11,000 கோடி ரூபாய் கடனை அடைக்கும் முனைப்பில் ஜீ நிறுவனம்
Rs.11K Crore Debt Reduction Process by ZEE Enterprises
மும்பையை தலைமையிடமாக கொண்ட எஸ்ஸல் குழுமத்தின்(ESSEL Group) ஒரு அங்கம் தான் ஜீ நிறுவனம். இந்த குழுமம் ஊடகங்கள், பொழுதுபோக்கு, உட்கட்டமைப்பு, கல்வி, பேக்கேஜிங்(Packaging) போன்ற தொழில்களில் ஈடுபட்டு வருகிறது. நடப்பு 2019ம் வருடத்தின் துவக்கத்தில் இந்த குழுமம் கடனை அடைக்கும் பொருட்டு ஜீ பொழுதுபோக்கு(ZEE Entertainment) நிறுவனத்தின் பங்குகளை விற்க தயாராகின.
ஐ.எல்.எப்.எஸ்.(IL & FS) நிறுவனத்தின் நிதி சிக்கலை போலவே, எஸ்ஸல் குழுமத்தின் கடன் சிக்கல் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கும், பரஸ்பர நிதி நிறுவனங்களுக்கும் பாதகமாக அமைந்தன. பரஸ்பர நிதிகளின் கடன் பத்திர முதலீடு சில காலம் ஆட்டம் காண ஆரம்பித்தது. முன்னெப்போதும் இல்லாத அளவில் பரஸ்பர நிதிகளிடம் கடன் வாங்கிய நிறுவனங்கள் குறிப்பிட்ட நாட்களில் அவற்றை அடைக்க முடியாமல் திணறின.
முதிர்வு பெற்ற திட்டங்களுக்கு முதலீட்டாளர்களிடம் பெற்ற பணத்தை கொடுக்க முடியாமல், சந்தையில் சலசலப்பை ஏற்படுத்தியது. தற்போதைய நிலையில் இது சார்ந்த பிரச்னைகள் 60-70 சதவீதம் களையப்பட்டு விட்டது எனலாம். பொதுவாக கடனை பெற்ற நிறுவனங்கள் அதனை குறிப்பிட்ட காலத்தில் அடைக்க முடியாமல் போவதும், இது சார்ந்து ரேட்டிங் நிறுவனங்கள், கடன் பெற்ற நிறுவனத்தின் தர மதிப்பீட்டை குறைப்பதும் தற்சமயம் சாதாரணமான விஷயமாக மாறி விட்டன.
ஆனால் முதலீட்டாளர்களிடையே இது நம்பகத்தன்மையை ஏற்படுத்தவில்லை. கடன் பத்திரங்களில் இந்த அளவு ரிஸ்க் இருக்கும் போது, நாம் ஏன் பங்குகள் சார்ந்த முதலீட்டில் மட்டும் இருக்க கூடாது என கடன் பத்திர முதலீடு பற்றி யோசிக்க தொடங்கினர். நடப்பு காலத்தில் பொருளாதார மந்த நிலையும் இதற்கு சான்றாக அமைந்து விட்டது.
எஸ்ஸல் குழுமத்தின் சார்பாக உள்ள கடனை குறைக்கும் பொருட்டு, இந்த மாத இறுதிக்குள் 11,000 கோடி ரூபாயை செலுத்த உள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது. இதன் மூலம் பரஸ்பர நிதிகளின் நிலுவையில் உள்ள தொகை 50-60 சதவீதம் கிடைக்கப்பெறும். இது பரஸ்பர நிதி முதலீட்டாளர்களுக்கு ஒரு சாதகமான விஷயமே. ஜீ நிறுவனம் சொல்லப்பட்ட கடனை அடைக்கும் பட்சத்தில், ஆதித்யா பிர்லா, எச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ. மற்றும் கோடக் மஹிந்திரா போன்ற பரஸ்பர நிதி நிறுவனங்களுக்கு நலன் பயக்கும்.
பரஸ்பர நிதி நிறுவனங்களின் ஜீ நிறுவனத்துடனான கடன் நிலுவை தொகையில் உத்தேசமாக கிடைக்கக்கூடிய தொகை முறையே – ஆதித்யா பிர்லா 760 கோடி ரூபாய், எச்.டி.எப்.சி.(HDFC Mutual Fund) 580 கோடி ரூபாய், ஐ.சி.ஐ.சி.ஐ. 435 கோடி ரூபாய். சமீபத்தில் கோடக் மஹிந்திரா பரஸ்பர நிதி நிறுவனத்திற்கு, ஜீ நிறுவனம் 600 கோடி ரூபாயை செலுத்தியுள்ளன. இது கோடக் மஹிந்திரா நிறுவனத்தின் கடன் நிலுவை தொகையில் சுமார் 52 சதவீதமாகும்.
சொல்லப்பட்ட 11,000 கோடி ரூபாய் கடன் அடைக்கும் இலக்கு, எஸ்ஸல் குழும நிறுவனர்களின் கடன் தொகை மட்டுமே. குழுமத்தின் துணை நிறுவன கடன் தொகையை இவற்றில் சேர்க்க வில்லை என நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை