அக்டோபர் மாதத்தில் வங்கி வட்டி விகிதம் 5 சதவீதத்திற்கு கீழ் செல்ல வாய்ப்பு
Bank Repo rates likely to go below 5 Percent in the next month October 2019
நாட்டின் பணவீக்க விகிதம் பாரத ரிசர்வ் வங்கியின் இலக்கை விட குறைவாக காணப்படுவதால், மீண்டும் ஒரு வட்டி விகித குறைப்பு நடவடிக்கை ஏற்படலாம் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஒரு வருட காலமாக நுகர்வோர் விலை பணவீக்கம்(CPI Retail Inflation) கட்டுக்குள் வைக்கப்பட்டிருப்பது, பொருளாதார மந்த நிலை சமயங்களில் சாதகமான அம்சமாகும்.
ஏற்கனவே கடந்த மத்திய நிதிக்கொள்கை குழு கூட்டத்தில்(Monetary Policy Committee) வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்ட நிலையில், இம்முறையும் அக்டோபர் மாதத்தில் குறைக்கப்படலாம் என தெரிகிறது. தற்போது உத்தேசமாக ரெப்போ விகிதம்(Repo Rate) 50 புள்ளிகள் வரை குறைக்கப்படலாம் என எதிர்க்கபார்க்கப்படுகிறது.
நடப்பில் பாரத ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின் படி, ரெப்போ விகிதம் 5.40 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம்(Reverse Repo) 5.15 சதவீதமாகவும் உள்ளது. வங்கி விகிதம்(Bank Rate) 5.65 சதவீதமாக சொல்லப்பட்டிருக்கிறது. கடந்த கூட்டத்தின் போது, வங்கிகளில் ரெப்போ விகிதத்தினை சார்ந்து அதற்கு இணையான வட்டி விகிதம் வாடிக்கையாளர்களுக்கு விகிதப்பட வேண்டும் என்ற பாரத ரிசர்வ் வங்கி கூறியிருந்தது.
ஆனால் பெரும்பாலான வங்கிகள் வைப்பு நிதிக்கான(Deposits) வட்டி விகிதங்களை குறைத்ததே தவிர, கடனுக்கான வட்டி விகிதத்தில் பெருவாரியான மாற்றத்தை ஏற்படுத்தவில்லை எனலாம். இந்நிலையில் பணவீக்க விகிதம் 4 சதவீதத்திற்குள் இருப்பதால், வரவிருக்கும் அக்டோபர் மாதத்திலும் வட்டி விகிதம் குறையும்பட்சத்தில், அது வாடிக்கையாளர்களை உடனடியாக போய் சேருமா என்பது சந்தேகமே.
தற்போது வங்கிக்கான சேமிப்பு கணக்கு வட்டி விகிதம்(Savings Account) 3.25 சதவீதத்திலிருந்து 3.50 சதவீதம் வரை ரிசர்வ் வங்கியால் சொல்லப்பட்டுள்ளது. இது போல ஒரு வருடத்திற்கு மேலான வைப்பு நிதிக்கு 6.25 சதவீதத்திலிருந்து 7.10 சதவீதம் வரை வட்டி விகிதம் கூறப்பட்டுள்ளது.
பொதுவாக வங்கி வட்டி விகிதம் குறையும் போது வங்கியில் முதலீடு செய்வோருக்கு அது சாதகமாக இருப்பதில்லை. குறைவான வட்டி விகிதம் நிலவுவதால் பரஸ்பர நிதிகளில் கடன் பத்திரங்கள் மற்றும் குறுகிய கால திட்டங்களை தேர்ந்தெடுக்கலாம். அதே வேளையில், கடன் பெறுவோருக்கு வங்கி வட்டி விகிதங்கள் பெருமளவு குறைய வாய்ப்புள்ளதால், அவர்களின் தேவைக்கு குறைந்த வட்டியில் கடன் வாங்கி கொள்ளலாம். இருப்பினும், கடன் வட்டி விகிதம் குறைவாக இருக்கும் என்ற ஒரு காரணத்திற்காக அவசியமில்லாமல் கடன் வாங்குவது நல்லதல்ல. மத்திய நிதிக்கொள்கை குழு கூட்டம் அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை