பொதுத்துறை வங்கிகள் இணைப்பு – பங்கு முதலீட்டாளர்களுக்கு சாதகமா ?
PSU Banks Merger – Is there benefits for the Investors ?
பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தெரிவித்ததை அடுத்து, இருவேறு கருத்துக்கள் நிலவி வருகிறது. ஒரு புறம் வங்கிகளின் இணைப்பு சரியானதே, இந்த இணைப்பினால் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை குறைவது மட்டுமில்லாமல், தனியார் வங்கிகளுடன் போட்டியை சமாளிக்க இது உதவ கூடும் எனவும் சொல்லப்படுகிறது.
மறுபுறம் வங்கிகளின் வாராக்கடன் சுமையை மறைக்க, வங்கி ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான நடவடிக்கையாகவும் வங்கிகள் இணைப்பு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன்(NPA) நாட்டின் பெருவாரியான பிரச்னையாக தற்போது பார்க்கப்படுகிறது.
வங்கிகளின் வாராக்கடன் மத்திய அரசின் நிதி பற்றாக்குறையிலும்(Fiscal Deficit) தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிதி சுமையை சமாளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பாரத ரிசர்வ் வங்கியிடம் குறிப்பிட்ட தொகையை பெற்றது, வங்கிகளுக்கு மீண்டும் மீண்டும் முதலீடுகளை திரட்டுவது என வங்கி சிக்கல்களை மட்டுமே களையும் நிலை உள்ளது.
வங்கிகளின் இணைப்பில் அரசு நடவடிக்கையை மேற்கொண்டாலும், பங்கு முதலீட்டாளராக உள்ள ஒருவருக்கு இந்த வங்கிகள் இணைப்பு பயன் தருமா என்பது தான் கேள்வியாக உள்ளது. தற்போதைய நிலையில் ஓரளவு வருவாய் ஈட்டி கொண்டிருக்கும் பொதுத்துறை வங்கியுடன், நஷ்டத்தில் இருக்கும் வங்கியை தான் அரசு இணைக்க முடிவு செய்துள்ளது.
கடந்த சில வருடங்களாக பெரும்பாலான பொதுத்துறை வங்கிகள் நஷ்டத்தில் தான் இயங்கி கொண்டிருக்கின்றன. இதற்கு காரணமாக வாராக்கடன் சுமை என சொல்லப்படுகிறது. மேலும் தற்போதைய சூழ்நிலையில் வங்கிகளின் சேவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக வங்கி சேவை தவிர காப்பீடு, பரஸ்பர நிதி(Mutual Funds) மற்றும் பங்கு சார்ந்த சேவைகளும் வங்கிகளில் வழங்கப்படுகிறது. இதன் தாக்கம் வங்கிகளில் எந்தளவு மாற்றத்தை ஏற்படுத்தும் என தெரியவில்லை.
பங்கு முதலீட்டாளர்களை பொறுத்தவரை, தற்போது பொதுத்துறை வங்கிகளில் முதலீடு செய்வது சாதகமாக இருக்குமா என கேட்டால், சந்தேகம் தான். பொதுவாக வங்கிகளின் சேவை மற்றும் அதனை சார்ந்த நிதி அறிக்கைகளை ஆராய்வது அவ்வளவு எளிதல்ல. ஒரு எளிய முதலீட்டாளராக நாம் வாகன துறை அல்லது தொழில்நுட்ப துறை சார்ந்த நிறுவனத்தின் நிதி அறிக்கையை எளிமையாக அலசலாம். ஆனால் நிதி சார்ந்த நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் நிதி அறிக்கையை முழுமையாக அலசுவது என்பது கடினம் தான்.
அவ்வாறு இருக்க, வங்கிகளின் இணைப்பில்(Merger of PSU Banks) நமக்கு கிடைக்க பெறும் தகவல்கள் புரிந்து கொள்ளும் முறையில் இருக்குமா என்பது கேள்விக்குறி தான். பொதுத்துறை வங்கிகளின் இணைப்பு நிறைவேறும் பட்சத்தில், அடுத்த சில காலங்களுக்கு அந்த பங்கு அதிக ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகலாம். ஆனால் நீண்ட காலத்தில் முதலீட்டாளருக்கு வருவாயை கொடுக்கும் நிலையில் இருக்குமா என்பது சந்தேகமே.
இணைப்பிற்கு பிறகான சேவையின் வெளிப்பாடு அதன் வருவாயில் தெரிய வரும். தொடர்ச்சியான லாபத்தில் இயங்க வங்கிகளுக்கு கால அவகாசம் தேவைப்படும். வாராக்கடன் நிலை எவ்வாறான நிலையை பெறுகிறது என்பதை நாம் உடனடியாக அறிய முடியாது. தனியார் வங்கி எனில், அவை வாராக்கடன் என்ற நிலையையும் தாண்டி, நஷ்டத்தை அறிவிக்க தயாராக இருக்கும். தங்களுக்கு தேவையான முதலீட்டை திரட்டி மீண்டும் லாபத்திற்கு திரும்புவது இயல்பு. ஆனால் பொதுத்துறை வங்கிகளை பொறுத்தவரை அரசு கொள்கைகளில் அது மாற்றத்தை பெறும்.
பங்குச்சந்தை இறங்கி கொண்டிருக்கும் தற்சமயத்தில், நல்ல நிறுவன பங்குகளை ஆராய்ந்து சரியான விலையில் வாங்குவதே சிறந்தது. பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படுகிறது, அவை குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதற்காக உண்மையான மதிப்பை(Valuation) அறியாமல் முதலீடு செய்வதை தவிர்க்கலாம். பொதுத்துறை வங்கி பங்குகளில் முதலீடு செய்ய விரும்புவோர், பரஸ்பர நிதி திட்டங்களின் வாயிலாக முதலீடு செய்யலாம். இதன் மூலம் அவர்களுக்கான ரிஸ்க் குறைந்து, முதலீடு பரவலாக்கம் செய்யப்படலாம்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை