ஆறு மாத உயர்வாக நாட்டின் சில்லரை விலை பணவீக்கம்
India’s Retail Inflation increased to 6.3 Percent in May 2021
நுகர்வோர் விலை பணவீக்கம் என சொல்லப்படும் சில்லரை விலை பணவீக்கம்(CPI – Consumer Price Index) நாட்டின் பொருளாதார காரணிகளில் முக்கியமானவையாக பார்க்கப்படுகிறது. 2020ம் ஆண்டின் டிசம்பர் மாதத்திலிருந்து 6 சதவீதத்திற்கு குறைவாக பணவீக்கம் இருந்த நிலையில், கடந்த மே மாதம் சந்தை வல்லுநர்கள் எதிர்பார்த்த அளவை விட பணவீக்கம் அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது.
நடப்பாண்டின் மே மாதத்தில் நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் 6.3 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. இது ஏப்ரல் மாதத்தில் 4.23 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பால் சொல்லப்பட்ட பணவீக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
மே மாதத்தில் எண்ணெய் மற்றும் கொழுப்பு வகைகள் 31 சதவீதமும், பழவகைகள் 12 சதவீதமும், பருப்பு வகைகள் 9.39 சதவீதம் என்ற அளவிலும் விலை அதிகரித்துள்ளது. இது போக ஒளி மற்றும் எரிபொருட்களின்(Fuel & Lights) விலையும் 11.58 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டுள்ளது.
புகையிலை பொருட்கள் 10 சதவீதமும், துணிமணி மற்றும் காலணிகள் 5.32 சதவீதமாக உள்ளது. 2021-22ம் நிதியாண்டுக்கான நாட்டின் சில்லரை விலை பணவீக்கம்(Retail Inflation) சராசரியாக 5.1 சதவீதமாக இருக்கலாம் என பாரத ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது.
கடந்த சில காலங்களாக கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருட்களின் விலை அதிகரித்து வருவது, பணவீக்கம் அதிகரிப்பதற்கான காரணமாக இருந்து வருகிறது. சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த இரண்டு வருடங்களில் காணப்படாத அளவாக தற்போது உள்ளது.
அமெரிக்கா போன்ற வளர்ந்த மற்றும் பிற வளரும் நாடுகளில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டால் அது பங்குச்சந்தைக்கு பாதகமாக அமையும். எனினும் இது சார்ந்த விஷயங்களில் அமெரிக்காவின் மத்திய வங்கி(US Fed) மிகுந்த எச்சரிக்கையை கொண்டுள்ளது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை