நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமே : பாரத ரிசர்வ் வங்கி – பொருளாதார மந்தநிலை
Unchanged in REPO rate, Cut in GDP growth – RBI Policy – Economy Slowdown
வியாழக்கிழமை (05-12-2019) அன்று நடைபெற்ற மத்திய நிதி கொள்கை குழு கூட்டத்தின்(Monetary Policy Committee) முடிவில் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை என பாரத ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஐந்து காலாண்டுகளாக குறைக்கப்பட்டு வந்த ரெப்போ வட்டி விகிதம் இம்முறை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
நடப்பில் இதுவரை 135 அடிப்படை புள்ளிகள் வரை ரெப்போ விகிதம்(REPO Rate) குறைக்கப்பட்டுள்ளது. கடந்த காலாண்டில் நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், பாரத ரிசர்வ் வங்கியின் குறுகிய கால இலக்கான 4 சதவீதத்தை தாண்டி 4.62 சதவீதமாக இருந்தது.
தற்போது காணப்படும் விலை உயர்வு மேலும் அதிகரிக்கும் சூழ்நிலையில், டிசம்பர் காலத்திற்கு 5 சதவீத பணவீக்கத்தை கடக்கலாம். இவ்வாறான நிலையில், பாரத ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை குறைத்திருந்தால் பணவீக்கத்திற்கு குறைவான வட்டி விகிதம் காணப்படலாம்.
ஆனால் ரெப்போ வட்டி விகிதத்தில் சந்தை எதிர்பார்த்த 25 புள்ளிகள் குறைப்பு இம்முறை நடக்கவில்லை. மாறாக ஏற்கனவே இருந்த 5.15 சதவீத ரெப்போ விகிதம் தொடரும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. வருங்காலங்களில் ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு இருக்கலாம் எனவும் பாரத ரிசர்வ் வங்கி சுட்டி காட்டியுள்ளது.
நிதி கொள்கை குழு கூட்டத்தில் சொல்லப்பட்ட தகவல் : ரெப்போ விகிதம் 5.15 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 4.90 சதவீதமாகவும் தொடரும். 2019-20ம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டில் நாட்டின் பணவீக்கம்(Inflation) 4.70 % – 5.10 % என்ற நிலையில் இருக்கலாம். நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது முன்னர் 6.10 சதவீதமாக சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த சில காலாண்டுகளாக குறைந்து வருவதும், அதே வேளையில் சமீப கால விலைவாசி உயர்வும், வேலைவாய்ப்பின்மை விகிதமும் பொருளாதார மந்தநிலையை அதிகப்படுத்துகிறது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை