நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த புள்ளிவிவரங்கள் இன்று வெளியீடு
India’s GDP numbers will be released Today – September Quarter 2019
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சார்ந்த பொருளாதார வளர்ச்சி குறித்த புள்ளிவிவரங்கள் இன்று வெளியாக உள்ளது. கடந்த ஜூலை-செப்டம்பர் காலத்திற்கான பொருளாதார வளர்ச்சி குறியீடு தான் தற்போது வெளிவர உள்ளது.
கடந்த முறை மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) 5.8 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைந்தது குறிப்பிடத்தக்கது. இம்முறை நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்திற்கு கீழ் செல்லும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பலவீனமான தேவை நுகர்வால் கடந்த சில காலாண்டுகளாக பொருளாதார வளர்ச்சி இறங்குமுகத்தில் சென்று கொண்டிருக்கிறது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பொருளாதார மந்தநிலையை சரி செய்ய மத்திய நிதி அமைச்சகத்தின் சார்பில் சமீப காலமாக சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றைய புள்ளிவிவரம் சந்தையை குறுகிய காலத்தில் பாதிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இருப்பினும், கடந்த சில வாரங்களாக இந்திய சந்தையில் அந்நிய முதலீட்டாளர்களின் முதலீட்டு கை ஓங்கி உள்ளது. கடந்த 68 வருடங்களில் நாட்டின் சராசரி பொருளாதார வளர்ச்சி 6.20 சதவீதம் என்ற அளவில் உள்ளது. அதிகபட்சமாக கடந்த 2010ம் ஆண்டில் 11.40 சதவீதமும், குறைந்த அளவாக கடந்த 1979ம் ஆண்டின் நான்காம் காலாண்டில் (-5.20) சதவீதம் என்ற அளவிலும் பொருளாதார வளர்ச்சி இருந்துள்ளது.
நடப்பு பொருளாதார வளர்ச்சி குறைவுக்கு காரணமாக சொல்லப்படுவது உற்பத்தி மற்றும் கட்டுமான துறையில் ஏற்பட்டுள்ள சுணக்கம், நுகர்வு தன்மை குறைவு ஆகியவையே. பொருளாதார வளர்ச்சி குறைவாக இருக்கக்கூடும் என்ற நிகழ்வால், மீண்டும் ஒரு முறை வட்டி விகித குறைப்பு நடவடிக்கை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்றைய கடன் சந்தையிலும், அரசு கடன் பத்திரங்களுக்கான தேவையும் அதிகமாக இருந்தது. பொதுவாக வங்கியில் வட்டி விகிதம் குறையும் போது, கடன் பத்திரங்களின் தேவை அதிகரிக்க கூடும். இதன் காரணமாக கடன் பத்திரங்களின்(Bond yield) வட்டி வருவாய் சற்று அதிகமாக இருக்கும்.
மத்திய ரிசர்வ் வங்கி(RBI) இதுவரை 135 அடிப்படை புள்ளிகள் வரை ரெப்போ விகிதத்தை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் 2025ம் ஆண்டில் நாட்டின் பொருளாதார மதிப்பு 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக மாறுவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஊக்குவிப்பு தற்போது சேவை துறையால் மட்டுமே சாத்தியம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார ஊக்குவிப்பில் உற்பத்தி துறையின் பங்கு கடந்த சில வருடங்களாக வெகுவாக குறைந்துள்ளது எனலாம். விவசாயமும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெறவில்லை. நுகர்வு தேவையை அதிகமாக கொண்டிருக்கும் நம் நாடு சேவை துறையை மட்டுமே தற்போது நம்பியுள்ளது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை