Category Archives: Paisa News

Paisa News – News about Business and Finance

நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் 3.21 சதவீதமாக உயர்வு

நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் 3.21 சதவீதமாக உயர்வு

India’s Retail Inflation rises to 3.21 Percent in August 2019

நாட்டின் நுகர்வோர் விலை பணவீக்கம் என்று சொல்லப்படும் சில்லரை பணவீக்கம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 3.21 சதவீதமாக இருந்துள்ளது. இது கடந்த ஜூலை மாதத்தில் 3.15 சதவீதமாகவும், கடந்த 2018ம் வருடம் இதே காலத்தில் 3.18 சதவீதமாகவும் இருந்தது.

இருப்பினும் சந்தை எதிர்பார்த்த 3.30 சதவீதம் என்ற அளவை எட்டவில்லை. அதே வேளையில் பாரத ரிசர்வ் வங்கியின்(RBI) நடுத்தர கால இலக்கான 4 சதவீத பணவீக்கம் என்ற அளவிற்குள் உள்ளது பொருளாதாரத்திற்கு சாதகமானது. கடந்த 13 மாத காலமாக நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் 4 சதவீதம் என்ற அளவை தாண்டவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

உணவு பொருட்களின்(Food Prices) விலை உயர்வால் தற்போது சொல்லப்பட்ட பணவீக்க அளவு அதிகரித்துள்ளது. மாமிசம் மற்றும் மீன் வகைகள் 8.51 சதவீதமும், காய்கறிகள் 6.90 சதவீதமும், பருப்பு வகைகள் 6.94 சதவீதம் என்ற அளவிலும் உயர்ந்துள்ளது. எண்ணெய் மற்றும் கொழுப்பு, பால் சார்ந்த பொருட்களின் விலையும் சிறிய அளவில் ஏற்றம் பெற்றுள்ளது.

அதே வேளையில் பழங்கள் மற்றும் சர்க்கரை வகைகளின் பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் சரிந்துள்ளது. கிராமப்புற பணவீக்கம்(Rural Inflation) 2.18 சதவீதமாகவும், நகர்புறத்தில்(Urban) 4.49 சதவீதம் என்ற அளவிலும் சொல்லப்பட்டுள்ளது. மாதாந்திர அடிப்படையில் நுகர்வோர் விலை 0.49 சதவீதம் அதிகரித்துள்ளது. இது கடந்த ஜூலை மாதம் 0.91 சதவீதமாக உயர்ந்துள்ளது.

நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம்(Unemployment rate) கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 8.19 சதவீதமாக அதிகரித்துள்ளது கவலை அளிக்கிறது. நகர்புறத்தில் 9.71 சதவீதமும், கிராமப்புறத்தில் 7.48 சதவீதம் என்ற அளவிலும் வேலைவாய்ப்பின்மை நிலவுகிறது. இருப்பினும், தொழிற்துறை உற்பத்தி குறியீடு(Industrial Production) கடந்த ஜூலை மாதத்தில் 4.3 சதவீதமாக கூறப்பட்டுள்ளது சாதகமான விஷயம்.

கடந்த ஜூன் மாத தொழிற்துறை உற்பத்தி குறியீடு(IIP) 1.2 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு வருட காலத்தில் அதிகபட்சமாக 2018ம் வருடம் அக்டோபர் மாதத்தில் 8.4 சதவீதமாக இருந்துள்ளது.

நாட்டின் நுகர்வோர் விலை பணவீக்கம் கடந்த 2012ம் ஆண்டு முதல் சராசரியாக 6 சதவீதம் என்ற அளவில் இருந்துள்ளது. 2013ம் வருடம் நவம்பர் மாதத்தில் அதிகபட்சமாக 12.17 சதவீதமும், 2017ம் வருடத்தின் ஜூன் மாதத்தில் 1.54 சதவீதம் என்ற குறைந்த அளவிலும் இருந்தது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

11,000 கோடி ரூபாய் கடனை அடைக்கும் முனைப்பில் ஜீ நிறுவனம்

11,000 கோடி ரூபாய் கடனை அடைக்கும் முனைப்பில் ஜீ நிறுவனம் 

Rs.11K Crore Debt Reduction Process by ZEE Enterprises

மும்பையை தலைமையிடமாக கொண்ட எஸ்ஸல் குழுமத்தின்(ESSEL Group) ஒரு அங்கம் தான் ஜீ நிறுவனம். இந்த குழுமம் ஊடகங்கள், பொழுதுபோக்கு, உட்கட்டமைப்பு, கல்வி, பேக்கேஜிங்(Packaging) போன்ற தொழில்களில் ஈடுபட்டு வருகிறது. நடப்பு 2019ம் வருடத்தின் துவக்கத்தில் இந்த குழுமம் கடனை அடைக்கும் பொருட்டு ஜீ பொழுதுபோக்கு(ZEE Entertainment) நிறுவனத்தின் பங்குகளை விற்க தயாராகின.

ஐ.எல்.எப்.எஸ்.(IL & FS) நிறுவனத்தின் நிதி சிக்கலை போலவே, எஸ்ஸல் குழுமத்தின் கடன் சிக்கல் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கும், பரஸ்பர நிதி நிறுவனங்களுக்கும் பாதகமாக அமைந்தன. பரஸ்பர நிதிகளின் கடன் பத்திர முதலீடு சில காலம் ஆட்டம் காண ஆரம்பித்தது. முன்னெப்போதும் இல்லாத அளவில் பரஸ்பர நிதிகளிடம் கடன் வாங்கிய நிறுவனங்கள் குறிப்பிட்ட நாட்களில் அவற்றை அடைக்க முடியாமல் திணறின.

முதிர்வு பெற்ற திட்டங்களுக்கு முதலீட்டாளர்களிடம் பெற்ற பணத்தை கொடுக்க முடியாமல், சந்தையில் சலசலப்பை ஏற்படுத்தியது. தற்போதைய நிலையில் இது சார்ந்த பிரச்னைகள் 60-70 சதவீதம் களையப்பட்டு விட்டது எனலாம். பொதுவாக கடனை பெற்ற நிறுவனங்கள் அதனை குறிப்பிட்ட காலத்தில் அடைக்க முடியாமல் போவதும், இது சார்ந்து ரேட்டிங் நிறுவனங்கள், கடன் பெற்ற நிறுவனத்தின் தர மதிப்பீட்டை குறைப்பதும் தற்சமயம் சாதாரணமான விஷயமாக மாறி விட்டன.

ஆனால் முதலீட்டாளர்களிடையே இது நம்பகத்தன்மையை ஏற்படுத்தவில்லை. கடன் பத்திரங்களில் இந்த அளவு ரிஸ்க் இருக்கும் போது, நாம் ஏன் பங்குகள் சார்ந்த முதலீட்டில் மட்டும் இருக்க கூடாது என கடன் பத்திர முதலீடு பற்றி யோசிக்க தொடங்கினர். நடப்பு காலத்தில் பொருளாதார மந்த நிலையும் இதற்கு சான்றாக அமைந்து விட்டது.

எஸ்ஸல் குழுமத்தின் சார்பாக உள்ள கடனை குறைக்கும் பொருட்டு, இந்த மாத இறுதிக்குள் 11,000 கோடி ரூபாயை செலுத்த உள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது. இதன் மூலம் பரஸ்பர நிதிகளின் நிலுவையில் உள்ள தொகை 50-60 சதவீதம் கிடைக்கப்பெறும். இது பரஸ்பர நிதி முதலீட்டாளர்களுக்கு ஒரு சாதகமான விஷயமே. ஜீ நிறுவனம் சொல்லப்பட்ட கடனை அடைக்கும் பட்சத்தில், ஆதித்யா பிர்லா, எச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ. மற்றும் கோடக் மஹிந்திரா போன்ற பரஸ்பர நிதி நிறுவனங்களுக்கு நலன் பயக்கும்.

பரஸ்பர நிதி நிறுவனங்களின் ஜீ நிறுவனத்துடனான கடன் நிலுவை தொகையில் உத்தேசமாக கிடைக்கக்கூடிய தொகை முறையே – ஆதித்யா பிர்லா 760 கோடி ரூபாய், எச்.டி.எப்.சி.(HDFC Mutual Fund) 580 கோடி ரூபாய், ஐ.சி.ஐ.சி.ஐ. 435 கோடி ரூபாய். சமீபத்தில் கோடக் மஹிந்திரா பரஸ்பர நிதி நிறுவனத்திற்கு, ஜீ நிறுவனம் 600 கோடி ரூபாயை செலுத்தியுள்ளன. இது கோடக் மஹிந்திரா நிறுவனத்தின் கடன் நிலுவை தொகையில் சுமார் 52 சதவீதமாகும்.

சொல்லப்பட்ட 11,000 கோடி ரூபாய் கடன் அடைக்கும் இலக்கு, எஸ்ஸல் குழும நிறுவனர்களின் கடன் தொகை மட்டுமே. குழுமத்தின் துணை நிறுவன கடன் தொகையை இவற்றில் சேர்க்க வில்லை என நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

சந்தையை தாங்கி பிடிக்கும் முதலீடுகள், வாங்கி குவித்த பரஸ்பர நிதி முதலீட்டாளர்கள்

சந்தையை தாங்கி பிடிக்கும் முதலீடுகள், வாங்கி குவித்த பரஸ்பர நிதி முதலீட்டாளர்கள் 

Positive Inflows in Mutual Funds India – Economy Slowdown Time

நாட்டில் உள்ள பரஸ்பர நிதி தொழிற்துறையை மேம்படுத்துதல், பராமரித்தல் மற்றும் பரஸ்பர நிதி முதலீட்டாளர்களின் நலன்களை பாதுகாக்கும் விஷயங்களில் ஆம்ஃபி (Association of Mutual Funds in India – AMFI) அமைப்பு செயல்படுகிறது. பரஸ்பர நிதி திட்டங்கள் மற்றும் முதலீடு சார்ந்த தரவுகளை ஆம்ஃபி ஒவ்வொரு மாதமும் வெளியிட்டு வருகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய பரஸ்பர நிதி சந்தையில் முதலீடு செய்யப்பட்ட தொகை 1.02 லட்சம் கோடி ரூபாய். இது இதற்கு முந்தைய ஜூலை மாதத்தில் 87,000 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. பரஸ்பர நிதி முதலீடுகளின் சொத்து மதிப்பு ஜூலை மாதத்தில் 24.53 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் 4 சதவீதம் அதிகரித்து 25.47 லட்சம் கோடியாக இருந்துள்ளது.

நடப்பு வருட ஜூலை மாதத்தில் தங்க இ.டி.எப்.(Gold ETF) திட்டத்தில் முதலீடு எதுவும் செய்யப்படாமல் சுமார் 17 கோடி ரூபாய் வெளியேறியுள்ளது. ஆனால் ஆகஸ்ட் மாதம் இத்திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ள தொகை ரூ.145 கோடி. இண்டெக்ஸ் பண்டுகளிலும்(Index Funds) முதலீடு அதிகரித்துள்ளன. ஜூலை மாதத்தில் 224 கோடி ரூபாயாக இருந்த இண்டெக்ஸ் பண்டு முதலீடு, கடந்த மாதம் 345 கோடி ரூபாயாக உள்ளது.

சந்தை இறங்கி வரும் சூழ்நிலையில் பெருவாரியான முதலீடுகள் லிக்விட்(Liquid) மற்றும் பங்கு சார்ந்த(Equity Funds) திட்டங்களில் தான் முதலீடு செய்யப்பட்டு வருகின்றன. வங்கி சேமிப்பு கணக்கிற்கு மாற்றாக சொல்லப்படும் லிக்விட் பண்டுகளில் கடந்த ஜூலை மாதம் 45,441 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதுவே ஆகஸ்ட் மாதத்தில் 79,428 கோடி ரூபாயாக வந்துள்ளது.

பங்கு சார்ந்த திட்டங்களில் ஜூலை மாதம் ரூ. 8,112 கோடி முதலீடு வந்திருந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 9,152 கோடி ரூபாயை பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது. இது போல அல்ட்ரா ஷார்ட் (Ultra Short Duration) பண்டுகளில் ஆகஸ்ட் மாதம் 2,830 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது ஜூலை மாதம் 600 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்துள்ளது.

வரி சேமிப்பு சார்ந்த இ.எல்.எஸ்.எஸ்.(ELSS) பரஸ்பர நிதி திட்டங்களிலும் மாத அடிப்படையில் முதலீடு கணிசமாக அதிகரித்துள்ளது. ஜூலை மாதத்தில் 737 கோடி ரூபாயாக இருந்த முதலீடு ஆகஸ்ட் மாதம் 827 கோடி ரூபாயாக உள்ளது.

இருப்பினும் எஸ்.ஐ.பி.(Systematic Investment Plan – SIP) முதலீடுகள் ஆகஸ்ட் மாதத்தில் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஜூலை மாதத்தில் ரூ. 8,324 கோடியாக இருந்த எஸ்.ஐ.பி. முதலீடு, கடந்த ஆகஸ்ட் மாதம் ரூ. 8,231 கோடியாக குறைந்துள்ளது. சந்தை இறக்கத்திலும், பரஸ்பர நிதி முதலீடுகள் அதிகரித்து வருவது முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி வருகின்றன.

வாழ்க  வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

18 பொதுத்துறை வங்கிகள், 32,000 கோடி ரூபாய் மோசடி – பாரத ரிசர்வ் வங்கி தகவல்

18 பொதுத்துறை வங்கிகள், 32,000 கோடி ரூபாய் மோசடி – பாரத ரிசர்வ் வங்கி தகவல் 

Rs. 32K Crore worth of Scams in 18 PSU Banks – RBI 

சமீபத்தில் பாரத ரிசர்வ் வங்கி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கடந்த 2018-19ம் நிதியாண்டில் வங்கி மோசடி சார்பாக 3,760 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக கூறியிருந்தது. இதன் மதிப்பு சுமார் 71,500 கோடி ரூபாய் எனவும், மோசடி நடந்த வங்கிகளில் பெரும்பாலும் பொதுத்துறை வங்கிகள் தான் அதிகமுள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

2017-18ம் நிதியாண்டை காட்டிலும் 2018-19ம் நிதியாண்டில் வங்கி மோசடிகளின் அளவு 15 சதவீதம் அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது. பெரிய தொகை அளவிலான மோசடிகள் தான் அதிகம் இருந்ததாகவும், சிறிய தொகையான ரூ. 1 லட்சத்திற்கு குறைவான மோசடிகளின் (Bank Frauds) அளவு 0.1 சதவீதம் என்ற அளவில் மட்டுமே இருந்துள்ளதாகவும் பாரத ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

100 கோடி ரூபாய்க்கும் மேலான மோசடிகளை கண்டறிய வங்கிகளுக்கு நான்கு முதல் ஐந்து வருட காலம் தேவைப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளது. நடப்பு 2019-20ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் பொதுத்துறை வங்கிகளில்(PSU Banks) நடைபெற்ற மோசடி வழக்குகள் 2,480. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் 32,000 கோடி ரூபாய் எனவும், இந்த மோசடிகள் 18 பொதுத்துறை வங்கிகளில் நிகழ்ந்துள்ளதாகவும் பாரத ரிசர்வ் வாங்கி(RBI) கூறியுள்ளது.

சொல்லப்பட்ட 32,000 கோடி ரூபாய் வங்கி மோசடியில், ஸ்டேட் வங்கியில்(State Bank of India) மட்டும் சுமார் 12,000 கோடி ரூபாய் மதிப்பிலான மோசடிகள் நடைபெற்றுள்ளது. முதல் காலாண்டில் ஸ்டேட் வங்கியின் சார்பாக பதியப்பட்ட மோசடி வழக்குகளின் எண்ணிக்கை 1200 ஆகும்.

மோசடி நடைபெற்ற பொதுத்துறை வங்கிகளில் கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சிண்டிகேட், ஓரியண்டல், பரோடா மற்றும் யூனியன் வங்கி ஆகியவையும் அடக்கம். சிண்டிகேட் வங்கியில் சுமார் 800 கோடி ரூபாய் அளவிலான மோசடியும், கார்பொரேஷன்(Corporation Bank) வங்கியில் 960  கோடி ரூபாய் மதிப்பிலான மோசடியும் நடைபெற்றுள்ளது.

பரோடா(Bank of Baroda) மற்றும் ஓரியண்டல் வங்கி முறையே ரூ. 2,300 கோடி மற்றும்  2,130 கோடி ரூபாய் மதிப்பிலான மோசடிகள் 2019-20ம் நிதியாண்டின் முதலாம் காலாண்டில் நடந்துள்ளது. இதே போல் கனரா மற்றும் சென்ட்ரல் வங்கிகளிலும் சுமார் 2,000 கோடி ரூபாய் அளவிலான மோசடிகள் நடைபெற்றுள்ளது. வங்கி மோசடி சார்ந்து பாங்க் ஆப் இந்தியா வங்கியில் 42 வழக்குகளும், யூகோ வங்கியில்(UCO Bank) 34 வழக்குகளும், யூனியன் வங்கியில் 51 வழக்குகளும் பதியப்பட்டுள்ளன.

பொதுத்துறை வங்கிகள் நஷ்டத்தில் இயங்கி வருவதும், வாராக்கடன் அளவு அதிகரிப்பதும் இது போன்ற காரணங்களால் தான் என சொல்லப்பட்டிருக்கிறது. நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் மோசடிகளின் விகிதம் ஒவ்வொரு காலத்திலும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ரஷ்யாவின் தூர கிழக்கு மண்டல வளர்ச்சிக்காக 1 பில்லியன் டாலர் வழங்கப்படும் – பிரதமர் மோடி

ரஷ்யாவின் தூர கிழக்கு மண்டல வளர்ச்சிக்காக 1 பில்லியன் டாலர் வழங்கப்படும் – பிரதமர் மோடி 

USD 1 Billion for Russia’s Far East Development – PM Modi

கடந்த வியாழக்கிழமை அன்று (05-09-2019) ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் 5வது கிழக்கு பொருளாதார கூட்டமைப்பு மாநாடு துவங்கியது. இந்த பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டின் சிறப்பு விருந்தினராக இந்திய பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, ‘ இந்தியாவுக்கும், ரஷ்யாவின் தூர கிழக்கு நாடுகளுக்கும் இடையேயான உறவு ஒன்றும் புதிதல்ல. சோவியத் ரஷ்யாவின் போது மற்ற நாடுகளுக்கு கட்டுப்பாடுகள் அதிகம் இருந்த நிலையிலும், இந்திய நாட்டிற்கு விளாடிவோஸ்டாக் எப்போதும் திறந்த நிலையில் தான் இருந்தது.

விளாடிவோஸ்டாக் நகரில் (Vladivostok) தனது தூதரகத்தை திறந்த முதல் நாடு இந்தியாவாகும். தூர கிழக்கு மண்டலங்களின் வளர்ச்சியில் இந்தியா எப்போதும் துணை நிற்கும். இந்த வளர்ச்சிக்காக இரு நாட்டு ஒப்பந்தங்களின் படி, இந்தியா ரஷ்ய நாட்டிற்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடனை வழங்க முன் வருகிறது ‘ என்று பிரதமர் மோடி கூறினார்.

இந்திய நிறுவனங்கள் சார்பில் பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டின் வாயிலாக 50 ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளன. இந்த முதலீடு எரிசக்தி, கல்வி, சுகாதாரம், திறன் மேம்பாடு, மர வேலைகள் மற்றும் சுரங்க தொழில்களுக்கு பயன்படுத்தப்படும் என்ற சொல்லப்பட்டுள்ளது.

நடைபெற்ற கூட்டமைப்பு மாநாட்டில், தனது நாடு 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை வரும் 2024-25ம் ஆண்டுக்குள் அடைவது குறித்தும் பிரதமர் மோடி பேசினார். இந்தியா மற்றும் ரஷ்யா இரு நாடுகளும் எந்த நாட்டின் உள்விவகாரத்திலும் தலையிடுவதை ஏற்று கொள்ளாது எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை  

www.varthagamadurai.com

பொதுத்துறை வங்கிகள் இணைப்பு – பங்கு முதலீட்டாளர்களுக்கு சாதகமா ?

பொதுத்துறை வங்கிகள் இணைப்பு – பங்கு முதலீட்டாளர்களுக்கு சாதகமா ?

PSU Banks Merger – Is there benefits for the Investors ?

பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தெரிவித்ததை அடுத்து, இருவேறு கருத்துக்கள் நிலவி வருகிறது. ஒரு புறம் வங்கிகளின் இணைப்பு சரியானதே, இந்த இணைப்பினால் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை குறைவது மட்டுமில்லாமல், தனியார் வங்கிகளுடன் போட்டியை சமாளிக்க இது உதவ கூடும் எனவும் சொல்லப்படுகிறது.

மறுபுறம் வங்கிகளின் வாராக்கடன் சுமையை மறைக்க, வங்கி ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான நடவடிக்கையாகவும் வங்கிகள் இணைப்பு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன்(NPA)  நாட்டின் பெருவாரியான பிரச்னையாக தற்போது பார்க்கப்படுகிறது.

வங்கிகளின் வாராக்கடன் மத்திய அரசின் நிதி பற்றாக்குறையிலும்(Fiscal Deficit) தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிதி சுமையை சமாளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பாரத ரிசர்வ் வங்கியிடம் குறிப்பிட்ட தொகையை பெற்றது, வங்கிகளுக்கு மீண்டும் மீண்டும் முதலீடுகளை திரட்டுவது என வங்கி சிக்கல்களை மட்டுமே களையும் நிலை உள்ளது.

வங்கிகளின் இணைப்பில் அரசு நடவடிக்கையை மேற்கொண்டாலும், பங்கு முதலீட்டாளராக உள்ள ஒருவருக்கு இந்த வங்கிகள் இணைப்பு பயன் தருமா என்பது தான் கேள்வியாக உள்ளது. தற்போதைய நிலையில் ஓரளவு வருவாய் ஈட்டி கொண்டிருக்கும் பொதுத்துறை வங்கியுடன், நஷ்டத்தில் இருக்கும் வங்கியை தான் அரசு இணைக்க முடிவு செய்துள்ளது.

கடந்த சில வருடங்களாக பெரும்பாலான பொதுத்துறை வங்கிகள் நஷ்டத்தில் தான் இயங்கி கொண்டிருக்கின்றன. இதற்கு காரணமாக வாராக்கடன் சுமை என சொல்லப்படுகிறது. மேலும் தற்போதைய சூழ்நிலையில் வங்கிகளின் சேவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக வங்கி சேவை தவிர காப்பீடு, பரஸ்பர நிதி(Mutual Funds) மற்றும் பங்கு சார்ந்த சேவைகளும் வங்கிகளில் வழங்கப்படுகிறது. இதன் தாக்கம் வங்கிகளில் எந்தளவு மாற்றத்தை ஏற்படுத்தும் என தெரியவில்லை.

பங்கு முதலீட்டாளர்களை பொறுத்தவரை, தற்போது பொதுத்துறை வங்கிகளில் முதலீடு செய்வது சாதகமாக இருக்குமா என கேட்டால், சந்தேகம் தான். பொதுவாக வங்கிகளின் சேவை மற்றும் அதனை சார்ந்த நிதி அறிக்கைகளை ஆராய்வது அவ்வளவு எளிதல்ல. ஒரு எளிய முதலீட்டாளராக நாம் வாகன துறை அல்லது தொழில்நுட்ப துறை சார்ந்த நிறுவனத்தின் நிதி அறிக்கையை எளிமையாக அலசலாம். ஆனால் நிதி சார்ந்த நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் நிதி அறிக்கையை முழுமையாக அலசுவது என்பது கடினம் தான்.

அவ்வாறு இருக்க, வங்கிகளின் இணைப்பில்(Merger of PSU Banks) நமக்கு கிடைக்க பெறும் தகவல்கள் புரிந்து கொள்ளும் முறையில் இருக்குமா என்பது கேள்விக்குறி தான். பொதுத்துறை வங்கிகளின் இணைப்பு நிறைவேறும் பட்சத்தில், அடுத்த சில காலங்களுக்கு அந்த பங்கு அதிக ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகலாம். ஆனால் நீண்ட காலத்தில் முதலீட்டாளருக்கு வருவாயை கொடுக்கும் நிலையில் இருக்குமா என்பது சந்தேகமே.

இணைப்பிற்கு பிறகான சேவையின் வெளிப்பாடு அதன் வருவாயில் தெரிய வரும். தொடர்ச்சியான லாபத்தில் இயங்க வங்கிகளுக்கு கால அவகாசம் தேவைப்படும். வாராக்கடன் நிலை எவ்வாறான நிலையை பெறுகிறது என்பதை நாம் உடனடியாக அறிய முடியாது. தனியார் வங்கி எனில், அவை வாராக்கடன் என்ற நிலையையும் தாண்டி, நஷ்டத்தை அறிவிக்க தயாராக இருக்கும். தங்களுக்கு தேவையான முதலீட்டை திரட்டி மீண்டும் லாபத்திற்கு திரும்புவது இயல்பு. ஆனால் பொதுத்துறை வங்கிகளை பொறுத்தவரை அரசு கொள்கைகளில் அது மாற்றத்தை பெறும்.

பங்குச்சந்தை இறங்கி கொண்டிருக்கும் தற்சமயத்தில், நல்ல நிறுவன பங்குகளை ஆராய்ந்து சரியான விலையில் வாங்குவதே சிறந்தது. பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படுகிறது, அவை குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதற்காக உண்மையான மதிப்பை(Valuation) அறியாமல் முதலீடு செய்வதை தவிர்க்கலாம். பொதுத்துறை வங்கி பங்குகளில் முதலீடு செய்ய விரும்புவோர், பரஸ்பர நிதி திட்டங்களின் வாயிலாக முதலீடு செய்யலாம். இதன் மூலம் அவர்களுக்கான ரிஸ்க் குறைந்து, முதலீடு பரவலாக்கம் செய்யப்படலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இந்திய பொருளாதார வளர்ச்சி குறைவு – ஒரு சிறு பார்வை

இந்திய பொருளாதார வளர்ச்சி குறைவு – ஒரு சிறு பார்வை

Declining Economic Growth – GDP in India – A Short look

கடந்த வெள்ளிக்கிழமை (30-08-2019) அன்று மத்திய புள்ளியியல் அமைச்சகம்(Central Statistics Office – CSO) நாட்டின் பொருளாதார வளர்ச்சி அறிக்கையை வெளியிட்டது. 2019ம் ஆண்டின் ஜூன் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக உள்ளதாக கூறப்பட்டது. அதாவது இதற்கு முந்தைய காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) 5.8 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 5 சதவீதமாக குறைந்துள்ளது.

அடுத்து வரவிருக்கும் செப்டம்பர் காலாண்டிலும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறையக்கூடும். உலகளவில் காணப்படும் பொருளாதார மந்த நிலை மற்றும் உள்நாட்டு பொருளாதார புள்ளி விவரங்கள் சாதகமான அம்சத்தை கொண்டிருக்கவில்லை.

நாட்டின் தற்போதைய மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 2.72 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது கவனிக்கத்தக்கது. இதுவே நம் நாட்டின் உச்சபட்ச அளவாக நடப்பில் காணப்படுகிறது. உலக பொருளாதார உற்பத்தி வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு 4.40 சதவீதமாகும். கடந்த வாரம் சொல்லப்பட்ட 5 சதவீத வளர்ச்சி, கடந்த ஆறு வருடங்களில் காணப்பட்ட குறைந்த பட்ச அளவாக உள்ளது.

வருட அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியை காணும் போது, கடந்த 68 வருடங்களில் நாட்டின் சராசரி வளர்ச்சி 6.20 சதவீதமாகவும், வாழ்நாள் உச்சமாக 2010ம் ஆண்டின் முதல் காலாண்டில் 11.40 சதவீதமும், குறைந்த பட்சமாக 1979ம் ஆண்டின் நான்காவது காலாண்டில் (-5.20) சதவீதம் என்ற அளவிலும் இருந்துள்ளது.

2016ம் ஆண்டு இரண்டாம் அரையாண்டின் துவக்கத்தில் 8.7 சதவீதமாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி படிப்படியாக இறக்கத்தில் சென்றுள்ளது. கடந்த ஒரு வருடமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி கணிசமாக குறைந்து வருவது பாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது. ஒரு புறம் கட்டமைப்பு பொருளாதார சீர்திருத்த மாற்றங்களால் வளர்ச்சி குறைந்துள்ளது என சொல்லப்பட்டாலும், நுகர்வு தேவை குறைந்து(Weak Demand Consumption) வருவதே பொருளாதார வளர்ச்சி குறைவுக்கு காரணம் என சொல்லப்படுகிறது.

உற்பத்தி மற்றும் கட்டுமான துறைகள் இன்னும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பாதைக்கு செல்லவில்லை. விவசாயம், ரியல் எஸ்டேட் மற்றும் வாகன துறை தேவையான வளர்ச்சியை பெறும் பட்சத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கலாம். அதே வேளையில் வங்கிகளின் வாராக்கடன் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களின் சிக்கல்கள் தீர்க்கப்படுமாயின், அது பொருளாதார வளர்ச்சிக்கு உந்துகோலாக அமையும் என்பதனை மறுப்பதற்கில்லை.

நுகர்வு மற்றும் முதலீட்டு தேவைகளும் குறைந்துள்ளதாக பெருவாரியான நிதி மதிப்பீடு நிறுவனங்கள் கூறியுள்ளது. தற்போது பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடுகளில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி வியட்நாம், சீனா, எகிப்து ஆகியவை முன்னிலையில் உள்ளது. கடந்த 2014 – 2017 காலத்தில் இந்தியா வேகமாக வளரும் நாடுகளில்(Emerging Economy) முதலிடத்தை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய பொருளாதார சூழலில், நடப்பு நிதியாண்டில் ஏழு சதவீத வளர்ச்சி இலக்கை அடைவது கடினமாக இருக்கும். 2019-20ம் நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.5 சதவீதத்திற்கு குறைவாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைவாக இருக்கும் – பிட்ச் குழுமம்

நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைவாக இருக்கும் – பிட்ச் குழுமம்

Fitch Group India Ratings cut GDP growth to 6.7 Percent for FY20

உலகளவில் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் நிதி தகவல் சேவையை அளித்து வரும் பிட்ச் குழுமத்தின்(Fitch Group) துணை நிறுவனமான இந்தியா ரேட்டிங்ஸ் தனது பொருளாதார புள்ளிவிவரங்களை வெளியிட்டது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான புள்ளிவிவரங்களை கூறும் போது, நடப்பு 2019-20ம் நிதியாண்டில் 6.7 சதவீதமாக காணப்படும் என சொல்லியிருந்தது.

 

இதற்கு முன்பு 2019-20ம் நிதியாண்டுக்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 7.3 சதவீதமாக சொல்லப்பட்டிருந்தது. தற்போது இந்த வளர்ச்சியை குறைத்து கூறியுள்ளது பிட்ச் குழும இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனம்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

சமீபத்தில் மத்திய அரசால் சொல்லப்பட்ட நிதி சார்ந்த மாற்றங்கள் சாதகமாக இருப்பினும், நடப்பு வருடத்தில் இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், உடனடியாக வளர்ச்சியை பெறுவது சாத்தியமில்லை எனவும் சொல்லப்பட்டுள்ளது. மேலும் கூறுகையில், ‘மத்திய அரசு பொது மக்களிடம் பொருளாதார மாற்றம் சார்ந்த நம்பிக்கையை உருவாக்க தவறி விட்டது ‘ என்றும் குறிப்பிட்டுள்ளது.

 

இந்தியா ரேட்டிங்ஸ்(India Ratings) நிறுவனம் கடந்த நான்கு மாதங்களில் இரண்டு முறை நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைவாக இருக்கும் என மறுமதிப்பீடு செய்துள்ளது. வீட்டு சேமிப்பும்(Household Savings) வெகுவாக குறைந்துள்ளதாக கூறியுள்ள இந்நிறுவனம், கடந்த 2012ம் வருடம் 23 சதவீத சேமிப்பு வளர்ச்சி  என்ற நிலையிலிருந்து 2018ம் வருடம் 17 சதவீத சேமிப்பு மட்டுமே என்ற மாற்றத்தை பெற்றுள்ளன.

 

நகர்ப்புற சேமிப்பும், முதலீடும் சாதகமாக இல்லை எனவும், கிராமப்புறங்களில் தனியார் நுகர்வும் குறைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. தனியார் துறையில் சேமிப்பு வளர்ச்சி அதிகரித்தும், அவை தற்போது உள்ள சூழ்நிலையில் முதலீடு செய்ய தயங்குகின்றன. 

 

உலக பொருளாதார காரணிகளும் தொய்வு நிலையில் இருப்பதால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரிய அளவு மாற்றம் இருக்க வாய்ப்பில்லை என்று இந்தியா ரேட்டிங்ஸ் கூறியுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

1,76,000 கோடி ரூபாய் பரிமாற்றம் – அரசு எவ்வாறு செலவிட போகிறது ?

1,76,000 கோடி ரூபாய் பரிமாற்றம் – அரசு எவ்வாறு செலவிட போகிறது ?

How the Central Govt can use the Rs. 1.76 Lakh Cr at best – RBI to Govt. of India

 

பிமல் ஜலான்(Bimal Jalan) கமிட்டி பரிந்துரையின் பேரில் மத்திய ரிசர்வ் வங்கி 1,76,000 கோடி ரூபாயை மத்திய அரசுக்கு பரிமாற்றம் செய்யப்பட உள்ளதாக செய்தி வெளியானது. உலக பொருளாதார மந்த நிலை உள்ள இந்த சூழ்நிலையில் ரூ. 1.76 லட்சம் கோடி தொகை நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்க உதவும் என சொல்லப்படுகிறது. மறுபுறம் மத்திய ரிசர்வ் வங்கியின் உபரி தொகையை ஏன் மத்திய அரசுக்கு தற்போது பரிமாற்றம் செய்ய வேண்டும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

சொல்லப்பட்ட நிலைப்பாட்டை நாம் எப்படி அணுகினாலும் சரி, தற்போது பொருளாதார மந்த நிலை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் உலக பொருளாதாரமும் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த வீழ்ச்சி தற்காலிகமானது தான் எனினும், ஒவ்வொரு நாட்டிலும் பொருளாதார சரிவை சமாளிக்க பல கொள்கைகளும், மாற்றங்களும் எடுக்கப்பட்டு வருகின்றன.

 

சில வருடங்களுக்கு முன்பு, 1,76,000 கோடி ரூபாய் என்ற மதிப்பு 2ஜி ஸ்பெக்ட்ரம்(Spectrum) சர்ச்சையாக பேசப்பட்டது. இப்போது பாரத ரிசர்வ் வங்கியின் பரிமாற்றமாக களம் இறங்கியுள்ளது. மத்திய அரசின் நிதி பற்றாக்குறை அதிகரித்து வருவதும், வங்கிகளின் வாராக்கடன் பிரச்னையால் நிதிநிலை மோசமடைந்து வருவதும் நாட்டின் பொருளாதத்திற்கு சாதகமாக இல்லை.

 

மேலும் மத்திய அரசின் திட்டங்களுக்கும் போதுமான நிதி ஆதாரம் இல்லை என சொல்லப்படுகிறது. இதன் ஒரு பகுதியாகவே தற்போது ரூ. 1.76 லட்சம் கோடி பரிமாற்ற முடிவு என சொல்லப்படுகிறது. பாரத ரிசர்வ் வங்கி(Reserve Bank of India), மத்திய அரசுக்கு பரிமாற்றம் செய்யும் அதிகபட்ச தொகையாக இது கருதப்படுகிறது. பிமல் ஜலான் கமிட்டி பாரத ரிசர்வ் வங்கியால் உருவாக்கப்பட்டது தான் எனவும் நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

 

கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாரத ரிசர்வ் வங்கி, பொருளாதார மூலதன கட்டமைப்பு குழு(Economy Capital Framework) ஒன்றை ஏற்படுத்தியது. இதன் தலைவராக முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் திரு. பிமல் ஜலான் பொறுப்பு வகித்தார். இந்த குழு மத்திய ரிசர்வ் வங்கியில் உள்ள உபரித்தொகையை அரசுக்கு பரிமாற்றம் செய்வதற்கான மதிப்பீட்டை வழங்கும்.

 

பரிமாற்ற தொகையான ரூ. 1.76 லட்சம் கோடி இந்திய பொருளாதார மதிப்பில்(GDP) 0.5 சதவீதம் இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. இவற்றில் ரூ. 1.23 லட்சம் கோடி ரூபாய் கடந்த 2018-19ம் நிதியாண்டில் பாரத ரிசர்வ் வங்கி ஈட்டிய லாபமாகும். பொதுவாக பாரத ரிசர்வ் வங்கியிலிருந்து(RBI) மத்திய அரசுக்கு பண பரிமாற்றம் செய்யப்படும். இம்முறை பரிமாற்றம் செய்யப்பட்ட அதிகபட்ச தொகைக்கான காரணம், பாரத ரிசர்வ் வங்கியின் லாபம் அதிகரித்தது தான் என கூறப்படுகிறது.

 

பெறப்படும் தொகை எவ்வாறு கையாளப்படலாம் என்பதை பற்றி நிதி அமைச்சர் இன்னும் சொல்லவில்லை. இந்த தொகையை கொண்டு மத்திய அரசு தனது நிதி பற்றாக்குறையை(Fiscal Deficit) குறைத்து கொள்ளும், வங்கிகளின் நிதி நிலையை (Bank Liquitiy crisis) சரி செய்ய பயன்படுத்தும் என பொருளாதர வல்லுநர்கள் கூறுகின்றனர்.

 

தற்போது காணப்படும் பொருளாதார மந்த நிலையை களைய இந்த தொகை உதவக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. இதன் தாக்கம் அடுத்து வரும் காலாண்டு முடிவுகளிலும், அரசின் திட்ட செயல்பாடுகளிலும் தெரிய வரும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

மீண்டும் சூடுபிடிக்கும் அமெரிக்க – சீன வர்த்தக போர் – பேச்சு வார்த்தை

மீண்டும் சூடுபிடிக்கும் அமெரிக்க – சீன வர்த்தக போர் – பேச்சு வார்த்தை 

Sino – US Trade war – Talks again

 

சீன-அமெரிக்க வர்த்தக போர் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான வர்த்தக பற்றாக்குறையை(Trade Deficit) சரி செய்யும் பொருட்டு, வர்த்தக போரை முதன்முதலில் ஆரம்பித்தவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்(Donald Trump). இதனையடுத்து சீன நாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு வரி விதிக்க தொடங்கினார்.

 

அமெரிக்க நாட்டின் வர்த்தக பற்றாக்குறையை குறைக்க வரி விதிப்பு உதவக்கூடும் என பொருளாதார வல்லுநர்களால் சொல்லப்பட்டிருந்தது. ‘ வர்த்தக போர் ஆரோக்கியமானது, இதன் மூலம் எளிய முறையில் தீர்வு காணப்படும் ‘ என டொனால்ட் டிரம்ப் ஒரு முறை கூறியிருந்தார். இதன் காரணமாக இரு நாடுகளிடையே வரி விதிப்பும், பேச்சு வார்த்தையும் அவ்வப்போது நடைபெறத்தான் செய்தது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இருப்பினும், உலக பொருளாதரத்தில் போட்டி போட்டு கொண்டிருக்கும் இந்த இரு நாடுகளிடையே தீர்வும் சுமுகமாக முடிவடையவில்லை. அமெரிக்க நாட்டின் பொருளாதாரம் 20 ட்ரில்லியன் டாலர் மதிப்பை கொண்டிருக்க, சீன நாட்டின் மதிப்பு 13 ட்ரில்லியன் டாலர்களாக இருந்து வருகிறது.

 

கடந்த வாரத்தில் அமெரிக்கா சீன பொருட்களுக்கு வரி விதிக்க, சீன நாடும் அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்க தயாரானது. இதனை அடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன நாட்டிலிருந்து அமெரிக்க நிறுவனங்களை வெளியேற உத்தரவிட்டார். தற்போது டிரம்ப், ‘ வர்த்தக போர் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குமாறு சீனா கேட்டு கொண்டுள்ளது ‘ என கூறியுள்ளார்.

 

ஏற்கனவே ஹாங்காங் நாட்டில் ஏற்பட்டு கொண்டிருக்கும் பதற்றம் சீனா நாட்டிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் இவ்வேளையில், சொல்லப்பட்ட அமெரிக்க-சீன பேச்சுவார்த்தை எந்தவொரு கட்டத்தை அடைய போகும் என தெரியவில்லை என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

 

சீன-அமெரிக்க வர்த்தக போரால், உலகளவில் ஒரு வித பொருளாதர பதற்றம் நிலை கொண்டுள்ளது. இது ஒரு புறம் இருக்க, முக்கிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி எதிர்மறையாக சென்று கொண்டிருக்கிறது. பணப்புழக்கமும் குறைந்து வருகிறது. இருப்பினும், அமெரிக்கா மற்றும் சீன இடையேயான வர்த்தக போர் முடியும் தருவாயில், மற்ற நாடுகளில் மாற்றம் ஏற்படலாம்.

 

அடுத்த வருடம் அமெரிக்க நாட்டில் தேர்தல் நடைபெற உள்ளதால், அதற்கு முன் வர்த்தக போருக்கான பேச்சுவார்த்தை நல்லபடியாக முடியுமா என்பதை மற்ற நாடுகளும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றன. இந்த இரு நாடுகளிடையேயான பிரச்சனை நம் நாட்டிலும் வாகனத்துறை மற்றும் பிற துறைகளிலும் தொய்வை ஏற்படுத்தி வருவது கவனிக்கத்தக்கது.

 

அமெரிக்க அதிபர் டிரம்ப் அடுத்த வரவிருக்கும் தேர்தல் உத்திக்காக, வரி விதிப்பு முறையை கையாள்வதாக சொல்லப்படுகிறது. எது எப்படியோ, இந்த வர்த்தக போர் கலையப்பட்டால் மட்டுமே, உலக பொருளாதாரத்தில் வளர்ச்சியை எதிர்பார்க்க முடியும். இல்லையெனில், மீண்டும் ஒரு பொருளாதார வீழ்ச்சியை நோக்கி அனைத்து நாடுகளும் சென்று கொண்டிருக்கிறதா என்பது வரவிருக்கும் மாதங்களில் நிறுவனத்தின் வருவாயில் தெரிய வரும். 

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக போர்

 

www.varthagamadurai.com