வங்கி சேமிப்புக்கு மாற்றாக மியூச்சுவல் பண்ட் திட்டங்களை பயன்படுத்துவது எப்படி ?
How to use Mutual Funds Schemes instead of Bank Savings or Deposits ?
கடந்த மத்திய நிதி கொள்கை குழு கூட்டத்தில்(Monetary Policy Committee) வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 25 புள்ளிகள் குறைக்கப்பட்டது. நடப்பில் வங்கிகளுக்கான ரெப்போ விகிதம்(Repo Rate) 5.15 சதவீதமாக உள்ளது. இந்த வருடத்தில் மட்டும் ரெப்போ வட்டி விகிதம் ஐந்து முறை குறைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக வங்கிகளின் வட்டி விகிதம் குறையும் போது, கடன் பத்திரங்களின் (Bonds) தேவை அதிகரித்து அவற்றின் வட்டி விகிதமும் அதிகரிக்கும். இதே போல வங்கி வட்டி விகிதங்கள் அதிகரிக்கும் போது, கடன் பத்திரங்களின் தேவை குறைந்து அதனுடைய வட்டி குறையும். எனவே இந்த சூழ்நிலையை ஒருவர் கருத்தில் கொண்டு முதலீடு செய்தால், குறிப்பிடத்தக்க வட்டி வருவாயை பெறலாம்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
எஸ்.பி.ஐ. (SBI) வங்கி தனது வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கிற்கான வட்டி விகிதத்தை 3.5 சதவீதத்திலிருந்து 3.25 சதவீதமாக குறைத்துள்ளது. வங்கி டெபாசிட்டுக்கான வட்டி விகிதமும் ஒரு வருடத்திற்கு 7 சதவீதத்திற்கு குறைவாகவும், ஐந்து வருட காலத்திற்கு 9 சதவீதத்திற்கு கீழாகவும் உள்ளது.
இது போன்ற காலத்தில், இதற்கு மாற்றாக பரஸ்பர நிதி (Mutual Funds) திட்டங்களை பயன்படுத்தலாம். பண பரிவர்த்தனைகளுக்கு ஒருவர் வங்கி சேமிப்பு கணக்கை சார்ந்திருந்தாலும், சேமிப்பு மற்றும் முதலீட்டுக்கு வங்கிகளை காட்டிலும் சற்று கூடுதலான வட்டி வருவாயை கொடுக்கும் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.
லிக்விட் பண்டுகள் (Liquid Funds):
வங்கி சேமிப்பு கணக்குக்கு கிடைக்கும் 4 சதவீதத்திற்கு குறைவான வட்டி விகிதத்திற்கு பதிலாக பரஸ்பர நிதிகளின் லிக்விட் பண்டுகளை(Liquid Funds) பயன்படுத்தலாம். இவற்றில் பணப்புழக்கமும் நன்றாக உள்ளது, ரிஸ்க் அதிகமில்லா முதலீடாக கருதப்படுகிறது. மேலும் வங்கி சேமிப்பு கணக்கை காட்டிலும், அதாவது ஆண்டுக்கு 6-7 சதவீத வருவாயை கொடுக்கும். லிக்விட் பண்டுகளை மிகவும் குறுகிய காலத்திற்கு(Alternative for Bank Savings Rate) பயன்படுத்தி கொள்ளலாம்.
எச்.டி.எப்.சி.(HDFC), நிப்பான் இந்தியா(Nippon India), ஆதித்ய பிர்லா, ஆக்ஸிஸ் போன்ற பரஸ்பர நிதி நிறுவனங்களில் லிக்விட் பண்டுகளின் முதலீடு எளிமையாக்கப்பட்டுள்ளது. இந்த பண்டுகளில் முதலீடு செய்த தொகையை வெறும் இரண்டு நிமிடத்தில் நமது வங்கி கணக்குக்கு மாற்றம் செய்யும் வசதியும் உள்ளது. சில லிக்விட் திட்டத்தில் இலவச ஏ.டி.எம்.(ATM) கார்டு சேவையும், வரம்பற்ற பரிவர்த்தனைகளையும்(Unlimited Withdrawal Transaction) கிடைக்கப்பெறுகிறது.
கடன் சார்ந்த பண்டுகள் (Debt Funds):
ஒரு வருடம் முதல் ஐந்து வருட காலத்திற்கான முதலீட்டுக்கு பரஸ்பர நிதி நிறுவனங்கள் வழங்கும் கடன் பத்திர திட்டங்களை(Debt Funds) தேர்ந்தெடுக்கலாம். இவற்றில் தற்போது 7-10 சதவீதம் வரை வட்டி வருவாய் அமைகிறது. மூன்று வருடங்களுக்கு மேலாக முதலீடு செய்யும் பட்சத்தில், வரி சலுகையும்(Indexation Benefit) உள்ளது. இது போன்ற வசதி வங்கி டெபாசிட்களில் கிடைப்பதில்லை. கால அளவுகளை கொண்ட கடன் பத்திர திட்டங்களை(Duration Funds), நமது இலக்குகளுக்கு தகுந்தாற் போல் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யலாம்.
கலப்பின பண்டுகள் (Hybrid Funds):
ஐந்து வருட கால இலக்குகளுக்கு ஒருவர் பரஸ்பர நிதிகளின் கலப்பு முதலீட்டு திட்டத்தினை (Hybrid Funds) தேர்ந்தெடுக்கலாம். இவற்றின் சராசரி வருமானம் 10-12 சதவீதமாக இருக்கும். கலப்பு முதலீடு என்பது பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும். இதன் மூலம் ஒருவர் தனது பணத்தை முழுமையாக பங்குகளில் முதலீடு செய்யாமல், கடன் பத்திரங்களின் வாய்ப்பையும் பயன்படுத்தலாம்.
முதலீட்டு பரவலாக்க பண்டுகள் (Asset Allocation Funds):
நீண்டகால இலக்குகள் மற்றும் தேவைகளை கொண்டுள்ளோர் பரஸ்பர நிதி திட்டத்தின் கீழ் பங்குகளில் முதலீடு செய்யும் போது, நல்ல வருமானத்தை ஈட்டலாம். குறுகிய காலத்தில் பங்குகள் அதிக ஏற்ற-இறக்கங்களுக்கு உட்பட்டு இருப்பதால் பங்குகளை குறுகிய கால தேவைகளுக்கு பயன்படுத்த கூடாது. அதே வேளையில், பன்முக முதலீட்டையும் ஒருவர் பரிசீலிக்கலாம். பன்முக முதலீட்டின்(Asset Allocation) வாயிலாக ஒருவர் பங்கு, கடன் பத்திரங்கள், தங்கம், ரியல் எஸ்டேட் மற்றும் பிற தொழில்களில் முதலீட்டை பரவலாக்கலாம்.
வரி சேமிப்பு பண்டுகள் (Tax Savings – ELSS Mutual Funds):
வரி சேமிப்புக்கு மட்டுமே வங்கிகள் மற்றும் அஞ்சலக சேமிப்பை சார்ந்தவர்கள், ஒரு முறை பரஸ்பர நிதி வழங்கும் வரி சேமிப்பு பண்டுகளை(Tax Savings Mutual Funds) தேர்ந்தெடுக்கலாம். குறைந்த கால லாக்-இன்(Lock-in) வசதியை கொண்ட இது போன்ற பண்டுகளில் நீண்ட காலத்தில் வருமானமும் சற்று அதிகம்.
வங்கிகள் வழங்கும் சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை நாம் அறவே ஒதுக்க முடியாது. வங்கிகளை போல நிலையான அல்லது நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதம்(Fixed Returns) பரஸ்பர நிதிகளில் சொல்லப்படுவதில்லை. இருப்பினும், வங்கி வட்டி விகிதங்கள் குறைந்து வரும் சூழ்நிலையில் பரஸ்பர நிதி திட்டங்களை திறமையாக பயன்படுத்துவது சாதகமான விஷயமே. எதிர்காலத்தில் வங்கி கணக்குக்கு மாற்றாக பரஸ்பர நிதிகளும் தினசரி பரிவர்த்தனைக்கான சேவையை வழங்க முன்வரலாம்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை
Super sir, good message.
LikeLike
Semma scheme saravanan
LikeLike