இந்திய பொருளாதார வளர்ச்சி குறைவு – ஒரு சிறு பார்வை
Declining Economic Growth – GDP in India – A Short look
கடந்த வெள்ளிக்கிழமை (30-08-2019) அன்று மத்திய புள்ளியியல் அமைச்சகம்(Central Statistics Office – CSO) நாட்டின் பொருளாதார வளர்ச்சி அறிக்கையை வெளியிட்டது. 2019ம் ஆண்டின் ஜூன் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக உள்ளதாக கூறப்பட்டது. அதாவது இதற்கு முந்தைய காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) 5.8 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 5 சதவீதமாக குறைந்துள்ளது.
அடுத்து வரவிருக்கும் செப்டம்பர் காலாண்டிலும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறையக்கூடும். உலகளவில் காணப்படும் பொருளாதார மந்த நிலை மற்றும் உள்நாட்டு பொருளாதார புள்ளி விவரங்கள் சாதகமான அம்சத்தை கொண்டிருக்கவில்லை.
நாட்டின் தற்போதைய மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 2.72 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது கவனிக்கத்தக்கது. இதுவே நம் நாட்டின் உச்சபட்ச அளவாக நடப்பில் காணப்படுகிறது. உலக பொருளாதார உற்பத்தி வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு 4.40 சதவீதமாகும். கடந்த வாரம் சொல்லப்பட்ட 5 சதவீத வளர்ச்சி, கடந்த ஆறு வருடங்களில் காணப்பட்ட குறைந்த பட்ச அளவாக உள்ளது.
வருட அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியை காணும் போது, கடந்த 68 வருடங்களில் நாட்டின் சராசரி வளர்ச்சி 6.20 சதவீதமாகவும், வாழ்நாள் உச்சமாக 2010ம் ஆண்டின் முதல் காலாண்டில் 11.40 சதவீதமும், குறைந்த பட்சமாக 1979ம் ஆண்டின் நான்காவது காலாண்டில் (-5.20) சதவீதம் என்ற அளவிலும் இருந்துள்ளது.
2016ம் ஆண்டு இரண்டாம் அரையாண்டின் துவக்கத்தில் 8.7 சதவீதமாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி படிப்படியாக இறக்கத்தில் சென்றுள்ளது. கடந்த ஒரு வருடமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி கணிசமாக குறைந்து வருவது பாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது. ஒரு புறம் கட்டமைப்பு பொருளாதார சீர்திருத்த மாற்றங்களால் வளர்ச்சி குறைந்துள்ளது என சொல்லப்பட்டாலும், நுகர்வு தேவை குறைந்து(Weak Demand Consumption) வருவதே பொருளாதார வளர்ச்சி குறைவுக்கு காரணம் என சொல்லப்படுகிறது.
உற்பத்தி மற்றும் கட்டுமான துறைகள் இன்னும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பாதைக்கு செல்லவில்லை. விவசாயம், ரியல் எஸ்டேட் மற்றும் வாகன துறை தேவையான வளர்ச்சியை பெறும் பட்சத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கலாம். அதே வேளையில் வங்கிகளின் வாராக்கடன் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களின் சிக்கல்கள் தீர்க்கப்படுமாயின், அது பொருளாதார வளர்ச்சிக்கு உந்துகோலாக அமையும் என்பதனை மறுப்பதற்கில்லை.
நுகர்வு மற்றும் முதலீட்டு தேவைகளும் குறைந்துள்ளதாக பெருவாரியான நிதி மதிப்பீடு நிறுவனங்கள் கூறியுள்ளது. தற்போது பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடுகளில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி வியட்நாம், சீனா, எகிப்து ஆகியவை முன்னிலையில் உள்ளது. கடந்த 2014 – 2017 காலத்தில் இந்தியா வேகமாக வளரும் நாடுகளில்(Emerging Economy) முதலிடத்தை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய பொருளாதார சூழலில், நடப்பு நிதியாண்டில் ஏழு சதவீத வளர்ச்சி இலக்கை அடைவது கடினமாக இருக்கும். 2019-20ம் நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.5 சதவீதத்திற்கு குறைவாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை