தேசிய சேமிப்பு பத்திரம் – அஞ்சலக வரி சேமிப்பு திட்டம்
National Savings Certificate (NSC) – Postal Savings Scheme
வருமான வரி சேமிப்பு(Tax Savings) என்றவுடன் பெரும்பாலானவர்களுக்கு நினைவுக்கு வருவது காப்பீடு திட்டம் தான். இதற்கு அடுத்ததாக நம்மில் பலருக்கு தோன்றுவது அஞ்சலக சிறு சேமிப்பு திட்டங்கள் தான். அஞ்சலக சிறு சேமிப்பு திட்டத்தின் கீழ் பல வரி சேமிப்பு திட்டங்கள் அமலில் உள்ளன.
ஐந்து வருட வைப்பு நிதி, செல்வ மகள் திட்டம், பொது வருங்கால வைப்பு நிதி(PPF), கிசான் விகாஸ் பத்திரம்(KVP), தேசிய சேமிப்பு பத்திரம்(NSC) என வரி சேமிப்பு திட்டங்களை அஞ்சலகத்தில் காணலாம். இங்கு நாம் காணப்போவது தேசிய சேமிப்பு பத்திரம் சார்ந்து.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
என்.எஸ்.சி. எனப்படும் தேசிய சேமிப்பு பத்திர திட்டம்(National Savings Certificate), நாட்டில் உள்ள அனைத்து அஞ்சலகத்திலும் பெறக்கூடிய திட்டமாகும். இது ஒரு நிலையான வருமானத்தை தரக்கூடிய சிறு சேமிப்பு முதலீட்டு திட்டம் எனலாம். தேசிய சேமிப்பு பத்திரம் என்பது பாதுகாப்பான மற்றும் அதே வேளையில் ரிஸ்க் குறைவாக கொண்ட திட்டமாக கருதப்படுகிறது.
அனைத்து இந்திய குடிமக்களும்(Resident Individual) இத்திட்டத்தில் முதலீடு செய்ய தகுதியுள்ளவர். குறைந்தபட்ச முதலீடாக 100 ரூபாயும், அதிகபட்ச முதலீட்டிற்கு வரம்பு ஏதும் இல்லை. தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தில் முதலீடு செய்யும் ஒருவர், அதற்கான வரி சலுகையையும் வருமான வரிச்சட்டம் 80சி பிரிவின் கீழ் சலுகை பெறலாம்.
தேசிய சேமிப்பு பத்திர திட்டம் பொதுவாக 5 வருட கால அளவை கொண்டிருக்கும். நடப்பில் இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.9 சதவீதம் (October 2019). வட்டி விகித முறை ஆண்டுக்கு ஒரு முறை கணக்கிடப்படும். அதாவது தற்போது முதலீடு செய்யப்படும் 100 ரூபாய், ஐந்து வருட முடிவில் ரூ. 146.25 ஐ பெற்று தரும்.
5 வருடம் மற்றும் 10 வருடம் என இரு வகைகளில் திட்டம் உள்ளதால், இதனை வங்கிகளில் அடமானம் வைத்து கடனும் பெறலாம் என்பது கூடுதல் அம்சம். வரி சேமிப்பிற்கு அதிகபட்சமாக ஒரு நிதியாண்டில் ரூ. 1.50 லட்சம் வரை (u/s 80C) முதலீடு செய்யலாம். அதற்கு மேற்பட்ட முதலீட்டு தொகைக்கு வரி சலுகை பெற இயலாது.
பொதுவாக இது போன்ற வரி சேமிப்பு திட்டங்களில் கால அளவுகள் (5 அல்லது 10 வருடங்கள்) முடிவதற்கு முன்னர், பணத்தை திரும்ப பெற முடியாது. இருப்பினும், திட்டத்தில் முதலீடு செய்த சந்தாதாரர் ஒருவர் எதிர்பாராத நிகழ்வால் உயிரிழக்க நேரிட்டால் அவரது நாமினி கணக்கை முடித்து கொண்டு பணத்தை உடனே பெறலாம்.
தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தின் முடிவில் கிடைக்கப்பெறும் தொகைக்கு டி.டி.எஸ்.(TDS) பிடித்தம் செய்யப்படாது. முழுத்தொகையும் சந்தாதாரர்களின் கையில் கிடைக்கப்பெறும். இருப்பினும் ஒருவர் தனது வருமான வரம்பை கணக்கில் கொண்டு, முதலீட்டின் மூலம் கிடைக்கப்பெற்ற வருவாய்க்கு வரி செலுத்த வேண்டும்.
வரி சேமிப்பு திட்டத்தினை பொறுத்தவரை லாக்-இன்(Lock-in) எனப்படும் விதிமுறை உண்டு. தற்போதைய நிலையில் குறைந்த லாக்-இன் வசதி, பரஸ்பர நிதி திட்டத்தின் கீழ் செயல்படும் வரி சேமிப்பு பண்டுகளுக்கு (Tax Savings Funds – ELSS – 3 Years) மட்டுமே உண்டு. மற்ற முதலீடுகள் 5 வருடம், 10 வருடம், 15 வருடங்களுக்கு மேலாக என லாக்-இன் விதிமுறைகள் மாறுபடும்.
வருமான வரி சேமிக்கிறேன் என நமக்கு பயன்படாத திட்டங்களை தேர்ந்தெடுப்பது நல்லதல்ல. நமது வருமான வரியை நேர்மையான முறையில் சேமிக்க வேண்டும், அதே வேளையில் நீண்ட காலத்தில் பணவீக்கத்தை தாண்டிய வருமானத்தையும் அது தர வேண்டும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை