ஏர்டெல் காலாண்டு முடிவுகள் – 23,000 கோடி ரூபாய் நஷ்டம் – எச்சரிக்கை மணியா !
Alert – Q2FY20 – Bharti Airtel reports 23,000 Crore Loss in Quarterly Results
1984ம் ஆண்டு வாக்கில் அழுத்தக்கூடிய பட்டன் தொலைபேசிகளை அமைத்து, நாட்டில் அறிமுகப்படுத்தியவர் சுனில் மிட்டல். பின்னர் 1990ம் ஆண்டுகளில் தொலைநகல் இயந்திரங்கள்(Fax), கம்பியில்லா தொலைபேசி(Cordless Phones) என தொலைத்தொடர்பு சாதனங்களை இந்திய சந்தைக்கு வரவழைத்தார்.
1995ம் வருடத்தின் ஜூலை மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது தான் ஏர்டெல் என்னும் பார்தி ஏர்டெல்(Bharti Airtel) நிறுவனம். 15 வருடங்களுக்கு முன்பு ஏர்டெல்லின் சேவையும், அதன் பின்னணி இசையுமே ஒவ்வொரு வாடிக்கையாளரை கவர்ந்திழுத்தது. அதிகமான சந்தாதாரர்களை கொண்டு நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகவும் ஏர்டெல் நிறுவனம் விளங்கியது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ரிலையன்ஸ் ஜியோ(JIO) வருகைக்கு பின் இவையனைத்தும் தலைகீழாக மாறின. அதிக கட்டணம் வசூலிக்கிறது என குறை சொல்லும் அளவிற்கு ஏர்டெல் பெயரெடுக்க, ஜியோவின் கட்டணங்கள் மலிவாகின. பேசுவதற்கும், இணைய பயன்பாட்டிற்கும் தனித்தனியாக அதிகபட்ச கட்டணங்களை செலுத்தி வந்த நிலையில், ஜியோவின் இணைய புரட்சி அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களையும் கட்டண சலுகையை அறிவிக்க வைத்தது.
பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ. 1.86 லட்சம் கோடி. அதன் புத்தக மதிப்பு 139 ரூபாய். கடன்-பங்கு(Debt-Equity Ratio) விகிதம் 1.75 என்ற அளவில் அதிகமாக உள்ளது. நிறுவனத்திற்கு கடனாக ரூ. 1.25 லட்சம் கோடி சொல்லப்பட்டுள்ளது.
நிறுவனம் கடன் அதிகமாக பெற்றாலும், அதனை செலுத்தக்கூடிய அளவில் வட்டி பாதுகாப்பு விகிதமும்(ICR) இல்லை. தற்போதைய வட்டி பாதுகாப்பு விகிதம் ஒன்றுக்கு குறைவாக உள்ளது கவனிக்கத்தக்கது. நிறுவனர்களின் பங்களிப்பு 62 சதவீதமாக உள்ளது.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பொதுவாக தங்களது வாடிக்கையாளர்களின் முன்கூட்டிய செலுத்தும் கட்டணத்தை கொண்டே வளர்ச்சியை பெறும் நிலையில் உள்ளன. ஆகவே விற்பனையை அதிகரிக்க வாடிக்கையாளர்களை தக்க வைப்பது அவசியமாகும். செப்டம்பர் காலாண்டு முடிவில் நிறுவனத்தின் வருவாயாக ரூ. 21,131 கோடியை பெற்றுள்ளது.
கடந்த 2018ம் வருடம் செப்டம்பர் காலாண்டில் இது 20,147 கோடி ரூபாயாக இருந்தது. எனவே கடந்த காலத்துடன் ஒப்பிடும் போது வருவாய் 5 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. ஆனால் நிறுவனம் செப்டம்பர் காலாண்டில் 23,045 கோடி ரூபாயை நிகர நஷ்டமாக கொண்டுள்ளது. கடந்த 2018 செப்டம்பர் காலாண்டில் நிகர லாபமாக 118 கோடி ரூபாய் உள்ளது. இதனுடன் ஒப்பிடும் போது, தற்போது லாபத்தில் 19,500 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.
சமீபத்திய உச்சநீதிமன்ற தீர்ப்பின் காரணமாக செலுத்தப்பட வேண்டிய நிலுவை தொகையை, பெறப்பட்ட மொத்த வருவாயில் சரி செய்துள்ளது. இதன் காரணமாகவே செப்டம்பர் காலாண்டில் நிகர இழப்பை நிறுவனம் சந்தித்துள்ளது.
கடந்த பத்து வருடங்களில் தொலைத்தொடர்பு துறையில் வேகமான மாற்றங்கள் நடைபெற்றுள்ளது. பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். வீழ்ச்சி, ஏர் செல் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் திவால், வோடபோன்-ஐடியா இணைப்பு, ஜியோ வருகைக்கு பின்னான ஏர்டெல் நிறுவனத்தின் பின்னடைவு மற்றும் இணைய மாற்றங்கள் என பல கட்டங்களை சந்தித்து வருகிறது.
தற்போது வோடபோன் நிறுவனமும் தனது சேவையை இந்தியாவில் நிறுத்தி கொள்வதற்கான நிலையில் உள்ளது. வோடபோன்-ஐடியா நிறுவனம் தனது செப்டம்பர் காலாண்டில் 50,897 கோடி ரூபாயை நிகர இழப்பாக கொண்டுள்ளது. கடந்த ஜூன் காலாண்டில் இது ரூ. 4,908 கோடி நஷ்டமாகவும், 2018ம் ஆண்டின் செப்டம்பர் காலாண்டில் ரூ. 4,950 கோடியை நஷ்டமாகவும் கொண்டுள்ளது.
தற்போது இந்த துறையில் அரசின் கொள்கைகளும் மற்றும் விதிமுறைகளும் மாற்றம் பெற்று வருகின்றன. எனவே முதலீட்டாளர்கள் தொலைத்தொடர்பு துறையில் உள்ள பங்குகளில் முதலீடு செய்வதை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். புதிய முதலீட்டாளர்கள் தற்போதைய நிலையில், இந்த துறையை தவிர்ப்பது நலம்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை