நாட்டின் பொருளாதாரம் – 7.3 சதவீதமாக வீழ்ச்சி – நிதியாண்டு 2020-21
GDP India – Contracts 7.3 Percent in FY 2020-21
2020-21ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(Gross Domestic Product) 24.4 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரம் 2020ம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் மிகுந்த பாதிப்படைந்தது. பின்னர் ஜூலை-செப்டம்பர் காலத்திலும் 7.4 சதவீதம் என்ற அளவில் வீழ்ச்சியை சந்தித்தது.
இதன் காரணமாக கடந்தாண்டு மிகப்பெரிய பொருளாதார மந்தநிலையை நாடு சந்தித்தது. பொருளாதார உலகில் பொதுவாக தொடர்ச்சியாக இரு காலாண்டுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தி எதிர்மறை வீழ்ச்சியை சந்தித்திருந்தால், அதனை பொருளாதார மந்தம்(Economic Recession) என்பர். பொருளாதார மந்தநிலையிலிருந்து சற்று மீண்டு, 2020-21ம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் நாடு 0.5 சதவீத வளர்ச்சியை பெற்றிருந்தது.
நேற்று(31-05-2021) மத்திய அரசால் வெளியிடப்பட்ட அறிக்கையில் நான்காம் காலாண்டின் முடிவில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.6 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக கடந்த நிதியாண்டில்(ஏப்ரல் 2020 – மார்ச் 2021) நாட்டின் பொருளாதாரம் 7.3 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
பெருந்தொற்று காலத்திற்கு முன்பிருந்து(Pre Pandemic) சற்று சுணக்கமாக இருந்த நாட்டின் பொருளாதாரம், கொரோனா பொருளாதார வீழ்ச்சிக்கு பின்பு, தற்போது வளர்ச்சி பாதைக்குள் நுழைந்துள்ளது. எனினும் இரண்டாம் அலையால் ஏற்பட்டு வரும் பொருளாதார இழப்பு மற்றும் மூன்றாம் அலைக்கான எதிர்பார்ப்பு ஆகியவை நடப்பு நிதியாண்டின் பொருளாதாரத்தில் தெரிய வரும்.
2020-21ம் ஆண்டின் நான்காம் காலாண்டில் சந்தை எதிர்பார்த்த ஒரு சதவீத வளர்ச்சியை காட்டிலும் 1.6 சதவீத வளர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. சொல்லப்பட்ட காலாண்டில் தனியார் பங்களிப்பு 2.7 சதவீதம் மற்றும் அரசு பங்களிப்பு 28.3 சதவீதம் என மொத்த செலவில் இருந்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டின் நான்காம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது சொல்லப்பட்ட மதிப்பு சாதகமாக இருந்துள்ளது.
ஏற்றுமதி-இறக்குமதி, உற்பத்தி மற்றும் உட்கட்டமைப்பு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி அமைந்துள்ளது. ஆசியாவின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமாக சொல்லப்படும் நம் நாடு, கடந்த சில காலங்களாக அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதிலும், அரசு நிறுவனங்களின் பங்கு விலக்கல் நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்தி வருகிறது.
மற்ற நாடுகளை பார்க்கையில், அமெரிக்கா 3.5 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஜெர்மனி 4.9 சதவீத வீழ்ச்சி, மெக்சிகோ 8.2 சதவீத வீழ்ச்சியையும், அர்ஜென்டினா 10 சதவீத வீழ்ச்சி என்ற அளவிலும் உள்ளது. ரஷ்யா மற்றும் பிரேசில் முறையே 3.1 % மற்றும் 4.1 சதவீத வீழ்ச்சியை கூறியுள்ளது. பிரிட்டன் 9.9 சதவீத வீழ்ச்சியை சொல்லியிருந்த நிலையில், சீனா 2.3 சதவீத வளர்ச்சியை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இது போல துருக்கி நாடும் 1.8 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. ஜப்பான் 4.8 சதவீதம் மற்றும் கனடா 5.4 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. வளர்ந்த மற்றும் வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் காணும் போது, இந்தியாவின் 2020-21ம் நிதியாண்டுக்கான பொருளாதரம் சற்று மோசமாக தான் பாதிப்படைந்துள்ளது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை