நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் 3.21 சதவீதமாக உயர்வு
India’s Retail Inflation rises to 3.21 Percent in August 2019
நாட்டின் நுகர்வோர் விலை பணவீக்கம் என்று சொல்லப்படும் சில்லரை பணவீக்கம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 3.21 சதவீதமாக இருந்துள்ளது. இது கடந்த ஜூலை மாதத்தில் 3.15 சதவீதமாகவும், கடந்த 2018ம் வருடம் இதே காலத்தில் 3.18 சதவீதமாகவும் இருந்தது.
இருப்பினும் சந்தை எதிர்பார்த்த 3.30 சதவீதம் என்ற அளவை எட்டவில்லை. அதே வேளையில் பாரத ரிசர்வ் வங்கியின்(RBI) நடுத்தர கால இலக்கான 4 சதவீத பணவீக்கம் என்ற அளவிற்குள் உள்ளது பொருளாதாரத்திற்கு சாதகமானது. கடந்த 13 மாத காலமாக நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் 4 சதவீதம் என்ற அளவை தாண்டவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
உணவு பொருட்களின்(Food Prices) விலை உயர்வால் தற்போது சொல்லப்பட்ட பணவீக்க அளவு அதிகரித்துள்ளது. மாமிசம் மற்றும் மீன் வகைகள் 8.51 சதவீதமும், காய்கறிகள் 6.90 சதவீதமும், பருப்பு வகைகள் 6.94 சதவீதம் என்ற அளவிலும் உயர்ந்துள்ளது. எண்ணெய் மற்றும் கொழுப்பு, பால் சார்ந்த பொருட்களின் விலையும் சிறிய அளவில் ஏற்றம் பெற்றுள்ளது.
அதே வேளையில் பழங்கள் மற்றும் சர்க்கரை வகைகளின் பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் சரிந்துள்ளது. கிராமப்புற பணவீக்கம்(Rural Inflation) 2.18 சதவீதமாகவும், நகர்புறத்தில்(Urban) 4.49 சதவீதம் என்ற அளவிலும் சொல்லப்பட்டுள்ளது. மாதாந்திர அடிப்படையில் நுகர்வோர் விலை 0.49 சதவீதம் அதிகரித்துள்ளது. இது கடந்த ஜூலை மாதம் 0.91 சதவீதமாக உயர்ந்துள்ளது.
நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம்(Unemployment rate) கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 8.19 சதவீதமாக அதிகரித்துள்ளது கவலை அளிக்கிறது. நகர்புறத்தில் 9.71 சதவீதமும், கிராமப்புறத்தில் 7.48 சதவீதம் என்ற அளவிலும் வேலைவாய்ப்பின்மை நிலவுகிறது. இருப்பினும், தொழிற்துறை உற்பத்தி குறியீடு(Industrial Production) கடந்த ஜூலை மாதத்தில் 4.3 சதவீதமாக கூறப்பட்டுள்ளது சாதகமான விஷயம்.
கடந்த ஜூன் மாத தொழிற்துறை உற்பத்தி குறியீடு(IIP) 1.2 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு வருட காலத்தில் அதிகபட்சமாக 2018ம் வருடம் அக்டோபர் மாதத்தில் 8.4 சதவீதமாக இருந்துள்ளது.
நாட்டின் நுகர்வோர் விலை பணவீக்கம் கடந்த 2012ம் ஆண்டு முதல் சராசரியாக 6 சதவீதம் என்ற அளவில் இருந்துள்ளது. 2013ம் வருடம் நவம்பர் மாதத்தில் அதிகபட்சமாக 12.17 சதவீதமும், 2017ம் வருடத்தின் ஜூன் மாதத்தில் 1.54 சதவீதம் என்ற குறைந்த அளவிலும் இருந்தது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை