இனி ஏ.டி.எம். மூலம் பணம் எடுக்க OTP அவசியம், நாளை முதல் அமல் – பாரத ஸ்டேட் வங்கி

இனி ஏ.டி.எம். மூலம் பணம் எடுக்க OTP அவசியம், நாளை முதல் அமல் – பாரத ஸ்டேட் வங்கி 

OTP based cash withdrawal to all SBI ATMs from 18th September, 2020

நாடு முழுவதும் நாளை முதல் OTP முறையிலான பண பரிவர்த்தனை(Withdrawal) அமலுக்கு வருவதாக பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை ஏ.டி.எம். வாயிலாக எடுக்கும் போது, பாதுகாப்பு சார்ந்த சில சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது. வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். கடவுச்சொல்(ATM PIN) கசிந்து விட்டால், அவரின் கணக்கில் உள்ள பணத்தை திருடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இதனை தடுக்கும் வகையில் வாடிக்கையாளர்களின் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் கூடுதல் பாதுகாப்பு அம்சத்தை பாரத ஸ்டேட் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. OTP முறையிலான இந்த நடைமுறை ஏற்கனவே பெரும்பாலான வங்கிகளில் இருந்து வந்தாலும், தற்போது 24 மணிநேர சேவையாக இதனை எஸ்.பி.ஐ. மாற்றியுள்ளது.

இந்த சேவை நாடு முழுவதும் உள்ள அனைத்து பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையங்களுக்கும் பொருந்தும். எஸ்.பி.ஐ.(State Bank of India) வங்கி வாடிக்கையாளர்கள் ஏதேனும் ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையத்தில் ஒரு முறை பரிமாற்றமாக ரூ.10,000 மற்றும் அதற்கு மேற்பட்ட தொகையை எடுக்கும் நிலையில், கூடுதலாக அவருடைய கைபேசி எண்ணுக்கு வரும் OTP எண்களையும் பதிவிட(Debit Card PIN போக) வேண்டும்.

சொல்லப்பட்ட சேவையின் மூலம் ஏ.டி.எம். மோசடி மற்றும் பண பரிவர்த்தனை அட்டையை தவறாக பயன்படுத்துதல் தடுக்கப்படும் என பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. முன்னர் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே இருந்த பாதுகாப்பு சேவை, நாளை (18-09-2020) முதல் 24 மணிநேர சேவையாக அனைத்து எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையங்களுக்கு வர உள்ளது.

அதே வேளையில் எஸ்.பி.ஐ. அல்லாத மற்ற வங்கி ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்கும் போது, இந்த OTP முறை வேலை செய்யாது. புதிய சேவை, வங்கி வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாக வங்கி நிர்வாகம் கூறியுள்ளது. எனவே இனி பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம். பரிவர்த்தனையின் போது, வங்கி கணக்கில் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணை வைத்திருப்பது அவசியமாகிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

உங்கள் பணத்தை பல மடங்காக பெருக்குவது எப்படி ?

உங்கள் பணத்தை பல மடங்காக பெருக்குவது எப்படி ?

How to multiple your money in Easy steps ?

உலகின் எட்டாவது அதிசயம் கூட்டு வட்டி(Power of Compounding) என்றால், உங்களது முதலீட்டை இரட்டிப்பாக்குவது என்பது இன்று ஏமாற்று வேலையாக மாறியுள்ளது. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை பல மடங்காக மாற்றி தருகிறேன் என சில கும்பல்கள் இன்று உலகம் முழுவதும் திரிந்து கொண்டு தான் இருக்கிறது.

போன்சி(Ponzi) என சொல்லப்பட்ட ஏமாற்று திட்டங்களும் அவ்வப்போது வந்தவண்ணம் தான் உள்ளது. நம்மில் பலரும் அவற்றில் பணத்தை கட்டி விட்டு, பின்பு தான் ஏமாற்றப்பட்டதாக புலம்புவதும் அடிக்கடி நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

அரசு சார்பில் எச்சரிக்கையும், விழிப்புணர்வு செய்தியும் வந்து கொண்டிருந்தாலும் நமக்கு நாமே கவனமுடன் இருப்பது அவசியமாகும். “உங்கள் பணத்தை சில மாதங்களில் இரட்டிப்பாக தருகிறோம், எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்யுங்கள் ‘ என்ற விளம்பரத்தை பார்த்திருப்போம். எப்படி இரட்டிப்பாக்க முடியும் என கேட்டால், பங்குச்சந்தையில் போடுகிறோம், டாலர்களில் வர்த்தகம் புரிகிறோம், தங்கத்தை வாங்கி வைக்கிறோம் அல்லது வீட்டுமனையில் முதலீடு செய்கிறோம் என்பார்கள்.

உண்மையில் அப்படி ஒரு எளிய வாய்ப்பு இருந்தால், சாமானிய மக்களுக்கு சுலபமாக கிடைத்து விடுமா என்ன ? அப்புறம் எதற்கு பெரு நிறுவனங்களும், பண முதலைகளும் இருக்கிறார்கள். அம்பானியும், அதானியும் எதற்கு தொழில் செய்ய வேண்டும், டாட்டா நிறுவனத்திற்கு வேறு வேலை இல்லையா என்ன ?

ஏமாற்று பேர்வழிகளிடம் உண்மையில் சிக்கி கொள்வது நடுத்தர வருவாயை கொண்டிருப்பவர்கள் தான். குறுகிய காலத்தில் விரைவாக பணம் சம்பாதிக்கிறேன் என மாட்டிக்கொள்பவர்கள் இவர்கள் தான். எந்தவொரு முதலீட்டு சாதனமும் நிரந்தரமான, அதுவும் அளவில்லாத முதலீட்டு பெருக்கத்தை உடனடியாக ஏற்படுத்தும் என சொல்லவில்லை.

வங்கி வட்டி விகிதத்திலும் ஏற்ற-இறக்கம் நிலவும், தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் முதலீட்டிலும் இது நடந்து கொண்டு தான் இருக்கிறது. பங்குச்சந்தைக்கு சொல்ல தேவையில்லை. நீண்டகாலத்தில் முதலீடு செய்து விட்டு காத்திருந்தால், பணவீக்கத்தை தாண்டிய வருவாயை பெறலாம். உங்களை விரைவாக பணக்காரராக்கும் என்று எங்கும் உத்தரவாதம் தரவில்லை, அப்படி சொல்லவும் இல்லை.

அதே வேளையில், உங்கள் முதலீட்டை பல மடங்காக மாற்றலாம். இரட்டிப்பாக, மூன்று மடங்காக அல்லது நான்கு மடங்காக, எப்படி வேண்டுமானாலும் செய்யலாம். ஆம், அடிப்படை கணிதம் தான் இது. இதற்கு நீங்கள் இரு வேலைகளை செய்தாக வேண்டும்.

  • எதிர்பார்க்கும் வருவாய் அல்லது வட்டி விகிதம்(Expected Returns %)
  • முதலீட்டு காலம் 

மேலே சொன்ன இரண்டு காரணிகள் உங்கள் பணம் பல மடங்குகள் உயர்வதற்கு காரணமாக இருக்கும். நீங்கள் செய்யும் முதலீடு ஒரு தொழிலாகவோ(Business) அல்லது முதலீட்டு சாதனமாகவோ(Investment Avenue) இருக்கலாம். உங்கள் பணம் வேலை செய்தால் மட்டுமே, உங்களுக்காக சம்பாதிக்க முடியும். அது தொடர்ச்சியாக தனது வேலையை செய்யும் போது தான் கூட்டு வட்டியின் பலனும் நமக்கு கிடைக்கப்பெறும்.

உதாரணமாக உங்கள் முதலீடு இரட்டிப்பாக,

விதி எண் – 72:

72 / எதிர்பார்க்கும் வட்டி விகிதம் %

உங்களிடம் ஒரு லட்சம் ரூபாய் உள்ளது. அதனை நீங்கள் இரட்டிப்பாக மாற்ற மேலே சொன்ன இரண்டு காரணிகளும் அவசியம். உதாரணமாக நாம் எதிர்பார்க்கும் அல்லது கிடைக்கும் வட்டி விகிதம் 8 சதவீதம் எனில், விதி எண் – 72ன் படி, ஒன்பது வருடங்களில் நமது பணம் இரட்டிப்பாக மாறும். ஆம், இது கணிதம் தான்.

72 / 8 = 9 வருடங்கள்

வட்டி விகிதம் 12 சதவீதம் எனில் ஆறு வருடங்களில் இரட்டிப்பாகும், வட்டி விகிதம் 6 சதவீதம் எனில் உங்கள் பணம் இரட்டிப்பாக 12 வருடங்கள் எடுத்து கொள்ளும்.

விதி எண் – 114: (மூன்று மடங்காக)

114 / எதிர்பார்க்கும் வட்டி விகிதம் %

விதி எண் – 144 (நான்கு மடங்காக)

144 / எதிர்பார்க்கும் வட்டி விகிதம் %

நமக்கு தேவையான காரணிகள் கிடைக்கப்பெறும் வட்டி விகிதமும், முதலீட்டு காலமும் தான். எனவே நமது இலக்கை உறுதி செய்யும் முதலீட்டு சாதனத்தை தேடுவது தான் முதலீட்டின் சிறப்பம்சமாக இருக்கும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மின்னணு வாகனங்கள் – வாய்ப்புகளும், சவால்களும் – பங்குச்சந்தை பகுப்பாய்வு

மின்னணு வாகனங்கள் – வாய்ப்புகளும், சவால்களும் – பங்குச்சந்தை பகுப்பாய்வு 

EV – Opportunities & Challenges – Fundamental Aspect

தொழில்நுட்ப உலகில் தனிநபர் ஒவ்வொருக்கும் கருத்து வேறுபாடுகள் உண்டு. சிலர் அறிவியல் முன்னேற்றத்தில் விருப்பம் காட்டுவதில்லை. மற்ற சிலரோ அறிவியலின் ஏணிப்படியில் நடைபோட்டு கொண்டு தான் இருக்கின்றனர். மனிதனின் தேவைகள் இருக்கும் வரை அதற்கான வசதிகளை புதுமையாக கொண்டு வருவதில் அறிவியல் முன்னிலை வகிக்கிறது.

மின்னணு வாகனங்கள் மற்றும் 5 ஜி தொழில்நுட்ப பயன்பாட்டில் முழுமை பெறும் போது, மனித அறிவியல் வாழ்வில் அது மேம்பட்ட நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இதுவரை இவ்வுலகம் பார்த்திராத தொழில்நுட்ப ஆளுமைகள் இருக்கக்கூடும் எனவும் சொல்லப்படுகிறது.

அந்த வகையில், சமீபத்திய வருடங்கள் மின்னணு வாகனம் சார்ந்த விஷயங்களில் முக்கியத்துவம் பெறுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வது, நடப்பில் உள்ள எரிபொருட்களுக்கான மாற்றம், மேம்பட்ட ஆற்றல் சேமிப்பை உருவாக்குதல் என அதன் தடம் நீண்டு கொண்டிருக்கிறது.

வாகனங்களுக்கான அரசு கொள்கைகளும் மாற்றமடைந்து வருகிறது. எந்தவொரு நிகழ்விலும் சாதகமான தன்மைகள் மட்டுமே இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. அவ்வாறு ஒரு முதலீட்டாளராக நாம் காணும் போது, மின்னணு வாகன(Electric Vehicle) பிரிவில் வாய்ப்புகளும், சவால்களும் சில உள்ளன. இதனை நாம் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வு நிகழ்வாகவும் பார்க்கலாம்.

பொதுவாக மின்னணு வாகனங்கள் எனும் போது சாலை வழி, ரயில், கப்பல்கள், மின் விமானம் மற்றும் மின்சார விண்கலம் என பலவகைகளில் பயன்பாடு  இருக்கலாம். மின்னணு வாகனங்களுக்கு தேவையான மின் ஆதாரங்கள் – உள் சேமிப்பு(Onboard Storage), ஜெனரேட்டர்கள், மின் உற்பத்தி ஆலைகள் மற்றும் கலப்பின வழிமுறை(Hybrid).

வாய்ப்புகள் பல…

  • குறைந்த கார்பன் அளவு
  • மீள்நிரப்பு செலவு குறைவு (Recharging Cost)
  • ஆற்றல் திறன்
  • குறைந்த சத்தம் மற்றும் காற்று மாசுபாடு
  • எளிய வழிமுறை (Simple Mechanism)

சவால்கள் சில…

  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு
  • அணுசக்தி மற்றும் புதைபடிவ ஆற்றல்(Fossil Energy)
  • கனரக வாகன தயாரிப்பில் உள்ள இடர்பாடு
  • மின்சார உற்பத்தி மற்றும் செலவினம்
  • நீண்ட பயணத்துக்கான மீள்நிரப்பு (Longer Recharge Time)
  • பேட்டரிகளை மாற்றுதல் – மறுசுழற்சி

மின்சார வாகனங்கள் என்ற வகையில் காணும் போது, பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் ஏதும் உள்ளதா, மின் ஆதாரங்கள் மற்றும் பேட்டரி தொழில்நுட்பத்தை கொண்டிருக்கும் நிறுவனங்களை கண்டறிவது, பேட்டரிக்கு தேவையான மூலப்பொருட்கள் என்னென்ன, அதனை தயார் செய்யும் நிறுவனங்கள் எங்கே உள்ளது என்ற அடிப்படை கேள்விகள் ஒரு முதலீட்டாளருக்கு தேவையான விஷயமாகும்.

நடப்பில் டாட்டா மோட்டார்ஸ், மஹிந்திரா, அசோக் லேலண்ட் நிறுவனங்கள் பெரு வாகன பிரிவில் மின்னணு வாகனங்களை தயாரித்து வருகிறது. இருசக்கர வாகன பிரிவில் டி.வி.எஸ். மோட்டார்ஸ் மற்றும் பஜாஜ் நிறுவனங்களும் உள்ளது. பேட்டரி தயாரிப்பு என பார்க்கும் போது அமரராஜா பேட்டரிஸ்(Amararaja Batteries), எக்சைட் இண்டஸ்ட்ரீஸ்(Exide), இஸ்ரோ, பெல் நிறுவனங்கள் பங்காற்றுகிறது.

மூலப்பொருட்களில் மாங்கனீசு, அலுமினியம், காப்பர், ஜிங்க், அலாய், லித்தியம் மற்றும் கிராப்பைட் போன்ற பிரிவில் பல நிறுவனங்கள் உள்ளன. இவை இரும்பு அல்லாத உலோகங்கள்(Non-ferrous Metals) என கூறப்படுகிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

வரலாற்றில் தடம் பதிக்காத பொருளாதார வீழ்ச்சி – ஜூன் 2020

வரலாற்றில் தடம் பதிக்காத பொருளாதார வீழ்ச்சி – ஜூன் 2020

Unprecedented Economic Downturn in the Historical Data – GDP June 2020

நேற்று மாலை தேசிய புள்ளியியல் அலுவலகம்(NSO) சார்பில் நாட்டின் ஏப்ரல்-ஜூன் 2020 காலாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி(GDP growth) குறியீடு வெளியிடப்பட்டது. ஊரடங்கு காலத்தில் நாட்டின் பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்பது பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்த்து வந்தது தான். ஆனால் சந்தை எதிர்பார்த்த (-18) சதவீதம் என்ற அளவை காட்டிலும் தற்போது (-23.9) சதவீதம் என சொல்லப்பட்டுள்ளது.

சுதந்திரத்திற்கு பின்னர் (அதாவது பொருளாதார குறியீடு அளவை பெற்ற) ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியாக தற்போது பார்க்கப்படுகிறது. நாட்டில் உள்ள அனைத்து துறைகளும் ஏப்ரல்-ஜூன் 2020 காலத்தில் உற்பத்தியை பெருக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளன.

ஸ்டீல் பயன்பாட்டு அளவு 57 சதவீதமும், நிலக்கரி உற்பத்தி 15 சதவீதமும் மற்றும் சிமெண்ட் உற்பத்தி 38 சதவீதமும் வீழ்ச்சி கண்டுள்ளது. அதிகபட்ச வீழ்ச்சியாக வணிக வாகன விற்பனை 85 சதவீதமும், பயணிகள் விமான சேவை 94 சதவீதமும் குறைந்துள்ளது. ரயில்வே துறையிலும் நிகர டன் கிலோமீட்டருக்கு 27 சதவீதம் குறைந்து காணப்படுகிறது.

இது போல விமான சேவையின் சரக்கு போக்குவரத்து, துறைமுக சேவை மற்றும் தொலைபேசி சந்தாதார்களின் எண்ணிக்கையிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் தனிநபர் செலவினம் மற்றும் தனியார் முதலீட்டை காட்டிலும் அரசு சார்பில் அதிகம் செலவிடப்பட்டுள்ளது. நாட்டின் வர்த்தகத்தில் (ஏற்றுமதி-இறக்குமதி) எதிர்பாராத உபரி தொகையும் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நடந்துள்ளது. அதன் காரணமாக மிக மோசமான நிலைக்கு செல்ல வேண்டிய பொருளாதாரம் தடைபட்டு சற்று ஆறுதலை தந்துள்ளது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறியீட்டில் உள்ள கட்டுமானம்(Construction) 50 சதவீதமும், விடுதிகள் மற்றும் போக்குவரத்து(Hotels & Transportation) 47 சதவீதமும் மற்றும் உற்பத்தி துறை(Manufacturing) 39 சதவீதமும் வீழ்ச்சியடைந்துள்ளது. அரசு செலவினம் 16 சதவீதமும், விவசாய துறை 3.5 சதவீதமும் வளர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுரங்கம் மற்றும் குவாரி, நிதி, வீட்டுமனை மற்றும் இதர தொழில் துறைகளின் வளர்ச்சியும் குறைந்துள்ளது. 1992ம் ஆண்டுக்கு பின்பு ஏற்பட்ட புதிய பொருளாதார கொள்கைக்கு பிறகான, மிகப்பெரிய சரிவாக ஜூன் 2020 காலாண்டு வளர்ச்சி சொல்லப்படுகிறது. வேகமாக வளரும் நாடுகளில் அதிகம் காணப்பட்ட வீழ்ச்சியாகவும் இந்த குறியீட்டு எண்கள் எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.

ஜூன் காலாண்டுக்கு பிறகான தளர்வுகள் ஓரளவு பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். இருப்பினும், நடப்பு 2020-21ம் நிதியாண்டு முடிவில் அது வளர்ச்சி குறைந்ததாகவே காணப்படும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

செப்டம்பர் மாதம் முதல் அமலில் வரக்கூடிய பங்குச்சந்தை ஒழுங்குமுறை மாற்றங்கள் – 2020

செப்டம்பர் மாதம் முதல் அமலில் வரக்கூடிய பங்குச்சந்தை ஒழுங்குமுறை மாற்றங்கள் – 2020

Stock Market Regulatory Changes effective from September 2020

நடப்பாண்டின் மார்ச் மாத வீழ்ச்சிக்கு பிறகு மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ்(BSE Sensex) சுமார் 13,000 புள்ளிகளுக்கு மேலாக ஏற்றமடைந்துள்ளது. அதாவது சரிவிலிருந்து தற்போது வரை 35 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே வேளையில், ஜனவரி 1 முதல் கணக்கிடும் போது, சென்செக்ஸ் 5 சதவீத இறக்கத்தில் உள்ளது கவனிக்கத்தக்கது.

கடந்த இரண்டு வருட காலத்தில் சென்செக்ஸ் 1.5 சதவீத ஏற்றம் மட்டுமே அடைந்துள்ளது. இருப்பினும் மூன்று வருட காலத்தில் 24 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது இந்த குறியீடு. பங்குச்சந்தை ஏற்ற-இறக்கம் இருந்து கொண்டிருந்தாலும், நாட்டில் ஏற்படும் பொருளாதார நிலை மாற்றங்கள், பங்குச்சந்தை அமைப்பு ஒழுங்குமுறையிலும் சில மாற்றங்களை கொண்டு வருகிறது.

வரும் செப்டம்பர் மாதம் முதல் பங்குச்சந்தையில் சில ஒழுங்குமுறை மாற்றங்கள் அமலில் வர உள்ளது. அவற்றில் சில முக்கிய தகவல்களை இங்கு  காண்போம்.

பங்குச்சந்தையில் எந்த பங்கு பரிவர்த்தனையும் செய்யாதவரா நீங்கள் ?

  • பங்குச்சந்தையில் தொடர்ச்சியாக 12 மாதங்கள், பங்குகள் சார்ந்த எந்த பரிமாற்றத்தையும் செய்யாமல் இருக்கும் நிலையில், உங்கள் வர்த்தக கணக்கு செயலற்ற கணக்காக(Inactive) அறிவிக்கப்படும். இந்த நடைமுறை கடந்த மாதம் ஆகஸ்ட் முதல் அமலுக்கு வந்துள்ளது.
  • செயலற்ற கணக்கை(Dormant) மீண்டும் புதுப்பிக்க மறு கே.ஐ.சி.(Re-KYC) செய்வது அவசியமாகும். இதற்கு நீங்கள் கணக்கை துவங்கும் போது என்னென்ன ஆவணங்களை கொடுத்தீர்களா, அதே போல மீண்டும் ஒரு முறை சமர்ப்பிப்பது அவசியமாகும். வீட்டு முகவரி மாறியிருந்தால் அதற்கான தகுந்த ஆவணங்களை அளிக்க வேண்டும்.
  • பொதுவாக இந்த நடைமுறைக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை. இருப்பினும், இது கால விரயம் ஏற்படுத்தும் செயலாக சொல்லப்படுகிறது.

இனி இங்கும் விளிம்பு பற்றாக்குறை அபராதம் உண்டு:

  • இதுவரை பணச்சந்தையில்(Cash Market) தரகு நிறுவனங்கள் அறிவிக்கும்  பண அளவு இருந்தாலே, நாள் வணிகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி(based on upfront margin) கொள்ளலாம். பங்குச்சந்தைக்கு தேவையான மீதி தொகையை தரகு நிறுவனங்கள் செலுத்தி விடும். பின்பு நாள் வணிகர்கள் மற்றும் முதலீட்டாளர்களிடம் செலுத்த வேண்டிய பணத்தை பெற்று கொள்ளும் (பொதுவாக மூன்று நாட்களுக்குள்).
  • எனவே இனி பணச்சந்தையில் முழுத்தொகையும் இல்லாமல் மார்ஜின் அளவில் வர்த்தகம் புரிய முடியாது. ரொக்கமாக பணத்தை செலுத்தி விட்டு தான் பங்குகளை வாங்கவோ, விற்கவோ முடியும். அதே போல, அன்றைய தினத்தில் விற்ற பங்குகளின் தொகையை கொண்டு புதிய பங்கு பரிவர்த்தனையை மேற்கொள்ள இயலாது. புதிய பரிவர்த்தனைக்கு தேவையான தொகையை சந்தைக்கு முன்னரே செலுத்த வேண்டும்.
  • இருப்பினும், ஏற்கனவே பங்குகளை டீமேட் கணக்கில் வைத்திருப்பவர்கள் அதனை அடமானமாக கணக்கில் கொண்டு, மார்ஜின் அளவுகளை பெறலாம். இதற்கு சந்தை அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய உறுதிமொழி இணைப்பை(New Margin Pledge Mechanism) பயன்படுத்த வேண்டும். அடமானத்தை உறுதி செய்த பின்னர், மார்ஜின் அளவு நிர்ணயிக்கப்படும்.
  • புதிய அடமான திட்டத்தால் மார்ஜின் வழங்கப்பட்டாலும்,பின் சொல்லப்பட்ட நாளில் பணத்தை முழுவதுமாக செலுத்தாத நிலையில் பற்றாக்குறை அபராதம் உண்டு.
  • குறைந்த அளவில் வர்த்தகமாகும் பங்குகள் (illiquid Securities) மற்றும் அதிக ஏற்ற-இறக்கங்களை காணும் பங்குகளுக்கு (100 % VAR) மார்ஜின் அளவு அளிக்கப்படாது.

மார்ஜின் பற்றாக்குறை அபராதம்(Margin Shortage Penalty) எவ்வளவு ?

  • பற்றாக்குறை தொகை ரூ.1 லட்சம் மற்றும் சொல்லப்பட்ட மார்ஜின் அளவு 10 சதவீதத்திற்கு குறைவாக இருக்கும் நிலையில், 0.5 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.
  • பற்றாக்குறை தொகை ரூ.1 லட்சத்திற்கு அதிகமாக மற்றும் மார்ஜின் அளவும் 10 சதவீதத்திற்கு மேலாக இருக்கும் நிலையில், ஒரு சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.
  • மார்ஜின் பற்றாக்குறை(Margin Shortfall) மூன்று நாட்களுக்கு மேலாக செல்லும் போது, நான்காவது நாளிலிருந்து 5 சதவீதம் அபராதமாக விதிக்கப்படும். இதுவே ஒரு மாதத்தில் ஐந்து நாட்களுக்கு மேலாக (தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும்) மார்ஜின் பற்றாக்குறை இருக்கும் போதும் 5 சதவீத அபராதம் செலுத்த வேண்டும்.

சொல்லப்பட்ட ஒழுங்குமுறை மாற்றங்களில் சில விதிமுறைகள் நடப்பு ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கம் முதல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கவனிக்க: சில பங்குகளுக்கு 20 சதவீத தொகை ரொக்கமாக இருந்தாலே, மார்ஜின் அளவு வழங்கப்படும் என சொல்லப்படுகிறது. மார்ஜின் அளவு மற்றும் அபராதம் சார்ந்த தகவல்களை உங்களது தரகு நிறுவனங்களிடம் கேட்டு தெரிந்து கொள்வது நன்று. தரகு நிறுவனங்கள் சார்ந்து செபியிடம்(SEBI) பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

முதலீட்டு நாயகன், ‘வாரன் பப்பெட்‘ – 90 வயது இளைஞனின் பிறந்தநாள் இன்று

முதலீட்டு நாயகன், ‘வாரன் பப்பெட்‘ – 90 வயது இளைஞனின் பிறந்தநாள் இன்று 

The 90 years old Investing Teenager – Warren Edward Buffett

‘என்னிடம் ஆப்பிள் போன் இல்லை, ஆனால் நான் ஆப்பிள் நிறுவனத்தை வாங்க தயாராக உள்ளேன் ‘ என எளிமையான நடையில் தனது முதலீட்டு உத்தியை சொன்னவர் திரு. வாரன் பப்பெட் அவர்கள். 1930ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி அமெரிக்காவின் ஒமாகா நகரில் பிறந்த வாரன், இளம் வயது முதலே முதலீட்டில் கெட்டிக்காரர்.

தனது 11ம் வயதில் முதலீடுகளை மேற்கொண்ட இவர் பல தொழில் சார்ந்த கல்வியை கற்பதிலும் ஆர்வம் காட்டினார். வெறுமென பங்குச்சந்தையில் மட்டும் முதலீடு செய்யாமல், தொழில்முனைவில் பேரம் பேசுவதிலும் அக்கறை காட்டினார். முதலீட்டில் நிறுவனங்களை மலிவான விலையில் கையகப்படுத்துவதும் இவருடைய உத்தியில் மிகவும் முக்கியமான ஒன்று.

2008ம் ஆண்டு உலக பொருளாதார மந்தநிலை நிலவிய காலமது, அமெரிக்காவில் பங்குச்சந்தையும், பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் நிலையில், பல நிறுவனங்களுக்கு தேவையான முதலீட்டை  வாரன் வழங்கினார். அந்த நேரத்தில், அவருடைய பெர்க்சையர்(Berkshire Hathaway) நிறுவனமும் மோசமான காலாண்டு முடிவுகளை அறிவித்தது. முதலீடு சார்ந்து சில விமர்சனங்களுக்கும் ஆளானார் வாரன்.

அவர் அதனை பற்றியெல்லாம் கவலைப்படும் முதலீட்டாளராகவும் அப்போது இல்லை. பொருளாதார மந்தநிலையில் பெரு நிறுவனங்களில் முதலீடு செய்ய அவர் தயக்கம் காட்டவில்லை. 2008ம் ஆண்டில் உலகின் முதல் பணக்காரராக சொல்லப்பட்டார் வாரன். ஆம், தொடர்ச்சியாக 13 வருடங்கள் முதலிடத்தில் இருந்த பில்கேட்ஸ் அவர்களை பின் தள்ளிவிட்டு முன்னேறினார்.

வாரன் பப்பெட் ஒரு கதை சொல்லியாகவும்(Story Teller) இருந்தார். தனது நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் முதலீட்டாளர்களிடம் பேசுகையில் கதை மூலம் பல விஷயங்களை உரையாடுவார். அவரது முதலீட்டு கதைகளை கேட்க நம் நாட்டிலிருந்தும் பெரும் முதலீட்டாளர்கள் கூட்டம் சென்று வருவது கவனிக்கத்தக்க விஷயமாகும்.

‘வாய்ப்புகள் அரிதாகவே வருகின்றன, மழையில் கொட்டுவது தங்கமாக இருந்தால் கைவிரல்களில் வாங்க வராதீர்கள், பெரிய வாளியை கொண்டு வாருங்கள் ‘ என சொல்பவர் திரு. வாரன். பணவீக்கத்திலும், வங்கி வட்டி விகிதத்திலும் கறாராக இருப்பவர். முதலீட்டின் ஒவ்வொரு பண துளியிலும் கவனமாக இருப்பவர்.

முதலீட்டின் மூலம் பணம் சேர்த்த வாரன், மிகவும் எளிமையான மனிதராகவும் போற்றப்படுகிறார். பொருளாதார மந்தநிலை காலங்களில் இவரது அணுகுமுறை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்தும். நடப்பு காலத்திலும், இவர் மற்ற முதலீட்டாளர்களை போல சந்தையை அணுகவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. வயதாகி விட்டதால் இவரது முதலீட்டு தத்துவம் தற்போதைய காலத்தில் செல்லாது எனவும் சிலர் கூறுவதையும் கேட்டிருப்போம்.

சேமிப்பு மற்றும் முதலீட்டை பொறுத்தவரை நம் தந்தை சொல்லிக்கொடுத்தாலும், ஆசான் சொல்லிக்கொடுத்தாலும் இரண்டும் நல்ல விஷயமே. அணுகுமுறை மட்டுமே வித்தியாசப்படும். பணம் படைத்தவர்கள் கூட்டம் சொகுசு வாழ்க்கையை மட்டுமே அனுபவித்து கொண்டிருக்கிறது என்று நினைக்கும் பொது உலகில், இவரது முதலீட்டு வாழ்க்கையை பற்றி படிக்கும் போது பணக்கார தந்திரத்தின் விளக்கம் உங்களுக்கு புரியும்.

வாரன் பப்பெட் அவர்களை பற்றி தமிழில் படிக்க, மென்பொறியாளர் மற்றும் எழுத்தாளர் திரு. செல்லமுத்து குப்புசாமி(Chellamuthu Kuppusamy) அவர்களின், ‘பணக்கடவுள்’ புத்தகத்தை படிக்கும் போது உங்களுக்கான முதலீட்டு கேள்விகள் புலப்படும். 100 ரூபாயை 100 கோடி ரூபாயாக நேர்மையான வழியில், அதுவும் அரசாங்கத்தின் வரி கொள்கையில் மாற்ற முடிந்தால், அது தான் உங்களுக்கான புத்தகம்.

திரு.வாரன் பப்பெட் அவர்களின் பிறந்தநாளான இன்று(Birthday Wishes 2020), நான் பரிந்துரைக்கும் புத்தகமாக நீங்கள் இதனை எடுத்து கொள்ளலாம். உங்கள் முதலீட்டின் ஒரு பகுதியை நிதிக்கல்வியை கற்று கொள்வதற்கும் ஒதுக்குங்கள்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பங்குச்சந்தை அலசல் – இந்துஜா குளோபல் சொல்யூஷன்ஸ்

பங்குச்சந்தை அலசல் – இந்துஜா குளோபல் சொல்யூஷன்ஸ் 

Hinduja Global Solutions (HGS) – Fundamental Analysis

இந்துஜா குழுமத்தின் ஒரு அங்கம் தான் இந்துஜா குளோபல் சொல்யூஷன்ஸ்(HGS) நிறுவனம். 2000ம் ஆண்டு முதல் தகவல் தொழில்நுட்ப சேவையில் தொழில் செய்து வரும் இந்நிறுவனம், ஆரம்ப காலத்தில் அசோக் லேலண்ட் ஐ.டி. நிறுவனமாகவே அழைக்கப்பட்டு வந்தது. பின்பு இந்துஜா நிதி தொழில் இணைக்கப்பட்டு, இந்துஜா குளோபல் சொல்யூஷன்ஸ் நிறுவனமாக மாறியது.

பெங்களூரு நகரத்தை தலைமையிடமாக கொண்டிருந்தாலும் சுமார் ஏழு நாடுகளில் இதன் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 2003 மற்றும் 2007ம் ஆண்டுகளில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த கால் சென்டர் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த தரவுத்தள ஆராய்ச்சி நிறுவனங்களை கையகப்படுத்தியது.

பின்பு 2010-11 காலங்களிலும் இது போன்ற நிறுவனங்களை கையகப்படுத்துதல் நடவடிக்கை ஏற்பட்டுள்ளது. இந்துஜா குழுமத்தில் தற்போது பங்காளி சண்டை நடைபெற்று வருவது குழுமத்தில் உள்ள நிறுவனங்களுக்கு பாதகமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. 2019-20ம் நிதியாண்டின் முடிவில் இந்நிறுவனம் 5044 கோடி ரூபாயை வருவாயாக ஈட்டியுள்ளது.

இந்துஜா குளோபல் சொல்யூஷன்ஸ்(Hinduja Global Solutions) நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.1500 கோடி. புத்தக மதிப்பு 823 ரூபாயாகவும், கடன்-பங்கு விகிதம் 0.80 ஆகவும் உள்ளது. வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 5 மடங்கில் உள்ளது. நிறுவனர்களின் பங்களிப்பு 67 சதவீதமாகவும், நிறுவனர்கள் சார்பில் பங்குகள் அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை.

2020ம் நிதியாண்டில் நிறுவனத்தின் விற்பனை வருவாய் ரூ.4,986 கோடியாகவும், நிகர லாபம் 202 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. ஒரு பங்கு மீதான வருவாய்(EPS) கடந்த பத்து வருட காலத்தில் இரு மடங்காகியுள்ளது. நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி கடந்த 5 வருடங்களில் 12 சதவீதமாகவும், பத்து வருட காலத்தில் 19 சதவீதமாகவும் உள்ளது.

இது போல லாப வளர்ச்சி, 5 மற்றும் 10 வருட காலங்களில் 5 சதவீதமாக உள்ளது. கடந்த ஒரு வருடத்தில் இந்த பங்கின் விலை 30 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) 1700 கோடி ரூபாய். இந்துஜா குளோபல் நிறுவனத்திற்கு பணவரத்து நன்றாக உள்ளது. தள்ளுபடி பணப்பாய்வு முறைப்படி(DCF) இந்த பங்கின் விலை சுமார் 2000 ரூபாய் பெறுமானம் உள்ளது.

எனினும், நிறுவனத்தின் கடன் தன்மை மற்றும் குடும்ப பிரச்சனையால் ஏற்படப்போகும் நிர்வாக மாற்றம் ஆகியவற்றை கவனிப்பது அவசியம். மார்ச் மாத சந்தை சரிவில் இந்த பங்கின் விலை 400 ரூபாய்க்கு அருகில் வர்த்தகமாகியுள்ளது. தற்போதைய நிலையில் பங்கு ஒன்றின் விலை 723 ரூபாயில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

டாட்டா மோட்டார்ஸ் தனது கடனை குறைக்குமா ? ஒரு சிறு பார்வை

டாட்டா மோட்டார்ஸ் தனது கடனை குறைக்குமா ? ஒரு சிறு பார்வை 

Will Tata Motors reduce it’s Debt ? 

நாட்டின் மிகப்பெரிய குழும நிறுவனமான டாட்டாவின் துணை நிறுவனம் தான் டாட்டா மோட்டார்ஸ்(Tata Motors). 1945ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனம் வாகன உற்பத்தியில் இந்திய பன்னாட்டு நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. மும்பையை தலைமையிடமாக கொண்டிருந்தாலும் உலகளவில் இதன் உற்பத்தி மற்றும் சேவை பிரபலமானது.

முக்கிய வாகன உற்பத்தியாக கார்கள், பயணிகள் பேருந்துகள், லாரிகள், வேன்கள், விளையாட்டு கார்கள்(Sports Car), கட்டுமான உபகரணங்கள் மற்றும் ராணுவ வாகனங்களை செய்து வருகிறது. ஆரம்பத்தில் ரயில் இன்ஜின்களை உற்பத்தி செய்து வந்த இந்நிறுவனம் பின்னர் அனைத்து வாகன பிரிவிலும் நுழைந்து வெற்றியும் கண்டது. 2004ம் ஆண்டில் தென்கொரியாவின் டாவோ நிறுவனத்தை கையகப்படுத்தியதும், 2008ம் ஆண்டு வாக்கில் போர்டு நிறுவனத்திடமிருந்து ஜாக்குவார் லேண்ட் ரோவர்(JLR) நிறுவனத்தை வாங்கியதும் டாட்டா மோட்டார்ஸின் சிறப்பம்சம்.

நன்றாக தொழில் செய்து கொண்டிருந்த டாட்டா நிறுவனத்திற்கு ஜாக்குவார் லேண்ட் ரோவர் சேவையின் மூலம் சிக்கல்கள் ஏற்பட்டது. துணை நிறுவனமான ஜாக்குவார் தொழிலுக்காக டாட்டா மோட்டார்ஸ் தனது செலவுகளை அதிகப்படுத்தியது. கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் விற்பனையில் பெருத்த சரிவை சந்தித்தது. அந்த ஆண்டில் மட்டும் ஜாக்குவார் மூலம் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு சுமார் 3.9 பில்லியன் டாலர்கள் அளவுக்கு முதலீட்டு இழப்பு ஏற்பட்டது.

டாட்டா நிறுவனம், ஜே.எல்.ஆர். (Jaquar Land Rover) சேவையை விற்க உள்ளதாக ஊடகங்களில் சொல்லப்பட்டாலும் டாட்டா இதனை மறுத்து வந்தது. உண்மையில் டாட்டா நிறுவனம் எதிர்பார்த்தது, ஜாக்குவாருக்கான ஒரு நல்ல கூட்டாளி நிறுவனத்தை தான். இதனால் விற்பனை சரிவை கட்டுப்படுத்துவதுடன், முதலீட்டையும் பெருக்கலாம் என எதிர்பார்க்கிறது.

மின்னணு வாகன பிரிவில் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்கு முக்கியத்துவமானது. 2008ம் ஆண்டில் நார்வே நாட்டை சேர்ந்த எலக்ட்ரிக் வாகன தொழில்நுட்பத்தின் 50 சதவீத பங்குகளை டாட்டா மோட்டார்ஸ் வாங்கியது. 2010ம் ஆண்டில் டெல்லி போக்குவரத்து கழகத்திற்கு சி.என்.ஜி. மின்னணு ஹைபிரிட் வாகனங்களை டாட்டா வழங்கியது. நாட்டின் பொது போக்குவரத்தில் சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட முதல் பேருந்து(Electric Buses) என சொல்லப்பட்டது.

கடந்த 2019ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் 30 Kwh லித்தியம் அயன் பேட்டரி கொண்ட நெக்சான் வாகனங்களை சந்தையில் அறிமுகப்படுத்தியது. 60 நிமிட சார்ஜில் சுமார் 300 கிலோமீட்டர் வரை பயணம் செய்யலாம் என்ற கூடுதல் தகவலையும் டாட்டா மோட்டார்ஸ் வெளியிட்டது. கடந்த சில வருடங்களாக இந்நிறுவனம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக கோடிகளில் முதலீடு செய்து வருகிறது. இந்த ஆராய்ச்சி வரும் 2021ம் ஆண்டில் முடிவுக்கு வரும் எனவும், அதன் பின்னர் சந்தையில் அதன் தொழில்நுட்பம் வருவாயை ஈட்டும் எனவும் சொல்லப்படுகிறது.

டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 45,200 கோடி ரூபாய். நிறுவனத்தின் கடன்-பங்கு விகிதம்(Debt to Equity) 2க்கு மேல். கடன் மட்டும் சுமார் ரூ. 1.24 லட்சம் கோடி. கடந்த மூன்று வருடங்களாக இந்நிறுவனம் நஷ்டத்தை மட்டுமே சந்தித்து வருகிறது. மூன்று வருட காலத்தில் 7 காலாண்டுகளில் நிகர நஷ்டத்தை கொண்டிருக்கிறது டாட்டா மோட்டார்ஸ். 2019-20ம் நிதியாண்டு அறிக்கையின் படி நிறுவனத்தின் நீண்ட கால கடன் மட்டும் ரூ.1.18 லட்சம் கோடி.

ஆகஸ்ட் 2016க்கு பிறகு இந்த பங்கின் விலை தற்போது வரை 80 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. சமீபத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய நிறுவனத்தின் தலைவர் திரு. சந்திரசேகரன், ‘ நிறுவனத்திற்கு நிகர வாகன கடனாக(Net Automotive Debt) 48,000 கோடி ரூபாய் உள்ளது. அடுத்த மூன்று வருடங்களில் இந்த கடன் குறைக்கப்பட்டு, நிறுவனம் கடனில்லா நிறுவனமாக (Near Zero Debt) மாறுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது போல 2022ம் நிதியாண்டு முதல் நிறுவனம் லாபத்திற்கு செல்லும்’ எனவும் கூறியுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக சுணக்கத்தில் இருந்த இந்திய வாகன துறை கொரோனா காலத்தின் ஊரடங்கு நாட்களில் அதிக விற்பனை சரிவை சந்தித்தது. முக்கிய வாகன நிறுவனங்கள் முதன்முறையாக நஷ்டத்தையும் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் ஜாக்குவாருக்கான முதலீட்டு அளவை குறைக்கும் முடிவை எடுத்துள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் வாகனங்களுக்கான புதிய கொள்கைகள் வந்திருக்கும் நிலையில் டாட்டா மோட்டார்ஸ் சொல்லப்பட்ட காலத்தில் தனது கடனை குறைக்குமா அல்லது முதலீட்டாளர்களிடையே வெறும் செய்தியாக சொல்லப்பட்டு, பங்கு விலை ஏற்றப்படுமா என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

குறிப்பு: பொதுவாக பங்குச்சந்தையில் உள்ள நிறுவனத்தின் சந்தை மதிப்பு அதிகரிப்பதன் மூலம் அதன் கடன்-பங்கு விகிதம் குறைவாக காணப்படும். மற்றுமொரு கூடுதல் தகவல், ஜியோ நிறுவனத்தில் செய்யப்பட்ட முதலீட்டு செய்தியால்ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு தற்போது 14 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் 6.93 சதவீதமாக உயர்வு – ஜூலை 2020

நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் 6.93 சதவீதமாக உயர்வு – ஜூலை 2020

India’s Retail CPI Inflation rose to 6.93 Percent -July 2020

கடந்த ஆறு மாதங்களாக நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் 6 சதவீதத்திற்கு மேலாக இருந்து வருகிறது. மத்திய ரிசர்வ் வங்கியின் குறுகிய கால இலக்காக 4 சதவீத பணவீக்கம் சொல்லப்பட்ட நிலையில், 2 சதவீதம் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம். ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த இலக்கினை மீறி விலைவாசி உயர்ந்து வருகிறது.

நடப்பாண்டின் ஜனவரி மாதத்தில் 7.59 சதவீதமாக சில்லரை விலை பணவீக்கம் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஜூலை மாதத்தின் முடிவில் நாட்டின் நுகர்வோர் விலை பணவீக்கம்(Retail Inflation) 6.93 சதவீதமாக இருந்துள்ளது. இது ஜூன் மாதத்தை காட்டிலும் அதிகமாக இருந்துள்ளது கவனிக்கத்தக்கது.

ஜூலை மாதத்தில் சந்தை எதிர்பார்த்த 6.15 சதவீதம் என்ற அளவை விட விலைவாசி உயர்ந்து காணப்பட்டுள்ளது. குறிப்பாக உணவுப்பொருட்களின் பணவீக்கம் உயர்ந்ததால், ஜூலை மாத பணவீக்கம் அதிகரித்துள்ளது. ஜூன் மாதத்தில் 8.72 சதவீதமாக இருந்த உணவு விலை பணவீக்கம், கடந்த ஜூலையில் 9.62 சதவீதமாக இருந்துள்ளது.

புகையிலை பொருட்களின் பணவீக்கம் 12.35 சதவீதமாகவும், வீட்டுமனை 3.25  சதவீதமாகவும் இருந்துள்ளது. காலணிகள் மற்றும் துணிமணிகளின் விலை 2.91 சதவீதமாகவும், எரிபொருட்களின் விலை 2.80 சதவீதமாகவும் சொல்லப்பட்டுள்ளது.

ஊரடங்குக்கு முந்தைய உற்பத்தி மற்றும் விற்பனை வளர்ச்சி எட்டப்படும் நிலையில், எதிர்பாராத பணவீக்க விகிதம் அதிகரிக்கலாம். இதன் காரணமாக வரும் காலங்களில் ரிசர்வ் வங்கி,  வட்டி விகித மாற்றத்தில் மிகுந்த கவனத்துடன் செயல்படலாம். தற்போதைய நிலையில் நாட்டில் உள்ள அனைத்து துறைகளும் மீட்கப்படவில்லை.

பொது போக்குவரத்து, முழுமையான பணிநேர வேலை, சுற்றுலா, திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்கள் முழுமையாக செயல்படும் நிலையில் விலைவாசி உயரக்கூடும். எனினும் சமீபத்திய கொரோனா தாக்கத்தால் பல தொழில்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பொருளாதார மந்தநிலையை உறுதி செய்யும் ஐந்து காரணிகள்

பொருளாதார மந்தநிலையை உறுதி செய்யும் ஐந்து காரணிகள் 

Five key factors that confirm the Recession – Economic Crisis

யாரை கேட்டாலும், நாட்டின் பொருளாதாரம் சரியாக இல்லையாம். உலக பொருளாதாரம் மோசமாக உள்ளது, வளர்ந்த நாடுகளில் வளர்ச்சி குறைந்து வருகிறதாம் என்ற பேச்சுக்களை நடைமுறையில் கேட்டு வந்திருப்போம்.

அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளதாமே ?  இந்தியாவின் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவதில் தற்போது சிரமம் ஏற்பட்டுள்ளதாம். கடந்த இரண்டு வருடங்களாக நாட்டில் பொருளாதார மந்தநிலை நிலவுகிறதாம்.

ஐக்கிய ராஜ்ஜியம்(United Kingdom) நடப்பாண்டில் ஏப்ரல்-ஜூன் காலாண்டுக்கான பொருளாதாரத்தில் 20 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் காணப்படாத வீழ்ச்சிக்கு சென்று கொண்டிருப்பதாகவும் அந்த நாட்டின் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவும் இரண்டாம் காலாண்டில் 33 சதவீத பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அது என்ன பொருளாதார வீழ்ச்சி அல்லது பொருளாதார மந்தநிலை ?

தொழிற்துறை மற்றும் வர்த்தகத்தில் தற்காலிகமாக வளர்ச்சி குறைவது அல்லது வீழ்ச்சியடைவதை தான் பொருளாதார மந்தநிலை என்கிறோம். பொதுவாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) தொடர்ச்சியான இரண்டு காலாண்டுகளில் எதிர்மறை மதிப்பை(Negative Growth) பெறுவதை தான் பொருளாதார மந்தநிலை சுட்டி காட்டுகிறது. இது போன்ற காலங்களில் தொழில் துறை பெரிய வளர்ச்சியை கொண்டிருக்காது. பெரும்பாலான நிறுவனங்கள் வருவாய் குறைவு மற்றும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்படும்.

இதன் காரணமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மந்தநிலை ஏற்படுவதுண்டு. அதே வேளையில், பொருளாதார மந்தநிலை அல்லது வீழ்ச்சி என்பதற்கான காலம் சரியாக வரையறுக்கப்படவில்லை. சில மாதங்கள் முதல் பல வருடங்கள் வரை இந்த தன்மை நீடிக்கலாம். எப்போது இந்த நிலை சரியாகும் என நம்மால் அறுதியிட்டு சொல்ல முடியாது. ஆனால் இது நிரந்தரமானதுமல்ல.

பொருளாதார மந்தநிலை பல வடிவங்களை(Recession Types) கொண்டுள்ளது. இதனை பற்றி நாம் ஏற்கனவே மற்றொரு பதிவில் சொல்லியிருந்தோம். வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஒரு நாடு, பொருளாதார மந்தநிலையை அறவே நீக்கவும் முடியாது. உலக பொருளாதாரத்தில் இதுவும் கடந்த போக கூடிய நிலை தான். இருப்பினும் பொருளாதார மந்தநிலை ஏற்பட போவதை அல்லது ஏற்பட்டுள்ளதை சில காரணிகள் கொண்டு நாம் உறுதி செய்து கொள்ளலாம்.

இதற்கு பெரிய ஆராய்ச்சி எல்லாம் தேவையில்லை. பொருளாதார வல்லுனர்களும், அரசு வெளியிடும் நிதி அறிக்கைகளும்(Economic Numbers) இதற்கான விளக்கத்தை எளிமையாக சொல்லும். அது போன்ற ஐந்து காரணிகளை நாம் இங்கே கொடுத்துள்ளோம்.

  • No Demand or Weak Demand Consumption (பலவீனமான நுகர்வு அல்லது தேவை குறைவு)
  • Negative growth on Industrial Production (தொழிற்துறை உற்பத்தியில் வளர்ச்சி இல்லாமை)
  • Declining Interest Rates & Availing Low rates (குறைவான வட்டி விகிதம்)
  • Negative GDP for two consecutive Quarters (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எதிர்மறை)
  • Business Earnings are not good, Rising Unemployment Rate (நிறுவனங்களின் வருவாய் குறைவு, அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை விகிதம்)
  • Stagflation and Slow down period of more than 6 Months (விலைவாசியில் ஆறு மாதங்களுக்கு மேலான தேக்கநிலை)

பொருளாதார மந்தநிலை என்பது நிதி உலகில் ஏற்படும் ஒரு இயல்பான மாற்றமே. இதனை ஒரு சுழற்சி முறை என்றும் சொல்லலாம். தேவைக்கும்-உற்பத்திக்குமான(Demand and Supply) இடைவெளியை போல தான் இதுவும். பொருளாதார வீழ்ச்சியும் சில சமயங்களில் நல்ல விஷயம் தான். இது போன்ற காலங்களில் தொழில் சார்ந்த மதிப்பீடுகள் மறுசீராய்வு செய்யப்படும். புதிய வேலைவாய்ப்புகளும், பொருளாதார கொள்கைகளும் திறம்பட ஏற்படுத்தப்படும்.

மேலே சொன்ன ஐந்து காரணிகளை கொண்டு தற்போதைய நாட்டின் பொருளாதாரம் மற்றும் உலக பொருளாதார வளர்ச்சியை, உங்களது தரவுகளை கொண்டு மதிப்பிட்டு கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Financial Blog in Tamil