சந்தையை தாங்கி பிடிக்கும் முதலீடுகள், வாங்கி குவித்த பரஸ்பர நிதி முதலீட்டாளர்கள்
Positive Inflows in Mutual Funds India – Economy Slowdown Time
நாட்டில் உள்ள பரஸ்பர நிதி தொழிற்துறையை மேம்படுத்துதல், பராமரித்தல் மற்றும் பரஸ்பர நிதி முதலீட்டாளர்களின் நலன்களை பாதுகாக்கும் விஷயங்களில் ஆம்ஃபி (Association of Mutual Funds in India – AMFI) அமைப்பு செயல்படுகிறது. பரஸ்பர நிதி திட்டங்கள் மற்றும் முதலீடு சார்ந்த தரவுகளை ஆம்ஃபி ஒவ்வொரு மாதமும் வெளியிட்டு வருகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய பரஸ்பர நிதி சந்தையில் முதலீடு செய்யப்பட்ட தொகை 1.02 லட்சம் கோடி ரூபாய். இது இதற்கு முந்தைய ஜூலை மாதத்தில் 87,000 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. பரஸ்பர நிதி முதலீடுகளின் சொத்து மதிப்பு ஜூலை மாதத்தில் 24.53 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் 4 சதவீதம் அதிகரித்து 25.47 லட்சம் கோடியாக இருந்துள்ளது.
நடப்பு வருட ஜூலை மாதத்தில் தங்க இ.டி.எப்.(Gold ETF) திட்டத்தில் முதலீடு எதுவும் செய்யப்படாமல் சுமார் 17 கோடி ரூபாய் வெளியேறியுள்ளது. ஆனால் ஆகஸ்ட் மாதம் இத்திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ள தொகை ரூ.145 கோடி. இண்டெக்ஸ் பண்டுகளிலும்(Index Funds) முதலீடு அதிகரித்துள்ளன. ஜூலை மாதத்தில் 224 கோடி ரூபாயாக இருந்த இண்டெக்ஸ் பண்டு முதலீடு, கடந்த மாதம் 345 கோடி ரூபாயாக உள்ளது.
சந்தை இறங்கி வரும் சூழ்நிலையில் பெருவாரியான முதலீடுகள் லிக்விட்(Liquid) மற்றும் பங்கு சார்ந்த(Equity Funds) திட்டங்களில் தான் முதலீடு செய்யப்பட்டு வருகின்றன. வங்கி சேமிப்பு கணக்கிற்கு மாற்றாக சொல்லப்படும் லிக்விட் பண்டுகளில் கடந்த ஜூலை மாதம் 45,441 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதுவே ஆகஸ்ட் மாதத்தில் 79,428 கோடி ரூபாயாக வந்துள்ளது.
பங்கு சார்ந்த திட்டங்களில் ஜூலை மாதம் ரூ. 8,112 கோடி முதலீடு வந்திருந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 9,152 கோடி ரூபாயை பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது. இது போல அல்ட்ரா ஷார்ட் (Ultra Short Duration) பண்டுகளில் ஆகஸ்ட் மாதம் 2,830 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது ஜூலை மாதம் 600 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்துள்ளது.
வரி சேமிப்பு சார்ந்த இ.எல்.எஸ்.எஸ்.(ELSS) பரஸ்பர நிதி திட்டங்களிலும் மாத அடிப்படையில் முதலீடு கணிசமாக அதிகரித்துள்ளது. ஜூலை மாதத்தில் 737 கோடி ரூபாயாக இருந்த முதலீடு ஆகஸ்ட் மாதம் 827 கோடி ரூபாயாக உள்ளது.
இருப்பினும் எஸ்.ஐ.பி.(Systematic Investment Plan – SIP) முதலீடுகள் ஆகஸ்ட் மாதத்தில் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஜூலை மாதத்தில் ரூ. 8,324 கோடியாக இருந்த எஸ்.ஐ.பி. முதலீடு, கடந்த ஆகஸ்ட் மாதம் ரூ. 8,231 கோடியாக குறைந்துள்ளது. சந்தை இறக்கத்திலும், பரஸ்பர நிதி முதலீடுகள் அதிகரித்து வருவது முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி வருகின்றன.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை