Category Archives: Paisa News

Paisa News – News about Business and Finance

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் – ஜூலை – செப்டம்பர் 2021

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் – ஜூலை – செப்டம்பர் 2021

Small savings scheme interest rate for the Period – July – September 2021

2021-22ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டுக்கான(ஜூலை முதல் செப்டம்பர் வரை) சிறு சேமிப்பு வட்டி விகிதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் காலாண்டுக்கு ஒரு முறை அறிவிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த முறை(ஏப்ரல் – ஜூன்) சொல்லப்பட்டிருந்த வட்டி விகிதமே இம்முறையும் தொடரும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேமிப்பு கணக்கு, வைப்பு கால நிதி, மாத வருவாய் திட்டம், மாதாந்திர சேமிப்பு திட்டம், வரி சேமிப்பு சார்ந்த தேசிய சேமிப்பு பத்திரம்(NSC), பொது வருங்கால வைப்பு நிதி(PPF) ஆகியவை சிறு சேமிப்பு திட்டங்களின் கீழ் வருபவை.

மேலும் கிசான் விகாஸ் பத்திரம், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம், பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரிதி திட்டம் ஆகியவையும் சிறு சேமிப்பு திட்டங்களில் வருபவை தான்.

அஞ்சலகங்கள் மற்றும் வங்கிகளில் காணப்படும் சேமிப்பு திட்டங்கள் பெரும்பாலும் சிறு சேமிப்பு திட்டங்களின் கீழ் தான் வருகிறது. கடந்த சில வருடங்களாக சிறு சேமிப்புக்கான வட்டி விகிதம் குறைந்து வருவது கவனிக்கத்தக்கது.

Small savings interest rate july 2021

பொது வருங்கால வைப்பு நிதிக்கு 7.10 சதவீதமும், செல்வ மகள்(Sukanya Samriddhi) திட்டத்திற்கு 7.60 சதவீதமும் மற்றும் கிசான் விகாஸ் பத்திரத்திற்கு 6.90 சதவீதமும் வட்டி சொல்லப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்திற்கு 7.40 சதவீத வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வருட, இரண்டு வருட மற்றும் மூன்று வருட வைப்பு கால நிதிக்கு(Term Deposit) 5.50 சதவீத வட்டி விகிதமாகும். அதே வேளையில் ஐந்து வருட கால நிதிக்கு 6.70 சதவீதம் சொல்லப்பட்டுள்ளது. ஐந்து வருட மாத வருவாய் திட்டத்திற்கு(Monthly Income Scheme) 6.60 சதவீதமும், தேசிய சேமிப்பு பத்திரத்திற்கு 6.80 சதவீதமும் மற்றும் ஐந்து வருட தொடர் வைப்பு திட்டத்திற்கு(Recurring Deposit) 5.80 சதவீதமாக உள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நால்கோ நான்காம் காலாண்டு நிகர லாபம் – ரூ.936 கோடி

நால்கோ நான்காம் காலாண்டு நிகர லாபம் – ரூ.936 கோடி 

National Aluminium Company(NALCO) reported a net profit of Rs.936 Cr – Q4FY21

அரசு பொதுத்துறை நிறுவனமான தேசிய அலுமினிய நிறுவனம் – நால்கோ, அலுமினிய உற்பத்தி சார்ந்த தொழிலை செய்து வருகிறது. பாக்சைட் சுரங்கம், அலுமினிய சுத்திகரிப்பு, அலுமினியத்தை உருக்குதல் மற்றும் வார்ப்பு, மின் உற்பத்தி, ரயில் மற்றும் துறைமுக வேலைகளை தனது தொழிலாக கொண்டுள்ளது.

நாட்டின் பில்லியன் டாலர் வருவாயை ஈட்டும் நிறுவனமாகவும், அரசின், ‘நவரத்னா’ மதிப்பையும் கொண்ட நிறுவனமாகவும் நால்கோ திகழ்கிறது. இந்நிறுவனம் தனது 2020-21ம் நிதியாண்டுக்கான நான்காம் காலாண்டு முடிவுகளை(Quarterly results) வெளியிட்டுள்ளது.

மார்ச் மாதத்தில் முடிவடைந்த நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.2,821 கோடியாகவும், செலவினம் 1877 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இயக்க லாபம் ரூ.944 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. இதர வருமானமாக 53 கோடி ரூபாயும், சொல்லப்பட்ட காலாண்டின் நிகர லாபமாக 936 கோடி ரூபாய் உள்ளது. இது கடந்த பத்து காலாண்டில் காண முடியாத வளர்ச்சியாக இருந்துள்ளது.

இதற்கு முந்தைய ஆண்டின்(2019-20) மார்ச் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.1,936 கோடியாகவும், நிகர லாபம் 101 கோடி ரூபாயாக இருந்துள்ளது கவனிக்கத்தக்கது. மார்ச் 2021 முடிவின் படி, நிறுவனத்தின் இருப்புநிலை(Reserves) கையிருப்பு ரூ. 9,761 கோடி.

நால்கோவின் சந்தை மதிப்பு ரூ.14,100 கோடி மற்றும் புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு 58 ரூபாயாக உள்ளது. கடனில்லா நிறுவனமாக வலம் வரும் நால்கோ, 51 சதவீத நிறுவனர் பங்களிப்பை கொண்டுள்ளது. இதுவரை பங்கு அடமானம் எதுவும் நிறுவனத்தின் சார்பாக வைக்கப்படவில்லை.

2020-21ம் நிதியாண்டில் நிறுவனம் ஒட்டுமொத்தமாக 8,956 கோடி ரூபாயை வருவாயாக கொண்டுள்ளது. சொல்லப்பட்ட வருடத்தில் நிகர லாபம் ரூ.1,299 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி கடந்த ஐந்து வருடங்களில் ஆறு சதவீதமாகவும், லாப வளர்ச்சி 12 சதவீதமாகவும் இருக்கிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மியூச்சுவல் பண்டு முதலீட்டை தொடர இனி பான் – ஆதார் இணைப்பு அவசியம்

மியூச்சுவல் பண்டு முதலீட்டை தொடர இனி பான் – ஆதார் இணைப்பு அவசியம் 

PAN – Aadhaar linking is mandatory for Mutual Fund Transactions – From 1st July

மியூச்சுவல் பண்டு என சொல்லப்படும் பரஸ்பர நிதி திட்டங்கள், கடந்த சில வருடங்களாக பிரபலமடைந்து வருகிறது. மே மாத முடிவின் படி, சுமார் 33 லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களை நிர்வகித்து வரும் இந்த துறை, முதலீட்டுக்கான பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது.

செபியின்(Securities and Exchange Board of India) கீழ் வரும் மியூச்சுவல் பண்டு துறை, ஆம்பி(AMFI) துணை மூலம் திட்டங்களை வெளியிட்டு வருகிறது. இந்தியாவில் 40க்கும் மேற்பட்ட பரஸ்பர நிதி நிறுவனங்கள் இருந்தாலும், மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்ய கே.ஒய்.சி.(KYC) நடைமுறையை பதிவு செய்வது அவசியம்.

பரஸ்பர நிதிகளில் தங்கம், அரசு மற்றும் தனியார் கடன் பத்திரங்கள், ரியல் எஸ்டேட், வெளிநாட்டு நிறுவன முதலீடு மற்றும் பங்குச்சந்தை என பல கலவை திட்டங்கள் உள்ளன. குறுகிய காலம் முதல் நீண்டகாலம் வரை, முதலீடு செய்யும் ஒருவருக்கு தேவையான தனித்துவமான திட்டங்களை வழங்கி வருகிறது. பங்குச்சந்தையில் நேரடியாக முதலீடு செய்ய தயக்கம் உள்ளவர்கள், மியூச்சுவல் பண்டுகளில் கிடைக்கப்பெறும் திட்டங்களை எளிமையாக பயன்படுத்தி வருகின்றனர்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், மியூச்சுவல் பண்டில் ஏற்கனவே முதலீடு செய்து வருபவர்கள் மற்றும் புதிதாக கணக்கு துவங்க உள்ளவர்கள், தங்களது பான் – ஆதார்(PAN – Aadhaar) எண்ணை இணைப்பது அவசியம் என சொல்லப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. (பான் – ஆதார் இணைப்புக்கான காலக்கெடு செப்டம்பர் 30ம் தேதியாக நீட்டிக்கப்பட்டுள்ளது)

சொல்லப்பட்ட காலத்திற்குள் இணைப்பை ஏற்படுத்தாதவர்கள், தாங்கள் ஏற்கனவே முதலீடு செய்த பணத்தை வெளியே எடுக்கவும், புதிதாக முதலீட்டை தொடரவும் சிக்கல் ஏற்படலாம். பொதுவான முறையில், பான் – ஆதார் இணைப்புக்கான காலக்கெடுவும் வரும் ஜூன், 30ம் தேதியுடன் முடிவடைகிறது. (பான் – ஆதார் இணைப்புக்கான காலக்கெடு செப்டம்பர் 30ம் தேதியாக நீட்டிக்கப்பட்டுள்ளது)

இணைப்புக்கான காலக்கெடுவுக்குள் பதிவு செய்யாதவர்களின் பான் எண் செல்லாதவையாக சொல்லப்படும் எனவும், வருமான வரி தாக்கல் செய்யும் நிலையில் அபராதம் விதிக்கப்படும் எனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1ம் தேதி முதல் எந்தவொரு முதலீட்டை உள்நாட்டில் தொடர, பான் – ஆதார் எண் இணைப்பு அவசியமாகிறது. (பான் – ஆதார் இணைப்புக்கான காலக்கெடு செப்டம்பர் 30ம் தேதியாக நீட்டிக்கப்பட்டுள்ளது)

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டில் காப்பீட்டுக்கான தேவை அதிகரித்து வரும் நிலை

நாட்டில் காப்பீட்டுக்கான தேவை அதிகரித்து வரும் நிலை

Increasing Demand for Insurance in the Current Scenario – Covid-19 impact

சேமிப்பும், முதலீடும் ஒரு குடும்பத்திற்கு எந்தளவு முக்கியமோ, அதே போன்று நிதி பாதுகாப்பும்(Financial Protection) அவசியம். நிதி பாதுகாப்பு எனும் போது டேர்ம் இன்சூரன்ஸ், மருத்துவ காப்பீடு, விபத்து காப்பீடு மற்றும் அவசர கால நிதி ஆகியவற்றை சொல்லலாம். நமது சேமிப்பை எதிர்பாராத வேலையிழப்பு, தொழில் மந்தம் மற்றும் விபத்து காலங்களில் விரயம் செய்ய விடாமல் தடுக்க இந்த நிதி பாதுகாப்பு உதவும்.

டேர்ம் காப்பீடு எனில் குடும்பத்தில் வருவாய் ஈட்டும் நபருக்கு தான்(Breadwinner) எடுக்க வேண்டும். அதுவும் அவரது வருவாயை சார்ந்து மற்ற குடும்ப உறுப்பினர்கள் இருக்கும் போது, ஏதோவொரு சூழ்நிலையில் வருவாய் ஈட்டும் நபர் மறைந்து விட்டால் குடும்ப உறுப்பினர்களின் நிதி நலனை பாதுகாக்க டேர்ம் காப்பீடு பலனளிக்கும். பொதுவாக டேர்ம் காப்பீடு(Term Insurance) ஒருவரது ஆண்டு வருமானத்தை போல குறைந்தபட்சம் 10-15 மடங்கில் இருப்பது நல்லது.

மருத்துவ காப்பீடு எனும் போது நடைமுறையில் காணப்படும் கொரோனா பெருந்தொற்றினால் ஏற்படும் மருத்துவ செலவுகளை நாம் கேட்டிருப்போம் அல்லது கண்டிருப்போம், மருத்துவ காப்பீடு எவ்வளவு அவசியமென்று. ஆனால், உண்மையில் கொரோனா பெருந்தொற்றை காட்டிலும் மற்ற நாள்பட்ட நோய்களுக்கான மருத்துவ செலவுகள் தான் அதிகம். கொரோனா பெருந்தொற்று மூலம் உடல்நலம் பேணுவது, இயற்கையை பாதுகாப்பது மற்றும் மருத்துவ காப்பீட்டின்(Health Insurance) தேவையை நாம் உணர்ந்துள்ளோம்.

நகரமயமாக்கல் துவங்கிய பின்பு, வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்துள்ளது. இன்று கிராமப்புறங்களிலும் நாம் குறிப்பிடத்தக்க வாகன போக்குவரத்தை காணலாம். குறிப்பிட்ட நேரத்தில் ஒரு இடத்திற்கு செல்லலாம் என்றாலும், இன்று வாகன விபத்துகளை தவிர்ப்பது எளிதான காரியமல்ல. விபத்தினால் ஏற்படும் மரணங்கள் நம்மை போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட நாட்டில் சற்று அதிகமே. எனவே, விபத்துகளினால் ஏற்படும் இறப்புகள் மூலம் பல குடும்பங்கள் நிதி சிக்கலில் மாட்டி கொள்கின்றன. இதனை தவிர்க்க விபத்து காப்பீடும்(Standalone Accidental Policy) அவசியம். விபத்து காப்பீட்டை பொறுத்தவரை ரைடர் பாலிசியாக(Rider) எடுத்து கொள்ளாமல், தனிநபர் விபத்து காப்பீடு திட்டமாக எடுத்து கொள்வது சிறந்தது.

வேலையிழப்பு, வேலையிலிருந்து தொழில் முனைவுக்கு செல்லுதல், நிதி நெருக்கடி காலங்கள் என அவசர காலத்திற்கு தேவையான நிதியை உருவாக்கி வைத்து கொள்வது இன்று அவசியமாக உள்ளது. உங்களது மாத வருமானத்தை போல குறைந்தபட்சம் ஆறு முதல் 12 மாதங்களுக்கான தொகையை இருப்பாக வைத்து கொள்வது நல்லது. இந்த தொகையை ஒரு குறிப்பிட்ட வங்கி சேமிப்பு கணக்கு அல்லது பரஸ்பர நிதிகளின் லிக்விட் பண்டு(Liquid Funds) திட்டங்களில் சேமித்து வரலாம். உண்மையில் அவசர கால தேவை மற்றும் நிதி நெருக்கடி என்றால் மட்டுமே இந்த தொகையை எடுக்க வேண்டும். திருவிழா, திருமணம், வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க அல்லது சுற்றுலா என செலவுகளுக்கு அவசர கால நிதியை பயன்படுத்த கூடாது.

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை, காப்பீட்டின் அவசியத்தை அதிகமாகவே உணர்த்தியுள்ளது எனலாம். கடந்த சில மாதங்களாக ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீட்டு திட்டங்களை பெறுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக காப்பீட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. குறிப்பாக 35 வயதிற்கு குறைவாக உள்ளவர்கள் டேர்ம் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீட்டு திட்டங்களை வாங்குவதில் ஆர்வமாக இருந்துள்ளனர்.

முதலாம் அலைக்கு பின்னர் சில காப்பீட்டு திட்டங்களின் பிரீமிய தொகை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கப்படலாம். டேர்ம் காப்பீட்டு திட்டங்களை பெறுவதற்கு கொரோனா தடுப்பூசி(Vaccine) போட்டிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டையும் சில காப்பீட்டு நிறுவனங்கள் விதித்துள்ளது.

நடப்பாண்டில் காப்பீட்டு திட்டங்களை பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதே வேளையில் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் உரிமை கோரல் தீர்வும்(Claim Settlement) அதிகரித்து வருகிறது. இறப்பு விகிதத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இன்சூரன்ஸ் நிறுவனங்களின் லாபமும் குறைந்துள்ளது.

சமீபத்தில் கோடக் காப்பீட்டு நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், இரண்டாம் அலை காரணமாக ஏற்பட்ட அதிகப்படியான இறப்பு விகிதத்தால்  ஜூன் 2021 காலாண்டில் நிறுவனம் சுமார் 275 கோடி ரூபாய் வரை நஷ்டமாக கொண்டிருக்கும் என கூறியுள்ளது.

இந்தியாவில் மக்களிடையே காணப்படும் ஆயுள் காப்பீட்டின் பங்களிப்பு 2.82 சதவீதம் மட்டுமே. மருத்துவம் மற்றும் சுகாதாரத்திலும் அரசின் பங்களிப்பு, நாட்டின் பொருளாதாரத்தில் இரண்டு சதவீதத்திற்கு குறைவாக தான் உள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஆறு மாத உயர்வாக நாட்டின் சில்லரை விலை பணவீக்கம்

ஆறு மாத உயர்வாக நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் 

India’s Retail Inflation increased to 6.3 Percent in May 2021

நுகர்வோர் விலை பணவீக்கம் என சொல்லப்படும் சில்லரை விலை பணவீக்கம்(CPI – Consumer Price Index) நாட்டின் பொருளாதார காரணிகளில் முக்கியமானவையாக பார்க்கப்படுகிறது. 2020ம் ஆண்டின் டிசம்பர் மாதத்திலிருந்து 6 சதவீதத்திற்கு குறைவாக பணவீக்கம் இருந்த நிலையில், கடந்த மே மாதம் சந்தை வல்லுநர்கள் எதிர்பார்த்த அளவை விட பணவீக்கம் அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது.

நடப்பாண்டின் மே மாதத்தில் நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் 6.3 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. இது ஏப்ரல் மாதத்தில் 4.23 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பால் சொல்லப்பட்ட பணவீக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

மே மாதத்தில் எண்ணெய் மற்றும் கொழுப்பு வகைகள் 31 சதவீதமும், பழவகைகள் 12 சதவீதமும், பருப்பு வகைகள் 9.39 சதவீதம் என்ற அளவிலும் விலை அதிகரித்துள்ளது. இது போக ஒளி மற்றும் எரிபொருட்களின்(Fuel & Lights) விலையும் 11.58 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டுள்ளது.

புகையிலை பொருட்கள் 10 சதவீதமும், துணிமணி மற்றும் காலணிகள் 5.32 சதவீதமாக உள்ளது. 2021-22ம் நிதியாண்டுக்கான நாட்டின் சில்லரை விலை பணவீக்கம்(Retail Inflation) சராசரியாக 5.1 சதவீதமாக இருக்கலாம் என பாரத ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது.

கடந்த சில காலங்களாக கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருட்களின் விலை அதிகரித்து வருவது, பணவீக்கம் அதிகரிப்பதற்கான காரணமாக இருந்து வருகிறது. சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த இரண்டு வருடங்களில் காணப்படாத அளவாக தற்போது உள்ளது.

அமெரிக்கா போன்ற வளர்ந்த மற்றும் பிற வளரும் நாடுகளில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டால் அது பங்குச்சந்தைக்கு பாதகமாக அமையும். எனினும் இது சார்ந்த விஷயங்களில் அமெரிக்காவின் மத்திய வங்கி(US Fed) மிகுந்த எச்சரிக்கையை கொண்டுள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

புதிய தளத்துடன் அறிமுகமாக இருக்கும் வருமான வரி தாக்கல்

புதிய தளத்துடன் அறிமுகமாக இருக்கும் வருமான வரி தாக்கல் 

Launching of New E-Filing Portal of the Income Tax Department

2020-21ம் நிதியாண்டுக்கான(Financial year) வருமான வரி தாக்கலை 2021-22ம் மதிப்பீட்டு ஆண்டில்(Assessment year) பதிவு செய்ய வேண்டும். பொதுவாக நடப்பு ஏப்ரல் மாதத்தில் துவங்க வேண்டிய வருமான வரி தாக்கல், கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை மற்றும் வருமான வரி அலுவலகத்தின் புதிய முறையால் சற்று தாமதமாக துவங்க உள்ளது.

தனிநபர் வருமான வரி தாக்கலை செய்யும் ஒருவர், தான் வேலை பார்க்கும் நிறுவனத்திடமிருந்து படிவம்-16 (Form 16) பெற்ற பிறகு தான் வரி தாக்கல் செய்ய வேண்டும். நிறுவனங்கள் தங்களது பணியாளர்களுக்கு படிவம்-16ஐ அளிப்பதற்கான காலக்கெடுவும், இரண்டாம் அலை காரணமாக ஜூலை 15ம் தேதியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

வருமான வரி தாக்கல் செய்யும் நபர், தனது படிவம்-16ஐ, படிவம் 26 ஏ எஸ்(Traces Form 26AS) உடன் சரிபார்த்து கொண்டு பின்னர் வரி தாக்கல் செய்வது, பின்னொரு நாளில் ஏற்படும் வரி சிக்கலை தீர்க்க உதவும். 26AS என்பது தனிநபர் ஒருவரின் வரி சார்ந்த அறிக்கை விவரங்களை தெரிவிக்கும். நிறுவனம், வங்கிகள், நிதி நிறுவனங்கள் பிடித்தம் செய்த வரி விவரம், பங்குகள் மூலமான டிவிடெண்ட் தொகை, பத்திரங்கள் மற்றும் பிற வரி சார்ந்த அறிக்கைகளை படிவம் 26 ஏ எஸ் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நடப்பு மதிப்பீட்டு ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவும் ஜூலை மாதத்திலிருந்து நவம்பர் 30ம் தேதியாக மாற்றப்பட்டுள்ளது. நிறுவனங்களுக்கான கடைசி தேதியும் அக்டோபர் மாதத்திலிருந்து நவம்பர் மாதமாக சொல்லப்பட்டுள்ளது. இது மேலும் நீட்டிக்கப்படலாம் என தெரிகிறது.

நேரடி வரி மத்திய வாரியம்(CBDT) சார்பில் இம்முறை புதிய வருமான வரி தாக்கல் மென்பொருள் ஏற்படுத்தப்பட உள்ளது. இதன் காரணமாக நடப்பு ஜூன் ஒன்றாம் தேதியிலிருந்து ஜூன் 6ம் தேதி வரை வருமான வரி தாக்கல் தளம் செயல்படாது(ITR) என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. புதிய தளம் வரும் 7ம் தேதி நிறுவப்பட உள்ளது.

வருமான வரி தாக்கல் செய்யும் முறையை எளிமையாக்கவும், வரியை திரும்ப பெறுவதில்(Tax Refund) விரைவாகவும் செயல்படுத்த புதிய தளம் உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. வாடிக்கையாளர் சேவை மையம், மின்னணு அரட்டை பெட்டி(Chatbot / Live Agent) ஆகிய நவீன முறையை சேர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

வருமான வரிதாரர்கள் தங்களது வரியை செலுத்த புதிய கட்டண அமைப்புகளையும்(Net Banking, UPI, Credit Card and RTGS/NEFT from any account of Tax Payer in any bank) உருவாக்குகிறது.

மேம்படுத்தப்பட்ட மென்பொருள் நிறுவப்பட உள்ளதால் ஜூன் 6ம் தேதி வரை வரி தாக்கல் தளம் செயல்படாது எனவும், இது சார்ந்த தகவல் ஏற்கனவே அனைத்து வங்கிகள், நிதி நிறுவனங்கள், பதிவு தாரர்கள், ஜி.எஸ்.டி. அலுவலகம் மற்றும் பிற வரி சார்ந்த நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய வரி வாரியம் கூறியுள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் பொருளாதாரம் – 7.3 சதவீதமாக வீழ்ச்சி – நிதியாண்டு 2020-21

நாட்டின் பொருளாதாரம் – 7.3 சதவீதமாக வீழ்ச்சி – நிதியாண்டு 2020-21

GDP India – Contracts 7.3 Percent in FY 2020-21

2020-21ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(Gross Domestic Product) 24.4 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரம் 2020ம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் மிகுந்த பாதிப்படைந்தது. பின்னர் ஜூலை-செப்டம்பர் காலத்திலும் 7.4 சதவீதம் என்ற அளவில் வீழ்ச்சியை சந்தித்தது.

இதன் காரணமாக கடந்தாண்டு மிகப்பெரிய பொருளாதார மந்தநிலையை நாடு சந்தித்தது. பொருளாதார உலகில் பொதுவாக தொடர்ச்சியாக இரு காலாண்டுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தி எதிர்மறை வீழ்ச்சியை சந்தித்திருந்தால், அதனை பொருளாதார மந்தம்(Economic Recession) என்பர். பொருளாதார மந்தநிலையிலிருந்து சற்று மீண்டு, 2020-21ம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் நாடு 0.5 சதவீத வளர்ச்சியை பெற்றிருந்தது.

நேற்று(31-05-2021) மத்திய அரசால் வெளியிடப்பட்ட அறிக்கையில் நான்காம் காலாண்டின் முடிவில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.6 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக கடந்த நிதியாண்டில்(ஏப்ரல் 2020 – மார்ச் 2021) நாட்டின் பொருளாதாரம் 7.3 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

பெருந்தொற்று காலத்திற்கு முன்பிருந்து(Pre Pandemic) சற்று சுணக்கமாக இருந்த நாட்டின் பொருளாதாரம், கொரோனா பொருளாதார வீழ்ச்சிக்கு பின்பு, தற்போது வளர்ச்சி பாதைக்குள் நுழைந்துள்ளது. எனினும் இரண்டாம் அலையால் ஏற்பட்டு வரும் பொருளாதார இழப்பு மற்றும் மூன்றாம் அலைக்கான எதிர்பார்ப்பு ஆகியவை நடப்பு நிதியாண்டின் பொருளாதாரத்தில் தெரிய வரும்.

2020-21ம் ஆண்டின் நான்காம் காலாண்டில் சந்தை எதிர்பார்த்த ஒரு சதவீத வளர்ச்சியை காட்டிலும் 1.6 சதவீத வளர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. சொல்லப்பட்ட காலாண்டில் தனியார் பங்களிப்பு 2.7 சதவீதம் மற்றும் அரசு பங்களிப்பு 28.3 சதவீதம் என மொத்த செலவில் இருந்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டின் நான்காம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது சொல்லப்பட்ட மதிப்பு சாதகமாக இருந்துள்ளது.

ஏற்றுமதி-இறக்குமதி, உற்பத்தி மற்றும் உட்கட்டமைப்பு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி அமைந்துள்ளது. ஆசியாவின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமாக சொல்லப்படும் நம் நாடு, கடந்த சில காலங்களாக அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதிலும், அரசு நிறுவனங்களின் பங்கு விலக்கல் நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்தி வருகிறது.

மற்ற நாடுகளை பார்க்கையில், அமெரிக்கா 3.5 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஜெர்மனி 4.9 சதவீத வீழ்ச்சி, மெக்சிகோ 8.2 சதவீத வீழ்ச்சியையும், அர்ஜென்டினா 10 சதவீத வீழ்ச்சி என்ற அளவிலும் உள்ளது. ரஷ்யா மற்றும் பிரேசில் முறையே 3.1 % மற்றும் 4.1 சதவீத வீழ்ச்சியை கூறியுள்ளது. பிரிட்டன் 9.9 சதவீத வீழ்ச்சியை சொல்லியிருந்த நிலையில், சீனா 2.3 சதவீத வளர்ச்சியை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இது போல துருக்கி நாடும் 1.8 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. ஜப்பான் 4.8 சதவீதம் மற்றும் கனடா 5.4 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. வளர்ந்த மற்றும் வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் காணும் போது, இந்தியாவின் 2020-21ம் நிதியாண்டுக்கான பொருளாதரம் சற்று மோசமாக தான் பாதிப்படைந்துள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

தங்கம் கையிருப்பு – உலகளவில் யார் முதலிடம் ?

தங்கம் கையிருப்பு – உலகளவில் யார் முதலிடம் ? 

Global Gold Reserves – Top 10 Nations in the world

தங்க கையிருப்பு(Gold Reserves) என்பது ஒரு நாட்டின் மத்திய வங்கி வைத்திருக்கும் தங்கத்தின் இருப்பு ஆகும். பொதுவாக தங்கத்தின் மீது இருப்பை கொள்வதற்கான காரணம், அந்த நாட்டின் நாணய மதிப்பை மேம்படுத்துவதற்காக அல்லது பாதுகாப்பாக இருப்பதற்கான நடவடிக்கையாகும்.

உதாரணமாக நம் நாட்டில் மத்திய வங்கியான பாரத ரிசர்வ் வங்கி நாணயத்தை(Currency Notes) அச்சடிக்கும் பணியையும், அதனை நிர்வகிக்கவும் செய்கிறது. இது போக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் மூலம் பெறப்பட்ட வைப்பு தொகையை ஒழுங்குமுறைப்படுத்த வேண்டிய வேலையும் ஒரு மத்திய வங்கிக்கு உள்ளது.

நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான பண மதிப்பையும் ஒரு அரசு கவனிக்க வேண்டியுள்ளது. மேலே சொல்லப்பட்ட ஏதேனும் ஒரு விஷயத்தில் அரசு அல்லது அந்த நாட்டின் அரசாங்கம் திவாலானால் அதனை ஈடுகட்ட உத்தரவாதம் அளிக்கும் பயன்பாடு தான் தங்கத்தை வாங்கி வைத்து கொள்வது.

ஒரு குறிப்பிட்ட வங்கி திவாலாகும் போதோ, நாம் மற்றொரு நாட்டிலிருந்து இறக்குமதி செய்த பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பணத்தை திரும்ப அளிக்க முடியாத நிலையிருந்தோ அதனை சரிக்கட்ட நம்மிடம் இருக்கும் தங்க கையிருப்பை கொண்டு நடவடிக்கையை எடுக்கலாம்.

இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக நமது குடும்பத்தினை எடுத்து கொள்ளலாம். நாம் பல வருடங்களாக அல்லது தலைமுறையாக சிறுகச்சிறுக சேர்த்து வைத்த தங்கத்தை பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. அவசர காலம் அல்லது இக்கட்டான சமயங்களில் தான் நாம் அதனை அடமானம் வைக்க அல்லது விற்க முற்படுவோம். இதனை போன்று தான் அரசும் செய்து  வருகிறது. ஒரு நாடு கடனிலிருந்து மீள முடியாமல் இருக்கும் சமயத்தில், தங்கத்தினை அடமானம் வைத்து அல்லது விற்று அதன் நிலையை சரிசெய்யும்.

அடிக்கடி கையிருப்பில் இருக்கும் தங்கத்தை அடமானம் வைப்பது வீட்டிற்கும், நாட்டின் அரசுக்கும் சரியான திட்டமிடல் கிடையாது. அவை பண நிர்வாகத்தை சீர்குலைக்கும். மிகவும் அரிதான நிலையில் மட்டுமே அவை பயன்படுத்தப்படுகிறது. மற்ற வேளைகளில் நாம் தங்க கையிருப்பை அதிகரிப்பதே சிறந்த முறை.

நம் நாட்டில் தங்கத்தின் பயன்பாடு சற்று அதிகம் என்று சொல்லலாம். தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது நாம் அதிகமாக தங்கத்தை வாங்குவது என்றால் அது மட்டுமே காரணம் இல்லை. உண்மையில் நாம் தங்கத்தை அமெரிக்க டாலர் மதிப்பில் இறக்குமதி செய்து வருகிறோம். எனவே அமெரிக்க டாலரின் மதிப்பு எப்போதும் உயர்ந்திருக்கும் ஒரு நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக தங்கத்தின் விலை பெரும்பாலும் குறைவதில்லை. இதுபோக உள்நாட்டில் நிலவும் தங்கத்தின் மீதான வரி விதிப்புகளும் அதன் சில்லரை விலையை உயர்த்தி வருகிறது.

ஆபரணம் அல்லது அணிகலன்களாக நமக்கு தேவைப்படாத நிலையில், தங்கத்தை மின்னணு முறையில்(Gold Fund, Gold ETF, Gold Bond) வாங்குவது தான் சிறந்தது. அதற்காக மோசடி நிறுவனங்களிடம் சிக்கி கொள்ளாதீர்கள். உலகளவில் தங்கத்தின் மீதான வர்த்தகம் என சொல்லிக்கொண்டு பல மோசடி கும்பல்கள் செய்து வருகிறது கவனிக்கத்தக்கது. அரசு ஒழுங்குமுறை படுத்தப்பட்ட திட்டத்தின் மூலம் மட்டும் தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது.

தங்கத்தின் மீதான கையிருப்பை வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் தான் அதிகரித்து வருகிறது. உள்நாட்டில் தங்கத்தின் தேவை அதிகமாக காணப்பட்டாலும், நாம் பெரும்பாலும் இறக்குமதி தான் செய்து வருகிறோம். கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்தாண்டு தங்கத்தின் மீதான பல்வேறு நாடுகளின் கையிருப்பு கணிசமாக குறைந்திருந்தது. இருப்பினும் அவற்றின் விலை கடந்த வருடம் அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 2021 மாத முடிவின் படி, உலகளவில் தங்கம் கையிருப்பில் முதலிடத்தில் உள்ள நாடு – அமெரிக்கா. சுமார் 8,134 டன் அளவை அமெரிக்க நாடு தனது தங்க கையிருப்பாக கொண்டுள்ளது. இரண்டாம் இடத்தில் 3,364 டன் மதிப்புடன் ஜெர்மனியும், மூன்றாவது இடத்தில் இத்தாலி 2,452 டன்களுடனும் உள்ளது.

நான்காம் இடத்தில் 2,436 டன்களுடன் பிரான்ஸ், ரஷ்யா சுமார் 2,300 டன்களுடன் ஐந்தாம் இடத்திலும், ஆறாம் இடத்தில் 1,948 டன்களுடன் சீனாவும் உள்ளது. ஏழாம் இடத்தில் சுவிட்ஸர்லாந்து 1,040 டன்களுடனும், எட்டாமிடத்தில் ஜப்பான் 765 டன்கள் என்ற அளவுடனும் உள்ளது.

ஒன்பதாவது இடத்தில் இந்தியா 658 டன் தங்க கையிருப்புடன் உள்ளது. பத்தாவது இடத்தில் 613 டன் மதிப்புடன் நெதர்லாந்து நாடு உள்ளது கவனிக்கத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

வருகிறது தங்கத்திற்கான வர்த்தக சந்தை – செபியின் புதிய திட்டம்

வருகிறது தங்கத்திற்கான வர்த்தக சந்தை  – செபியின் புதிய திட்டம் 

India’s Gold Exchange – SEBI’s Proposed framework

கடந்த 2018-19ம் நிதியாண்டின் மத்திய பட்ஜெட் தாக்கலில் தங்கத்திற்கான ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தையை நிறுவுவதற்கான யோசனை சொல்லப்பட்டிருந்தது. இதனையே நடப்பு 2021-22 நிதியாண்டின் பட்ஜெட்டில் நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள் முன்மொழிந்தார். தங்க முதலீட்டிற்கான தனி வர்த்தக சந்தையை உள்நாட்டில் அமைப்பதும், பொருட்சந்தைக்கான(Commodity Market) நிலையை வலுப்படுத்தவும் பேசப்பட்டது.

பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி திங்கட்கிழமை(17-05-2021) அன்று முன்மொழியப்பட்ட கட்டமைப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அவற்றில் சொல்லப்பட்டதாவது, ‘தங்க பரிவர்த்தனைக்கான தனி சந்தையை உருவாக்குவதென்றும், தங்க பரிமாற்றத்தை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான வரைவு செபி(வால்ட் மேலாளர்கள்) விதிமுறைகள் 2021 ஏற்படுத்த வேண்டும்’.

இது சார்ந்த கருத்துக்களை கேட்க செபி மூலம் அறிக்கை வெளியிடப்பட்டது. உலக தங்க சந்தையில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவமானது. நாம் பெரும்பாலும் தங்கத்தின் இறக்குமதியை சார்ந்தே இருந்து வருகிறோம். ஆண்டுக்கு தோராயமாக 900 டன் அளவில் நாட்டின் தங்க இறக்குமதி தேவை உள்ளது.

இந்த புதிய சந்தை வரும் நிலையில், தனிநபர் ஒருவரிடம் உள்ள தங்கத்தை(Physical Gold) தங்கச்சந்தையின் மூலம் மின்னணு முறையிலான தங்கமாக மாற்றி கொள்ளலாம். மின்னணு முறையிலான தங்கம், இந்த சந்தையில் வர்த்தகமாகும். புதிதாக ஒருவர் தங்கச்சந்தையின் மூலமும் மின்னணு முறையில் தங்கத்தை வாங்கலாம், விற்கலாம்.

பின்னர் நமக்கு தேவைப்படும் காலத்தில், மின்னணு முறையிலிருந்து தங்கமாக(Physical Gold) மாற்றி பெற்று கொள்ளலாம். தற்போது பொருட்சந்தையில் வர்த்தகமாகும் மற்றும் பிற சந்தைகளில் உள்ள தங்கத்தின் மீதான வர்த்தகம், சொல்லப்பட்ட சந்தைக்கு பின்பு நடைமுறையில் இருக்குமா, வரி விதிப்புகள் எப்படி, பணப்புழக்கம் போன்ற விவரங்கள் வரக்கூடிய காலங்களில் தெரிய வரலாம்.

Electronic Gold Receipt Exchange

புதிய தங்கச்சந்தையில் தனிநபர் மட்டுமில்லாது சில்லறை முதலீட்டாளர்கள், நகைக்கடை விநியோகஸ்தர்கள், வங்கிகள், பெரு முதலீட்டாளர்கள் மற்றும்  அன்னிய முதலீட்டாளர்கள் போன்றோர்களும் வர்த்தகம் செய்யலாம். இதனை பற்றிய மற்ற விவரங்களை மத்திய அரசு வெளியிடும் நிலையில் நாம் அறிந்து கொள்ளலாம்.

வாழ்க  வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பிரின்ஸ் பைப்ஸ் நான்காம் காலாண்டு முடிவுகள் – ரூ.97 கோடி நிகர லாபம்

பிரின்ஸ் பைப்ஸ் நான்காம் காலாண்டு முடிவுகள் – ரூ.97 கோடி நிகர லாபம் 

Prince pipes reported a Net Profit of Rs.97 Crore – Q4FY21

1987ம் ஆண்டு துவங்கப்பட்ட பிரின்ஸ் பைப்ஸ் நிறுவனம் பாலிமர் குழாய்கள் உற்பத்தியில் தொழில் செய்து வருகிறது. பி.வி.சி. பைப்புகளில் முன்னணி நிறுவனமாகவும், பாலிமர் பிரிவில் 30 வருடங்களுக்கு மேலான அனுபவத்தையும் கொண்டிருக்கிறது பிரின்ஸ் பைப்ஸ். யூ.பி.வி.சி.(UPVC), சி.பி.வி.சி., பி.பி.ஆர். மற்றும் பி.பி.(PP) ரக பிரிவில் குழாய்கள் உற்பத்தி மற்றும் பொருத்துதலை முக்கிய பணியாக கொண்டுள்ளது.

பிரின்ஸ் பைப்ஸ் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு ரூ.6,300 கோடி. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பங்கு ஒன்றுக்கு 75 ரூபாய் விலையில் வர்த்தகமாகி கொண்டிருந்த இந்த பங்கு, தற்போது பங்கு ஒன்றுக்கு 600 ரூபாய்க்கு அருகில் வர்த்தகமாகி வருகிறது. நிறுவனத்தின் கடன்-பங்கு விகிதம் 0.08 ஆகவும், வட்டி பாதுகாப்பு விகிதம்(Interest Coverage Ratio – ICR) 16 மடங்குகளிலும் உள்ளது.

நிறுவனர்களின் பங்களிப்பு 63 சதவீதமாகவும், நிறுவனர்கள் சார்பில் பங்குகள் அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை. 2020-21ம் நிதியாண்டின் மார்ச் மாத நான்காம் காலாண்டில்(Quarterly results) வருவாய் 761 கோடி ரூபாயாகவும், செலவினம் 615 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.97 கோடி.

நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு 933 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது. 2020-21ம் நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக வருவாய் 2,072 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ.1,710 கோடியாக உள்ளது. மார்ச் 2021ம் ஆண்டின் முடிவில் நிறுவனம் 222 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இதற்கு முந்தைய வருடத்துடன் ஒப்பிடுகையில், தற்போதைய லாபம் இரு மடங்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஐந்து வருட காலத்தில் நிறுவனத்தின் விற்பனை 16 சதவீதமும், லாபம் 49 சதவீதமும் வளர்ச்சி பெற்றுள்ளது. பிளம்பிங், நிலத்தடி, கழிவுநீர், விவசாய போர்வெல், நீரேற்றம், கேபிள் குழாய் மற்றும் பிற தொழிற்துறைக்கான தேவையையும் பிரின்ஸ் பைப்ஸ் செய்து வருகிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com