வருகிறது தங்கத்திற்கான வர்த்தக சந்தை – செபியின் புதிய திட்டம்
India’s Gold Exchange – SEBI’s Proposed framework
கடந்த 2018-19ம் நிதியாண்டின் மத்திய பட்ஜெட் தாக்கலில் தங்கத்திற்கான ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தையை நிறுவுவதற்கான யோசனை சொல்லப்பட்டிருந்தது. இதனையே நடப்பு 2021-22 நிதியாண்டின் பட்ஜெட்டில் நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள் முன்மொழிந்தார். தங்க முதலீட்டிற்கான தனி வர்த்தக சந்தையை உள்நாட்டில் அமைப்பதும், பொருட்சந்தைக்கான(Commodity Market) நிலையை வலுப்படுத்தவும் பேசப்பட்டது.
பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி திங்கட்கிழமை(17-05-2021) அன்று முன்மொழியப்பட்ட கட்டமைப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அவற்றில் சொல்லப்பட்டதாவது, ‘தங்க பரிவர்த்தனைக்கான தனி சந்தையை உருவாக்குவதென்றும், தங்க பரிமாற்றத்தை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான வரைவு செபி(வால்ட் மேலாளர்கள்) விதிமுறைகள் 2021 ஏற்படுத்த வேண்டும்’.
இது சார்ந்த கருத்துக்களை கேட்க செபி மூலம் அறிக்கை வெளியிடப்பட்டது. உலக தங்க சந்தையில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவமானது. நாம் பெரும்பாலும் தங்கத்தின் இறக்குமதியை சார்ந்தே இருந்து வருகிறோம். ஆண்டுக்கு தோராயமாக 900 டன் அளவில் நாட்டின் தங்க இறக்குமதி தேவை உள்ளது.
இந்த புதிய சந்தை வரும் நிலையில், தனிநபர் ஒருவரிடம் உள்ள தங்கத்தை(Physical Gold) தங்கச்சந்தையின் மூலம் மின்னணு முறையிலான தங்கமாக மாற்றி கொள்ளலாம். மின்னணு முறையிலான தங்கம், இந்த சந்தையில் வர்த்தகமாகும். புதிதாக ஒருவர் தங்கச்சந்தையின் மூலமும் மின்னணு முறையில் தங்கத்தை வாங்கலாம், விற்கலாம்.
பின்னர் நமக்கு தேவைப்படும் காலத்தில், மின்னணு முறையிலிருந்து தங்கமாக(Physical Gold) மாற்றி பெற்று கொள்ளலாம். தற்போது பொருட்சந்தையில் வர்த்தகமாகும் மற்றும் பிற சந்தைகளில் உள்ள தங்கத்தின் மீதான வர்த்தகம், சொல்லப்பட்ட சந்தைக்கு பின்பு நடைமுறையில் இருக்குமா, வரி விதிப்புகள் எப்படி, பணப்புழக்கம் போன்ற விவரங்கள் வரக்கூடிய காலங்களில் தெரிய வரலாம்.
புதிய தங்கச்சந்தையில் தனிநபர் மட்டுமில்லாது சில்லறை முதலீட்டாளர்கள், நகைக்கடை விநியோகஸ்தர்கள், வங்கிகள், பெரு முதலீட்டாளர்கள் மற்றும் அன்னிய முதலீட்டாளர்கள் போன்றோர்களும் வர்த்தகம் செய்யலாம். இதனை பற்றிய மற்ற விவரங்களை மத்திய அரசு வெளியிடும் நிலையில் நாம் அறிந்து கொள்ளலாம்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை