குழந்தைகளுக்கான நிதி திட்டமிடல் – சிறந்த ஐந்து பண்டுகள்
Best 5 Funds to invest in 2020 – Children’s Gift Mutual Funds
எந்தவொரு முதலீட்டுக்கும் நிதி இலக்குகளை நிர்ணயிப்பது அவசியம். நமக்கான இலக்குகள் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால இலக்குகளாக இருக்கலாம். இருப்பினும், அவற்றுக்கான பெயரை கொண்டிருக்கும் போது, அதன் முதலீட்டு தன்மை நமக்கு நினைவூட்டுவதாக இருக்கும்.
உதாரணமாக ஓய்வு கால நிதி(Retirement Plan), குழந்தைக்கான கல்வி(Child Education), வீடு வாங்குதல், அவசர கால நிதி(Emergency Fund) என பல நிதி இலக்குகளுக்கு நாம் பெயரிடுவது சிறந்தது. இன்றைய காலத்தில் கல்வி மற்றும் மருத்துவ செலவிற்கான மதிப்பை நம்மால் சரியான நிலையில் கணிக்க முடியாது. எனவே தான் மருத்துவ செலவுகளை சமாளிக்க, குடும்பத்திற்கான மருத்துவ காப்பீட்டை(Health Insurance) பெறும் போது, அது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பயன் தரும்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
குழந்தைக்கான கல்வி எனும் போது, நம்மில் பெரும்பாலானவர்கள் அதனை திட்டமிட தவறுகிறோம். குழந்தைகளின் பள்ளிக்கால படிப்பிற்கு அதிக செலவு செய்யும் நாம் மேற்படிப்பிற்காக செலவுகளை முன்னரே திட்டமிட வேண்டும். அப்போது தான் எதிர்காலத்தில் நமது வருவாய்க்கான பட்ஜெட்டில் சிரமம் இருக்காது. குழந்தைகளின் மேற்படிப்புக்காக திட்டமிடும் போது, அது ஒரு நீண்ட கால இலக்கு என்பதை நம் மனதில் நிலை நிறுத்த வேண்டும். உதாரணமாக குழந்தையின் வயது ஒன்று என்றால், 16 வருடங்களுக்கு பின்பு தான் குழந்தைக்கான மேற்படிப்பு செலவு தேவைப்படுகிறது. எனவே அதனை மனதில் கொண்டு, பணவீக்கத்தை தாண்டிய வருவாயை பெறுவது நல்லது.
வங்கி மற்றும் அஞ்சலக சேமிப்பு பாதுகாப்பானது என நாம் சொன்னாலும், நீண்ட கால அடிப்படையில் பணவீக்கத்தை தாண்டிய வருவாயை நம்மால் பெற முடியாது. கல்வி செலவை பொறுத்தவரை பணவீக்கம் ஒவ்வொரு வருடமும் ஏறிக்கொண்டு தான் செல்கிறது. எனவே அதற்கேற்றாற் போல், பரஸ்பர நிதிகள் வழங்கும் திட்டங்களை குழந்தைகளின் கல்வி சேமிப்புக்காக முயற்சிக்கலாம்.
இன்று நம் நாட்டில் 40க்கும் மேற்பட்ட பரஸ்பர நிதி நிறுவனங்களும், அவற்றில் காலத்திற்கு தகுந்தாற் போல பல திட்டங்களும் உள்ளது. பொதுவாக 5 வருடங்களுக்கு மேற்பட்ட நிதி இலக்குகளுக்கு பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில்(Equity Mutual Funds) முதலீடு செய்யலாம். ஓய்வு பெற்றவர்கள் தங்களின் ரிஸ்க் தன்மையை கொண்டு, கடன் பண்டுகள்(Debt Funds) மற்றும் கலப்பின பண்டுகளை(Hybrid Funds) தேர்ந்தெடுக்கலாம். குழந்தைகளின் மேற்படிப்பு செலவுக்கான திட்டத்தை அவர்களின் 5 வயதுக்குள் முதலீடு செய்ய துவங்குவது சிறப்பு. அதற்கு மேலான வயதுள்ள குழந்தைகளை கொண்டிருப்பவர்களும், காலத்திற்கு ஏற்றாற் போல் முதலீடு செய்யலாம்.
குழந்தைகளுக்கான மேற்படிப்பு திட்டமிடலுக்கு சிறந்த 5 பண்டுகளை நாம் இங்கே கொடுத்துள்ளோம். அவை,
- HDFC Children’s Gift Fund
- ICICI Prudential Child Care Fund
- UTI Children’s Career Fund
- Axis Children’s Gift Fund
- Aditya Birla Sun Life Bal Bhavisya Yojna
மேலே சொன்ன திட்டங்கள் பரஸ்பர நிதி நிறுவனங்கள் வழங்கும் குழந்தைகளுக்கான சிறப்பு பண்டுகளாகும். இது ஒரு கலப்பின பரஸ்பர நிதி திட்டமாகும்(Hyrbrid Funds). பங்கு மற்றும் கடன் சார்ந்த இரு வகை தன்மையிலும் முதலீடு செய்யப்படுகிறது. இது போன்ற திட்டங்களில் பொதுவாக பங்கு முதலீட்டின் பங்களிப்பு 60 – 70 சதவீதமாக இருக்கும். மீதமிருக்கும் தொகை கடன் பண்டுகளில் முதலீடு செய்யப்படும்.
குழந்தைகளுக்கான பண்டுகள் 5 வருட லாக்-இன்(Lock-in Period) வசதியை கொண்டது. அதாவது இந்த பண்டுகளில் முதலீடு செய்பவர்கள், முதலீடு செய்த நாளிலிருந்து 5 வருடம் முடியும் வரை பணத்தை திரும்ப பெற முடியாது. இது தான் திட்டத்தின் சிறப்பம்சமாகவும் பார்க்கப்படுகிறது. இருப்பினும், குழந்தை 18 வயது அடைந்தவுடன் பணத்தை பெறும் வசதியும் உண்டு. பொதுவாக செல்வ மகள் திட்டத்தில் 21 வருட முடிவில் தான் பணத்தை பெற முடியும். அப்படியிருக்கையில், இதன் லாக்-இன் காலம் குறைவே. ஐந்து வருட காலத்திற்குள் திட்டத்தை முடித்து கொள்ள வேண்டுமானால், வெளியேறும் கட்டணம் வசூலிக்கப்படும். இது போன்ற வசதியால் குழந்தைக்கான இலக்குகளில் தவறாமல் முதலீடு செய்வதும், பெற்றோருக்கு முதலீட்டு ஒழுக்கத்தையும் ஏற்படுத்தும்.
திட்டத்தின் மற்றொரு சிறப்பம்சமாக, குழந்தையின் பெயரில் மட்டுமே(Name of Minor Child) முதலீடு செய்யப்படும். முதலீடு செய்யும் நபர் கொடையாளி(Donor), பாதுகாவலர் அல்லது பெற்றோராக இருக்கலாம். இந்த திட்டத்தில் மட்டுமே குழந்தையின் பெயரில் யார் வேண்டுமானாலும் முதலீட்டை மேற்கொள்ளலாம். குழந்தையின் தாத்தா, பாட்டி, மாமா, பெற்றோரின் நண்பர்கள், மற்ற உறவினர்கள் என முதலீடு செய்யும் நபர்கள் இருக்கலாம்.
திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக மாதாமாதம் 500 ரூபாயை முதலீடு செய்யலாம். எனினும், குழந்தையின் மேற்படிப்பு செலவுகளை(எதிர்கால செலவுகள்) கணக்கிட்டு அதற்கேற்றாற் போல் முதலீட்டு தொகையை அதிகரித்து முதலீடு செய்வது நல்லது. இது ஒரு நீண்ட கால திட்டம் என்பதால், பணவீக்கத்தை தாண்டிய வருவாயை பெறலாம். இந்த திட்டத்தை குழந்தைகளின் கல்விக்காக மட்டுமில்லாமல், அவர்களின் எதிர்கால திருமண திட்டமிடலுக்கும், தொழில் செய்ய தேவையான முதலீட்டிற்கும் பயன்படுத்தலாம்.
பரஸ்பர நிதி நிறுவனங்களில் காணப்படும் மற்ற பண்டுகளை தேர்ந்தெடுப்பதில் சிரமம் இருப்பவர்கள், இந்த பண்டுகளை தங்கள் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக தேர்ந்தெடுக்கலாம். நீண்ட காலத்தில் நல்ல வருவாயை பெறுவது மட்டுமில்லாமல், பெற்றோருக்கான மகிழ்ச்சியும் கிட்டும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை