டாட்டா மோட்டார்ஸ் தனது கடனை குறைக்குமா ? ஒரு சிறு பார்வை
Will Tata Motors reduce it’s Debt ?
நாட்டின் மிகப்பெரிய குழும நிறுவனமான டாட்டாவின் துணை நிறுவனம் தான் டாட்டா மோட்டார்ஸ்(Tata Motors). 1945ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனம் வாகன உற்பத்தியில் இந்திய பன்னாட்டு நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. மும்பையை தலைமையிடமாக கொண்டிருந்தாலும் உலகளவில் இதன் உற்பத்தி மற்றும் சேவை பிரபலமானது.
முக்கிய வாகன உற்பத்தியாக கார்கள், பயணிகள் பேருந்துகள், லாரிகள், வேன்கள், விளையாட்டு கார்கள்(Sports Car), கட்டுமான உபகரணங்கள் மற்றும் ராணுவ வாகனங்களை செய்து வருகிறது. ஆரம்பத்தில் ரயில் இன்ஜின்களை உற்பத்தி செய்து வந்த இந்நிறுவனம் பின்னர் அனைத்து வாகன பிரிவிலும் நுழைந்து வெற்றியும் கண்டது. 2004ம் ஆண்டில் தென்கொரியாவின் டாவோ நிறுவனத்தை கையகப்படுத்தியதும், 2008ம் ஆண்டு வாக்கில் போர்டு நிறுவனத்திடமிருந்து ஜாக்குவார் லேண்ட் ரோவர்(JLR) நிறுவனத்தை வாங்கியதும் டாட்டா மோட்டார்ஸின் சிறப்பம்சம்.
நன்றாக தொழில் செய்து கொண்டிருந்த டாட்டா நிறுவனத்திற்கு ஜாக்குவார் லேண்ட் ரோவர் சேவையின் மூலம் சிக்கல்கள் ஏற்பட்டது. துணை நிறுவனமான ஜாக்குவார் தொழிலுக்காக டாட்டா மோட்டார்ஸ் தனது செலவுகளை அதிகப்படுத்தியது. கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் விற்பனையில் பெருத்த சரிவை சந்தித்தது. அந்த ஆண்டில் மட்டும் ஜாக்குவார் மூலம் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு சுமார் 3.9 பில்லியன் டாலர்கள் அளவுக்கு முதலீட்டு இழப்பு ஏற்பட்டது.
டாட்டா நிறுவனம், ஜே.எல்.ஆர். (Jaquar Land Rover) சேவையை விற்க உள்ளதாக ஊடகங்களில் சொல்லப்பட்டாலும் டாட்டா இதனை மறுத்து வந்தது. உண்மையில் டாட்டா நிறுவனம் எதிர்பார்த்தது, ஜாக்குவாருக்கான ஒரு நல்ல கூட்டாளி நிறுவனத்தை தான். இதனால் விற்பனை சரிவை கட்டுப்படுத்துவதுடன், முதலீட்டையும் பெருக்கலாம் என எதிர்பார்க்கிறது.
மின்னணு வாகன பிரிவில் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்கு முக்கியத்துவமானது. 2008ம் ஆண்டில் நார்வே நாட்டை சேர்ந்த எலக்ட்ரிக் வாகன தொழில்நுட்பத்தின் 50 சதவீத பங்குகளை டாட்டா மோட்டார்ஸ் வாங்கியது. 2010ம் ஆண்டில் டெல்லி போக்குவரத்து கழகத்திற்கு சி.என்.ஜி. மின்னணு ஹைபிரிட் வாகனங்களை டாட்டா வழங்கியது. நாட்டின் பொது போக்குவரத்தில் சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட முதல் பேருந்து(Electric Buses) என சொல்லப்பட்டது.
கடந்த 2019ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் 30 Kwh லித்தியம் அயன் பேட்டரி கொண்ட நெக்சான் வாகனங்களை சந்தையில் அறிமுகப்படுத்தியது. 60 நிமிட சார்ஜில் சுமார் 300 கிலோமீட்டர் வரை பயணம் செய்யலாம் என்ற கூடுதல் தகவலையும் டாட்டா மோட்டார்ஸ் வெளியிட்டது. கடந்த சில வருடங்களாக இந்நிறுவனம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக கோடிகளில் முதலீடு செய்து வருகிறது. இந்த ஆராய்ச்சி வரும் 2021ம் ஆண்டில் முடிவுக்கு வரும் எனவும், அதன் பின்னர் சந்தையில் அதன் தொழில்நுட்பம் வருவாயை ஈட்டும் எனவும் சொல்லப்படுகிறது.
டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 45,200 கோடி ரூபாய். நிறுவனத்தின் கடன்-பங்கு விகிதம்(Debt to Equity) 2க்கு மேல். கடன் மட்டும் சுமார் ரூ. 1.24 லட்சம் கோடி. கடந்த மூன்று வருடங்களாக இந்நிறுவனம் நஷ்டத்தை மட்டுமே சந்தித்து வருகிறது. மூன்று வருட காலத்தில் 7 காலாண்டுகளில் நிகர நஷ்டத்தை கொண்டிருக்கிறது டாட்டா மோட்டார்ஸ். 2019-20ம் நிதியாண்டு அறிக்கையின் படி நிறுவனத்தின் நீண்ட கால கடன் மட்டும் ரூ.1.18 லட்சம் கோடி.
ஆகஸ்ட் 2016க்கு பிறகு இந்த பங்கின் விலை தற்போது வரை 80 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. சமீபத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய நிறுவனத்தின் தலைவர் திரு. சந்திரசேகரன், ‘ நிறுவனத்திற்கு நிகர வாகன கடனாக(Net Automotive Debt) 48,000 கோடி ரூபாய் உள்ளது. அடுத்த மூன்று வருடங்களில் இந்த கடன் குறைக்கப்பட்டு, நிறுவனம் கடனில்லா நிறுவனமாக (Near Zero Debt) மாறுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது போல 2022ம் நிதியாண்டு முதல் நிறுவனம் லாபத்திற்கு செல்லும்’ எனவும் கூறியுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக சுணக்கத்தில் இருந்த இந்திய வாகன துறை கொரோனா காலத்தின் ஊரடங்கு நாட்களில் அதிக விற்பனை சரிவை சந்தித்தது. முக்கிய வாகன நிறுவனங்கள் முதன்முறையாக நஷ்டத்தையும் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் ஜாக்குவாருக்கான முதலீட்டு அளவை குறைக்கும் முடிவை எடுத்துள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் வாகனங்களுக்கான புதிய கொள்கைகள் வந்திருக்கும் நிலையில் டாட்டா மோட்டார்ஸ் சொல்லப்பட்ட காலத்தில் தனது கடனை குறைக்குமா அல்லது முதலீட்டாளர்களிடையே வெறும் செய்தியாக சொல்லப்பட்டு, பங்கு விலை ஏற்றப்படுமா என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
குறிப்பு: பொதுவாக பங்குச்சந்தையில் உள்ள நிறுவனத்தின் சந்தை மதிப்பு அதிகரிப்பதன் மூலம் அதன் கடன்-பங்கு விகிதம் குறைவாக காணப்படும். மற்றுமொரு கூடுதல் தகவல், ஜியோ நிறுவனத்தில் செய்யப்பட்ட முதலீட்டு செய்தியால்ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு தற்போது 14 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை