ஒரு வருடத்தில் 23 சதவீத லாபத்தை தந்துள்ள தங்கம் – இப்போது என்ன செய்யலாம் ?
23 Percent hike in a year – Gold Price in INR
நமது நாட்டில் கூட்டு குடும்பத்தின் மீது நம்பிக்கை உள்ளதோ இல்லையோ, ஆனால் தங்கத்தின் மீதான நம்பிக்கை பெரும்பாலானவர்களிடம் அதிகமாக உள்ளது. எந்தவொரு முதலீட்டு சாதனத்தையும் விட, தங்கம் பாதுகாப்பானதாகவும் மற்றும் அதிக வருவாய் தரக்கூடிய முதலீடாகவும் நம் நாட்டில் பார்க்கப்படுகிறது. மேலும், அது குடும்பத்தின் கவரமாகவும் காணப்படுகிறது எனலாம்.
10 கிராம் அளவை கொண்ட 24 காரட் சுத்த தங்கம் (99.9 சதவீதம்), சென்னை விலை அடிப்படையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ரூ. 31,970 (10 கிராம்) என்ற விலையில் வர்த்தகமானது. தற்போது 10 கிராம் சுத்த தங்கத்தின் விலை 39,500 ரூபாய் விலையில் வர்த்தகமாகி வருகிறது. இது சுமார் 23 சதவீத வருவாய் வளர்ச்சி எனலாம்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கடந்த செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் இதன் விலை அதிகபட்சமாக 40,450 ரூபாய் என்ற விலையில் வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது. நடப்பில் தங்கத்தின் விலை(Gold Price) ஒரு கிராம் 3,416 ரூபாய் என்ற விலையில் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது. அவுன்ஸ் அடிப்படையில் 1,06,268 ரூபாய் என்ற விலையில் காணப்படுகிறது.
பொதுவாக பங்குச்சந்தை இறக்கத்தில் காணும் போது, தங்கத்தின் மதிப்பு அதிகரிக்கும். இது போல, உலகளவில் காணப்படும் பொருளாதார மந்தநிலை, போர் வரும் சூழல் மற்றும் டாலர் மதிப்பு வீழ்ச்சியடையும் போது தங்கத்தின் தேவை அதிகமாக இருக்கும். இதன் காரணமாகவும் தங்கத்தின் விலையில் மாற்றம் அமையும்.
உலகளவில் வர்த்தகமாகும் தங்கம் ஒரு நல்ல முதலீட்டு சாதனம் என்றாலும், நாம் நினைப்பது போல, அது பாதுகாப்பான சாதனம் என நாம் சொல்ல முடியாது. காரணம், தங்கம் என்பது பங்குச்சந்தையை ஒட்டிய ரிஸ்க் தன்மையை எப்போதும் கொண்டிருக்கும். பங்குச்சந்தை போல அதிக ஏற்ற-இறக்கங்கள் இல்லையெனினும், மிதமான ஏற்ற-இறக்கங்களுக்கு உட்பட்டது தான் தங்கத்தின் முதலீடு. இதன் காரணமாக தான் அதன் விலை கடந்த 50 வருடங்களில் அதிகரித்துள்ளது எனலாம்.
இன்று அதிகளவிலான தங்கத்தினை கையிருப்பாக வைத்திருக்கும் நாடு, அமெரிக்கா. இதற்கான காரணமும் உண்டு, உலகளவில் தேவைப்படும் தங்கத்தின் வர்த்தகத்தை நிர்வகிக்கவும், டாலர் மதிப்பு வீழ்ச்சியடைந்தாலும் அதனை சரிப்படுத்தவே தங்கம் உதவிகரமாக உள்ளது. எப்போதெல்லாம் டாலர் மதிப்பு உயர்கிறதோ, அப்போது தங்கத்தின் தேவை குறையும். ஏனெனில், பெரும்பாலான நாடுகள் அந்நிய செலவாணியை (டாலர்) அதிகளவில் கையிருப்பாக கொண்டிருப்பார்கள். இதன் காரணமாக தங்கத்தின் விலை இறங்கும்.
இதற்கு மாற்றாக, எப்போதெல்லாம் டாலர் மதிப்பு வீழ்ச்சியடைகிறதோ, தங்கத்தின் மீதான தேவை அதிகரிக்கும். இதன் காரணமாக தங்கத்தின் விலையில் மாற்றம் இருக்கும். சீன-அமெரிக்க வர்த்தக போர் என்றால், டாலரின் மீதான நம்பிக்கை குறைந்து, தங்கத்தின் மீது ஈடுபாடு இருக்கும். ஆக, பெரும்பாலான நாடுகள் தங்கத்தை ஒரு இழப்பு காப்பு வணிகமாக பயன்படுத்தி வருகிறது.
நம் நாட்டில் தங்கத்தின் விலை ஏறுவதற்கான காரணம் பொதுவாக நாம் டாலர் மதிப்பின் அடிப்படையில் இறக்குமதி செய்வதால் தான். எப்படியிருந்தாலும், நமக்கு கிடைக்கப்பெறும் தங்கம் சற்று விலை அதிகமானதே. டாலர் மதிப்பு அதிகரித்தாலும், இல்லையெனில் டாலர் மதிப்பு வீழ்ச்சி பெற்றாலும் நாம் தங்கத்தை அதிக விலை கொடுத்து தான் வாங்க வேண்டும்.
தங்கத்தின் விலை அதிகரித்து வருவது சரி தான். நாம் அதனை நல்ல ஒரு முதலீடாக மாற்றுவது எப்படி ?
- தங்க ஆபரணத்தை வாங்கி கொண்டு, அதனை முதலீடு என்று நாம் சொல்ல கூடாது. தங்கத்தின் விலையை காட்டிலும், நாம் கூடுதலாக சில செலவுகளை(செய்கூலி, சேதாரம், வரி மற்றும் இதர செலவுகள்) ஏற்க வேண்டியிருக்கும். நாம் அதனை விற்கும் போது, நமக்கு சந்தையில் வர்த்தகமாகும் விலை முழுவதுமாக கிடைக்கும் என சொல்ல முடியாது. நகை அடமான கடைகள் வருங்காலத்தில் அரசு மூலம் ஒழுங்குமுறைப்படுத்தப்படும் நிலை உள்ளது. இதனால், நாம் அடமானம் வைத்தாலும் நமக்கு சரியான விலையில் கடன் கிடைக்குமா என்பது சந்தேகமே.
- தங்கத்தை ஆபரணமாக கொண்டிருப்பதில் பாதுகாப்பு இல்லை. தங்கத்தை முதலீடாக கொண்டிருக்க தங்க பத்திர திட்டங்கள்(Gold Bond Scheme), கோல்டு இ.டி.எப்.(Gold ETF) மற்றும் கோல்டு பண்டு(Gold Funds) போன்றவற்றில் முதலீட்டை மேற்கொள்ளலாம். இதற்கான செலவினங்களும் மிக குறைவு. பின்னாளில் வர்த்தகத்தின் விலையில் பணமாக அல்லது நகையாக பெறலாம்.
- பொருளாதார மந்தநிலை காலங்களில் தங்கத்தில் சிறிய அளவில் முதலீடு செய்யலாம். ஆபரணங்களை வாங்கி வைத்து கொண்டு முதலீடு என சொல்லாதீர்கள். உங்களுக்கு நகைகளாக வேண்டுமானால், விருப்பத்திற்கு ஏற்றாற் போல் வாங்கி கொள்ளுங்கள். அதே வேளையில் அதனை ஒரு செலவாக மதிப்பிடுங்கள். (உங்கள் சொந்த வீட்டை போல !)
- முதலீட்டு பரவலாக்கம்(Asset Allocation) செய்யும் போது, தங்கத்திலும் முதலீடு செய்யுங்கள். உங்கள் முதலீட்டில் வங்கி டெபாசிட்டுகள், பங்குகள், பரஸ்பர நிதிகள், நிலம் மற்றும் தங்கத்திற்கும் பங்களிப்பு இருக்கட்டும். ஒரே முதலீட்டு சாதனத்தில் முழு பணத்தையும் முதலீடு செய்ய வேண்டாம்.
- தங்கத்தை ஒரு இழப்பு காப்பாகவும்(Hedge), பணவீக்கத்தை சரிக்கட்டவும் பயன்படுத்துங்கள்.
கடந்த மாதத்தில் நாட்டின் தங்க இறக்குமதி அளவு 5 மாத உச்சத்தில் உள்ளது. இருப்பினும், கடந்த வருடத்தை இதே காலத்துடன் ஒப்பிடும் போது, சொல்லப்பட்ட இறக்குமதி அளவு குறைவே. மத்திய அரசு கடந்த சில வருடங்களாக தங்கத்தின் இறக்குமதி அளவை குறைத்து வருகிறது. வர்த்தக சுமையை குறைப்பதற்கான நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை