மியூச்சுவல் பண்ட் துறையில் இறங்கவிருக்கும் முத்தூட் பைனான்ஸ்
Muthoot Finance to entering into Mutual Fund Industry – Acquisition of IDBI’s Mutual Fund
சந்தை மதிப்பில் 27,500 கோடி ரூபாயை கொண்டுள்ள முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் நிதிச்சேவை, கல்வி, மருத்துவம், வீட்டு மனை, அந்நிய செலவாணி, காப்பீடு என பல சேவைகளில் தொழில் செய்து வருகிறது. நகை கடனில் பிரபலமடைந்த இந்நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஆறு வருடங்களில் பத்து மடங்காக பெருகியுள்ளது.
கடனில் தத்தளித்து வந்த ஐ.டி.பி.ஐ. வங்கியை(IDBI) பொது துறை காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சி.(LIC India) கடந்த சில மாதங்களுக்கு முன்பு கையகப்படுத்தியது. எல்.ஐ.சி. நிறுவனம் ஏற்கனவே மியூச்சுவல் பண்ட் (பரஸ்பர நிதி) துறையில் உள்ளதால், தனது சேவையை ஐ.டி.பி.ஐ. வங்கி கிளைகளில் வழங்க முடிவு செய்திருந்தது. இதனையடுத்து ஐ.டி.பி.ஐ. வங்கியின் கீழ் இருந்த பரஸ்பர நிதி தொழிலை விற்கும் முடிவையும் எல்.ஐ.சி. நிறுவனம் எடுத்திருந்தது.
இந்நிலையில் ஐ.டி.பி.ஐ. வங்கியின் மியூச்சுவல் பண்ட் தொழிலை முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் வாங்க உள்ளது. இதன் மதிப்பு சுமார் 215 கோடி ரூபாய் எனவும், இந்த கையகப்படுத்தல் வரும் 2020ம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தின் முடிவில் நிறைவு பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஐ.டி.பி.ஐ. பரஸ்பர நிதி(Mutual Fund AMC) சேவையில் மொத்தம் 22 திட்டங்கள் மூலமாக முதலீட்டு சேவைகள் வழங்கப்பட்டு வருவதாக சொல்லப்பட்டுள்ளது. ஐ.டி.பி.ஐ. மியூச்சுவல் பண்ட் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு சுமார் 5,300 கோடி ரூபாய்.
சொல்லப்பட்ட கையகப்படுத்தல் முடிந்தவுடன், முத்தூட் பைனான்ஸ் மற்றுமொரு சேவையில் களம் இறங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே பரஸ்பர நிதி துறையில் இதன் சேவை சிறிய அளவில் இருந்தாலும், இனி பரஸ்பர நிதி சேவையை முழுவதுமாக வழங்குவதிலும், அதன் சொத்தை நிர்வகிப்பதிலும் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு அமையலாம்.
தற்போதைய நிலையில் இந்திய பரஸ்பர நிதி துறையின் சொத்து மதிப்பு 26 லட்சம் கோடி ரூபாய். பொருளாதார மந்த நிலையிலும், முதலீட்டாளர்கள் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்து வருவது சந்தைக்கு சாதகமான விஷயமாகும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை