இந்த 3 விஷயங்கள் இல்லையென்றால் பங்குச்சந்தையில் பங்குகளை வாங்காதீர்கள் !
Don’t buy a Stock or Share, before Considering these 3 Factors
பங்குகளில் முதலீடு செய்வது சிலருக்கு ஆரோக்கியமான விஷயமாக இருக்கும். சிலருக்கோ அது கவலை கொள்ளும் நிகழ்வாக இருக்கலாம். எப்படியிருந்தாலும், பங்குகளில் முதலீடு செய்வது என்பது நமது குடும்பத்திற்கான பொருளாதார வளத்தை சேர்ப்பதாகும்.
சிறு முதலீட்டாளர்களால் ஒரு நிறுவனத்தை நடத்த முடியாமல் இருக்கலாம். பட்டியலிடப்பட்ட நிறுவனத்தினை(Listed Companies) நிர்வகிக்கும் பலம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நிறுவனத்தின் சிறு பங்குகளும் நீண்ட காலத்தில் வளம் சேர்க்கும்.
வேகமாக வளர்ச்சியடைவதை விட, நல்ல நிறுவன பங்குகளை கண்டறிந்து நீண்ட காலத்தில் கூட்டு வட்டியின் பலனை பெறுவதே சிறு முதலீட்டாளர்களுக்கு சாதகமான அம்சமாக இருக்கும். எனவே நாம் பெரிய விஷயத்தை செய்வதை விட்டு விட்டு, நமக்கு தெரிந்த மற்றும் நம்மால் கண்டறிய முடியும் காரணிகளை கொண்டு முதலீட்டினை மட்டும் மேற்கொண்டால் போதும். நிறுவன வளர்ச்சியை அந்த நிறுவனமே பார்த்து கொள்ளட்டும்.
நல்ல நிறுவன பங்குகளை கண்டறிய ஏராளமான அடிப்படை காரணிகள் இருப்பினும், நாம் இங்கே சொல்ல வருகிற மூன்று அடிப்படை காரணிகள் எந்தவொரு தொழிலுக்கும் பொருந்தும். ஆகையால் முதலீட்டாளர்கள் இதனை மட்டும் கருத்தில் கொள்வது அவசியம். மற்ற காரணிகள் எல்லாம், பின்பு தான் செயல்பட கூடும்.
பங்குச்சந்தையில் பங்குகளை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய 3 முக்கிய அம்சங்கள்:
- Promoters (நிறுவனர்கள்)
- Management & Corporate Governance (நிர்வாகம்)
- Financial Statements (நிதி அறிக்கைகள்)
ஒரு நிறுவனத்தின் நிறுவனர் அல்லது நிறுவனர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அவர்களுடைய நிறுவனத்தின் மீதான அக்கறையே ஒரு முதலீட்டாளருக்கு தேவைப்படுகிறது. நிறுவனர்கள் தங்களது நிறுவனத்தை நியாயமாக நடத்துவதும், ஊழியர்கள் மற்றும் பங்குதார்களின்(Employees & Shareholders) அடிப்படை உரிமைகளை பேணிக்காப்பது தான் அவர்களது முதல் கடமை.
நிறுவனர்கள் தங்களது பங்குகளை கொண்டு என்ன செய்கின்றனர் என்பது நாம் பார்க்க வேண்டிய விஷயம். அதே போல, பொதுவாக நிறுவனர்களின் பங்குகள் மீதான பங்களிப்பு அதிகமாக இருக்கும் போது, அது அந்த நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை குறிக்கும்.
நிறுவனத்தின் நிர்வாகம் சரியாக கையாளப்படுகிறது என்பது இரண்டாவது முக்கிய விஷயம். நிறுவன ஊழியர்களின் திறன் மற்றும் அவர்களுக்கு நிறுவனம் மூலம் கிடைக்கும் மதிப்பு போன்றவை முதலீட்டாளர்களுக்கு நன்மை அளிக்கக்கூடியது. நிறுவனத்தை ஊக்குவிக்க கூடியவர்கள், அந்த நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் தான். அதே போல அதன் பொருட்களும், வாடிக்கையாளர் நலனும் பாதுகாக்கப்படுகிறது என்பதை உறுதி செய்ய வேண்டும்.
ஊழியர்கள் மற்றும் பங்குதாரர்கள் நலனில் நிறுவனம் அக்கறைப்படுகிறதா என்பது அவசியமாகும். இவர்களை அலட்சியப்படுத்தும் நிலையில், அவை நிறுவனத்தின் வளர்ச்சியிலும், பங்குகளின் விலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.நிறுவனம் சட்டத்திற்கு புறம்பாக, முதலீட்டாளர்களை ஏமாற்றும் நோக்கில் செயல்படுகிறதா என்பதனை அறிவது அவசியம்.
மூன்றாவதாக நிறுவனத்தின் நிதி அறிக்கைகளை(Financial Statements) எளிமையான முறையில் அலசுவது அவசியமாகும். நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி லாபத்தில் எவ்வாறு காண்பிக்கப்பட்டுள்ளது, லாபம் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு துணைபுரிகிறதா என்பதை கவனிக்க வேண்டும். நிறுவனம் காலாண்டு முடிவுகளில் சொன்ன லாபம் உண்மையில் லாபம் தானா, அவை முதலீட்டாளர்களுக்கு பயன் தரக்கூடியதாக உள்ளதா என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
பொதுவாக நிறுவனத்தின் லாபம் பங்குகளின் விலையிலும், முதலீட்டாளர்கள் பெறக்கூடிய போனஸ்(Bonus), Buyback மற்றும் டிவிடெண்ட்(Dividend) தொகையில் தெரிய வரும். எனவே நாம் சொன்ன மூன்று அடிப்படை விஷயங்களை எந்த சமரசமும் இல்லாமல் கண்டறிந்து பங்குகளை தேர்வு செய்ய வேண்டும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை