ரஷ்யாவின் தூர கிழக்கு மண்டல வளர்ச்சிக்காக 1 பில்லியன் டாலர் வழங்கப்படும் – பிரதமர் மோடி
USD 1 Billion for Russia’s Far East Development – PM Modi
கடந்த வியாழக்கிழமை அன்று (05-09-2019) ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் 5வது கிழக்கு பொருளாதார கூட்டமைப்பு மாநாடு துவங்கியது. இந்த பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டின் சிறப்பு விருந்தினராக இந்திய பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, ‘ இந்தியாவுக்கும், ரஷ்யாவின் தூர கிழக்கு நாடுகளுக்கும் இடையேயான உறவு ஒன்றும் புதிதல்ல. சோவியத் ரஷ்யாவின் போது மற்ற நாடுகளுக்கு கட்டுப்பாடுகள் அதிகம் இருந்த நிலையிலும், இந்திய நாட்டிற்கு விளாடிவோஸ்டாக் எப்போதும் திறந்த நிலையில் தான் இருந்தது.
விளாடிவோஸ்டாக் நகரில் (Vladivostok) தனது தூதரகத்தை திறந்த முதல் நாடு இந்தியாவாகும். தூர கிழக்கு மண்டலங்களின் வளர்ச்சியில் இந்தியா எப்போதும் துணை நிற்கும். இந்த வளர்ச்சிக்காக இரு நாட்டு ஒப்பந்தங்களின் படி, இந்தியா ரஷ்ய நாட்டிற்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடனை வழங்க முன் வருகிறது ‘ என்று பிரதமர் மோடி கூறினார்.
இந்திய நிறுவனங்கள் சார்பில் பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டின் வாயிலாக 50 ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளன. இந்த முதலீடு எரிசக்தி, கல்வி, சுகாதாரம், திறன் மேம்பாடு, மர வேலைகள் மற்றும் சுரங்க தொழில்களுக்கு பயன்படுத்தப்படும் என்ற சொல்லப்பட்டுள்ளது.
நடைபெற்ற கூட்டமைப்பு மாநாட்டில், தனது நாடு 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை வரும் 2024-25ம் ஆண்டுக்குள் அடைவது குறித்தும் பிரதமர் மோடி பேசினார். இந்தியா மற்றும் ரஷ்யா இரு நாடுகளும் எந்த நாட்டின் உள்விவகாரத்திலும் தலையிடுவதை ஏற்று கொள்ளாது எனவும் பிரதமர் கூறியுள்ளார்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை