பங்குச்சந்தை அலசல் – அனுக் பார்மா
Anuh Pharma – Fundamental Analysis – Value Investing
மருந்து துறையில் 80 வருடங்களுக்கு மேலான அனுபவத்தை கொண்டிருக்கும் எஸ்.கே. குழும(SK Group) நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் அனுக் பார்மா. காசநோய்க்கான மருந்து, மலேரியா மற்றும் பாக்டீரியா தொற்றுக்கான மருந்து தயாரிப்பில் நாட்டின் மிகப்பெரிய உற்பத்தி நிறுவனமாக அனுக் பார்மா நிறுவனம் திகழ்கிறது.
மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் ஏற்றுமதியிலும் தனது சேவையை கொண்டுள்ளது இந்த நிறுவனம். நடப்பாண்டில் இதுவரை 483 அவதானிப்புகளுக்கு(USFDA Observations) அமெரிக்க மருந்து மற்றும் நிர்வாக ஆணையத்திடம் இருந்து ஆய்வில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்றுள்ளது.
கடந்த 1960ம் ஆண்டு முதல் மும்பை பங்குச்சந்தையில் மட்டுமே பட்டியலிட்டிருக்கும் அனுக் பார்மா நிறுவனத்தின் சந்தை மதிப்பு 370 கோடி ரூபாய். சிறு நிறுவனமாக இருந்தாலும், தனது சிறப்பான செயல்பாட்டால் நீண்டகால முதலீட்டாளர்களுக்கு நல்ல வருவாயை தந்துள்ளது.
நிறுவனத்தின் கடன்-பங்கு(Debt-Equity Ratio) விகிதம் தற்போது 0.03 புள்ளிகளாக உள்ளது. எனவே கடன் என்று பெரிதாக எதுவுமில்லை. வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 130 மடங்காக உள்ளது நிறுவனத்திற்கு சாதகமானது. நிறுவனர்களின் பங்களிப்பு 72 சதவீதமாகவும், நிறுவனர்கள் தங்கள் பங்குகளை அடமானம் எதுவும் வைக்கவில்லை என்பதும் முதலீட்டாளர்களுக்கு நல்ல விஷயம்.
காலாண்டு விற்பனை மற்றும் நிகர லாபம் சராசரியான வளர்ச்சியை பெற்றுள்ளது எனலாம். கடந்த மூன்று வருட கால அளவில் இதன் விற்பனை மற்றும் லாப வளர்ச்சி குறைந்துள்ளது. பத்து வருடங்களில் விற்பனையும், லாபமும் 10 சதவீத வளர்ச்சியை கொண்டிருக்கின்றன.
பங்கின் மீதான வருவாய்(ROE) கடந்த மூன்று வருடங்களில் 12 சதவீதமும், ஐந்து வருட கால அளவில் இது 15 சதவீதமாகவும், 10 வருடங்களில் 17 சதவீதமாகவும் உள்ளது. பங்கின் விலை கடந்த மூன்று வருடங்களில் 12 சதவீத இழப்பை சந்தித்துள்ளன. பத்து வருட கால அளவில் 15 சதவீத வருவாயை முதலீட்டாளர்களுக்கு தந்துள்ளன.
2018-19ம் நிதியாண்டு முடிவின் படி, நிறுவனத்தின் கையிருப்பு 152 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது. ஸ்மால் கேப்(Small Cap) குறியீட்டில் காணப்படும் இந்த நிறுவனத்தின் அடுத்த சில காலாண்டு முடிவுகளை ஆராய்ந்து பங்கு விலையின் மீது கவனம் செலுத்தலாம்.
நிறுவனம் சார்பாக இதுவரை ஐந்து முறை போனஸ் பங்குகள்(Bonus Issue) வழங்கப்பட்டுள்ளன. சமீப போனஸ் பங்குகளாக கடந்த 2015ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு பங்குக்கு இரண்டு பங்குகள் போனஸாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை