நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் 6.93 சதவீதமாக உயர்வு – ஜூலை 2020
India’s Retail CPI Inflation rose to 6.93 Percent -July 2020
கடந்த ஆறு மாதங்களாக நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் 6 சதவீதத்திற்கு மேலாக இருந்து வருகிறது. மத்திய ரிசர்வ் வங்கியின் குறுகிய கால இலக்காக 4 சதவீத பணவீக்கம் சொல்லப்பட்ட நிலையில், 2 சதவீதம் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம். ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த இலக்கினை மீறி விலைவாசி உயர்ந்து வருகிறது.
நடப்பாண்டின் ஜனவரி மாதத்தில் 7.59 சதவீதமாக சில்லரை விலை பணவீக்கம் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஜூலை மாதத்தின் முடிவில் நாட்டின் நுகர்வோர் விலை பணவீக்கம்(Retail Inflation) 6.93 சதவீதமாக இருந்துள்ளது. இது ஜூன் மாதத்தை காட்டிலும் அதிகமாக இருந்துள்ளது கவனிக்கத்தக்கது.
ஜூலை மாதத்தில் சந்தை எதிர்பார்த்த 6.15 சதவீதம் என்ற அளவை விட விலைவாசி உயர்ந்து காணப்பட்டுள்ளது. குறிப்பாக உணவுப்பொருட்களின் பணவீக்கம் உயர்ந்ததால், ஜூலை மாத பணவீக்கம் அதிகரித்துள்ளது. ஜூன் மாதத்தில் 8.72 சதவீதமாக இருந்த உணவு விலை பணவீக்கம், கடந்த ஜூலையில் 9.62 சதவீதமாக இருந்துள்ளது.
புகையிலை பொருட்களின் பணவீக்கம் 12.35 சதவீதமாகவும், வீட்டுமனை 3.25 சதவீதமாகவும் இருந்துள்ளது. காலணிகள் மற்றும் துணிமணிகளின் விலை 2.91 சதவீதமாகவும், எரிபொருட்களின் விலை 2.80 சதவீதமாகவும் சொல்லப்பட்டுள்ளது.
ஊரடங்குக்கு முந்தைய உற்பத்தி மற்றும் விற்பனை வளர்ச்சி எட்டப்படும் நிலையில், எதிர்பாராத பணவீக்க விகிதம் அதிகரிக்கலாம். இதன் காரணமாக வரும் காலங்களில் ரிசர்வ் வங்கி, வட்டி விகித மாற்றத்தில் மிகுந்த கவனத்துடன் செயல்படலாம். தற்போதைய நிலையில் நாட்டில் உள்ள அனைத்து துறைகளும் மீட்கப்படவில்லை.
பொது போக்குவரத்து, முழுமையான பணிநேர வேலை, சுற்றுலா, திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்கள் முழுமையாக செயல்படும் நிலையில் விலைவாசி உயரக்கூடும். எனினும் சமீபத்திய கொரோனா தாக்கத்தால் பல தொழில்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை