முதலீட்டு நாயகன், ‘வாரன் பப்பெட்‘ – 90 வயது இளைஞனின் பிறந்தநாள் இன்று
The 90 years old Investing Teenager – Warren Edward Buffett
‘என்னிடம் ஆப்பிள் போன் இல்லை, ஆனால் நான் ஆப்பிள் நிறுவனத்தை வாங்க தயாராக உள்ளேன் ‘ என எளிமையான நடையில் தனது முதலீட்டு உத்தியை சொன்னவர் திரு. வாரன் பப்பெட் அவர்கள். 1930ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி அமெரிக்காவின் ஒமாகா நகரில் பிறந்த வாரன், இளம் வயது முதலே முதலீட்டில் கெட்டிக்காரர்.
தனது 11ம் வயதில் முதலீடுகளை மேற்கொண்ட இவர் பல தொழில் சார்ந்த கல்வியை கற்பதிலும் ஆர்வம் காட்டினார். வெறுமென பங்குச்சந்தையில் மட்டும் முதலீடு செய்யாமல், தொழில்முனைவில் பேரம் பேசுவதிலும் அக்கறை காட்டினார். முதலீட்டில் நிறுவனங்களை மலிவான விலையில் கையகப்படுத்துவதும் இவருடைய உத்தியில் மிகவும் முக்கியமான ஒன்று.
2008ம் ஆண்டு உலக பொருளாதார மந்தநிலை நிலவிய காலமது, அமெரிக்காவில் பங்குச்சந்தையும், பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் நிலையில், பல நிறுவனங்களுக்கு தேவையான முதலீட்டை வாரன் வழங்கினார். அந்த நேரத்தில், அவருடைய பெர்க்சையர்(Berkshire Hathaway) நிறுவனமும் மோசமான காலாண்டு முடிவுகளை அறிவித்தது. முதலீடு சார்ந்து சில விமர்சனங்களுக்கும் ஆளானார் வாரன்.
அவர் அதனை பற்றியெல்லாம் கவலைப்படும் முதலீட்டாளராகவும் அப்போது இல்லை. பொருளாதார மந்தநிலையில் பெரு நிறுவனங்களில் முதலீடு செய்ய அவர் தயக்கம் காட்டவில்லை. 2008ம் ஆண்டில் உலகின் முதல் பணக்காரராக சொல்லப்பட்டார் வாரன். ஆம், தொடர்ச்சியாக 13 வருடங்கள் முதலிடத்தில் இருந்த பில்கேட்ஸ் அவர்களை பின் தள்ளிவிட்டு முன்னேறினார்.
வாரன் பப்பெட் ஒரு கதை சொல்லியாகவும்(Story Teller) இருந்தார். தனது நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் முதலீட்டாளர்களிடம் பேசுகையில் கதை மூலம் பல விஷயங்களை உரையாடுவார். அவரது முதலீட்டு கதைகளை கேட்க நம் நாட்டிலிருந்தும் பெரும் முதலீட்டாளர்கள் கூட்டம் சென்று வருவது கவனிக்கத்தக்க விஷயமாகும்.
‘வாய்ப்புகள் அரிதாகவே வருகின்றன, மழையில் கொட்டுவது தங்கமாக இருந்தால் கைவிரல்களில் வாங்க வராதீர்கள், பெரிய வாளியை கொண்டு வாருங்கள் ‘ என சொல்பவர் திரு. வாரன். பணவீக்கத்திலும், வங்கி வட்டி விகிதத்திலும் கறாராக இருப்பவர். முதலீட்டின் ஒவ்வொரு பண துளியிலும் கவனமாக இருப்பவர்.
முதலீட்டின் மூலம் பணம் சேர்த்த வாரன், மிகவும் எளிமையான மனிதராகவும் போற்றப்படுகிறார். பொருளாதார மந்தநிலை காலங்களில் இவரது அணுகுமுறை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்தும். நடப்பு காலத்திலும், இவர் மற்ற முதலீட்டாளர்களை போல சந்தையை அணுகவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. வயதாகி விட்டதால் இவரது முதலீட்டு தத்துவம் தற்போதைய காலத்தில் செல்லாது எனவும் சிலர் கூறுவதையும் கேட்டிருப்போம்.
சேமிப்பு மற்றும் முதலீட்டை பொறுத்தவரை நம் தந்தை சொல்லிக்கொடுத்தாலும், ஆசான் சொல்லிக்கொடுத்தாலும் இரண்டும் நல்ல விஷயமே. அணுகுமுறை மட்டுமே வித்தியாசப்படும். பணம் படைத்தவர்கள் கூட்டம் சொகுசு வாழ்க்கையை மட்டுமே அனுபவித்து கொண்டிருக்கிறது என்று நினைக்கும் பொது உலகில், இவரது முதலீட்டு வாழ்க்கையை பற்றி படிக்கும் போது பணக்கார தந்திரத்தின் விளக்கம் உங்களுக்கு புரியும்.
வாரன் பப்பெட் அவர்களை பற்றி தமிழில் படிக்க, மென்பொறியாளர் மற்றும் எழுத்தாளர் திரு. செல்லமுத்து குப்புசாமி(Chellamuthu Kuppusamy) அவர்களின், ‘பணக்கடவுள்’ புத்தகத்தை படிக்கும் போது உங்களுக்கான முதலீட்டு கேள்விகள் புலப்படும். 100 ரூபாயை 100 கோடி ரூபாயாக நேர்மையான வழியில், அதுவும் அரசாங்கத்தின் வரி கொள்கையில் மாற்ற முடிந்தால், அது தான் உங்களுக்கான புத்தகம்.
திரு.வாரன் பப்பெட் அவர்களின் பிறந்தநாளான இன்று(Birthday Wishes 2020), நான் பரிந்துரைக்கும் புத்தகமாக நீங்கள் இதனை எடுத்து கொள்ளலாம். உங்கள் முதலீட்டின் ஒரு பகுதியை நிதிக்கல்வியை கற்று கொள்வதற்கும் ஒதுக்குங்கள்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை