தங்கம் கையிருப்பு – உலகளவில் யார் முதலிடம் ?
Global Gold Reserves – Top 10 Nations in the world
தங்க கையிருப்பு(Gold Reserves) என்பது ஒரு நாட்டின் மத்திய வங்கி வைத்திருக்கும் தங்கத்தின் இருப்பு ஆகும். பொதுவாக தங்கத்தின் மீது இருப்பை கொள்வதற்கான காரணம், அந்த நாட்டின் நாணய மதிப்பை மேம்படுத்துவதற்காக அல்லது பாதுகாப்பாக இருப்பதற்கான நடவடிக்கையாகும்.
உதாரணமாக நம் நாட்டில் மத்திய வங்கியான பாரத ரிசர்வ் வங்கி நாணயத்தை(Currency Notes) அச்சடிக்கும் பணியையும், அதனை நிர்வகிக்கவும் செய்கிறது. இது போக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் மூலம் பெறப்பட்ட வைப்பு தொகையை ஒழுங்குமுறைப்படுத்த வேண்டிய வேலையும் ஒரு மத்திய வங்கிக்கு உள்ளது.
நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான பண மதிப்பையும் ஒரு அரசு கவனிக்க வேண்டியுள்ளது. மேலே சொல்லப்பட்ட ஏதேனும் ஒரு விஷயத்தில் அரசு அல்லது அந்த நாட்டின் அரசாங்கம் திவாலானால் அதனை ஈடுகட்ட உத்தரவாதம் அளிக்கும் பயன்பாடு தான் தங்கத்தை வாங்கி வைத்து கொள்வது.
ஒரு குறிப்பிட்ட வங்கி திவாலாகும் போதோ, நாம் மற்றொரு நாட்டிலிருந்து இறக்குமதி செய்த பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பணத்தை திரும்ப அளிக்க முடியாத நிலையிருந்தோ அதனை சரிக்கட்ட நம்மிடம் இருக்கும் தங்க கையிருப்பை கொண்டு நடவடிக்கையை எடுக்கலாம்.
இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக நமது குடும்பத்தினை எடுத்து கொள்ளலாம். நாம் பல வருடங்களாக அல்லது தலைமுறையாக சிறுகச்சிறுக சேர்த்து வைத்த தங்கத்தை பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. அவசர காலம் அல்லது இக்கட்டான சமயங்களில் தான் நாம் அதனை அடமானம் வைக்க அல்லது விற்க முற்படுவோம். இதனை போன்று தான் அரசும் செய்து வருகிறது. ஒரு நாடு கடனிலிருந்து மீள முடியாமல் இருக்கும் சமயத்தில், தங்கத்தினை அடமானம் வைத்து அல்லது விற்று அதன் நிலையை சரிசெய்யும்.
அடிக்கடி கையிருப்பில் இருக்கும் தங்கத்தை அடமானம் வைப்பது வீட்டிற்கும், நாட்டின் அரசுக்கும் சரியான திட்டமிடல் கிடையாது. அவை பண நிர்வாகத்தை சீர்குலைக்கும். மிகவும் அரிதான நிலையில் மட்டுமே அவை பயன்படுத்தப்படுகிறது. மற்ற வேளைகளில் நாம் தங்க கையிருப்பை அதிகரிப்பதே சிறந்த முறை.
நம் நாட்டில் தங்கத்தின் பயன்பாடு சற்று அதிகம் என்று சொல்லலாம். தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது நாம் அதிகமாக தங்கத்தை வாங்குவது என்றால் அது மட்டுமே காரணம் இல்லை. உண்மையில் நாம் தங்கத்தை அமெரிக்க டாலர் மதிப்பில் இறக்குமதி செய்து வருகிறோம். எனவே அமெரிக்க டாலரின் மதிப்பு எப்போதும் உயர்ந்திருக்கும் ஒரு நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக தங்கத்தின் விலை பெரும்பாலும் குறைவதில்லை. இதுபோக உள்நாட்டில் நிலவும் தங்கத்தின் மீதான வரி விதிப்புகளும் அதன் சில்லரை விலையை உயர்த்தி வருகிறது.
ஆபரணம் அல்லது அணிகலன்களாக நமக்கு தேவைப்படாத நிலையில், தங்கத்தை மின்னணு முறையில்(Gold Fund, Gold ETF, Gold Bond) வாங்குவது தான் சிறந்தது. அதற்காக மோசடி நிறுவனங்களிடம் சிக்கி கொள்ளாதீர்கள். உலகளவில் தங்கத்தின் மீதான வர்த்தகம் என சொல்லிக்கொண்டு பல மோசடி கும்பல்கள் செய்து வருகிறது கவனிக்கத்தக்கது. அரசு ஒழுங்குமுறை படுத்தப்பட்ட திட்டத்தின் மூலம் மட்டும் தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது.
தங்கத்தின் மீதான கையிருப்பை வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் தான் அதிகரித்து வருகிறது. உள்நாட்டில் தங்கத்தின் தேவை அதிகமாக காணப்பட்டாலும், நாம் பெரும்பாலும் இறக்குமதி தான் செய்து வருகிறோம். கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்தாண்டு தங்கத்தின் மீதான பல்வேறு நாடுகளின் கையிருப்பு கணிசமாக குறைந்திருந்தது. இருப்பினும் அவற்றின் விலை கடந்த வருடம் அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 2021 மாத முடிவின் படி, உலகளவில் தங்கம் கையிருப்பில் முதலிடத்தில் உள்ள நாடு – அமெரிக்கா. சுமார் 8,134 டன் அளவை அமெரிக்க நாடு தனது தங்க கையிருப்பாக கொண்டுள்ளது. இரண்டாம் இடத்தில் 3,364 டன் மதிப்புடன் ஜெர்மனியும், மூன்றாவது இடத்தில் இத்தாலி 2,452 டன்களுடனும் உள்ளது.
நான்காம் இடத்தில் 2,436 டன்களுடன் பிரான்ஸ், ரஷ்யா சுமார் 2,300 டன்களுடன் ஐந்தாம் இடத்திலும், ஆறாம் இடத்தில் 1,948 டன்களுடன் சீனாவும் உள்ளது. ஏழாம் இடத்தில் சுவிட்ஸர்லாந்து 1,040 டன்களுடனும், எட்டாமிடத்தில் ஜப்பான் 765 டன்கள் என்ற அளவுடனும் உள்ளது.
ஒன்பதாவது இடத்தில் இந்தியா 658 டன் தங்க கையிருப்புடன் உள்ளது. பத்தாவது இடத்தில் 613 டன் மதிப்புடன் நெதர்லாந்து நாடு உள்ளது கவனிக்கத்தக்கது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை