Category Archives: Paisa News

Paisa News – News about Business and Finance

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.5 சதவீதம் – செப்டம்பர் 2019

நாட்டின் மொத்த உள்நாட்டு  உற்பத்தி 4.5 சதவீதம் – செப்டம்பர் 2019

India’s GDP growth to 4.5 Percent in September 2019 Quarter

நடப்பு 2019-20ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாக குறைந்துள்ளது. சொல்லப்பட்ட பொருளாதார வளர்ச்சி ஜூலை – செப்டம்பர் காலத்திற்கானது. இதற்கு முந்தைய காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது சொல்லப்பட்டுள்ள வளர்ச்சி குறைவு சந்தை எதிர்பார்த்த 4.7 சதவீத வளர்ச்சி என்ற அளவை காட்டிலும் குறைவாக உள்ளது. உற்பத்தியில் ஏற்பட்ட சுணக்கம், முதலீட்டை பெருமளவு ஈர்க்காதது மற்றும் ஏற்றுமதியின் அளவு குறைந்ததும் பொருளாதார வளர்ச்சி குறியீட்டை பாதித்துள்ளது.

கடந்த இரண்டு வருடங்களாக காணப்படும் உலகளாவிய பொருளாதார மந்த நிலையால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்ச்சியாக ஐந்து காலாண்டுகளாக வீழ்ச்சியடைந்துள்ளது. மத்திய அரசு சார்பில் பொருளாதாரத்தை ஊக்குவிக்க பல மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலும், அவை வந்தடைந்த காலம் தாமதமாக இருந்துள்ளது.

இதனையடுத்து வரவிருக்கும் காலங்களிலும் வங்கிகளுக்கான வட்டி விகிதம்(Repo Rate) குறைக்கப்பட வாய்ப்புள்ளது. பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி.(GST) அமலுக்கு பின், எதிர்பார்த்த முதலீட்டு வரவு மற்றும் நுகர்வு தன்மை குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது. இருப்பினும், தற்போதைய வளர்ச்சி குறைவு ஒரு தற்காலிகமானதாகவே சொல்லப்படுகிறது.

2018ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் 8 சதவீதமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி(GDP) தற்போது தொடர் வேகமாக குறைந்து 4.5 சதவீதம் என்ற நிலையில் உள்ளது. அக்டோபர் – டிசம்பர் 2019ம் காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகள் ஜனவரி 2020ல் வெளிவரும். இதனை அடிப்படையாக வைத்தே, பொருளாதார மந்த நிலையா அல்லது வீழ்ச்சியை சந்தித்து வருகிறதா என்பது தெளிவாகும்.

ஏற்கனவே அரசு சார்பில் நிறுவனங்களுக்கான வரி குறைப்பு, வாகன துறைக்கான ஊக்குவிப்பு, வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு முதலீடு என மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளது. பாரத ரிசர்வ் வங்கியும் தனது வட்டி விகித குறைப்பை தொடர்ச்சியாக குறைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

நிதி துறை, கட்டுமானம், வர்த்தகம், போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பில் போதுமான வளர்ச்சி எட்டப்படவில்லை. அதே வேளையில் பாதுகாப்பு மற்றும் பொது நிர்வாகத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை செப்டம்பர் காலாண்டில் பெற்றுள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த புள்ளிவிவரங்கள் இன்று வெளியீடு

நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த புள்ளிவிவரங்கள் இன்று வெளியீடு 

India’s GDP numbers will be released Today – September Quarter 2019

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சார்ந்த பொருளாதார வளர்ச்சி குறித்த புள்ளிவிவரங்கள் இன்று வெளியாக உள்ளது. கடந்த ஜூலை-செப்டம்பர் காலத்திற்கான பொருளாதார வளர்ச்சி குறியீடு தான் தற்போது வெளிவர உள்ளது.

கடந்த முறை மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) 5.8 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைந்தது குறிப்பிடத்தக்கது. இம்முறை நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்திற்கு கீழ் செல்லும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பலவீனமான தேவை நுகர்வால் கடந்த சில காலாண்டுகளாக பொருளாதார வளர்ச்சி இறங்குமுகத்தில் சென்று கொண்டிருக்கிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பொருளாதார மந்தநிலையை சரி செய்ய மத்திய நிதி அமைச்சகத்தின் சார்பில் சமீப காலமாக சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றைய புள்ளிவிவரம் சந்தையை குறுகிய காலத்தில் பாதிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இருப்பினும், கடந்த சில வாரங்களாக இந்திய சந்தையில் அந்நிய முதலீட்டாளர்களின் முதலீட்டு கை ஓங்கி உள்ளது. கடந்த 68 வருடங்களில் நாட்டின் சராசரி பொருளாதார வளர்ச்சி 6.20 சதவீதம் என்ற அளவில் உள்ளது. அதிகபட்சமாக கடந்த 2010ம் ஆண்டில் 11.40 சதவீதமும், குறைந்த அளவாக கடந்த 1979ம் ஆண்டின் நான்காம் காலாண்டில் (-5.20) சதவீதம் என்ற அளவிலும் பொருளாதார வளர்ச்சி இருந்துள்ளது.

நடப்பு பொருளாதார வளர்ச்சி குறைவுக்கு காரணமாக சொல்லப்படுவது உற்பத்தி மற்றும் கட்டுமான துறையில் ஏற்பட்டுள்ள சுணக்கம், நுகர்வு தன்மை குறைவு ஆகியவையே. பொருளாதார வளர்ச்சி குறைவாக இருக்கக்கூடும் என்ற நிகழ்வால், மீண்டும் ஒரு முறை வட்டி விகித குறைப்பு நடவடிக்கை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்றைய கடன் சந்தையிலும், அரசு கடன் பத்திரங்களுக்கான தேவையும் அதிகமாக இருந்தது. பொதுவாக வங்கியில் வட்டி விகிதம் குறையும் போது, கடன் பத்திரங்களின் தேவை அதிகரிக்க கூடும். இதன் காரணமாக கடன் பத்திரங்களின்(Bond yield) வட்டி வருவாய் சற்று அதிகமாக இருக்கும்.

மத்திய ரிசர்வ் வங்கி(RBI) இதுவரை 135 அடிப்படை புள்ளிகள் வரை ரெப்போ விகிதத்தை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் 2025ம் ஆண்டில் நாட்டின் பொருளாதார மதிப்பு 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக மாறுவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஊக்குவிப்பு தற்போது சேவை துறையால் மட்டுமே சாத்தியம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார ஊக்குவிப்பில் உற்பத்தி துறையின் பங்கு கடந்த சில வருடங்களாக வெகுவாக குறைந்துள்ளது எனலாம். விவசாயமும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெறவில்லை. நுகர்வு தேவையை அதிகமாக கொண்டிருக்கும் நம் நாடு சேவை துறையை மட்டுமே தற்போது நம்பியுள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இந்திய பங்குச்சந்தை எங்கே சென்று கொண்டிருக்கிறது ? – முதலீட்டாளரின் ஆவல்

இந்திய பங்குச்சந்தை எங்கே சென்று கொண்டிருக்கிறது ? – முதலீட்டாளரின் ஆவல் 

An Investor’s interest about the current Indian Stock Market

நடப்பு வாரத்தின் வர்த்தகத்தில் இந்திய பங்குச்சந்தை தனது புதிய உச்சத்தை அடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையின் நிப்டி குறியீடு(Nifty50) 12,100 புள்ளிகள் என்ற நிலையை தாண்டி வர்த்தகமானது. இது போல மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ்(BSE Sensex) குறியீடும் 41,000 புள்ளிகளை கடந்து வர்த்தகமாகி கொண்டிருக்கிறது.

நவம்பர் மாதத்தின் நேற்றைய புதன் கிழமை (27-11-2019) வரை அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் வாங்கி குவித்த பங்குகளின் மதிப்பு சுமார் 13,800 கோடி ரூபாய். அதற்கு மாறாக உள்ளூர் முதலீட்டாளர்கள் சுமார் 8,700 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளனர்.

பொதுவாக பங்குச்சந்தை இறக்கத்தில் உள்ளூர் முதலீட்டாளர்கள் பங்கேற்பதும், அந்நிய முதலீட்டாளர்கள் சந்தையின் உச்சத்தில் முதலீடு செய்வதும், சந்தையின் இயல்பு. இதன் காரணமாகவே உள்ளூர் முதலீட்டாளர்கள் தங்கள் லாபங்களை சந்தையின் உச்சத்தில் பதிவு செய்வதுண்டு. இந்திய பங்குச்சந்தையின் புதிய ஏற்றத்திற்கு துணையாக பரஸ்பர நிதி திட்டங்களும்(Mutual Funds) ஊக்குவிக்கின்றன.

உண்மையில், தற்போது பொருளாதாரம் மந்த நிலையில் இருப்பது நாம் அறிந்ததே. இருப்பினும் சந்தை இதற்கு மாறாக ஏற்றம் பெற்று செல்கிறதே என நமது கேள்வி அமையலாம். சந்தையின் போக்கை கணிப்பது யாராலும் முடியாது. ஆனால் பொருளாதார புள்ளி விவரங்களை நம்மால் கணிக்க இயலும்.

நடப்பு 2019-20ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு முடிவுகள் பெரும்பாலான நிறுவனங்களிடம் இருந்து வந்துள்ளன. அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட நிறுவனங்களுக்கான வரி குறைப்பு(Corporate Tax Cut), இம்முறை நிறுவனங்களின் லாபத்திற்கு உதவியுள்ளது எனலாம். இரண்டாம் காலாண்டில் பெரும்பாலான நிறுவனங்களின் லாப வளர்ச்சி, வரி குறைப்பு நடவடிக்கையால் வந்தவை தான். இல்லையெனில் அவை நஷ்டத்தில் சென்றிருக்க கூடும்.

இந்த ஒரு நிலையே, இந்திய பங்குச்சந்தையை தாங்கி பிடித்துள்ளது. ஆனால் இந்த வரி குறைப்பு என்பது ஒரு நிரந்தரமான தீர்வாக அமையாது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைவு(GDP), வட்டி விகிதம் குறைவாக காணப்படுவது, வேலைவாய்ப்பின்மை விகிதம் சாதகமாக இல்லாதது என பல குறைகள் காணப்பட்டாலும், நடப்பு நிலைமை சரி செய்யப்படும் என்ற ஆவல் தான் சந்தையை நகர்த்தி கொண்டிருக்கிறது.

பொருளாதார வளர்ச்சி எப்போதெல்லாம் குறைவாக காணப்படுகிறதோ, அப்போது சந்தையிலும் பங்குகளின் விலை மலிவாக கிடைக்கப்பெறுகிறது. தற்போதைய நிலையில் சந்தை புதிய உச்சத்தை பெற்றிருந்தாலும், இன்னும் மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப்(Small Cap) பிரிவுகளில் நல்ல நிறுவன பங்குகள் தள்ளுபடி விலையில் காணப்படுகிறது. கடந்த 2007-2008 காலங்களில் காணப்பட்ட சந்தை வீழ்ச்சி போல், தற்போது ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமில்லை எனலாம். அதே வேளையில் தற்போதைய நிலைமை உடனடியாக தீர்க்கப்படும் என நாம் எதிர்பார்க்க வில்லை.

நாடுகளிடையே ஏற்பட்டுள்ள வர்த்தக போர் வரும் நாட்களில் மேலும் வலுவடையலாம். உலகளவில் மாற்றம் வேகமாக ஏற்பட்டு வரும் சூழ்நிலையில், சில பகுதிகளில் அத்தியாவசிய தேவைக்கும் போராட வேண்டியுள்ளது. வரும் காலங்களில் இந்த நிலைமை சரி செய்யப்பட்ட வாய்ப்புள்ளது என்ற நம்பிக்கையில் நாம் நகரலாம்.

தற்போதைய நிலையில், முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியது – பங்குகளில் அதிகபட்ச லாபங்களை பதிவு செய்திருந்தால், அதனை விற்று லாபம் பார்க்கலாம். இல்லையெனில் லாபம் பார்த்த தொகையை கொண்டு, மலிவான விலையில் இருக்கும் நல்ல நிறுவன பங்குகளை கண்டறியலாம். நடப்பு சந்தையில் லாபம் ஈட்டவில்லை என்பவர்கள் கவலையடைய வேண்டாம். கையிருப்பு தொகை இருக்கும்பட்சத்தில், நல்ல பங்குகளை குறைவான விலையில் வாங்க முயற்சி செய்யுங்கள்.

சந்தை உச்சத்தில் உள்ளது, நான் ஏன் முதலீடு செய்ய வேண்டும் என எண்ணுபவர்கள், பரஸ்பர நிதி முதலீடுகளை தேர்ந்தெடுத்து தொடர் முதலீட்டை மேற்கொள்ளலாம். சந்தையை கணிப்பது அவ்வளவு எளிதல்ல. பொருளாதார புள்ளிவிவரங்களை அறிந்து கடந்து செல்லலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

மியூச்சுவல் பண்ட் துறையில் இறங்கவிருக்கும் முத்தூட் பைனான்ஸ்

மியூச்சுவல் பண்ட் துறையில் இறங்கவிருக்கும் முத்தூட் பைனான்ஸ் 

Muthoot Finance to entering into Mutual Fund Industry – Acquisition of IDBI’s Mutual Fund

சந்தை மதிப்பில் 27,500 கோடி ரூபாயை கொண்டுள்ள முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் நிதிச்சேவை, கல்வி, மருத்துவம், வீட்டு மனை, அந்நிய செலவாணி, காப்பீடு என பல சேவைகளில் தொழில் செய்து வருகிறது. நகை கடனில் பிரபலமடைந்த இந்நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஆறு வருடங்களில் பத்து மடங்காக பெருகியுள்ளது.

கடனில் தத்தளித்து வந்த ஐ.டி.பி.ஐ. வங்கியை(IDBI) பொது துறை காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சி.(LIC India) கடந்த சில மாதங்களுக்கு முன்பு கையகப்படுத்தியது. எல்.ஐ.சி. நிறுவனம் ஏற்கனவே மியூச்சுவல் பண்ட் (பரஸ்பர நிதி) துறையில் உள்ளதால், தனது சேவையை ஐ.டி.பி.ஐ. வங்கி கிளைகளில் வழங்க முடிவு செய்திருந்தது. இதனையடுத்து ஐ.டி.பி.ஐ. வங்கியின் கீழ் இருந்த பரஸ்பர நிதி தொழிலை விற்கும் முடிவையும் எல்.ஐ.சி. நிறுவனம் எடுத்திருந்தது.

இந்நிலையில் ஐ.டி.பி.ஐ. வங்கியின் மியூச்சுவல் பண்ட் தொழிலை முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் வாங்க உள்ளது. இதன் மதிப்பு சுமார் 215 கோடி ரூபாய் எனவும், இந்த கையகப்படுத்தல் வரும் 2020ம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தின் முடிவில் நிறைவு பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஐ.டி.பி.ஐ. பரஸ்பர நிதி(Mutual Fund AMC) சேவையில் மொத்தம் 22 திட்டங்கள் மூலமாக முதலீட்டு சேவைகள் வழங்கப்பட்டு வருவதாக சொல்லப்பட்டுள்ளது. ஐ.டி.பி.ஐ. மியூச்சுவல் பண்ட் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு சுமார் 5,300 கோடி ரூபாய்.

சொல்லப்பட்ட கையகப்படுத்தல் முடிந்தவுடன், முத்தூட் பைனான்ஸ் மற்றுமொரு சேவையில் களம் இறங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே பரஸ்பர நிதி துறையில் இதன் சேவை சிறிய அளவில் இருந்தாலும், இனி பரஸ்பர நிதி சேவையை முழுவதுமாக வழங்குவதிலும், அதன் சொத்தை நிர்வகிப்பதிலும் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு அமையலாம்.

தற்போதைய நிலையில் இந்திய பரஸ்பர நிதி துறையின் சொத்து மதிப்பு 26 லட்சம் கோடி ரூபாய். பொருளாதார மந்த நிலையிலும், முதலீட்டாளர்கள் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்து வருவது சந்தைக்கு சாதகமான விஷயமாகும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பங்கு விலக்கல் கொள்கை – அடுத்து விற்பனைக்கு வரும் பொதுத்துறை நிறுவனங்கள் என்ன ?

பங்கு விலக்கல் கொள்கை – அடுத்து விற்பனைக்கு வரும் பொதுத்துறை  நிறுவனங்கள் என்ன ?

Govt’s Disinvestment Policy – What are the next PSUs ?

கடந்த 2018-19ம் நிதியாண்டின் முடிவில் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவின்(Air India) கடன் ரூ. 58,351 கோடி. சமீப வருடங்களாக நஷ்டத்தை மட்டுமே சந்தித்து வரும் ஏர் இந்தியா நிறுவனம் பங்கு விலக்கல் அடிப்படையில் விற்பனைக்கு தயாராக உள்ளன. தற்போது நிறுவன பங்கை வாங்க வரும் முதலீட்டாளர்களுக்காக அரசு காத்திருக்கிறது.

1932ம் ஆண்டில் டாட்டா குழுமத்தின் ஜே.ஆர்.டி. டாட்டா(JRD Tata) அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட நாட்டின் முதல் விமான சேவையாக, ‘டாட்டா ஏர்லைன்ஸ்’ இருந்தது. இரண்டாம் உலக போருக்கு பின், இந்த நிறுவனம் பட்டியலிடப்பட்ட பொது நிறுவனமாக(Tata Airlines) மாற்றப்பட்டது. பின்னர் அதன் பெயரும், ‘ஏர் இந்தியா’ என மாற்றம் பெற்றது.

சுதந்திரத்திற்கு பின், ஆரம்ப நிலையில் மத்திய அரசு 49 சதவீத பங்குகளை மட்டுமே கொண்டிருந்த நிலையில், பின்னர் ஏர் இந்தியா பொதுத்துறை நிறுவனமாகியது. நடப்பு நிதியாண்டில் மத்திய அரசின் பங்கு விலக்கல் தொகைக்கான இலக்கு 1.05 லட்சம் கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் படி, பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் (BPCL) நிறுவனத்தின் 53 சதவீத பங்கு விற்பனைக்கு வர உள்ளது. இது போல ஜெனரல் இன்சூரன்ஸ்(GIC) நிறுவனத்தின் 35 சதவீத பங்குகள் மற்றும் கோல் இந்தியாவின்(Coal India) 18 சதவீத பங்குகளும் விற்பனைக்கு வர உள்ளன.

இது போல ஓ.என்.ஜி.சி.(ONGC) மற்றும் பாரத ஸ்டேட் வங்கி ஆகியவற்றின் குறிப்பிட்ட பங்குகளும், பங்கு விலக்கல் அடிப்படையில் விற்பனைக்கு தயாராக உள்ளன. இதன் வாயிலாக அரசு தனக்கு தேவையான நிதியை திரட்டுவதுடன், இலக்கை அடைய முற்படலாம்.

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை பொறுத்தவரை, அரசின் அனைத்து பங்குகளையும் விற்க உள்ளன. அரசின் 53 சதவீத பங்குகளை விற்கும் நிலையில், கிடைக்கக்கூடிய தொகை சுமார் 32,000 கோடி ரூபாய். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகின்றன.

கடந்த சில வருடங்களாக அதிக கடன் மற்றும் நஷ்டத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் திவால் நிலைக்கு தள்ளப்படுகின்றன. இதற்கு தீர்வு காணும் வகையில் அரசும் பங்கு விலக்கல் கொள்கையின் அடிப்படையில் நிறுவனத்தினை விற்க முடிவு செய்துள்ளன.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 11.01 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிப்பு

நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 11.01 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிப்பு

India’s Balance of Trade (Trade Deficit) to USD 11.01 Billion in October 2019

நாட்டின் வர்த்தக பற்றாக்குறை கடந்த அக்டோபர் மாதத்தின் முடிவில் 11.01 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது. இது கடந்த செப்டம்பர் மாதத்தில் 10.86 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 2018ம் ஆண்டின் அக்டோபர் காலத்தில் வர்த்தக பற்றாக்குறை 18 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்துள்ளது.

தற்போது சொல்லப்பட்ட வர்த்தக பற்றாக்குறை(Trade Deficit) சந்தை எதிர்பார்த்த 12.05 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பதனை விட குறைவாக தான் உள்ளது. பெட்ரோலியம் மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதி அளவு குறைந்ததை அடுத்து நாட்டின் அக்டோபர் மாத இறக்குமதி விகிதம் 16 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

கச்சா எண்ணெய் மற்றும் அதனை சார்ந்த பொருட்களின் இறக்குமதி அளவு 31 சதவீத வீழ்ச்சியும், மின்னணு பொருட்கள் மற்றும் போக்குவரத்து உபகரணங்கள் முறையே 8.5 சதவீதம் மற்றும் 14.70 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. தங்கத்தின் இறக்குமதி அக்டோபர் மாதத்தில் 4.7 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஏற்றுமதியை பொறுத்தவரையில் அக்டோபர் மாத முடிவில் ஒரு சதவீதம் வரை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பெட்ரோலிய பொருட்களின் ஏற்றுமதி 14.60 சதவீதம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் 11 சதவீதமும் சரிவை கண்டுள்ளது. இது போல ஜவுளி மற்றும் பருத்தி வகை பொருட்களின் ஏற்றுமதியும் குறைந்துள்ளது.

மருந்துகள் மற்றும் மின்னணு பொருட்களும் ஏற்றுமதியில் பெருமளவிலான சரிவை சந்தித்துள்ளது. நாட்டின் தேவை பெரும்பாலும் இறக்குமதியை சார்ந்தே உள்ளதால் வர்த்தக பற்றாக்குறையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

இந்தியாவின் பெரும்பாலான வர்த்தக பற்றாக்குறை சீனா, சுவிஸ், சவூதி அரேபியா, ஈராக் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளுடன் தான் ஏற்பட்டுள்ளது. நாட்டின் இறக்குமதியில் அதிக இடத்தை தக்க வைத்திருப்பது கனிம எரிபொருட்கள்(Mineral Fuels), எண்ணெய் வகைகள், முத்துக்கள் மற்றும் நகைகள் ஆகியவை ஆகும்.

நாட்டின் அதிகபட்ச பற்றாக்குறையாக கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சுமார் 20,210 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்துள்ளது. வர்த்தக உபரியாக(Trade Surplus) கடந்த 1977ம் ஆண்டின் மார்ச் மாதத்தில் 258 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இயக்குனர் பதவியை ராஜினாமா செய்த அனில் அம்பானி – ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்

இயக்குனர் பதவியை ராஜினாமா செய்த அனில் அம்பானி – ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்

Anil Dhirubhai Ambani resigns – Director of Reliance Communications

ரிலையன்ஸ் குழும நிறுவனத்தின் சேர்மனாக இருப்பவர் திரு. அனில் திருபாய் அம்பானி. கடந்த 2006ம் ஆண்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திலிருந்து பிரிந்த ரிலையன்ஸ் குழும நிறுவனம் அனில் அம்பானியால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

ரிலையன்ஸ் கேப்பிடல், ரிலையன்ஸ் இன்ப்ரா(Reliance Infra), ரிலையன்ஸ் பவர் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் ஆகியவை ரிலையன்ஸ் குழும நிறுவனங்களாக உள்ளது. செப்டம்பர் காலாண்டில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் 30,000 கோடி ரூபாய் நஷ்டத்தை அடைந்ததை ஒட்டி, அதன் நிறுவனர் அனில் அம்பானி இயக்குனர் பதவியை ராஜினாமா செய்தார்.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் ஏற்கனவே திவால் நிலைக்கு தள்ளப்பட்டு, அதற்கான தீர்வை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஒரு வருடத்தில் அதன் முதலீட்டாளர்களுக்கு 96 சதவீத முதலீட்டு இழப்பை ஏற்படுத்தியுள்ளது கவனிக்கத்தக்கது.

தொடர்ச்சியாக பத்து காலாண்டுகளுக்கும் மேலாக  நஷ்டத்தை சந்தித்து வரும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் சுமார் 47,600 கோடி ரூபாய் கடன் சுமையையும் கொண்டுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு பங்கு ஒன்றின் விலை 100 ரூபாய்க்கு மேலாக இருந்த நிலையில், தற்போது வெறும் 60 பைசாவில் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது.

2018-19ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் நிகர நஷ்டம் ரூ. 7,767 கோடியாகும். கடந்த 2008ம் ஆண்டில் இந்நிறுவனம் 5400 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

நீண்டகால முதலீட்டாளர்கள் பங்குகளில் முதலீடு செய்யும் முன்னர், நிறுவனத்தின் அடிப்படை பகுப்பாய்வை(Fundamental Analysis) ஆராய்ந்த பின்னரே முதலீட்டு முடிவை எடுப்பது பாதுகாப்பானது. பொதுவாக கடனில்லாத(Debt Free) நிறுவனங்கள், தொடர்ச்சியான விற்பனை மற்றும் லாப வளர்ச்சியை கொண்டிருக்கும் நிறுவனங்கள், நல்ல நிர்வாக திறனை கொண்டிருப்பவை முதலீட்டாளர்களின் நலனை பாதுகாக்கும் எனலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஏர்டெல் காலாண்டு முடிவுகள் – 23,000 கோடி ரூபாய் நஷ்டம் – எச்சரிக்கை மணியா !

ஏர்டெல் காலாண்டு முடிவுகள் – 23,000 கோடி ரூபாய் நஷ்டம் – எச்சரிக்கை மணியா !

Alert – Q2FY20 – Bharti Airtel reports 23,000 Crore Loss in Quarterly Results

 

1984ம் ஆண்டு வாக்கில் அழுத்தக்கூடிய பட்டன் தொலைபேசிகளை அமைத்து, நாட்டில் அறிமுகப்படுத்தியவர் சுனில் மிட்டல். பின்னர் 1990ம் ஆண்டுகளில் தொலைநகல் இயந்திரங்கள்(Fax), கம்பியில்லா தொலைபேசி(Cordless Phones) என தொலைத்தொடர்பு சாதனங்களை இந்திய சந்தைக்கு வரவழைத்தார்.

 

1995ம் வருடத்தின் ஜூலை மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது தான் ஏர்டெல் என்னும் பார்தி ஏர்டெல்(Bharti Airtel) நிறுவனம். 15 வருடங்களுக்கு முன்பு ஏர்டெல்லின் சேவையும், அதன் பின்னணி இசையுமே ஒவ்வொரு வாடிக்கையாளரை கவர்ந்திழுத்தது. அதிகமான சந்தாதாரர்களை கொண்டு நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகவும் ஏர்டெல் நிறுவனம் விளங்கியது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ரிலையன்ஸ் ஜியோ(JIO) வருகைக்கு பின் இவையனைத்தும் தலைகீழாக மாறின. அதிக கட்டணம் வசூலிக்கிறது என குறை சொல்லும் அளவிற்கு ஏர்டெல் பெயரெடுக்க, ஜியோவின் கட்டணங்கள் மலிவாகின. பேசுவதற்கும், இணைய பயன்பாட்டிற்கும் தனித்தனியாக அதிகபட்ச கட்டணங்களை செலுத்தி வந்த நிலையில், ஜியோவின் இணைய புரட்சி அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களையும் கட்டண சலுகையை அறிவிக்க வைத்தது.

 

பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ. 1.86 லட்சம் கோடி. அதன் புத்தக மதிப்பு 139 ரூபாய். கடன்-பங்கு(Debt-Equity Ratio) விகிதம் 1.75 என்ற அளவில் அதிகமாக உள்ளது. நிறுவனத்திற்கு கடனாக ரூ. 1.25 லட்சம் கோடி சொல்லப்பட்டுள்ளது.

 

நிறுவனம் கடன் அதிகமாக பெற்றாலும், அதனை செலுத்தக்கூடிய அளவில் வட்டி பாதுகாப்பு விகிதமும்(ICR) இல்லை. தற்போதைய வட்டி பாதுகாப்பு விகிதம் ஒன்றுக்கு குறைவாக உள்ளது கவனிக்கத்தக்கது. நிறுவனர்களின் பங்களிப்பு 62 சதவீதமாக உள்ளது.

 

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பொதுவாக தங்களது வாடிக்கையாளர்களின் முன்கூட்டிய செலுத்தும் கட்டணத்தை கொண்டே வளர்ச்சியை பெறும் நிலையில் உள்ளன. ஆகவே விற்பனையை அதிகரிக்க வாடிக்கையாளர்களை தக்க வைப்பது அவசியமாகும். செப்டம்பர் காலாண்டு முடிவில் நிறுவனத்தின் வருவாயாக ரூ. 21,131 கோடியை பெற்றுள்ளது. 

 

கடந்த 2018ம் வருடம் செப்டம்பர் காலாண்டில் இது 20,147 கோடி ரூபாயாக இருந்தது. எனவே கடந்த காலத்துடன் ஒப்பிடும் போது வருவாய் 5 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. ஆனால் நிறுவனம் செப்டம்பர் காலாண்டில் 23,045 கோடி ரூபாயை நிகர நஷ்டமாக கொண்டுள்ளது. கடந்த 2018 செப்டம்பர் காலாண்டில் நிகர லாபமாக 118 கோடி ரூபாய் உள்ளது. இதனுடன் ஒப்பிடும் போது, தற்போது லாபத்தில் 19,500 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.

 

சமீபத்திய உச்சநீதிமன்ற தீர்ப்பின் காரணமாக செலுத்தப்பட வேண்டிய நிலுவை தொகையை, பெறப்பட்ட மொத்த வருவாயில் சரி செய்துள்ளது. இதன் காரணமாகவே செப்டம்பர் காலாண்டில் நிகர இழப்பை நிறுவனம் சந்தித்துள்ளது.

 

கடந்த பத்து வருடங்களில் தொலைத்தொடர்பு துறையில் வேகமான மாற்றங்கள் நடைபெற்றுள்ளது. பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். வீழ்ச்சி, ஏர் செல் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் திவால், வோடபோன்-ஐடியா இணைப்பு, ஜியோ வருகைக்கு பின்னான ஏர்டெல் நிறுவனத்தின் பின்னடைவு மற்றும் இணைய மாற்றங்கள் என பல கட்டங்களை சந்தித்து வருகிறது.

 

தற்போது வோடபோன் நிறுவனமும் தனது சேவையை இந்தியாவில் நிறுத்தி கொள்வதற்கான நிலையில் உள்ளது. வோடபோன்-ஐடியா நிறுவனம் தனது செப்டம்பர் காலாண்டில் 50,897 கோடி ரூபாயை நிகர இழப்பாக கொண்டுள்ளது. கடந்த ஜூன் காலாண்டில் இது ரூ. 4,908 கோடி நஷ்டமாகவும், 2018ம்  ஆண்டின் செப்டம்பர் காலாண்டில் ரூ. 4,950 கோடியை நஷ்டமாகவும் கொண்டுள்ளது.

 

தற்போது இந்த துறையில் அரசின் கொள்கைகளும் மற்றும் விதிமுறைகளும் மாற்றம் பெற்று வருகின்றன. எனவே முதலீட்டாளர்கள் தொலைத்தொடர்பு துறையில் உள்ள பங்குகளில் முதலீடு செய்வதை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். புதிய முதலீட்டாளர்கள் தற்போதைய நிலையில், இந்த துறையை தவிர்ப்பது நலம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

  

நாட்டின் அக்டோபர் மாத சில்லரை விலை பணவீக்கம் 4.62 சதவீதமாக உயர்வு

நாட்டின் அக்டோபர்  மாத சில்லரை விலை பணவீக்கம் 4.62 சதவீதமாக உயர்வு 

India’s Retail Inflation rose to 4.62 Percent – October 2019

சந்தை எதிர்பாராத வகையில் நாட்டின் அக்டோபர் மாத நுகர்வோர் விலை பணவீக்க விகிதம் உயர்ந்துள்ளது. நுகர்வோர் விலை பணவீக்கம்(Consumer Price Index) என்று அழைக்கப்படும் சில்லரை விலை பணவீக்கம் கடந்த அக்டோபர் மாதத்தில் 4.62 சதவீதமாக உயர்ந்துள்ளது கவனிக்கத்தக்கது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

கடந்த செப்டம்பர் மாத சில்லரை விலை பணவீக்கம் 3.99 சதவீதமாகவும், 2018ம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் 3.38 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது சொல்லப்பட்ட சில்லரை பணவீக்க விகிதம் முதன்முறையாக பாரத ரிசர்வ் வங்கியின் 4 சதவீத இலக்கை தாண்டியுள்ளது.

நடப்பு சந்தையில் பெரும்பாலும் 4.25 சதவீதம் என்ற அளவில் பணவீக்கம் இருக்கலாம் என எதிர்பார்த்திருந்த நிலையில், உணவு பொருட்களின் விலை உயர்வால் பணவீக்க விகிதம் அதிகரித்துள்ளது.

நுகர்வோர் விலை பணவீக்கம் கடந்த ஏழு வருட காலத்தில், அதிகபட்சமாக 2012ம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் 12 சதவீதமும், குறைந்த அளவாக 2017ம் ஆண்டின் ஜூன் மாதத்தில் 1.54 சதவீதமாகவும் இருந்துள்ளது. உணவு பொருட்களின் விலை அக்டோபர் மாதத்தில் சுமார் 8 சதவீதம் உயர்ந்து காணப்பட்டுள்ளது.

காய்கறிகளின் விலை 26 சதவீதமும், எதிர்பாராத மழை பொழிவால் வெங்காயம் மற்றும் தக்காளியின் விலை அதிகரித்துள்ளது. பருப்பு வகைகள் 11.72 சதவீதம், மாமிசம் மற்றும் மீன் 9.75 சதவீதம் மற்றும் முட்டை 6 சதவீதம் என விலை உயர்ந்துள்ளது.

இது போல பழங்கள், மசாலா பொருட்கள் மற்றும் பால் பொருட்களின் விலையும் சற்று உயர்ந்து காணப்பட்டுள்ளது. துணிமணிகள் மற்றும் காலணிகள் விலை சிறிதளவு ஏற்றம் பெற்றுள்ளது. ஆனால் எரிபொருட்களின் பணவீக்கம் 2 சதவீதம் குறைந்துள்ளது.

அக்டோபர் மாதத்தில் கிராமப்புற பணவீக்க(Rural Inflation) விகிதம் 4.29 சதவீதமாகவும், நகர்ப்புற பணவீக்கம் (Urban Inflation) 5.11 சதவீதமாகவும் உள்ளது. இது கடந்த செப்டம்பர் மாதத்தை காட்டிலும் அதிகமாக காணப்படுகிறது. இதனை சார்ந்து அடுத்து வரவிருக்கும் மத்திய நிதி கொள்கை குழு கூட்டத்தில் வட்டி விகித மாற்றம் ஏற்படுத்தப்படலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் ஆறு வருடங்களில் இல்லாத வணிக நம்பிக்கை குறைவு

நாட்டின் ஆறு வருடங்களில் இல்லாத வணிக நம்பிக்கை குறைவு 

India’s Business Confidence Index lowest in Six Years – October 2019

தேசிய பொருளாதார ஆராய்ச்சி குழு(NCAER) கடந்த 1956ம் ஆண்டு பொருளாதாரத்தில் லாப நோக்கமற்ற சிந்தனை குழுவாக உருவாக்கப்பட்டது. டெல்லியை தலைமையிடமாக கொண்டிருக்கும் இந்த குழுவின் தலைவராக திரு. நந்தன் நிலேகனி உள்ளார். இவர் தான் இன்போசிஸ் நிறுவனத்தின் தற்போதைய சேர்மனும் ஆவார்.

காலாண்டு அடிப்படையில் வணிகம் சார்ந்த கணக்கெடுப்புகளை நடத்தி, சில வணிக புள்ளிவிவரங்களை வெளியிடுவது தேசிய பொருளாதார ஆராய்ச்சி குழுவின் வேலையாகும். நாட்டில் உள்ள 500க்கும் மேற்பட்ட இந்திய வணிக நிறுவனங்களிடம் கேள்விகளை எழுப்பி, அதன் மூலம் பெறப்படும் பதில்களின் அடிப்படையில் வணிகம் சார்ந்த புள்ளிவிவரங்களை வெளியிடுகிறது.

நாட்டில் உள்ள தற்போதைய வணிக சூழல் மற்றும் குறுகிய கால வாய்ப்புகள் குறித்த மதிப்பீட்டையும் இக்குழு வழங்குகிறது. இதற்காக நாட்டில் உள்ள முக்கிய ஆறு பெரு நகரங்களில் தரவுகள் சேகரிக்கப்பட்டு, காலாண்டுக்கு ஒரு முறை தகவல்கள் வெளியாகும்.

வணிக நிறுவனங்களில் காணப்படும் உறுதியான பண்புகள், வணிகம் எதிர்பார்க்கும் உள்ளீடு மற்றும் வெளியீடு செலவுகள், தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு நிலைமை, ஊதிய நிலை, விற்பனைக்கான வாய்ப்புகள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பற்றிய தகவல்களும் இவற்றில் அடங்கும்.

இதன் மூலம் ஒட்டுமொத்த பொருளாதார நிலைமைகள், முதலீட்டு காலநிலை, நிறுவனத்தின் நிதிநிலை மற்றும் திறன் பயன்பாடு(Capacity Utilization) ஆகியவை சார்ந்த புள்ளிவிவரங்கள் கூறப்படும். பொருளாதார கொள்கைகள் சார்ந்த அரசியல் நம்பிக்கை(Political Confidence) பற்றிய குறியீடும் இங்கு சொல்லப்படுகின்றன.

செப்டம்பர் கால வணிக நம்பிக்கை குறியீடு நேற்று(11-11-2019) தேசிய பொருளாதார ஆராய்ச்சி குழுவால் வெளியிடப்பட்டது. இவற்றில் நாட்டின் வணிக நம்பிக்கை குறியீடு(Business Confidence Index) கடந்த ஆறு வருடங்களில் காணப்படாத அளவிற்கு குறைந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் இரண்டாம் காலாண்டில் வணிக நம்பிக்கை குறியீடு 15.3 சதவீதம் குறைந்துள்ளது.

வணிக நம்பிக்கை குறியீட்டுக்கான புள்ளிகள் சொல்லப்பட்ட காலத்தில் 103 புள்ளிகளாக உள்ளது. இங்கே வணிக நம்பிக்கையாக குறிப்பிடுவது, ‘ நாட்டின் பொருளாதாரம் அடுத்த ஆறு மாதங்களில் சரியாகும், நிறுவனங்களின் நிதி நிலைமை அடுத்த ஆறு மாதங்களில் சீராகும், தற்போதைய முதலீட்டு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது மற்றும் திறன் பயன்பாடு சாதகமாக உள்ளது ‘ என்பவை வணிக நம்பிக்கையின் அம்சமாக பார்க்கப்படுகின்றன.

ஆனால் மேலே சொல்லப்பட்ட நான்கு தன்மைகளில் இந்திய நிறுவனங்களுக்கு தற்போதைய நிலையில் நம்பிக்கை குறைவாக இருப்பதையே வணிக நம்பிக்கை குறியீடு காட்டுகிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com