நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.5 சதவீதம் – செப்டம்பர் 2019
India’s GDP growth to 4.5 Percent in September 2019 Quarter
நடப்பு 2019-20ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாக குறைந்துள்ளது. சொல்லப்பட்ட பொருளாதார வளர்ச்சி ஜூலை – செப்டம்பர் காலத்திற்கானது. இதற்கு முந்தைய காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது சொல்லப்பட்டுள்ள வளர்ச்சி குறைவு சந்தை எதிர்பார்த்த 4.7 சதவீத வளர்ச்சி என்ற அளவை காட்டிலும் குறைவாக உள்ளது. உற்பத்தியில் ஏற்பட்ட சுணக்கம், முதலீட்டை பெருமளவு ஈர்க்காதது மற்றும் ஏற்றுமதியின் அளவு குறைந்ததும் பொருளாதார வளர்ச்சி குறியீட்டை பாதித்துள்ளது.
கடந்த இரண்டு வருடங்களாக காணப்படும் உலகளாவிய பொருளாதார மந்த நிலையால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்ச்சியாக ஐந்து காலாண்டுகளாக வீழ்ச்சியடைந்துள்ளது. மத்திய அரசு சார்பில் பொருளாதாரத்தை ஊக்குவிக்க பல மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலும், அவை வந்தடைந்த காலம் தாமதமாக இருந்துள்ளது.
இதனையடுத்து வரவிருக்கும் காலங்களிலும் வங்கிகளுக்கான வட்டி விகிதம்(Repo Rate) குறைக்கப்பட வாய்ப்புள்ளது. பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி.(GST) அமலுக்கு பின், எதிர்பார்த்த முதலீட்டு வரவு மற்றும் நுகர்வு தன்மை குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது. இருப்பினும், தற்போதைய வளர்ச்சி குறைவு ஒரு தற்காலிகமானதாகவே சொல்லப்படுகிறது.
2018ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் 8 சதவீதமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி(GDP) தற்போது தொடர் வேகமாக குறைந்து 4.5 சதவீதம் என்ற நிலையில் உள்ளது. அக்டோபர் – டிசம்பர் 2019ம் காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகள் ஜனவரி 2020ல் வெளிவரும். இதனை அடிப்படையாக வைத்தே, பொருளாதார மந்த நிலையா அல்லது வீழ்ச்சியை சந்தித்து வருகிறதா என்பது தெளிவாகும்.
ஏற்கனவே அரசு சார்பில் நிறுவனங்களுக்கான வரி குறைப்பு, வாகன துறைக்கான ஊக்குவிப்பு, வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு முதலீடு என மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளது. பாரத ரிசர்வ் வங்கியும் தனது வட்டி விகித குறைப்பை தொடர்ச்சியாக குறைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
நிதி துறை, கட்டுமானம், வர்த்தகம், போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பில் போதுமான வளர்ச்சி எட்டப்படவில்லை. அதே வேளையில் பாதுகாப்பு மற்றும் பொது நிர்வாகத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை செப்டம்பர் காலாண்டில் பெற்றுள்ளது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை