக்கடனாக பெற்று மாத வருமானத்தில் ஒரு பகுதியை அடுத்த 20-30 வருடங்களுக்கு தவணையாக செலுத்துவது பெரும்பாடாக உள்ளது. நீங்கள் கடனாக வாங்கிய வீடு, அதாவது வீட்டுக்கடன் மூலம் அடைந்த வீடு உங்களுக்கு 30 வருடங்களுக்கு பின்பு தான் சொந்தமாக கருதப்படும். அதுவரை அந்த வீடு ஒரு கடனாக(Liability) தான் வங்கியால் அங்கீகரிக்கப்படும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தேவைக்கு ஒரு வீடு இருப்பது நல்லது, அதே வேளையில் நன்றாக சம்பாதிக்கிறேன், வரி சேமிப்புக்காக(Tax Savings) வீட்டுக்கடன் வாங்குகிறேன் என இரண்டு, மூன்று வீடுகளை வாங்க முயன்றால் அது நமக்கு ஒரு செலவினத்தை தான் தரும். அதுவும் ஒரு நீண்டகால கடனை ஏற்படுத்தும் என்பதை மறக்க வேண்டாம். 

 

உங்களிடம் அதிகப்படியான பணம் உள்ளது. ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கி, வீடுகளை வாங்கி விற்பனை செய்தல் மற்றும் வீடுகளை பெருமளவில் வாடகைக்கு விட்டு, அதிகப்படியான வருமானத்தை ஈட்டுபவராக இருந்தால் நீங்கள் இந்த பதிவை படிக்க தேவையில்லை. உங்கள் நேரத்தை தொழிலில் செலுத்தலாம்.

 

நடுத்தர குடும்பத்தில் பெரும்பாலானோர் நிதிச்சிக்கலில் மாட்டிக்கொள்வது வருவாயில் 50 சதவீதத்திற்கும் மேல் கடனை கொண்டிருப்பது தான். வீட்டுக்கடன்(Home Loan), தனி நபர் கடன்(Personal Loan), வாகன கடன் என கடன் பட்டியல் நீளும். இருப்பினும், கடனை நாம் சாமர்த்தியமாக அடைப்பதே நமக்கான கட்டாய இலக்காகும். 

 

உதாரணமாக ஒருவர் வீட்டுக்கடனாக(Housing Loan) ரூ. 25 லட்சத்தை பெற்றுள்ளார் என வைத்து கொள்வோம். வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் 9.60 சதவீதம் என சொல்லப்பட்டுள்ளது. நமது தவணைக்காலம் 30 ஆண்டுகள். அப்படியெனில், நமது மாத தவணைத்தொகை ரூ. 21,204 (அடுத்த 30 வருடங்களுக்கு).

 

இப்போது நமது கடன் மதிப்பீட்டை பார்ப்போம். ரூ. 25 லட்சத்தை 9.60 சதவீத வட்டியில் நாம் கடனாக பெற்றுள்ள போது, 30 வருடங்களில் நமது வட்டி தொகை மட்டும் (அசலை தவிர்த்து) 51,33,440 ரூபாய். அதாவது நமது மொத்த தவணை தொகை (ரூ. 21,204 X 30 வருடங்கள் அல்லது 360 மாதங்கள்) – ரூ. 76,33,440. வீட்டுக்கடனில் நாம் கட்ட வேண்டிய வட்டி தொகை மட்டும் 67 சதவீதமாகும். 

 

இதுவே நாம் வாங்கிய வீட்டுக்கடனை அதே வட்டி விகிதத்தில், 20 வருடங்களில் கட்டி முடிக்க நினைத்தால், மாத தவணை தொகை ரூ. 23,467. செலுத்த வேண்டிய வட்டி தொகை ரூ. 31,32,080. அதாவது மொத்த தொகையில் வட்டியின் பங்களிப்பு 55 சதவீதமாகும். ஆக, தவணை காலத்தை அதிகரிக்கும் போது, நமது தவணை தொகை குறைவாக இருப்பினும், செலுத்த வேண்டிய வட்டி தொகை அதிகரிக்கும். கடனை விரைவாக செலுத்த வேண்டிய நிலையில், நமக்கான தவணை தொகை அதிகமாகி, வட்டி தொகை குறையும்.

repaying home loan

இங்கு நாம் இரு நண்பர்களை உதாரணத்திற்கு எடுத்து கொள்வோம். ராமன்(X), ரவி(Y) இருவரும் நண்பர்கள். இருவரும் ஒரே காலத்தில், தங்களுக்கான வீட்டுக்கடனை பெறுகிறார்கள். அவர்களது வீட்டுக்கடன் தொகையும், வட்டி விகிதமும் ஒன்று தான். ஆனால், தவணை காலம் மட்டும் மாறுபடுகிறது. ராமன் தனது 25 லட்சம் ரூபாய் வீட்டுக்கடனை 9.60 சதவீத வட்டியில் 20 வருடங்களில் செலுத்த உள்ளார். அதே சமயத்தில், ரவி தனக்கான தவணை காலத்தை 30 வருடங்களாக திட்டமிட்டுள்ளார்.

 

ராமனின் வீட்டுக்கடனுக்கான மாத தவணை தொகை ரூ. 23,467 மற்றும் ரவியின் தவணை தொகை ரூ. 21,204. இருவருக்கும் மத்தியில் உள்ள இடைவெளி தொகை ரூ. 2263 ( 23,467 – 21,204). அதாவது, ராமனை காட்டிலும் மாத தவணையில் ரூ. 2263 ஐ குறைவாக ரவி செலுத்துகிறார். தவணை காலத்தை கவனத்தில் கொண்டிருப்பதும் அவசியம். சொல்லப்பட்ட ரூ. 2263 இடைவெளி தொகையை ரவி ஒரு பரஸ்பர நிதி திட்டத்தில்(SIP – Equity Mutual Funds) மாத முதலீடாக செலுத்துகிறார் என கொள்வோம். 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இருவரும் தங்களது மாத தவணையை செலுத்தி வரும் நிலையில், 17 வருட முடிவின் போது ராமன் கட்டிய மொத்த தவணை தொகை ரூ. 47,87,222 (23,467 X 17 வருடங்கள் அல்லது 204 மாதங்கள்) ஆக இருக்கும். அதே காலத்தில் ரவி கட்டிய மொத்த தவணை தொகை ரூ. 43,25,616 (21,204 X 204 மாதங்கள்). 

 

நாம் சொன்ன ரவியின் பரஸ்பர நிதி திட்டத்தில் முதலீடு செய்யப்பட்ட தொகை 17 வருட முடிவில், 4,61,606 ரூபாயாக இருக்கும். ரவியின் 17 வருட முடிவின் தவணை தொகை மற்றும் முதலீட்டு தொகையை சேர்த்தால்(SIP Corpus), ரூ. 47,87,222 ஆக இருக்கும். ராமனுக்கு தவணை செலுத்த கூடிய காலம் இன்னும் மூன்று வருடங்கள் உள்ளது. அதே போல ரவிக்கு அது 13 வருடங்களாகும். 

 

இந்த சமயத்தில் ரவியின் மாத முதலீடான 2263 ரூபாய், 15 சதவீத வளர்ச்சி பெற்றிருக்கும் பட்சத்தில் 17 வருட முடிவில் 21,27,253 ரூபாயாக இருக்கும். ராமன் அடுத்த 13 வருடங்களில் செலுத்த வேண்டிய அசல் தொகை 18,85,811 ரூபாய். இதனை தனது பரஸ்பர நிதி முதலீடு திட்டத்தில் உள்ள பணத்தை கொண்டு 17 வருட முடிவில் அடைத்தால், அவருக்கு மீதமிருக்கும் தொகை ரூ. 2.41 லட்சம். இதன் மூலம் ரவி தனது கடனையும் அடைத்து விட்டு, பரஸ்பர நிதி முதலீட்டின் மூலம் சிறிய தொகையையும் (ரூ. 2.41 லட்சம்) மீதம் பெற்றுள்ளார்.

 

மறுபுறத்தில், ராமன் அடுத்த 3 வருடங்களில் அடைக்க வேண்டிய அசல் தொகை ரூ. 7,31,514. ராமன் தனது வீட்டுக்கடனை 20 வருடங்கள் கட்டி முடிக்க வேண்டிய சூழ்நிலையில், ரவி சாமர்த்தியமாக ஒரு முதலீடு திட்டத்தின் மூலம் 17 வருடங்களில் தனது கடனை அடைத்து விட்டார். ராமனை விட ரவிக்கு கிடைத்த மொத்த சலுகையின் மதிப்பு  10.86 லட்சம் ரூபாய் ( பரஸ்பர நிதி முதலீட்டின் எஞ்சிய தொகை மற்றும் அடுத்த 3 வருடங்களில் செலுத்த வேண்டிய தவணை தொகை).

 

ராமனும், ரவியை போன்று சாமர்த்தியமாக செயல்பட வேண்டுமென்றால் கூடுதலாக ஒரு முதலீட்டை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் வீட்டுக்கடனுக்கான வட்டி(Bank Interest Rate) விகிதம் குறைவாக இருப்பதும், முதலீட்டின் மூலம் பெறக்கூடிய வருவாய் (SIP Returns) அதிகமாக அமைவதும் தான் வாய்ப்பாக கருதப்படும். முதலீடு செய்யும் ஒருவர் பணவீக்கத்தையும் நினைவில் கொள்ள வேண்டும். 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பரஸ்பர நிதி திட்டத்தின் மூலம் குறுகிய காலத்தில் 15 சதவீத வருவாயை ஏற்படுத்த முடியாது. நீண்ட காலத்தில் ஒருவர் முதலீடு செய்யும் பட்சத்தில், நல்ல வட்டி வருவாயை ஈட்டலாம். வீட்டுக்கடனை அடைக்கும் போது, முதலீடு செய்கிறேன் என ஒருவர் வட்டி குறைவான முதலீட்டு சாதனத்தை எடுத்து கொண்டு சாமர்த்தியமாக செயல்பட முடியாது. 

 

நாம் பெறக்கூடிய முதலீட்டின் மீதான வருவாய்(Return on Investment), வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதத்தை காட்டிலும் அதிகமாக இருந்தால் மட்டுமே இந்த திட்ட முறை செயல்படும். எனவே அதனை கருத்தில் கொண்டு ஒருவர் தனது கடனை அடைப்பதில் திட்டமிடலாம்.

(கணக்கீடு தரவுகள்: எச்.டி.எப்.சி.(HDFC MF) மியூச்சுவல் பண்டு பயன்பாடு)

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

  

உணவக வணிகத்தில் இறங்க உள்ளீர்களா – இது உங்களுக்கு தான்

உணவக வணிகத்தில் இறங்க உள்ளீர்களா – இது உங்களுக்கு தான் 

Are you get into the Food Startups ? – Business Insider 

நேற்று மதியம் நானும், என்னுடைய உறவுமுறைகளில் உள்ள சகோதரர் ஒருவரும் பேசி கொண்டிருக்கும் போது, ‘ அவர் உணவு சார்ந்த தொழிலை தனது நண்பர்களுடன் சேர்ந்து துவங்க உள்ளதாக கூறினார். மேலும் அதனை சார்ந்து என்னுடைய அபிப்பிராயத்தை கேட்க முனைந்தார் ‘. எனக்கு உணவு சார்ந்த தொழிலை பற்றி அவ்வளவாக தெரியாது எனினும், அந்த சகோதரருக்கு சிறு வயது என்பதால் தொழில்முனைவை கொண்டாட, அவர் தொழில் செய்ய ஊக்கத்தை ஏற்படுத்தினேன்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நான் பலமுறை சொன்னது போல, விவசாயம் என்பதும் ஒரு தொழில் என்பதை நாம் மறக்க கூடாது. தனது நிலத்தில் உற்றார், உறவினர் மற்றும் ஊர்க்காரர்களை வேலைக்கு அமர்த்தி, களையெடுக்க தினக்கூலி வழங்கி, காலம் வரும் வரை காத்திருந்து அறுவடை செய்பவர் ஒரு தொழில்முனைவை தான் செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு நாம் விவசாயி, தொழில்முனைவோர், தொழிலதிபர், கூலி வேலை என பல பெயர்களை ஏற்படுத்தினாலும், அவர் செய்து கொண்டிருப்பது தொழில் தான்.

கோடிகளில் தொழில் செய்து வருபவர் தற்கொலை செய்து கொண்டாலும், கூலியாக இருந்தும் தனது சொந்த நிலத்தில் விவசாயத்தை செய்து வருபவரும் தொழிலை தான் செய்கிறார். நான் ஏன் இந்த விஷயத்தை அழுத்தமாக சொல்கிறேன் என்றால், தொழில்முனைவு(Entrepreneurship) என்பது தன்னை தானே சமாதானம் செய்து கொள்வதல்ல, மாறாக தன்னை வெற்றி கொள்வதே ஆகும்.

நமது சகோதரர் கதைக்கு வருவோம், உணவு சார்ந்த சேவைகளில் இன்று ஸ்விக்கி(Swiggy), ஜோமோடோ(Zomato), உபேர் ஈட்ஸ்(Uber Eats) என பல பிராண்டுகள் வந்து விட்டன. அப்புறம் எங்கே நாம் தொழில் செய்வது என கேட்கலாம். காலங்காலமாக இந்த நிகழ்வு மாற்றம் பெற்று கொண்டு தான் இருக்கிறது. தொழில் என்பது ஒரு ரிஸ்க் தன்மை கொண்ட செயல் எனினும், வேறு யார் அதை செய்வது. தொழில் விருத்தி அடையாவிட்டால், அனைவருக்குமான வேலை வாய்ப்பு மற்றும் வாழ்க்கை தரம் எங்கே என்பது கேள்வி.

இளவயதிலேயே தொழிலில் ஈடுபட்டு தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை. எண்ணத்தில் மட்டுமே கொண்டு, தொழில் செய்யாமல் விட்டுவிட்டால், அது ஒரு வாழ்க்கை தோல்வி தான். சகோதரர் கேட்டிருக்கிறார் என்பதற்காக உணவு சார்ந்த சில காரணிகளை இணையத்தில் கூகுள் செய்தேன்.

நம்மை போன்ற நுகர்வு சந்தையை கொண்டிருக்கும் நாடுகளில், உணவுக்கு எப்போதும் தேவை அதிகம் தான். பொதுவாக உணவு சார்ந்த தொழிலை பொறுத்தவரை வீணாகும் உணவு(Food Wastage) தான் தொழிலை பாதிக்கும் காரணியாக இருக்கும். இரண்டாவதாக சேவை பரிமாற்றத்தில் கவனமாக செயல்படுவது அவசியமாகும். நாம் எந்த மாதிரியான உணவு வகைகளை பரிமாற உள்ளோம், உணவகம் அமைவதற்கு தேர்ந்தெடுக்கப்படும் இடம், நமது வேலையாட்கள் ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தது.

நாம் மற்ற உணவகத்திலிருந்து உணவு வகைகளை பெற்று கொண்டு விநியோக தொழிலை(Delivery Business) மட்டும் மேற்கொள்ள உள்ளோமா, தொழிலுக்கான பட்ஜெட் திட்டமிடல், நமது வாடிக்கையாளர்கள் யார்(Target Audience) என கண்டறிவதும் அவசியமான ஒன்றாகும். உணவு தொழிலுக்கான அரசு உரிமங்கள், உணவை எந்த முறைகளில் வாடிக்கையாளர்களுக்கு பரிமாற போகிறோம் என்பதனையும் நாம் கவனிக்க வேண்டும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

உணவு சார்ந்த ஸ்டார்ட் அப்(Startups) தொழில்களில் கடந்த ஐந்து வருடங்களாக முதலீடு பெருகி வருகிறது. நாளுக்கு நாள் நுகர்வோர் தேவை அதிகரித்து வருவதால், அதற்கான முதலீட்டு வாய்ப்புகளும் திறந்தநிலையில் உள்ளது. பொருளாதார மந்த நிலை என்று சொல்லப்படும் காலத்திலும், உணவு சார்ந்த தொழிலில் தேவைகள் இருந்த வண்ணம் தான் உள்ளன.

தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே சில உணவகங்களில் தோல்வியை தழுவ செய்கின்றன. நடப்பு 2019ம் ஆண்டில் உணவு சார்ந்த தொழில்கள் பெற்ற முதலீடு சுமார் 3.58 லட்சம் கோடி ரூபாய். இது கடந்த வருடத்தை காட்டிலும் இரு மடங்கு என சொல்லப்படுகிறது. நாம் இந்த தொழிலில் சரியான முறையில் சேவைகளை அளித்து வரும் நிலையில், முதலீடுகளை ஈர்ப்பது கடினமான விஷயமாக இருக்காது.

கடந்த ஒரு வருடத்தில் ஸ்விக்கி நிறுவனம் 50 கோடி விநியோகங்களை(டெலிவரி) அளித்துள்ளது. வெறும் கைபேசி செயலியை(Mobile App) கொண்டு உணவு விநியோக சேவையில் ஈடுபட்டு வரும் பெரு நிறுவனங்கள், இயந்திர வழி கற்றலுக்கு(Machine Learning – AI) மாறி கொண்டிருக்கின்றன. இந்த சேவையில் தானியங்கி முறையை அமல்படுத்த நிறுவனங்களும், வாடிக்கையாளர்களும் தயாராக உள்ளனர்.

நம் மதுரையில் 10 கோடி ரூபாய்க்கு மேல் உணவு விற்பனையை ஏற்படுத்தி கொண்டிருக்கும் சுஸ்(Swiggy,Uber Eats and Zomato) நிறுவனங்களே இதற்கு சான்றாக உள்ளன. ஒரு முறை நேச்சுரல்ஸ் சலூன் இணை நிறுவனர் திரு. குமரவேல்(C K Kumaravel, Naturals Salon) சொன்னது போல, ‘ மதுரையில் உள்ள இளைஞர்கள் சிலர் இங்குள்ள உணவகங்களை இணைத்து ஒரு உணவு விநியோக செயலியை ஏற்படுத்தி இருந்தால், இன்று ஸ்விக்கி, ஜோமாடோ போன்ற நிறுவனங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எங்கிருந்தோ வந்த நிறுவனங்கள் தென்னகத்தின் கோவில் நகரத்தில் சில புள்ளிவிவரங்களை கொண்டு தொழில் செய்யக்கூடிய நம்பிக்கை இருந்தால், நாம் ஏன் உள்ளூர் இளைஞர்கள் செய்ய முடியாது ‘ என்று கூறினார்.

உணவு தொழில் மற்றும் விநியோக சேவையில் உள்ள சாதக பாதகங்களை ஆராய்ந்து தொழில்முனைவை ஏற்படுத்துவதே உத்தமம். ஆழம் தெரியாமல் காலை விட கூடாது. அதற்கான காலை விட கூடாது என சொல்லவில்லை.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

வங்கி சேமிப்புக்கு மாற்றாக மியூச்சுவல் பண்ட் திட்டங்களை பயன்படுத்துவது எப்படி ?

வங்கி சேமிப்புக்கு மாற்றாக மியூச்சுவல் பண்ட் திட்டங்களை பயன்படுத்துவது எப்படி ?

How to use  Mutual Funds Schemes instead of Bank Savings or Deposits ?

கடந்த மத்திய நிதி கொள்கை குழு கூட்டத்தில்(Monetary Policy Committee) வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 25 புள்ளிகள் குறைக்கப்பட்டது. நடப்பில் வங்கிகளுக்கான ரெப்போ விகிதம்(Repo Rate) 5.15 சதவீதமாக உள்ளது. இந்த வருடத்தில் மட்டும் ரெப்போ வட்டி விகிதம் ஐந்து முறை குறைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக வங்கிகளின் வட்டி விகிதம் குறையும் போது, கடன் பத்திரங்களின் (Bonds) தேவை அதிகரித்து அவற்றின் வட்டி விகிதமும் அதிகரிக்கும். இதே போல வங்கி வட்டி விகிதங்கள் அதிகரிக்கும் போது, கடன் பத்திரங்களின் தேவை குறைந்து அதனுடைய வட்டி குறையும். எனவே இந்த சூழ்நிலையை ஒருவர் கருத்தில் கொண்டு முதலீடு செய்தால், குறிப்பிடத்தக்க வட்டி வருவாயை பெறலாம்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

எஸ்.பி.ஐ. (SBI) வங்கி தனது வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கிற்கான வட்டி விகிதத்தை 3.5 சதவீதத்திலிருந்து 3.25 சதவீதமாக குறைத்துள்ளது. வங்கி டெபாசிட்டுக்கான வட்டி விகிதமும் ஒரு வருடத்திற்கு 7 சதவீதத்திற்கு குறைவாகவும், ஐந்து வருட காலத்திற்கு 9 சதவீதத்திற்கு கீழாகவும் உள்ளது.

இது போன்ற காலத்தில், இதற்கு மாற்றாக பரஸ்பர நிதி (Mutual Funds) திட்டங்களை பயன்படுத்தலாம். பண பரிவர்த்தனைகளுக்கு ஒருவர் வங்கி சேமிப்பு கணக்கை சார்ந்திருந்தாலும், சேமிப்பு மற்றும் முதலீட்டுக்கு வங்கிகளை காட்டிலும் சற்று கூடுதலான வட்டி வருவாயை கொடுக்கும் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

லிக்விட் பண்டுகள் (Liquid Funds):

வங்கி சேமிப்பு கணக்குக்கு கிடைக்கும் 4 சதவீதத்திற்கு குறைவான வட்டி விகிதத்திற்கு பதிலாக பரஸ்பர நிதிகளின் லிக்விட் பண்டுகளை(Liquid Funds) பயன்படுத்தலாம். இவற்றில் பணப்புழக்கமும் நன்றாக உள்ளது, ரிஸ்க் அதிகமில்லா முதலீடாக கருதப்படுகிறது. மேலும் வங்கி சேமிப்பு கணக்கை காட்டிலும், அதாவது ஆண்டுக்கு 6-7 சதவீத வருவாயை கொடுக்கும். லிக்விட் பண்டுகளை மிகவும் குறுகிய காலத்திற்கு(Alternative for Bank Savings Rate) பயன்படுத்தி கொள்ளலாம்.

எச்.டி.எப்.சி.(HDFC), நிப்பான் இந்தியா(Nippon India), ஆதித்ய பிர்லா, ஆக்ஸிஸ் போன்ற பரஸ்பர நிதி நிறுவனங்களில் லிக்விட் பண்டுகளின் முதலீடு எளிமையாக்கப்பட்டுள்ளது. இந்த பண்டுகளில் முதலீடு செய்த தொகையை வெறும் இரண்டு நிமிடத்தில் நமது வங்கி கணக்குக்கு மாற்றம் செய்யும் வசதியும் உள்ளது. சில லிக்விட் திட்டத்தில் இலவச ஏ.டி.எம்.(ATM) கார்டு சேவையும், வரம்பற்ற பரிவர்த்தனைகளையும்(Unlimited Withdrawal Transaction) கிடைக்கப்பெறுகிறது.

கடன் சார்ந்த பண்டுகள் (Debt Funds):

ஒரு வருடம் முதல் ஐந்து வருட காலத்திற்கான முதலீட்டுக்கு பரஸ்பர நிதி நிறுவனங்கள் வழங்கும் கடன் பத்திர திட்டங்களை(Debt Funds) தேர்ந்தெடுக்கலாம். இவற்றில் தற்போது 7-10 சதவீதம் வரை வட்டி வருவாய் அமைகிறது. மூன்று வருடங்களுக்கு மேலாக முதலீடு செய்யும் பட்சத்தில், வரி சலுகையும்(Indexation Benefit) உள்ளது. இது போன்ற வசதி வங்கி டெபாசிட்களில் கிடைப்பதில்லை. கால அளவுகளை கொண்ட கடன் பத்திர திட்டங்களை(Duration Funds), நமது இலக்குகளுக்கு தகுந்தாற் போல் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யலாம்.

கலப்பின பண்டுகள் (Hybrid Funds):

ஐந்து வருட கால இலக்குகளுக்கு ஒருவர் பரஸ்பர நிதிகளின் கலப்பு முதலீட்டு திட்டத்தினை (Hybrid Funds) தேர்ந்தெடுக்கலாம். இவற்றின் சராசரி வருமானம் 10-12 சதவீதமாக இருக்கும். கலப்பு முதலீடு என்பது பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும். இதன் மூலம் ஒருவர் தனது பணத்தை முழுமையாக பங்குகளில் முதலீடு செய்யாமல், கடன் பத்திரங்களின் வாய்ப்பையும் பயன்படுத்தலாம்.

முதலீட்டு பரவலாக்க பண்டுகள் (Asset Allocation Funds):

நீண்டகால இலக்குகள் மற்றும் தேவைகளை கொண்டுள்ளோர் பரஸ்பர நிதி திட்டத்தின் கீழ் பங்குகளில் முதலீடு செய்யும் போது, நல்ல வருமானத்தை ஈட்டலாம். குறுகிய காலத்தில் பங்குகள் அதிக ஏற்ற-இறக்கங்களுக்கு உட்பட்டு இருப்பதால் பங்குகளை குறுகிய கால தேவைகளுக்கு பயன்படுத்த கூடாது. அதே வேளையில், பன்முக முதலீட்டையும் ஒருவர் பரிசீலிக்கலாம். பன்முக முதலீட்டின்(Asset Allocation) வாயிலாக ஒருவர் பங்கு, கடன் பத்திரங்கள், தங்கம், ரியல் எஸ்டேட் மற்றும் பிற தொழில்களில் முதலீட்டை பரவலாக்கலாம்.

வரி சேமிப்பு பண்டுகள் (Tax Savings – ELSS Mutual Funds):

வரி சேமிப்புக்கு மட்டுமே வங்கிகள் மற்றும் அஞ்சலக சேமிப்பை சார்ந்தவர்கள், ஒரு முறை பரஸ்பர நிதி வழங்கும் வரி சேமிப்பு பண்டுகளை(Tax Savings Mutual Funds) தேர்ந்தெடுக்கலாம். குறைந்த கால லாக்-இன்(Lock-in) வசதியை கொண்ட இது போன்ற பண்டுகளில் நீண்ட காலத்தில் வருமானமும் சற்று அதிகம்.

வங்கிகள் வழங்கும் சேமிப்பு  மற்றும் முதலீட்டு திட்டங்களை நாம் அறவே ஒதுக்க முடியாது. வங்கிகளை போல நிலையான அல்லது நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதம்(Fixed Returns) பரஸ்பர நிதிகளில் சொல்லப்படுவதில்லை. இருப்பினும், வங்கி வட்டி விகிதங்கள் குறைந்து வரும் சூழ்நிலையில் பரஸ்பர நிதி திட்டங்களை திறமையாக பயன்படுத்துவது  சாதகமான விஷயமே. எதிர்காலத்தில் வங்கி கணக்குக்கு மாற்றாக பரஸ்பர நிதிகளும் தினசரி பரிவர்த்தனைக்கான சேவையை வழங்க முன்வரலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக  மதுரை 

www.varthagamadurai.com

தண்ணீர்… தண்ணீர்… பஞ்சாயத்து

தண்ணீர்… தண்ணீர்… பஞ்சாயத்து 

The Story of Water Crisis – Chapter 1

இது ஒரு விருந்தினர் இடுகை. தண்ணீர் சார்ந்த மேலாண்மை, அதன் கடந்த வரலாறு மற்றும் அதனை ஒட்டி நடப்பில் உள்ள பிரச்சனைகளை பேசும் குறுந்தொடர் இதுவாகும். வர்த்தக மதுரை வாசகர்கள் தங்கள் தண்ணீர் மேலாண்மை சார்ந்த கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்.

 

தண்ணிப்பஞ்சாயத்து அத்தியாயம் – 1 

 

 ‘ நீரின்றி அமையாது உலகு ‘  – இது வள்ளுவனின் வாக்கு 

 

தமிழர்களின் பாரம்பரிய பழக்கவழக்கம், தங்கள்  வீட்டிற்கு வரும் விருந்தினரை, முதலில் தண்ணீர் கொடுத்து வரவேற்பர். தண்ணீர் இல்லாத மனிதனின் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என நினைத்து பார்த்தால், வள்ளுவரின் குரல் தான் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது, ‘ புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும் ‘. 

 

ஆதலால் மனிதனின் புறத்தூய்மை தண்ணீரால் மட்டுமே தூய்மையடையும். அப்படியெனில், தண்ணீர் என்பது உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் ஜீவகாருண்யம். ஓ, மனிதனே ! தண்ணீரை உனக்கு மட்டும்  சொந்தம் கொண்டாடாதே. நீ அடிப்படையில் ஒரு விலங்கு என்பதை மறவாதே. தண்ணீரின் பயன்பாடு கடந்த நூற்றாண்டுகளில் தமிழரின் வாழ்வில் எவ்வாறு இருந்தது என்பதை சற்று பின் நோக்கி பார்ப்போம். 

 

ஆழ்துளை கிணறு இல்லாத முப்போக விளைச்சல், பூச்சிக்கொல்லிகள் இல்லாத இயற்கை விளைச்சல், கடைமடைக்கும் தண்ணீர் செல்ல வழிவகுத்த தொழில்நுட்பம் இல்லாத நீர் மேலாண்மை, காட்டு விலங்குகள் நீரை தேடி, நாட்டுக்குள் வராத வண்ணம் நீரின் தேவை விலங்குகளுக்கும் உண்டு என்று உணர்ந்த பண்பாடுள்ள சமூகம் கடந்த நூற்றாண்டுகளில் வாழ்ந்தது. 

 

ஒரு சிறு எடுத்துக்காட்டு: மன்னர் முறை இந்தியாவில் ஒழிக்கப்பட்ட பிறகு, மன்னர்களுக்கென்றே சமையல் செய்யக்கூடிய சமையல் கலைஞர்கள், அடுத்து யாருக்கு சமையல் செய்வது என்பது தெரியாமல் இருந்தனர். ஆதலால் அவர்கள் உணவகம் அமைத்து மன்னர்களுக்கு சமைத்த உணவை, சாமானியர்களுக்கு உணவகம் வைத்து விற்க ஆரம்பித்தனர். ஆகையினாலே மன்னர்களின் உணவு முறையும், சாதாரண மனிதனின் நாவை தொட்டது. இன்றும் பழைய டில்லியில் மொகலாய மன்னர்களுக்கு சமையல் செய்த சமையல் கலைஞர்களின் வாரிசுகள் பாரம்பரியமாக உணவாக விடுதி நடத்தி வருகின்றனர். இந்த கூற்றில் நாம் அறியப்பட வேண்டியது என்னவென்றால், சமையல் நுட்பங்களை பாரம்பரியமாக கடத்தி வந்தது. 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

எல்லோருக்குள்ளும் இந்த கேள்வி உள்ளதா, இல்லை எனக்கும் மட்டும் தோன்றுகிறதா என தெரியவில்லை… 

 

அது என்ன கேள்வியென்றால், ‘ முன்னோர்கள் பின்பற்றிய நீர் மேலாண்மை நிர்வாகம் ஏன் இன்று உள்ள விவசாயிகள் வரை கடந்து வரவில்லை ? 

 

தஞ்சை கோயிலை கட்டிய கட்டிட கலைஞனின் தொழில்நுட்பம் ஏன் இன்று வரை கடத்தி வரப்படவில்லை. இப்படியாக தமிழர்களின் உயரிய மேலாண்மை நுட்பங்கள் எந்த தலைமுறையில் அறுந்து போனது என்பதே ‘ அது. 

 

தண்ணீரை பூமியில் தேடாதே, வானில் இருந்து வர வை ‘ என ஐயா நம்மாழ்வார் கூறுகிறார். நீர்நிலைகளே இல்லை, குளங்கள் எல்லாம் காலி மனைகளானது. நீராவி இல்லாமல் மழை எப்படி வானிலிருந்து வரும் ? விவசாயத்திற்கு பயன்படுத்தும் தண்ணீரை விட, வியாபாரத்திற்கு பயன்படும் தண்ணீரே அதிகம். 

 

தண்ணீர், எப்பொழுது வியாபாரமாக தொடங்கியது ?

 

தண்ணீருக்கு புனிதம் கற்பிக்கும் போது…

 

எனக்கு இப்போது வரையும் தெரியவில்லை, சுத்தமான தண்ணீர் என்பது எது ? 

 

 மழை நீரா…  நிலத்தடி நீரா… ?  இல்லையெனில், தாதுக்கள் மற்றும் சத்துக்கள் நீக்கப்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் விற்கும் நீரா ? 

 

வியாபார பொருளாக தண்ணீர் மாற்றப்பெற்ற பின்னணியின் சிறு ஆய்வு:

 

அந்த காலத்தில், மன்னர் என்பவருக்கு மட்டுமே அனைத்து வளங்களையும் அனுபவிக்கும் உரிமை உண்டு. அடுத்ததாக அமைச்சர்கள், படைத்தளபதிகள், பெரும் வியாபாரிகள் இருந்தனர். மக்கள் எந்த இடத்தில் இருந்தார்கள் என்றால் ?

 

அவர்களுக்கு இடம் ஏதும் வழங்கப்படவில்லை. மன்னர் முறை ஒழிக்கப்பட்ட பிறகு, யாவரும் இந்நாட்டு மன்னர்கள் என ஆன பிறகு, சாமானியனும் மன்னராக வாழ ஆசைப்பட்டதால் (பணக்காரனாக) சுயநலமாக, தேவைக்கு அதிகமாக சொத்து சேர்க்கும் பழக்கம் ஏற்பட்டது. மற்றவர்களிடம் இல்லாத பொருள் ஒன்று இருப்பின், அதனை தனிமனிதன் கவுரமாக நினைக்க ஆரம்பித்தான். சமூகமே இதற்கு ஒரு முக்கிய காரணம். ஏனென்றால் இந்த சமூகம், இருப்பவனுக்கு ஒரு மரியாதையும், இல்லாதவனுக்கு ஒரு மரியாதையும் நூற்றாண்டு காலமாக தந்து வந்துள்ளது, இப்பொழுதும் தருகிறது.

 

அம்பானிக்கும், சாதாரண குடிமகனுக்கும் ஒரே மரியாதையை இந்த சமூகம் தருமா ?

 

எனக்கு தெரிந்தவரை வாய்ப்பு என்பதே இல்லை. கும்பிடுகிறேன் சாமி என்ற கேள்விக்குறியிலிருந்து, வணக்கம் முதலாளி என்ற சொல்லை கேட்க நடுத்தர வர்க்கம் மிக அதிகமாக மெனக்கெடுகிறது. ஏனென்றால், நடுத்தர வர்த்தகத்தினரிடமே விரைவில் பணக்காரனாக வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கி உள்ளது. இவர்களே அதிகமான குறுக்கு வழிகளை கையாளுகின்றனர். அதனால் தான் புது பணக்காரர்கள் நம் நாட்டில் அதிகம் உருவாகிறார்கள். இவர்களின் வந்த வழியை ஆராய்ந்து பார்த்தால், உண்மையற்றவர்களாக இருப்பார்கள். மேலும் உண்மையை பார்த்திராதவர்களாக கூட இருக்கக்கூடும். 

 

இவ்வளவு தூரம் நம் சமூகத்தை பற்றி கூற வேண்டிய காரணம் என்னவென்றால், இயற்கை எவ்வாறு அழிக்கப்படுகிறது, அதற்கு சமூகத்தில் நிலவும் பொருளாதார ஏற்ற தாழ்வுகள் எவ்வாறு முக்கிய காரணியாக விளக்குவதற்கே மேற்கொண்ட பத்திகள். 

 

நாட்டில் நிகழும் முக்கியமான கொள்ளைகளில் எது முதன்மை என்று நீங்கள் கருதுவீர்கள் ?

 

பண கொள்ளையா… நகை கொள்ளையா… ?  தகவல் தொழில்நுட்ப திருட்டா ? கற்பு கொள்ளையா 🙂   இதனை விட மேலானது, மனிதனின் வாழ்வில் இன்றியமையாததாக இருக்க கூடிய நீர் வளம் மற்றும் நில வள கொள்ளையே !

 

மண் எப்படி உருவாகிறது என்று உங்களுக்கு தெரியுமா ?  

 

அதற்கு மலை உருவானது எப்படி என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். 

 

பூமி உருவான சமயத்தில், பூமியின் ஆழத்தில் உள்ள எரிமலை குழம்புகள் அவ்வப்போது சிறிதும், பெரிதுமாக வெடித்து கிளம்பும். பூமியின் மேற்பரப்புக்கு மேலே வெடித்து வந்து, குளிர்ந்து நிலையானதே மலையானது. பூமியின் மேற்பரப்பு வரை வெடித்து வந்து, குளிர்ந்து நிலையானதே கல்குவாரியானது – இப்போது அது வியாபாரமானது. 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

மலையின் மேலே பட்ட மழை நீர், அதனை சிறிது சிறிதாக உருக்கி, சிறு பாறைகளாக்கி, அருவி வழியாக கூலாங்கற்களாகி, ஆற்று வழியாக மணலானது. ஆக ஒரு கைப்பிடி மண் உருவாவதற்கு பல நூறு வருடங்கள் கூட ஆகலாம். இன்றைய அதிநவீன தொழில்நுட்பத்தில் ஒரு கைப்பிடி மண்ணை உருவாக்குவதற்கு வாய்ப்பிருக்கிறதா ?

 

அதை உலக வல்லரசுகளால் உருவாக்க முடியுமா ?

 

மழை உருவாகும் விதம் பற்றி நாம் சிறுவயது முதலே அறிந்திருந்த காரணத்தினால், இங்கு மண் வளம் பற்றி பேசியிருக்கிறோம். 

 

இதனை மனித இனம் இனி மேலாவது காப்பாற்றாமல் விட்டால், என்னவாகும் ? 

 

சமீப காலமாக, அடிக்கடி நிலச்சரிவு, சுனாமி, பூகம்பங்கள், மற்ற இயற்கை சீற்றங்கள் ஏன் ஏற்படுகிறது என்பதை பற்றி எப்போதாவது நாம் சிந்தித்தது உண்டா ?

பூமி தன் சமநிலையை எப்போதெல்லாம் இழக்கிறதா, அப்போதெல்லாம் தனது எதிர்ப்பை மேற்கொண்ட வழிகளில் பதிவு செய்கிறது. ஆனால் மனிதனோ, அந்த சமிக்கையை புரிந்து கொள்ளாமல், ஆறு அறிவிலிருந்து ஐந்து அறிவாக மாறி, மூர்க்கத்தனமாக மேலும் மேலும் பூமியின் சமநிலையை குலைக்கின்றான். 

 

இயற்கையின் பேரழிவிற்கு முன், மனித சக்தியால் ஒன்றும் செய்ய இயலாது என்பதனை மனிதா நீ என்று உணர்வாய் !

 

மனிதா, உன் மேலாதிக்கத்திலிருந்து கீழ் இறங்கு, தான் மட்டுமே உயர்ந்தவன் என்ற எண்ணத்தை கைவிடு. பூமி அனைத்து உயிரினங்களுக்கும் உரிமையானது என்பதை உணர்த்திடு, இயற்கை வளத்தை காத்திடு. 

 

இல்லையேல், பூமி என்றொரு கோளினை நீ மறந்திடு. 

இன்னும் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது, எனது சிறு வயதில் டிராக்டரில் பெரிய தொட்டி வைத்து தனியார் நிறுவனம் ஒன்று, ஒரு குடம் தண்ணீருக்கு ஒரு ரூபாய் என எங்கள் பகுதியில் விற்பனை செய்துள்ளது. நான் யோசித்து பார்த்ததுண்டு. மக்கள் ஏன் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டது என்று. ஏனென்றால் நாங்கள் இருந்த பகுதி ஊரின் வெளியே வளரும் பகுதியாக இருந்தது. அதனால் அரசாங்கத்தால் ஊராட்சி குடிநீரை வழங்க இயலவில்லை.

 

இதன் மூலம் எனக்கு தெளிவானது, ‘ வளர்ச்சி என்ற பெயரில் நகர் விரிவாக்கம் செய்யும் போது, தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமென்று ‘. மேலும், சிறிது காலம் கழித்து அந்த தனியார் நிறுவன குடிநீர் சேவையை என்னால் காண முடியவில்லை. நான் மகிழ்ந்தேன், தண்ணீர் விற்பனை செய்வது நின்று விட்டதென்று. ஆனால் மீண்டும் தற்போது சுத்திகரிக்கப்பட்ட நீர் என்ற போர்வையில் பன்னாட்டு நிறுவனங்கள் முதல் சிறு நிறுவனங்கள் வரை நீராலை அமைத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்வதை காண முடிகிறது. ஏன், அரசாங்கம் உட்பட…

 

ஆக, குடிநீர் விற்பனை என்பது சாகாவரம் பெற்றது போல. எங்கள் பகுதியில் ஒரு சொல்லடை உண்டு. ‘ ஒருவன் விரைவாக பணக்காரனாக வேண்டுமென்றால், மூன்று வழியே எளிய வழி என கூறுவார்கள். மண், பெண் மற்றும் பொன். மண் என்றால் பூமியிலிருந்து கிடைக்கக்கூடிய இயற்கை வளங்கள். நிலக்கரி, கல்குவாரி, தண்ணீர் வியாபாரம், தோப்புகள் மற்றும் இது போன்ற மற்ற மண் சார்ந்த வளங்கள். 

 

பெண் வழி என்றால் திருமணம் செய்து பெண் வீட்டாரிடம் இருந்து வரும் சொத்துக்கள் மூலமாக. கடைசியாக பொன் என்றால் தங்கம், வைரம், மற்றும் பூமிக்கு அடியில் கிடைக்கும் விலையுர்ந்த பொருட்கள் மூலமாக. 

 

பூமியின் உயிர்நாடியான தண்ணீரை விவசாயம், மற்ற உயிரினங்களின் வாழ்வாதாரமாக அல்லாமல் வணிக நோக்கில் விற்பது, விதை நெல்லை விற்று உண்பதற்கு ஈடானது. இப்பொழுது யார் யாரெல்லாம் இயற்கை வளங்களை அழித்து பொருள் ஈட்டுகிறார்களோ, அவர்களெல்லாம் பின்னாட்களில் இவற்றை பெறுவதற்கு அதிக விலை கொடுக்க நேரிடும். 

 

இயற்கை தனி மனிதனுக்கு என்று எதையும் கொடுத்தது இல்லை. இயற்கை வளங்கள் அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது.  

 

 

 இன்னும் பஞ்சாயத்தை கூட்டுவோம்…

 

திரு. பா. பாண்டித்தங்கம் (வர்த்தக மதுரை தளத்திற்காக)

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

உங்கள் வங்கி திவாலானால், உங்களுக்கு கிடைக்கக்கூடிய தொகை ?

உங்கள் வங்கி திவாலானால், உங்களுக்கு கிடைக்கக்கூடிய தொகை ?

How much amount you can get, if your Bank goes Bankrupt or Default ?

வங்கிகளின் நிதி நிலைமை மோசமடைந்து வருவதும், அதனை சரி செய்ய பொதுத்துறை வங்கிகள் இணைப்பு மூலம் எண்ணிக்கை குறைந்து வருவதும் சமீபத்திய செய்திகளாக உள்ளன. கடந்த வாரம் பி.எம்.சி. வங்கி(PMC Bank) சார்ந்த செய்திகள் அதன் வாடிக்கையாளர்களை கலக்கமடைய செய்தது.

நம் நாட்டில் உள்ள தனியார் வங்கிகளின் மேல் நமக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். அதே வேளையில் பொதுத்துறை வங்கிகள் மீது நமது நம்பிக்கை தளர்வதில்லை. இதற்கு காரணமாக சொல்லப்படுவது, அது போன்ற திவால் நிலையை நாம் கடந்த பல வருடங்களாக கண்டதில்லை. இருப்பினும், நாம் கணக்கு வைத்திருக்கும் ஒரு வங்கி திவால் நிலைக்கு சென்றால், நம்முடைய பணம் அல்லது சேமிப்பு நமக்கு முழுவதும் கிடைக்குமா என்பதே கேள்வி.

 //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பாரத ரிசர்வ் வங்கி(RBI) அறிவுறுத்தலின் படி, நாட்டில் உள்ள ஒவ்வொரு வங்கியும் அதன் வாடிக்கையாளர்கள் சார்பில், வைப்பு காப்பீடு மற்றும் கடன் உத்தரவாத நிறுவனத்தில்(DICGC) காப்பீடு செய்ய வேண்டியது அவசியம். டி.ஐ.சி.ஜி.சி.(Deposit Insurance & Credit Guarantee Corporation) காப்பீட்டின் மூலம் வாடிக்கையாளர்களின் வங்கி சேமிப்பு மற்றும் நடப்பு கணக்கு, வைப்பு மற்றும் தொடர் சேமிப்பு கணக்கு ஆகியவை அடங்கும்.

இவற்றில் வெளிநாட்டு அரசாங்கங்களின் வைப்பு தொகை, மத்திய மற்றும் மாநில அரசுகளின் வைப்பு நிதி, நில மேம்பாட்டு வங்கிகள், வெளிநாட்டிலிருந்து பெறப்பட்ட வைப்பு தொகை மற்றும் பாரத ரிசர்வ் வங்கியின் ஒப்புதலுடன் நிறுவனத்தால் விலக்கு அளிக்கப்பட்ட தொகை ஆகியவை காப்பீட்டு தொகைக்கு எடுத்து கொள்ளப்படும்.

ஒரு வங்கியில் உள்ள ஒவ்வொரு வாடிக்கையாளரின் கணக்கிற்கும்  அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் வரை வங்கிகளால் காப்பீடு செய்யப்படும். இவற்றில் ஒருவருடைய அசல் தொகை மற்றும் வட்டி பணம் அனைத்தும் சேர்த்து தான் ரூ. 1 லட்சம் வரம்பு தொகை நிர்ணயிக்கப்படும்.

உதாரணமாக உங்களுடைய வங்கி கணக்கில் அசல் தொகை 95,000 ரூபாயும், அதற்கான வட்டி தொகை ரூ. 8000 என இருக்கும் நிலையில், வங்கி திவால் நிலைக்கு சென்றால், காப்பீடு உரிமையின் படி உங்களுக்கு கிடைக்கக்கூடிய தொகை ரூ. 1 லட்சம் மட்டுமே. அவ்வாறான சமயங்களில் நீங்கள் உங்கள் முழுத்தொகையை வட்டியுடன் கோர முடியாது.

உங்களுக்கு ஒரு வங்கியில் சேமிப்பு கணக்கு, நடப்பு கணக்கு(Current Account), வைப்பு நிதி கணக்கு(Fixed Deposit) மற்றும் தொடர் சேமிப்பு(RD) கணக்கு ஆகியவை இருந்தாலும், அனைத்து கணக்குகளின் கூட்டுத்தொகை ரூ. 1 லட்சத்தை தாண்டினால், உங்களுக்கு காப்பீடு செய்யப்பட்ட தொகை என்னவோ, ஒரு லட்ச ரூபாய் தான். வங்கி திவால் நிலைக்கு சென்றால் அல்லது மூடப்பட்டால், நீங்கள் உங்களது முழுத்தொகையையும் பெற முடியாது. இது தான் வங்கிகளின் சட்டம்.

வங்கிக்கணக்குக்கான காப்பீட்டு தொகை, நீங்கள் வங்கியின் பல கிளைகளில் கணக்கு வைத்திருந்தாலும், அனைத்து கிளை கணக்குகளையும் சேர்த்து, ரூ. 1 லட்சம் என்ற காப்பீடு தொகை மட்டுமே கணக்கில் எடுத்து கொள்ளப்படும். அதே வேளையில், வெவ்வேறு வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் நிலையில், ஒவ்வொரு வங்கிக்கும் ரூ. 1 லட்சம் காப்பீடு தொகை பதிவு செய்யப்படும்.

ஆக, நீங்கள் ஒரே வங்கியின் கீழ் பல கிளைகளில் டெபாசிட் செய்திருந்தால், காப்பீடு தொகை அதிகபட்சம் ரூ. 1 லட்சம் மட்டுமே. பல வங்கிகளில் கணக்கு தொடங்கி டெபாசிட் செய்திருக்கும் பட்சத்தில், ஒவ்வொரு வங்கிக்கும் ரூ. 1 லட்சம் காப்பீடு தொகை கோரப்படும்.

நீங்கள் வங்கிக்கு செலுத்த வேண்டிய தொகை ஏதுமிருந்தாலும், வங்கி திவால் நிலைக்கு செல்லும் போது அவை காப்பீட்டு தொகையில் கழித்து கொள்ளப்படும். வங்கி வாடிக்கையாளர்களுக்கான காப்பீடு தொகையை அந்தந்த வங்கியே செலுத்த வேண்டும். பொதுவாக அனைத்து வங்கிகளும் காப்பீட்டு வரம்புக்குள் இருந்தாலும், சில தனியார் கூட்டுறவு வங்கிகள் காப்பீடு செய்வதில்லை என்பது கவனிக்கத்தக்கது.

ரூ.1 லட்சம் காப்பீடு என்பது கடந்த 1993ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டமாகும். அதற்கு முன்பு காப்பீடு தொகை ரூ. 30,000 /- ஆக இருந்தது. வங்கி வாடிக்கையாளர்களுக்கான காப்பீட்டு தொகை வரம்பில் கடந்த 26 வருடங்களாக எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை. இது மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, நமது வங்கிகளின் காப்பீடு தொகை மிகக்குறைவே.

இருப்பினும், நமது பொதுத்துறை வங்கிகளின் மீதான நம்பிக்கையும், அதனை சார்ந்த சேமிப்பும் தான் அவற்றை பாதுகாக்கிறது. இன்று டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் என சொல்லப்பட்டாலும், இணையவழி திருட்டு நடைபெற தான் செய்கிறது. இதனை வங்கிகள் முழுமையாக தடுத்து வாடிக்கையாளர்களின் சேமிப்புக்கு பாதுகாப்பு தருகிறதா என்பது சந்தேகமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இந்த 3 விஷயங்கள் இல்லையென்றால் பங்குச்சந்தையில் பங்குகளை வாங்காதீர்கள் !

இந்த 3 விஷயங்கள் இல்லையென்றால் பங்குச்சந்தையில் பங்குகளை வாங்காதீர்கள் !

Don’t buy a Stock or Share, before Considering these 3 Factors

பங்குகளில் முதலீடு செய்வது சிலருக்கு ஆரோக்கியமான விஷயமாக இருக்கும். சிலருக்கோ அது கவலை கொள்ளும் நிகழ்வாக இருக்கலாம். எப்படியிருந்தாலும், பங்குகளில் முதலீடு செய்வது என்பது நமது குடும்பத்திற்கான பொருளாதார வளத்தை சேர்ப்பதாகும்.

சிறு முதலீட்டாளர்களால் ஒரு நிறுவனத்தை நடத்த முடியாமல் இருக்கலாம். பட்டியலிடப்பட்ட நிறுவனத்தினை(Listed Companies) நிர்வகிக்கும் பலம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நிறுவனத்தின் சிறு பங்குகளும் நீண்ட காலத்தில் வளம் சேர்க்கும்.

வேகமாக வளர்ச்சியடைவதை விட, நல்ல நிறுவன பங்குகளை கண்டறிந்து நீண்ட காலத்தில் கூட்டு வட்டியின் பலனை பெறுவதே சிறு முதலீட்டாளர்களுக்கு சாதகமான அம்சமாக இருக்கும். எனவே நாம் பெரிய விஷயத்தை செய்வதை விட்டு விட்டு, நமக்கு தெரிந்த மற்றும் நம்மால்  கண்டறிய முடியும் காரணிகளை கொண்டு முதலீட்டினை மட்டும் மேற்கொண்டால் போதும். நிறுவன வளர்ச்சியை அந்த நிறுவனமே பார்த்து கொள்ளட்டும்.

நல்ல நிறுவன பங்குகளை கண்டறிய ஏராளமான அடிப்படை காரணிகள் இருப்பினும், நாம் இங்கே சொல்ல வருகிற மூன்று அடிப்படை காரணிகள் எந்தவொரு தொழிலுக்கும் பொருந்தும். ஆகையால் முதலீட்டாளர்கள் இதனை மட்டும் கருத்தில் கொள்வது அவசியம். மற்ற காரணிகள் எல்லாம், பின்பு தான் செயல்பட கூடும்.

பங்குச்சந்தையில் பங்குகளை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய 3 முக்கிய அம்சங்கள்:

  • Promoters (நிறுவனர்கள்)
  • Management & Corporate Governance (நிர்வாகம்)
  • Financial Statements (நிதி அறிக்கைகள்)

ஒரு நிறுவனத்தின் நிறுவனர் அல்லது நிறுவனர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அவர்களுடைய நிறுவனத்தின் மீதான அக்கறையே ஒரு முதலீட்டாளருக்கு  தேவைப்படுகிறது. நிறுவனர்கள் தங்களது நிறுவனத்தை நியாயமாக நடத்துவதும், ஊழியர்கள் மற்றும் பங்குதார்களின்(Employees & Shareholders) அடிப்படை உரிமைகளை பேணிக்காப்பது தான் அவர்களது முதல் கடமை.

நிறுவனர்கள் தங்களது பங்குகளை கொண்டு என்ன செய்கின்றனர் என்பது நாம் பார்க்க வேண்டிய விஷயம். அதே போல, பொதுவாக நிறுவனர்களின் பங்குகள் மீதான பங்களிப்பு அதிகமாக இருக்கும் போது, அது அந்த நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை குறிக்கும்.

நிறுவனத்தின் நிர்வாகம் சரியாக கையாளப்படுகிறது என்பது இரண்டாவது முக்கிய விஷயம். நிறுவன ஊழியர்களின் திறன் மற்றும் அவர்களுக்கு நிறுவனம் மூலம் கிடைக்கும் மதிப்பு போன்றவை முதலீட்டாளர்களுக்கு நன்மை அளிக்கக்கூடியது. நிறுவனத்தை ஊக்குவிக்க கூடியவர்கள், அந்த நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் தான். அதே போல அதன் பொருட்களும், வாடிக்கையாளர் நலனும் பாதுகாக்கப்படுகிறது என்பதை உறுதி செய்ய வேண்டும்.

ஊழியர்கள்  மற்றும் பங்குதாரர்கள் நலனில் நிறுவனம் அக்கறைப்படுகிறதா என்பது அவசியமாகும். இவர்களை அலட்சியப்படுத்தும் நிலையில், அவை நிறுவனத்தின் வளர்ச்சியிலும், பங்குகளின் விலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.நிறுவனம் சட்டத்திற்கு புறம்பாக, முதலீட்டாளர்களை ஏமாற்றும் நோக்கில் செயல்படுகிறதா என்பதனை அறிவது அவசியம்.

மூன்றாவதாக நிறுவனத்தின் நிதி அறிக்கைகளை(Financial Statements) எளிமையான முறையில் அலசுவது அவசியமாகும். நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி லாபத்தில் எவ்வாறு காண்பிக்கப்பட்டுள்ளது, லாபம் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு துணைபுரிகிறதா என்பதை கவனிக்க வேண்டும். நிறுவனம் காலாண்டு முடிவுகளில் சொன்ன லாபம் உண்மையில் லாபம் தானா, அவை முதலீட்டாளர்களுக்கு பயன் தரக்கூடியதாக உள்ளதா என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

பொதுவாக நிறுவனத்தின் லாபம் பங்குகளின் விலையிலும், முதலீட்டாளர்கள் பெறக்கூடிய போனஸ்(Bonus), Buyback மற்றும் டிவிடெண்ட்(Dividend) தொகையில் தெரிய வரும். எனவே நாம் சொன்ன மூன்று அடிப்படை விஷயங்களை எந்த சமரசமும் இல்லாமல் கண்டறிந்து பங்குகளை தேர்வு செய்ய வேண்டும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com