நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 11.01 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிப்பு
India’s Balance of Trade (Trade Deficit) to USD 11.01 Billion in October 2019
நாட்டின் வர்த்தக பற்றாக்குறை கடந்த அக்டோபர் மாதத்தின் முடிவில் 11.01 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது. இது கடந்த செப்டம்பர் மாதத்தில் 10.86 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 2018ம் ஆண்டின் அக்டோபர் காலத்தில் வர்த்தக பற்றாக்குறை 18 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்துள்ளது.
தற்போது சொல்லப்பட்ட வர்த்தக பற்றாக்குறை(Trade Deficit) சந்தை எதிர்பார்த்த 12.05 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பதனை விட குறைவாக தான் உள்ளது. பெட்ரோலியம் மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதி அளவு குறைந்ததை அடுத்து நாட்டின் அக்டோபர் மாத இறக்குமதி விகிதம் 16 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
கச்சா எண்ணெய் மற்றும் அதனை சார்ந்த பொருட்களின் இறக்குமதி அளவு 31 சதவீத வீழ்ச்சியும், மின்னணு பொருட்கள் மற்றும் போக்குவரத்து உபகரணங்கள் முறையே 8.5 சதவீதம் மற்றும் 14.70 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. தங்கத்தின் இறக்குமதி அக்டோபர் மாதத்தில் 4.7 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஏற்றுமதியை பொறுத்தவரையில் அக்டோபர் மாத முடிவில் ஒரு சதவீதம் வரை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பெட்ரோலிய பொருட்களின் ஏற்றுமதி 14.60 சதவீதம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் 11 சதவீதமும் சரிவை கண்டுள்ளது. இது போல ஜவுளி மற்றும் பருத்தி வகை பொருட்களின் ஏற்றுமதியும் குறைந்துள்ளது.
மருந்துகள் மற்றும் மின்னணு பொருட்களும் ஏற்றுமதியில் பெருமளவிலான சரிவை சந்தித்துள்ளது. நாட்டின் தேவை பெரும்பாலும் இறக்குமதியை சார்ந்தே உள்ளதால் வர்த்தக பற்றாக்குறையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
இந்தியாவின் பெரும்பாலான வர்த்தக பற்றாக்குறை சீனா, சுவிஸ், சவூதி அரேபியா, ஈராக் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளுடன் தான் ஏற்பட்டுள்ளது. நாட்டின் இறக்குமதியில் அதிக இடத்தை தக்க வைத்திருப்பது கனிம எரிபொருட்கள்(Mineral Fuels), எண்ணெய் வகைகள், முத்துக்கள் மற்றும் நகைகள் ஆகியவை ஆகும்.
நாட்டின் அதிகபட்ச பற்றாக்குறையாக கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சுமார் 20,210 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்துள்ளது. வர்த்தக உபரியாக(Trade Surplus) கடந்த 1977ம் ஆண்டின் மார்ச் மாதத்தில் 258 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை