All posts by skatzsaravana

Value Investor, Entrepreneur and Founder of Varthaga Madurai, Rich Investing iDEAS

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமே : பாரத ரிசர்வ் வங்கி – பொருளாதார மந்தநிலை

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமே : பாரத ரிசர்வ் வங்கி – பொருளாதார மந்தநிலை 

Unchanged in REPO rate, Cut in GDP growth  – RBI Policy – Economy Slowdown 

வியாழக்கிழமை (05-12-2019) அன்று நடைபெற்ற மத்திய நிதி கொள்கை குழு கூட்டத்தின்(Monetary Policy Committee) முடிவில் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை என பாரத ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஐந்து காலாண்டுகளாக குறைக்கப்பட்டு வந்த ரெப்போ வட்டி விகிதம் இம்முறை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

நடப்பில் இதுவரை 135 அடிப்படை புள்ளிகள் வரை ரெப்போ விகிதம்(REPO Rate) குறைக்கப்பட்டுள்ளது. கடந்த காலாண்டில் நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், பாரத ரிசர்வ் வங்கியின் குறுகிய கால இலக்கான 4 சதவீதத்தை தாண்டி 4.62 சதவீதமாக இருந்தது.

தற்போது காணப்படும் விலை உயர்வு மேலும் அதிகரிக்கும் சூழ்நிலையில், டிசம்பர் காலத்திற்கு 5 சதவீத பணவீக்கத்தை கடக்கலாம். இவ்வாறான நிலையில், பாரத ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை குறைத்திருந்தால் பணவீக்கத்திற்கு குறைவான வட்டி விகிதம் காணப்படலாம்.

ஆனால் ரெப்போ வட்டி விகிதத்தில் சந்தை எதிர்பார்த்த 25 புள்ளிகள் குறைப்பு இம்முறை நடக்கவில்லை. மாறாக ஏற்கனவே இருந்த 5.15 சதவீத ரெப்போ விகிதம் தொடரும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. வருங்காலங்களில் ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு இருக்கலாம் எனவும் பாரத ரிசர்வ் வங்கி சுட்டி காட்டியுள்ளது.

நிதி கொள்கை குழு கூட்டத்தில் சொல்லப்பட்ட தகவல் : ரெப்போ விகிதம் 5.15 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 4.90 சதவீதமாகவும் தொடரும். 2019-20ம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டில் நாட்டின் பணவீக்கம்(Inflation) 4.70 % – 5.10 % என்ற நிலையில் இருக்கலாம். நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது முன்னர் 6.10 சதவீதமாக சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த சில காலாண்டுகளாக குறைந்து வருவதும், அதே வேளையில் சமீப கால விலைவாசி உயர்வும், வேலைவாய்ப்பின்மை விகிதமும் பொருளாதார மந்தநிலையை அதிகப்படுத்துகிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

குழந்தைகளுக்கான நிதி திட்டமிடல் – சிறந்த ஐந்து பண்டுகள்

குழந்தைகளுக்கான நிதி திட்டமிடல் – சிறந்த ஐந்து பண்டுகள் 

Best 5 Funds to invest in 2020 – Children’s Gift Mutual Funds

எந்தவொரு முதலீட்டுக்கும் நிதி இலக்குகளை நிர்ணயிப்பது அவசியம். நமக்கான இலக்குகள்  குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால இலக்குகளாக இருக்கலாம். இருப்பினும், அவற்றுக்கான பெயரை கொண்டிருக்கும் போது, அதன் முதலீட்டு தன்மை நமக்கு நினைவூட்டுவதாக இருக்கும்.

உதாரணமாக ஓய்வு கால நிதி(Retirement Plan), குழந்தைக்கான கல்வி(Child Education), வீடு வாங்குதல், அவசர கால நிதி(Emergency Fund) என பல நிதி இலக்குகளுக்கு நாம் பெயரிடுவது சிறந்தது. இன்றைய காலத்தில் கல்வி மற்றும் மருத்துவ செலவிற்கான மதிப்பை நம்மால் சரியான நிலையில் கணிக்க முடியாது. எனவே தான் மருத்துவ செலவுகளை சமாளிக்க, குடும்பத்திற்கான மருத்துவ காப்பீட்டை(Health Insurance) பெறும் போது, அது குடும்பத்தில்  உள்ள அனைவருக்கும் பயன் தரும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

குழந்தைக்கான கல்வி எனும் போது, நம்மில் பெரும்பாலானவர்கள் அதனை திட்டமிட தவறுகிறோம். குழந்தைகளின் பள்ளிக்கால படிப்பிற்கு அதிக செலவு செய்யும் நாம் மேற்படிப்பிற்காக செலவுகளை முன்னரே திட்டமிட வேண்டும். அப்போது தான் எதிர்காலத்தில் நமது வருவாய்க்கான பட்ஜெட்டில் சிரமம் இருக்காது. குழந்தைகளின் மேற்படிப்புக்காக திட்டமிடும் போது, அது ஒரு நீண்ட கால இலக்கு என்பதை நம் மனதில் நிலை நிறுத்த வேண்டும். உதாரணமாக குழந்தையின் வயது ஒன்று என்றால், 16 வருடங்களுக்கு பின்பு தான் குழந்தைக்கான மேற்படிப்பு செலவு தேவைப்படுகிறது. எனவே அதனை மனதில் கொண்டு, பணவீக்கத்தை தாண்டிய வருவாயை பெறுவது நல்லது.

வங்கி மற்றும் அஞ்சலக சேமிப்பு பாதுகாப்பானது என நாம் சொன்னாலும், நீண்ட கால அடிப்படையில் பணவீக்கத்தை தாண்டிய வருவாயை நம்மால் பெற முடியாது. கல்வி செலவை பொறுத்தவரை பணவீக்கம் ஒவ்வொரு வருடமும் ஏறிக்கொண்டு தான் செல்கிறது. எனவே அதற்கேற்றாற் போல், பரஸ்பர நிதிகள் வழங்கும் திட்டங்களை குழந்தைகளின் கல்வி சேமிப்புக்காக முயற்சிக்கலாம்.

இன்று நம் நாட்டில் 40க்கும் மேற்பட்ட பரஸ்பர நிதி நிறுவனங்களும், அவற்றில் காலத்திற்கு தகுந்தாற் போல பல திட்டங்களும் உள்ளது. பொதுவாக 5 வருடங்களுக்கு மேற்பட்ட நிதி இலக்குகளுக்கு பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில்(Equity Mutual Funds) முதலீடு செய்யலாம். ஓய்வு பெற்றவர்கள் தங்களின் ரிஸ்க் தன்மையை கொண்டு, கடன் பண்டுகள்(Debt Funds) மற்றும் கலப்பின பண்டுகளை(Hybrid Funds) தேர்ந்தெடுக்கலாம். குழந்தைகளின் மேற்படிப்பு செலவுக்கான திட்டத்தை அவர்களின் 5 வயதுக்குள் முதலீடு செய்ய துவங்குவது சிறப்பு. அதற்கு மேலான வயதுள்ள குழந்தைகளை கொண்டிருப்பவர்களும், காலத்திற்கு ஏற்றாற் போல் முதலீடு செய்யலாம்.

குழந்தைகளுக்கான மேற்படிப்பு திட்டமிடலுக்கு சிறந்த 5 பண்டுகளை நாம் இங்கே கொடுத்துள்ளோம். அவை,

  • HDFC Children’s Gift Fund
  • ICICI Prudential Child Care Fund
  • UTI Children’s Career Fund
  • Axis Children’s Gift Fund
  • Aditya Birla Sun Life Bal Bhavisya Yojna 

மேலே சொன்ன திட்டங்கள் பரஸ்பர நிதி நிறுவனங்கள் வழங்கும் குழந்தைகளுக்கான சிறப்பு பண்டுகளாகும். இது ஒரு கலப்பின பரஸ்பர நிதி திட்டமாகும்(Hyrbrid Funds). பங்கு மற்றும் கடன் சார்ந்த இரு வகை தன்மையிலும் முதலீடு செய்யப்படுகிறது. இது போன்ற திட்டங்களில் பொதுவாக பங்கு முதலீட்டின் பங்களிப்பு 60 – 70 சதவீதமாக இருக்கும். மீதமிருக்கும் தொகை கடன் பண்டுகளில் முதலீடு செய்யப்படும்.

childrens gift fund

குழந்தைகளுக்கான பண்டுகள் 5 வருட லாக்-இன்(Lock-in Period) வசதியை கொண்டது. அதாவது இந்த பண்டுகளில் முதலீடு செய்பவர்கள், முதலீடு செய்த நாளிலிருந்து 5 வருடம் முடியும் வரை பணத்தை திரும்ப பெற முடியாது. இது தான் திட்டத்தின் சிறப்பம்சமாகவும் பார்க்கப்படுகிறது. இருப்பினும், குழந்தை 18 வயது அடைந்தவுடன் பணத்தை பெறும் வசதியும் உண்டு. பொதுவாக செல்வ மகள் திட்டத்தில் 21 வருட முடிவில் தான் பணத்தை பெற முடியும். அப்படியிருக்கையில், இதன் லாக்-இன் காலம் குறைவே. ஐந்து வருட காலத்திற்குள் திட்டத்தை முடித்து கொள்ள வேண்டுமானால், வெளியேறும் கட்டணம் வசூலிக்கப்படும். இது போன்ற வசதியால் குழந்தைக்கான இலக்குகளில் தவறாமல் முதலீடு செய்வதும், பெற்றோருக்கு முதலீட்டு ஒழுக்கத்தையும் ஏற்படுத்தும்.

திட்டத்தின் மற்றொரு சிறப்பம்சமாக, குழந்தையின் பெயரில் மட்டுமே(Name of Minor Child) முதலீடு செய்யப்படும். முதலீடு செய்யும் நபர் கொடையாளி(Donor), பாதுகாவலர் அல்லது பெற்றோராக இருக்கலாம். இந்த திட்டத்தில் மட்டுமே குழந்தையின் பெயரில் யார் வேண்டுமானாலும் முதலீட்டை மேற்கொள்ளலாம். குழந்தையின் தாத்தா, பாட்டி, மாமா, பெற்றோரின் நண்பர்கள், மற்ற உறவினர்கள் என முதலீடு செய்யும் நபர்கள் இருக்கலாம்.

திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக மாதாமாதம் 500 ரூபாயை முதலீடு செய்யலாம். எனினும், குழந்தையின் மேற்படிப்பு செலவுகளை(எதிர்கால செலவுகள்) கணக்கிட்டு அதற்கேற்றாற் போல் முதலீட்டு தொகையை அதிகரித்து முதலீடு செய்வது நல்லது. இது ஒரு நீண்ட கால திட்டம் என்பதால், பணவீக்கத்தை தாண்டிய வருவாயை பெறலாம். இந்த திட்டத்தை குழந்தைகளின் கல்விக்காக மட்டுமில்லாமல், அவர்களின் எதிர்கால திருமண திட்டமிடலுக்கும், தொழில் செய்ய தேவையான முதலீட்டிற்கும் பயன்படுத்தலாம்.

பரஸ்பர நிதி நிறுவனங்களில் காணப்படும் மற்ற பண்டுகளை தேர்ந்தெடுப்பதில் சிரமம் இருப்பவர்கள், இந்த பண்டுகளை தங்கள் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக தேர்ந்தெடுக்கலாம். நீண்ட காலத்தில் நல்ல வருவாயை பெறுவது மட்டுமில்லாமல், பெற்றோருக்கான மகிழ்ச்சியும் கிட்டும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஒரு வருடத்தில் 23 சதவீத லாபத்தை தந்துள்ள தங்கம் – இப்போது என்ன செய்யலாம் ?

ஒரு வருடத்தில் 23 சதவீத லாபத்தை தந்துள்ள தங்கம் – இப்போது என்ன செய்யலாம் ?

23 Percent hike in a year – Gold Price in INR

நமது நாட்டில் கூட்டு குடும்பத்தின் மீது நம்பிக்கை உள்ளதோ இல்லையோ, ஆனால் தங்கத்தின் மீதான நம்பிக்கை பெரும்பாலானவர்களிடம் அதிகமாக உள்ளது. எந்தவொரு முதலீட்டு சாதனத்தையும் விட, தங்கம் பாதுகாப்பானதாகவும் மற்றும் அதிக வருவாய் தரக்கூடிய முதலீடாகவும் நம் நாட்டில் பார்க்கப்படுகிறது. மேலும், அது குடும்பத்தின் கவரமாகவும் காணப்படுகிறது எனலாம்.

10 கிராம் அளவை கொண்ட 24 காரட் சுத்த தங்கம் (99.9 சதவீதம்), சென்னை விலை அடிப்படையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ரூ. 31,970 (10 கிராம்) என்ற விலையில் வர்த்தகமானது. தற்போது 10 கிராம் சுத்த தங்கத்தின் விலை 39,500 ரூபாய் விலையில் வர்த்தகமாகி வருகிறது. இது சுமார் 23 சதவீத வருவாய் வளர்ச்சி எனலாம்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

கடந்த செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் இதன் விலை அதிகபட்சமாக 40,450 ரூபாய் என்ற விலையில் வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது. நடப்பில் தங்கத்தின் விலை(Gold Price) ஒரு கிராம் 3,416 ரூபாய் என்ற விலையில் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது. அவுன்ஸ் அடிப்படையில் 1,06,268 ரூபாய் என்ற விலையில் காணப்படுகிறது.

பொதுவாக பங்குச்சந்தை இறக்கத்தில் காணும் போது, தங்கத்தின் மதிப்பு அதிகரிக்கும். இது போல, உலகளவில் காணப்படும் பொருளாதார மந்தநிலை, போர் வரும் சூழல் மற்றும் டாலர் மதிப்பு வீழ்ச்சியடையும் போது தங்கத்தின் தேவை அதிகமாக இருக்கும். இதன் காரணமாகவும் தங்கத்தின் விலையில் மாற்றம் அமையும்.

உலகளவில் வர்த்தகமாகும் தங்கம் ஒரு நல்ல முதலீட்டு சாதனம் என்றாலும், நாம் நினைப்பது போல, அது பாதுகாப்பான சாதனம் என நாம் சொல்ல முடியாது. காரணம், தங்கம் என்பது பங்குச்சந்தையை ஒட்டிய ரிஸ்க் தன்மையை எப்போதும் கொண்டிருக்கும். பங்குச்சந்தை போல அதிக ஏற்ற-இறக்கங்கள் இல்லையெனினும், மிதமான ஏற்ற-இறக்கங்களுக்கு உட்பட்டது தான் தங்கத்தின் முதலீடு. இதன் காரணமாக தான் அதன் விலை கடந்த 50 வருடங்களில் அதிகரித்துள்ளது எனலாம்.

இன்று அதிகளவிலான தங்கத்தினை கையிருப்பாக வைத்திருக்கும் நாடு, அமெரிக்கா. இதற்கான காரணமும் உண்டு, உலகளவில் தேவைப்படும் தங்கத்தின் வர்த்தகத்தை நிர்வகிக்கவும், டாலர் மதிப்பு வீழ்ச்சியடைந்தாலும் அதனை சரிப்படுத்தவே தங்கம் உதவிகரமாக உள்ளது. எப்போதெல்லாம் டாலர் மதிப்பு உயர்கிறதோ, அப்போது தங்கத்தின் தேவை குறையும். ஏனெனில், பெரும்பாலான நாடுகள் அந்நிய செலவாணியை (டாலர்) அதிகளவில் கையிருப்பாக கொண்டிருப்பார்கள். இதன் காரணமாக தங்கத்தின் விலை இறங்கும்.

இதற்கு மாற்றாக, எப்போதெல்லாம் டாலர் மதிப்பு வீழ்ச்சியடைகிறதோ, தங்கத்தின் மீதான தேவை அதிகரிக்கும். இதன் காரணமாக தங்கத்தின் விலையில் மாற்றம் இருக்கும். சீன-அமெரிக்க வர்த்தக போர் என்றால், டாலரின் மீதான நம்பிக்கை குறைந்து, தங்கத்தின் மீது ஈடுபாடு இருக்கும். ஆக, பெரும்பாலான நாடுகள் தங்கத்தை ஒரு இழப்பு காப்பு வணிகமாக பயன்படுத்தி வருகிறது.

நம் நாட்டில் தங்கத்தின் விலை ஏறுவதற்கான காரணம் பொதுவாக நாம் டாலர் மதிப்பின் அடிப்படையில் இறக்குமதி செய்வதால் தான். எப்படியிருந்தாலும், நமக்கு கிடைக்கப்பெறும் தங்கம் சற்று விலை அதிகமானதே. டாலர் மதிப்பு அதிகரித்தாலும், இல்லையெனில் டாலர் மதிப்பு வீழ்ச்சி பெற்றாலும் நாம் தங்கத்தை அதிக விலை கொடுத்து தான் வாங்க வேண்டும்.

தங்கத்தின் விலை அதிகரித்து வருவது சரி தான். நாம் அதனை நல்ல ஒரு முதலீடாக மாற்றுவது எப்படி ?

  • தங்க ஆபரணத்தை வாங்கி கொண்டு, அதனை முதலீடு என்று நாம் சொல்ல கூடாது. தங்கத்தின் விலையை காட்டிலும், நாம் கூடுதலாக சில செலவுகளை(செய்கூலி, சேதாரம், வரி மற்றும் இதர செலவுகள்) ஏற்க வேண்டியிருக்கும். நாம் அதனை விற்கும் போது, நமக்கு சந்தையில் வர்த்தகமாகும் விலை முழுவதுமாக கிடைக்கும் என சொல்ல முடியாது. நகை அடமான கடைகள் வருங்காலத்தில் அரசு மூலம் ஒழுங்குமுறைப்படுத்தப்படும் நிலை உள்ளது. இதனால், நாம் அடமானம் வைத்தாலும் நமக்கு சரியான விலையில் கடன் கிடைக்குமா என்பது சந்தேகமே.
  • தங்கத்தை ஆபரணமாக கொண்டிருப்பதில் பாதுகாப்பு இல்லை. தங்கத்தை முதலீடாக கொண்டிருக்க தங்க பத்திர திட்டங்கள்(Gold Bond Scheme), கோல்டு இ.டி.எப்.(Gold ETF) மற்றும் கோல்டு பண்டு(Gold Funds) போன்றவற்றில் முதலீட்டை மேற்கொள்ளலாம். இதற்கான செலவினங்களும் மிக குறைவு. பின்னாளில் வர்த்தகத்தின் விலையில் பணமாக அல்லது நகையாக பெறலாம்.
  • பொருளாதார மந்தநிலை காலங்களில் தங்கத்தில் சிறிய அளவில் முதலீடு செய்யலாம். ஆபரணங்களை வாங்கி வைத்து கொண்டு முதலீடு என சொல்லாதீர்கள். உங்களுக்கு நகைகளாக வேண்டுமானால், விருப்பத்திற்கு ஏற்றாற் போல் வாங்கி கொள்ளுங்கள். அதே வேளையில் அதனை ஒரு செலவாக மதிப்பிடுங்கள். (உங்கள் சொந்த வீட்டை போல !)
  • முதலீட்டு பரவலாக்கம்(Asset Allocation) செய்யும் போது, தங்கத்திலும் முதலீடு செய்யுங்கள். உங்கள் முதலீட்டில் வங்கி டெபாசிட்டுகள், பங்குகள், பரஸ்பர நிதிகள், நிலம் மற்றும் தங்கத்திற்கும் பங்களிப்பு இருக்கட்டும். ஒரே முதலீட்டு சாதனத்தில் முழு பணத்தையும் முதலீடு செய்ய வேண்டாம்.
  • தங்கத்தை ஒரு இழப்பு காப்பாகவும்(Hedge), பணவீக்கத்தை சரிக்கட்டவும் பயன்படுத்துங்கள்.

கடந்த மாதத்தில் நாட்டின் தங்க இறக்குமதி அளவு 5 மாத உச்சத்தில் உள்ளது. இருப்பினும், கடந்த வருடத்தை இதே காலத்துடன் ஒப்பிடும் போது, சொல்லப்பட்ட இறக்குமதி அளவு குறைவே. மத்திய அரசு கடந்த சில வருடங்களாக தங்கத்தின் இறக்குமதி அளவை குறைத்து வருகிறது. வர்த்தக சுமையை குறைப்பதற்கான நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ப்ரீபெய்ட் கட்டணத்தை அதிகப்படுத்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் – நாளை முதல் அமல்

ப்ரீபெய்ட் கட்டணத்தை அதிகப்படுத்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள்  – நாளை முதல் அமல்

Increased Prepaid Tariffs – Airtel, Vodafone Idea and JIO

இந்திய தொலைத்தொடர்பு துறையில் கடந்த சில காலங்களாக பல மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. பல நிறுவனங்கள் இந்த துறையில் காணாமல் போய் விட்டன. பொதுத்துறையான பி.எஸ்.என்.எல். நிறுவனமும் நஷ்டத்தில் இயங்கி கொண்டிருக்கின்றன. இணைய வழி தகவல் பரிமாற்றம் வந்த பின்னர், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டியை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன.

கடந்த சில வருடங்களாக அழைப்புகளிலும், இணைய பயன்பாட்டுக்கும் பல சலுகைகளை அளித்து வந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தற்போது கடனில் தத்தளித்து வருகின்றன. பார்தி ஏர்டெல்(Bharti Airtel) நிறுவனத்தின் கடன் ரூ. 1,28,530 கோடியாக உள்ளது. இந்த நிறுவனம் கடைசி இரு காலாண்டுகளில் நஷ்டத்தை மட்டுமே கொண்டுள்ளன.

இது போல வோடபோன் ஐடியா(Vodafone Idea) நிறுவனத்தின் கடன் 99,660 கோடி ரூபாய். நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு முடிவுகள் 50,920 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளன. ரிலையன்ஸ் ஜியோ(JIO) நிறுவனம் குறிப்பிடத்தக்க சந்தாதாரர்களை கைப்பற்றியிருந்தாலும், தனது கடன் தன்மையை குறைக்கும் பொருட்டு சந்தாதாரர்களின் ப்ரீபெய்ட் கட்டணத்தை உயர்த்த தயாராக உள்ளது.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சார்ந்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன் பெரும் விவாதத்தில் இருந்தது. ஒரு சூழ்நிலையில் வோடபோன் நிறுவனம் தன்னை திவால் நிலைக்கு அறிவிப்பதற்கு தயாராகவும் இருந்தது. இது சார்ந்து மத்திய அரசிடமும் கோரிக்கையை வைத்திருந்தது. இந்நிலையில் நாளை(03-12-2019) முதல் வாடிக்கையாளர்களின் ப்ரீபெய்ட் கட்டணத்தை(Tariff) உயர்த்தும் நோக்கில் நிறுவனங்கள் சென்றுள்ளன.

சந்தாதாரர்களின் ப்ரீபெய்ட் கட்டணம் 40 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை அதிகரிக்க கூடும் என சொல்லப்பட்டுள்ளது. ஏர்டெல் நிறுவனத்தில் முன்னர் இருந்த 129 ரூபாய் திட்டம், தற்போது 148 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது. இதற்கான 28 நாட்கள் காலவரையில் மாற்றமில்லை. இது போல 249 ரூபாயாக இருந்த திட்டம் 298 ரூபாயாகவும், 499 ரூபாய் திட்டம் 698 ரூபாயாகவும், 199 ரூபாய் திட்டம் 248 ரூபாயாகவும் மாற்றப்பட உள்ளது.

வோடபோன் ஐடியாவில் குறைந்தபட்ச திட்டமான 35 ரூபாய் பேக்(Pack), இனி 49 ரூபாயாக மாற உள்ளது. இது போல 199 ரூபாய் திட்டம் 249 ரூபாயாகவும், ரூ. 459 திட்டம் இனி 599 ரூபாயாகவும் அதிகரிக்க உள்ளது. ரிலையன்ஸ் ஜியோவும் தனது சந்தாதாரர்களின் கட்டணங்களை அதிகரிக்க உள்ளது. இருப்பினும், அதற்கான விலை பட்டியலை வெளியிட வில்லை.

வரும் நாட்களில் இலவச அழைப்புகளின்(Voice Calls) எண்ணிக்கை குறைய கூடும். அதே வேளையில் இணைய வழி பரிமாற்றத்திற்கான(Data) சேவை கட்டணம் அதிகரிக்கலாம். எனவே வாடிக்கையாளர்கள் தங்கள் மாதாந்திர பட்ஜெட்டை மறு ஆய்வு செய்வதற்கான காலம் வந்து விட்டது எனலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இந்தியாவின் பணவீக்கமும், பொருளாதார வளர்ச்சியும் – சிறு பார்வை

இந்தியாவின் பணவீக்கமும், பொருளாதார வளர்ச்சியும் – சிறு பார்வை 

GDP and Inflation in India – A Short and Thumbnail View

 

ஒவ்வொரு நாட்டின் பணவீக்கமும், மொத்த உள்நாட்டு உற்பத்தியும் வெவ்வேறு காலங்களில் மாறுதலுக்கு உட்பட்டவை. இந்த இரண்டும் ஒரு நாட்டின் முக்கிய பொருளாதார காரணிகளாக செயல்பட்டு வருகிறது. பணவீக்கம்(Inflation) என்பது பொதுவாக அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பது மற்றும் பணத்தை வாங்கும் மதிப்பில் வீழ்ச்சி ஏற்படுவது எனலாம்.

 

சுருக்கமாக நாம் வாங்கப்போகும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வந்தால், விலைவாசி உயர்ந்து வருகிறது என சொல்வோம். இதனை தான் பொருளாதார வார்த்தையில், பணவீக்கம்(Inflation) என்கிறோம். பணவீக்கம் உள்ளது போல, பணவாட்டம் மற்றும் தேக்கநிலை என்ற மற்றொரு தன்மையும் விலையை குறிப்பிடுகிறது. பொருட்களின் விலை எதிர்மறையாக செல்லும் போது, அதாவது மிகவும் மலிவான விலைக்கு செல்லும் நிலையில் இதனை பணவாட்டம்(Deflation) என்கிறோம். பணவாட்டத்தின் மதிப்பு சுழிக்கு (பூஜ்யம்) கீழ் இருக்கும். இது தொடர்ச்சியாக இருக்கும் சமயத்தில், சரியான ஊதியம் கிடைக்காமல் போகலாம். வேலைவாய்ப்பின்மையை ஏற்பட கூடும். காரணம், பொருட்களுக்கு சரியான விலை கிடைக்காமல் போவதால்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தேக்கநிலை (Stagflation) என்பது பணவீக்கம் தொடர்ச்சியாக அதிகரித்து வருவது, நாட்டில் காணப்படும் அதிக வேலைவாய்ப்பின்மை மற்றும் தேவையில் உள்ள தேக்கம் ஆகியவற்றால் ஒருங்கிணைந்து காணப்படுவது. இது பொதுவாக பொருளாதார மந்த நிலை அல்லது வீழ்ச்சியின் போது நிகழும். 

 

மறுபுறம் செல்வோம், மொத்த உள்நாட்டு உற்பத்தி(Gross Domestic Product – GDP) என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பாகும். இதனை பொதுவாக அந்நாட்டின் நுகர்வு, முதலீடு, அரசு செலவினங்கள் மற்றும் நிகர ஏற்றுமதி வர்த்தகத்தை(ஏற்றுமதி – இறக்குமதி) கொண்டு கணக்கிடுவார்கள். இதனை தான் நாம் பொருளாதார வளர்ச்சி(GDP Growth) என பெயரிடுகிறோம்.

 

மேலே சொன்ன இரண்டும் (பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி) ஒரு நாட்டின் முக்கிய பொருளாதார புள்ளிவிவரங்களாகும். இந்த இரண்டையும் ஒப்பிடும் போது, குறுகிய காலத்தில் பலன் தரும் எனவும், நீண்ட காலத்தில் துல்லியமான முடிவுக்கு வர இயலாது எனவும் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். குறுகிய காலத்தில் இவை இரண்டும் நேர்-எதிராகவும், நீண்ட காலத்தில் மாறுபட்டும் காணப்படுகிறது. 

 

நம் நாட்டின் புள்ளிவிவரங்களை கடந்த சில வருடங்களுடன் மதிப்பிடும் போது பணவீக்கமும், மொத்த உள்நாட்டு உற்பத்தியும் எவ்வாறு நடந்துள்ளது என பார்ப்போம். கடந்த ஒரு வருட காலத்தை பார்க்கும் போது, நாட்டின் பணவீக்கம் மெதுவாக உயர்ந்தும், பொருளாதார வளர்ச்சி தொடர்ச்சியாக இறங்குமுகத்திலும் காணப்படுகிறது. எனவே, இவை இரண்டும் கடந்த ஒரு வருடகாலமாக நேர்-எதிர் திசையில் பயணித்துள்ளது. 

 

ஐந்து வருட காலத்தில் மதிப்பிடும் போது, பணவீக்கம் சராசரியாக 4 – 6 சதவீதம் என்ற நிலையில் இருந்துள்ளது. பொருளாதார வளர்ச்சி இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை ஏற்ற-இறக்கங்களுக்கு உட்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டில் 9 சதவீதத்திற்கு மேல் இருந்த வளர்ச்சி, தற்போது 4.5 சதவீதத்தில் நிலை கொண்டுள்ளது.

 

பத்து வருட காலத்தில் பார்க்கும் போது, இரண்டும் ஒரே சேர பயணித்தது போல் அமைகிறது. பணவீக்கமும், மொத்த உள்நாட்டு உற்பத்தியும் இறங்குமுகத்தில் உள்ளது போன்ற நிலை காணப்படுகிறது. 25 வருட காலத்தில் ஆராயும் போது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி உயர்ந்தும், பணவீக்கம் குறைந்தும் காணப்பட்டுள்ளது. 

 

கடந்த 50 வருட காலத்தில் இந்திய பொருளாதாரம் மேம்பட்டும், பணவீக்க விகிதம் ஒரு சில வருடங்கள் தவிர, மற்ற காலத்தில் சராசரியாக விலையை கொண்டுள்ளது. பொருளாதாரத்தை பொறுத்தவரை ஒரு ரூபாயை, இரண்டு ரூபாயாக மாற்றுவது எளிதான செயல். அதே வேளையில், ஒரு லட்சத்தை உடனடியாக இரண்டு லட்சமாக மாற்றுவது சற்று கடினம். இது போன்று தான் பொருளாதார வளர்ச்சியும். நாம் 4-5 சதவீத வளர்ச்சி எனும் போது இரு மடங்கு வளர்ச்சியை ஓரிரு வருடங்களில் அடையலாம். ஆனால் 8 சதவீத வளர்ச்சியை 16 சதவீதமாக மாற்றுவது சவாலான விஷயம்.

 

சமீபத்திய இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதம் என அமையும் போது, கடந்த ஆறு வருடங்களில் காணப்படாத அளவாக சொல்லப்பட்டது. இதுவே சீன நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதம் என குறிப்பிடும் போது, 27 வருடங்களில் காணப்படாத அளவாக சென்று விட்டது. நம் நாட்டின் பொருளாதாரம் 2.72 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள். ஆனால் சீனாவின் பொருளாதாரம் 13.60 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள். நினைவில் கொள்ளுங்கள். 

 

பொருளாதாரம் மந்தம் அடையும் போது, வங்கிகளின் வட்டி விகிதம் குறைவதும் இதனால் தான். நிறுவனங்கள் பெறும் கடனுக்கான வட்டி விகிதம் குறைய கூடும். அதே வேளையில், நுகர்வை அதிகப்படுத்த செலவு செய்வதை ஊக்கப்படுத்தும். இதற்கு மாறாக விலையேற்ற காலங்களில், அதாவது அதிகமாக செலவு செய்யும் நிலையில் வங்கி வட்டி விகிதங்கள் அதிகரிக்கும். வங்கி டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் கூடும். இது பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

 

எனவே பணவீக்கமும், பொருளாதார வளர்ச்சியும் குறுகிய காலத்தில் எதிரியாக இருந்தால் கூட, நீண்ட காலத்தில் ஒரு நாட்டின் உற்ற நண்பர்களாக இருப்பார்கள்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

    

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.5 சதவீதம் – செப்டம்பர் 2019

நாட்டின் மொத்த உள்நாட்டு  உற்பத்தி 4.5 சதவீதம் – செப்டம்பர் 2019

India’s GDP growth to 4.5 Percent in September 2019 Quarter

நடப்பு 2019-20ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாக குறைந்துள்ளது. சொல்லப்பட்ட பொருளாதார வளர்ச்சி ஜூலை – செப்டம்பர் காலத்திற்கானது. இதற்கு முந்தைய காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது சொல்லப்பட்டுள்ள வளர்ச்சி குறைவு சந்தை எதிர்பார்த்த 4.7 சதவீத வளர்ச்சி என்ற அளவை காட்டிலும் குறைவாக உள்ளது. உற்பத்தியில் ஏற்பட்ட சுணக்கம், முதலீட்டை பெருமளவு ஈர்க்காதது மற்றும் ஏற்றுமதியின் அளவு குறைந்ததும் பொருளாதார வளர்ச்சி குறியீட்டை பாதித்துள்ளது.

கடந்த இரண்டு வருடங்களாக காணப்படும் உலகளாவிய பொருளாதார மந்த நிலையால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்ச்சியாக ஐந்து காலாண்டுகளாக வீழ்ச்சியடைந்துள்ளது. மத்திய அரசு சார்பில் பொருளாதாரத்தை ஊக்குவிக்க பல மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலும், அவை வந்தடைந்த காலம் தாமதமாக இருந்துள்ளது.

இதனையடுத்து வரவிருக்கும் காலங்களிலும் வங்கிகளுக்கான வட்டி விகிதம்(Repo Rate) குறைக்கப்பட வாய்ப்புள்ளது. பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி.(GST) அமலுக்கு பின், எதிர்பார்த்த முதலீட்டு வரவு மற்றும் நுகர்வு தன்மை குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது. இருப்பினும், தற்போதைய வளர்ச்சி குறைவு ஒரு தற்காலிகமானதாகவே சொல்லப்படுகிறது.

2018ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் 8 சதவீதமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி(GDP) தற்போது தொடர் வேகமாக குறைந்து 4.5 சதவீதம் என்ற நிலையில் உள்ளது. அக்டோபர் – டிசம்பர் 2019ம் காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகள் ஜனவரி 2020ல் வெளிவரும். இதனை அடிப்படையாக வைத்தே, பொருளாதார மந்த நிலையா அல்லது வீழ்ச்சியை சந்தித்து வருகிறதா என்பது தெளிவாகும்.

ஏற்கனவே அரசு சார்பில் நிறுவனங்களுக்கான வரி குறைப்பு, வாகன துறைக்கான ஊக்குவிப்பு, வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு முதலீடு என மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளது. பாரத ரிசர்வ் வங்கியும் தனது வட்டி விகித குறைப்பை தொடர்ச்சியாக குறைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

நிதி துறை, கட்டுமானம், வர்த்தகம், போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பில் போதுமான வளர்ச்சி எட்டப்படவில்லை. அதே வேளையில் பாதுகாப்பு மற்றும் பொது நிர்வாகத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை செப்டம்பர் காலாண்டில் பெற்றுள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த புள்ளிவிவரங்கள் இன்று வெளியீடு

நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த புள்ளிவிவரங்கள் இன்று வெளியீடு 

India’s GDP numbers will be released Today – September Quarter 2019

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சார்ந்த பொருளாதார வளர்ச்சி குறித்த புள்ளிவிவரங்கள் இன்று வெளியாக உள்ளது. கடந்த ஜூலை-செப்டம்பர் காலத்திற்கான பொருளாதார வளர்ச்சி குறியீடு தான் தற்போது வெளிவர உள்ளது.

கடந்த முறை மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) 5.8 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைந்தது குறிப்பிடத்தக்கது. இம்முறை நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்திற்கு கீழ் செல்லும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பலவீனமான தேவை நுகர்வால் கடந்த சில காலாண்டுகளாக பொருளாதார வளர்ச்சி இறங்குமுகத்தில் சென்று கொண்டிருக்கிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பொருளாதார மந்தநிலையை சரி செய்ய மத்திய நிதி அமைச்சகத்தின் சார்பில் சமீப காலமாக சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றைய புள்ளிவிவரம் சந்தையை குறுகிய காலத்தில் பாதிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இருப்பினும், கடந்த சில வாரங்களாக இந்திய சந்தையில் அந்நிய முதலீட்டாளர்களின் முதலீட்டு கை ஓங்கி உள்ளது. கடந்த 68 வருடங்களில் நாட்டின் சராசரி பொருளாதார வளர்ச்சி 6.20 சதவீதம் என்ற அளவில் உள்ளது. அதிகபட்சமாக கடந்த 2010ம் ஆண்டில் 11.40 சதவீதமும், குறைந்த அளவாக கடந்த 1979ம் ஆண்டின் நான்காம் காலாண்டில் (-5.20) சதவீதம் என்ற அளவிலும் பொருளாதார வளர்ச்சி இருந்துள்ளது.

நடப்பு பொருளாதார வளர்ச்சி குறைவுக்கு காரணமாக சொல்லப்படுவது உற்பத்தி மற்றும் கட்டுமான துறையில் ஏற்பட்டுள்ள சுணக்கம், நுகர்வு தன்மை குறைவு ஆகியவையே. பொருளாதார வளர்ச்சி குறைவாக இருக்கக்கூடும் என்ற நிகழ்வால், மீண்டும் ஒரு முறை வட்டி விகித குறைப்பு நடவடிக்கை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்றைய கடன் சந்தையிலும், அரசு கடன் பத்திரங்களுக்கான தேவையும் அதிகமாக இருந்தது. பொதுவாக வங்கியில் வட்டி விகிதம் குறையும் போது, கடன் பத்திரங்களின் தேவை அதிகரிக்க கூடும். இதன் காரணமாக கடன் பத்திரங்களின்(Bond yield) வட்டி வருவாய் சற்று அதிகமாக இருக்கும்.

மத்திய ரிசர்வ் வங்கி(RBI) இதுவரை 135 அடிப்படை புள்ளிகள் வரை ரெப்போ விகிதத்தை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் 2025ம் ஆண்டில் நாட்டின் பொருளாதார மதிப்பு 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக மாறுவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஊக்குவிப்பு தற்போது சேவை துறையால் மட்டுமே சாத்தியம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார ஊக்குவிப்பில் உற்பத்தி துறையின் பங்கு கடந்த சில வருடங்களாக வெகுவாக குறைந்துள்ளது எனலாம். விவசாயமும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெறவில்லை. நுகர்வு தேவையை அதிகமாக கொண்டிருக்கும் நம் நாடு சேவை துறையை மட்டுமே தற்போது நம்பியுள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இந்திய பங்குச்சந்தை எங்கே சென்று கொண்டிருக்கிறது ? – முதலீட்டாளரின் ஆவல்

இந்திய பங்குச்சந்தை எங்கே சென்று கொண்டிருக்கிறது ? – முதலீட்டாளரின் ஆவல் 

An Investor’s interest about the current Indian Stock Market

நடப்பு வாரத்தின் வர்த்தகத்தில் இந்திய பங்குச்சந்தை தனது புதிய உச்சத்தை அடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையின் நிப்டி குறியீடு(Nifty50) 12,100 புள்ளிகள் என்ற நிலையை தாண்டி வர்த்தகமானது. இது போல மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ்(BSE Sensex) குறியீடும் 41,000 புள்ளிகளை கடந்து வர்த்தகமாகி கொண்டிருக்கிறது.

நவம்பர் மாதத்தின் நேற்றைய புதன் கிழமை (27-11-2019) வரை அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் வாங்கி குவித்த பங்குகளின் மதிப்பு சுமார் 13,800 கோடி ரூபாய். அதற்கு மாறாக உள்ளூர் முதலீட்டாளர்கள் சுமார் 8,700 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளனர்.

பொதுவாக பங்குச்சந்தை இறக்கத்தில் உள்ளூர் முதலீட்டாளர்கள் பங்கேற்பதும், அந்நிய முதலீட்டாளர்கள் சந்தையின் உச்சத்தில் முதலீடு செய்வதும், சந்தையின் இயல்பு. இதன் காரணமாகவே உள்ளூர் முதலீட்டாளர்கள் தங்கள் லாபங்களை சந்தையின் உச்சத்தில் பதிவு செய்வதுண்டு. இந்திய பங்குச்சந்தையின் புதிய ஏற்றத்திற்கு துணையாக பரஸ்பர நிதி திட்டங்களும்(Mutual Funds) ஊக்குவிக்கின்றன.

உண்மையில், தற்போது பொருளாதாரம் மந்த நிலையில் இருப்பது நாம் அறிந்ததே. இருப்பினும் சந்தை இதற்கு மாறாக ஏற்றம் பெற்று செல்கிறதே என நமது கேள்வி அமையலாம். சந்தையின் போக்கை கணிப்பது யாராலும் முடியாது. ஆனால் பொருளாதார புள்ளி விவரங்களை நம்மால் கணிக்க இயலும்.

நடப்பு 2019-20ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு முடிவுகள் பெரும்பாலான நிறுவனங்களிடம் இருந்து வந்துள்ளன. அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட நிறுவனங்களுக்கான வரி குறைப்பு(Corporate Tax Cut), இம்முறை நிறுவனங்களின் லாபத்திற்கு உதவியுள்ளது எனலாம். இரண்டாம் காலாண்டில் பெரும்பாலான நிறுவனங்களின் லாப வளர்ச்சி, வரி குறைப்பு நடவடிக்கையால் வந்தவை தான். இல்லையெனில் அவை நஷ்டத்தில் சென்றிருக்க கூடும்.

இந்த ஒரு நிலையே, இந்திய பங்குச்சந்தையை தாங்கி பிடித்துள்ளது. ஆனால் இந்த வரி குறைப்பு என்பது ஒரு நிரந்தரமான தீர்வாக அமையாது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைவு(GDP), வட்டி விகிதம் குறைவாக காணப்படுவது, வேலைவாய்ப்பின்மை விகிதம் சாதகமாக இல்லாதது என பல குறைகள் காணப்பட்டாலும், நடப்பு நிலைமை சரி செய்யப்படும் என்ற ஆவல் தான் சந்தையை நகர்த்தி கொண்டிருக்கிறது.

பொருளாதார வளர்ச்சி எப்போதெல்லாம் குறைவாக காணப்படுகிறதோ, அப்போது சந்தையிலும் பங்குகளின் விலை மலிவாக கிடைக்கப்பெறுகிறது. தற்போதைய நிலையில் சந்தை புதிய உச்சத்தை பெற்றிருந்தாலும், இன்னும் மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப்(Small Cap) பிரிவுகளில் நல்ல நிறுவன பங்குகள் தள்ளுபடி விலையில் காணப்படுகிறது. கடந்த 2007-2008 காலங்களில் காணப்பட்ட சந்தை வீழ்ச்சி போல், தற்போது ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமில்லை எனலாம். அதே வேளையில் தற்போதைய நிலைமை உடனடியாக தீர்க்கப்படும் என நாம் எதிர்பார்க்க வில்லை.

நாடுகளிடையே ஏற்பட்டுள்ள வர்த்தக போர் வரும் நாட்களில் மேலும் வலுவடையலாம். உலகளவில் மாற்றம் வேகமாக ஏற்பட்டு வரும் சூழ்நிலையில், சில பகுதிகளில் அத்தியாவசிய தேவைக்கும் போராட வேண்டியுள்ளது. வரும் காலங்களில் இந்த நிலைமை சரி செய்யப்பட்ட வாய்ப்புள்ளது என்ற நம்பிக்கையில் நாம் நகரலாம்.

தற்போதைய நிலையில், முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியது – பங்குகளில் அதிகபட்ச லாபங்களை பதிவு செய்திருந்தால், அதனை விற்று லாபம் பார்க்கலாம். இல்லையெனில் லாபம் பார்த்த தொகையை கொண்டு, மலிவான விலையில் இருக்கும் நல்ல நிறுவன பங்குகளை கண்டறியலாம். நடப்பு சந்தையில் லாபம் ஈட்டவில்லை என்பவர்கள் கவலையடைய வேண்டாம். கையிருப்பு தொகை இருக்கும்பட்சத்தில், நல்ல பங்குகளை குறைவான விலையில் வாங்க முயற்சி செய்யுங்கள்.

சந்தை உச்சத்தில் உள்ளது, நான் ஏன் முதலீடு செய்ய வேண்டும் என எண்ணுபவர்கள், பரஸ்பர நிதி முதலீடுகளை தேர்ந்தெடுத்து தொடர் முதலீட்டை மேற்கொள்ளலாம். சந்தையை கணிப்பது அவ்வளவு எளிதல்ல. பொருளாதார புள்ளிவிவரங்களை அறிந்து கடந்து செல்லலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

பொது வருங்கால வைப்பு நிதி (பி.பி.எப்.) – அஞ்சலக வரி சேமிப்பு திட்டம்

பொது வருங்கால வைப்பு நிதி (பி.பி.எப்.) – அஞ்சலக வரி சேமிப்பு திட்டம்

Public Provident Fund (PPF) – Postal Savings Scheme

முன்னொரு காலத்தில் அரசு வேலை அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு ஓய்வூதியமும், கூடுதலாக வருங்கால வைப்பு நிதி என சொல்லப்படும் பி.எப்.(Provident Fund) சேமிப்பும் ஒரு வரப்பிரசாதமாக இருந்து வந்தது. ஆனால் 2004ம் ஆண்டிற்கு பின், அரசு மற்றும் பொதுத்துறையில் ஓய்வூதிய முறை நிறுத்தப்பட்டு புதிய பென்ஷன் திட்டம் என்ற புதிய முறை அமல்படுத்தப்பட்டது.

புதிய பென்ஷன் திட்டம்(NPS), பழைய ஓய்வூதிய முறையை போல பாதுகாப்பான பலனை கொடுக்கும் என அரசு சார்பில் சொல்லப்படவில்லை. அது போக, இன்று அரசு வேலையில் பி.எப். சேமிப்பும் பிடிக்கப்படுவதில்லை. தனியார் நிறுவனங்களில் மட்டுமே தற்போது பி.எப். பிடித்தம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் வருங்கால வைப்பு நிதி போன்ற சேமிப்பு முறை இல்லாதவர்கள், பொது வருங்கால வைப்பு நிதி(PPF) முறையை பயன்படுத்தி கொள்ளலாம். இன்று அஞ்சலகம் மற்றும் அனைத்து வங்கிகளிலும் கிடைக்கப்பெறும் சேமிப்பு சாதனமாக பி.பி.எப். நிதி உள்ளது.

இந்திய குடிமக்களாக உள்ள தனிநபர் ஒருவர் பி.பி.எப். கணக்கை தங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகத்திலோ அல்லது வங்கி கிளையிலோ துவங்கலாம். கணக்கு துவங்கும் போது 100 ரூபாய் முதலீட்டுடன் ஆரம்பிக்க வேண்டும். ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சமாக 500 ரூபாய் சேமிப்பது அவசியம். அதிகபட்ச முதலீடு ரூ. 1,50,000.

பி.பி.எப். கணக்கில் ஒரு முறை முதலீடு அல்லது மாதாமாதம் தவணை முறையிலும் சேமிக்கலாம். கூட்டு கணக்கை(Joint Account) பி.பி.எப். நிதியில் துவங்க இயலாது. நாமினியை எப்போது வேண்டுமானாலும் நியமித்து கொள்ளலாம். இருப்பினும், கணக்கு துவங்கும் போது நாமினியை நியமிக்கும் பட்சத்தில், பின்னாளில் எந்த சிக்கலும் வராது.

பொது வருங்கால வைப்பு நிதி ஒரு நீண்ட கால சேமிப்பு திட்டம்(Long term Savings Plan). இதன் முதலீட்டு காலம் 15 வருடங்கள். தேவைப்பட்டால், கூடுதலாக ஐந்து வருடங்கள் நீட்டித்து கொள்ளும் வசதியும் உண்டு. பி.பி.எப். நிதியில் சேமிக்கப்படும் தொகைக்கு வருமான வரி சட்டம் 80சி பிரிவின் கீழ் வரி சலுகையும் உண்டு.

கடந்த 20 வருடங்களில் பி.பி.எப்.(Public Provident Fund) வட்டி விகிதம் எவ்வாறு இருந்தது ?

வரி சலுகை என்பது பி.பி.எப். நிதியில் மூன்று விதமான நிலையில்(EEE – Exempt) பலனை தருகிறது. முதலீடு செய்யும் போதும், கிடைக்கப்பெறும் வட்டி வருவாய் மற்றும் முதிர்வில் பெறப்படும் மொத்த தொகை என மூன்று நிலையிலும் வரி செலுத்த தேவையில்லை.

பி.பி.எப். கணக்கை துவங்கிய மூன்றாவது நிதியாண்டிலிருந்து கடன் வசதியும் உண்டு. கணக்கில் உள்ள தொகைக்கு ஏற்ப, நமது கடன் தொகையும் மாறுபடும். அவசர காலத்திற்கு பணம் தேவைப்படும் நிலையில், கணக்கு துவங்கிய ஏழாவது நிதியாண்டிலிருந்து பணத்தை திரும்ப பெற்று கொள்ளும் வசதி உண்டு.

நடப்பில் பி.பி.எப். நிதிக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் 7.9 சதவீதம். பொது வருங்கால வைப்பு நிதி ஒரு ஓய்வூதிய திட்டமாக(Retirment Plan) நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு நன்மையை அளிக்கும். நீண்ட காலத்தில் சேமிக்கப்படும் போது, நமது ஓய்வு காலத்திற்கான கார்பஸ் தொகையை பெறலாம். இதனை கொண்டு மாதாமாதம் வருமானத்தை தரும் ஒரு பாதுகாப்பான முதலீட்டு திட்டத்தில் போட்டு வைக்கலாம்.

பி.பி.எப். கணக்கை இணைய வாயிலாகவும் தொடங்கும் வசதி உண்டு. தாங்கள் வேலை பார்க்கும் இடத்தில், பி.எப்.(PF, VPF) கணக்கு இல்லாதவர்கள் பொது வருங்கால வைப்பு நிதியை பயன்படுத்தி கொள்வது சிறப்பம்சம்.

பொது வருங்கால வைப்பு நிதியில் (பி.எப்) ஏற்பட்டுள்ள சமீபத்திய மாற்றங்கள் – 2019

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மியூச்சுவல் பண்ட் துறையில் இறங்கவிருக்கும் முத்தூட் பைனான்ஸ்

மியூச்சுவல் பண்ட் துறையில் இறங்கவிருக்கும் முத்தூட் பைனான்ஸ் 

Muthoot Finance to entering into Mutual Fund Industry – Acquisition of IDBI’s Mutual Fund

சந்தை மதிப்பில் 27,500 கோடி ரூபாயை கொண்டுள்ள முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் நிதிச்சேவை, கல்வி, மருத்துவம், வீட்டு மனை, அந்நிய செலவாணி, காப்பீடு என பல சேவைகளில் தொழில் செய்து வருகிறது. நகை கடனில் பிரபலமடைந்த இந்நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஆறு வருடங்களில் பத்து மடங்காக பெருகியுள்ளது.

கடனில் தத்தளித்து வந்த ஐ.டி.பி.ஐ. வங்கியை(IDBI) பொது துறை காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சி.(LIC India) கடந்த சில மாதங்களுக்கு முன்பு கையகப்படுத்தியது. எல்.ஐ.சி. நிறுவனம் ஏற்கனவே மியூச்சுவல் பண்ட் (பரஸ்பர நிதி) துறையில் உள்ளதால், தனது சேவையை ஐ.டி.பி.ஐ. வங்கி கிளைகளில் வழங்க முடிவு செய்திருந்தது. இதனையடுத்து ஐ.டி.பி.ஐ. வங்கியின் கீழ் இருந்த பரஸ்பர நிதி தொழிலை விற்கும் முடிவையும் எல்.ஐ.சி. நிறுவனம் எடுத்திருந்தது.

இந்நிலையில் ஐ.டி.பி.ஐ. வங்கியின் மியூச்சுவல் பண்ட் தொழிலை முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் வாங்க உள்ளது. இதன் மதிப்பு சுமார் 215 கோடி ரூபாய் எனவும், இந்த கையகப்படுத்தல் வரும் 2020ம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தின் முடிவில் நிறைவு பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஐ.டி.பி.ஐ. பரஸ்பர நிதி(Mutual Fund AMC) சேவையில் மொத்தம் 22 திட்டங்கள் மூலமாக முதலீட்டு சேவைகள் வழங்கப்பட்டு வருவதாக சொல்லப்பட்டுள்ளது. ஐ.டி.பி.ஐ. மியூச்சுவல் பண்ட் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு சுமார் 5,300 கோடி ரூபாய்.

சொல்லப்பட்ட கையகப்படுத்தல் முடிந்தவுடன், முத்தூட் பைனான்ஸ் மற்றுமொரு சேவையில் களம் இறங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே பரஸ்பர நிதி துறையில் இதன் சேவை சிறிய அளவில் இருந்தாலும், இனி பரஸ்பர நிதி சேவையை முழுவதுமாக வழங்குவதிலும், அதன் சொத்தை நிர்வகிப்பதிலும் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு அமையலாம்.

தற்போதைய நிலையில் இந்திய பரஸ்பர நிதி துறையின் சொத்து மதிப்பு 26 லட்சம் கோடி ரூபாய். பொருளாதார மந்த நிலையிலும், முதலீட்டாளர்கள் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்து வருவது சந்தைக்கு சாதகமான விஷயமாகும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com