இந்திய பங்குச்சந்தை எங்கே சென்று கொண்டிருக்கிறது ? – முதலீட்டாளரின் ஆவல்
An Investor’s interest about the current Indian Stock Market
நடப்பு வாரத்தின் வர்த்தகத்தில் இந்திய பங்குச்சந்தை தனது புதிய உச்சத்தை அடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையின் நிப்டி குறியீடு(Nifty50) 12,100 புள்ளிகள் என்ற நிலையை தாண்டி வர்த்தகமானது. இது போல மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ்(BSE Sensex) குறியீடும் 41,000 புள்ளிகளை கடந்து வர்த்தகமாகி கொண்டிருக்கிறது.
நவம்பர் மாதத்தின் நேற்றைய புதன் கிழமை (27-11-2019) வரை அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் வாங்கி குவித்த பங்குகளின் மதிப்பு சுமார் 13,800 கோடி ரூபாய். அதற்கு மாறாக உள்ளூர் முதலீட்டாளர்கள் சுமார் 8,700 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளனர்.
பொதுவாக பங்குச்சந்தை இறக்கத்தில் உள்ளூர் முதலீட்டாளர்கள் பங்கேற்பதும், அந்நிய முதலீட்டாளர்கள் சந்தையின் உச்சத்தில் முதலீடு செய்வதும், சந்தையின் இயல்பு. இதன் காரணமாகவே உள்ளூர் முதலீட்டாளர்கள் தங்கள் லாபங்களை சந்தையின் உச்சத்தில் பதிவு செய்வதுண்டு. இந்திய பங்குச்சந்தையின் புதிய ஏற்றத்திற்கு துணையாக பரஸ்பர நிதி திட்டங்களும்(Mutual Funds) ஊக்குவிக்கின்றன.
உண்மையில், தற்போது பொருளாதாரம் மந்த நிலையில் இருப்பது நாம் அறிந்ததே. இருப்பினும் சந்தை இதற்கு மாறாக ஏற்றம் பெற்று செல்கிறதே என நமது கேள்வி அமையலாம். சந்தையின் போக்கை கணிப்பது யாராலும் முடியாது. ஆனால் பொருளாதார புள்ளி விவரங்களை நம்மால் கணிக்க இயலும்.
நடப்பு 2019-20ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு முடிவுகள் பெரும்பாலான நிறுவனங்களிடம் இருந்து வந்துள்ளன. அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட நிறுவனங்களுக்கான வரி குறைப்பு(Corporate Tax Cut), இம்முறை நிறுவனங்களின் லாபத்திற்கு உதவியுள்ளது எனலாம். இரண்டாம் காலாண்டில் பெரும்பாலான நிறுவனங்களின் லாப வளர்ச்சி, வரி குறைப்பு நடவடிக்கையால் வந்தவை தான். இல்லையெனில் அவை நஷ்டத்தில் சென்றிருக்க கூடும்.
இந்த ஒரு நிலையே, இந்திய பங்குச்சந்தையை தாங்கி பிடித்துள்ளது. ஆனால் இந்த வரி குறைப்பு என்பது ஒரு நிரந்தரமான தீர்வாக அமையாது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைவு(GDP), வட்டி விகிதம் குறைவாக காணப்படுவது, வேலைவாய்ப்பின்மை விகிதம் சாதகமாக இல்லாதது என பல குறைகள் காணப்பட்டாலும், நடப்பு நிலைமை சரி செய்யப்படும் என்ற ஆவல் தான் சந்தையை நகர்த்தி கொண்டிருக்கிறது.
பொருளாதார வளர்ச்சி எப்போதெல்லாம் குறைவாக காணப்படுகிறதோ, அப்போது சந்தையிலும் பங்குகளின் விலை மலிவாக கிடைக்கப்பெறுகிறது. தற்போதைய நிலையில் சந்தை புதிய உச்சத்தை பெற்றிருந்தாலும், இன்னும் மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப்(Small Cap) பிரிவுகளில் நல்ல நிறுவன பங்குகள் தள்ளுபடி விலையில் காணப்படுகிறது. கடந்த 2007-2008 காலங்களில் காணப்பட்ட சந்தை வீழ்ச்சி போல், தற்போது ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமில்லை எனலாம். அதே வேளையில் தற்போதைய நிலைமை உடனடியாக தீர்க்கப்படும் என நாம் எதிர்பார்க்க வில்லை.
நாடுகளிடையே ஏற்பட்டுள்ள வர்த்தக போர் வரும் நாட்களில் மேலும் வலுவடையலாம். உலகளவில் மாற்றம் வேகமாக ஏற்பட்டு வரும் சூழ்நிலையில், சில பகுதிகளில் அத்தியாவசிய தேவைக்கும் போராட வேண்டியுள்ளது. வரும் காலங்களில் இந்த நிலைமை சரி செய்யப்பட்ட வாய்ப்புள்ளது என்ற நம்பிக்கையில் நாம் நகரலாம்.
தற்போதைய நிலையில், முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியது – பங்குகளில் அதிகபட்ச லாபங்களை பதிவு செய்திருந்தால், அதனை விற்று லாபம் பார்க்கலாம். இல்லையெனில் லாபம் பார்த்த தொகையை கொண்டு, மலிவான விலையில் இருக்கும் நல்ல நிறுவன பங்குகளை கண்டறியலாம். நடப்பு சந்தையில் லாபம் ஈட்டவில்லை என்பவர்கள் கவலையடைய வேண்டாம். கையிருப்பு தொகை இருக்கும்பட்சத்தில், நல்ல பங்குகளை குறைவான விலையில் வாங்க முயற்சி செய்யுங்கள்.
சந்தை உச்சத்தில் உள்ளது, நான் ஏன் முதலீடு செய்ய வேண்டும் என எண்ணுபவர்கள், பரஸ்பர நிதி முதலீடுகளை தேர்ந்தெடுத்து தொடர் முதலீட்டை மேற்கொள்ளலாம். சந்தையை கணிப்பது அவ்வளவு எளிதல்ல. பொருளாதார புள்ளிவிவரங்களை அறிந்து கடந்து செல்லலாம்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை