இயக்குனர் பதவியை ராஜினாமா செய்த அனில் அம்பானி – ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்
Anil Dhirubhai Ambani resigns – Director of Reliance Communications
ரிலையன்ஸ் குழும நிறுவனத்தின் சேர்மனாக இருப்பவர் திரு. அனில் திருபாய் அம்பானி. கடந்த 2006ம் ஆண்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திலிருந்து பிரிந்த ரிலையன்ஸ் குழும நிறுவனம் அனில் அம்பானியால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
ரிலையன்ஸ் கேப்பிடல், ரிலையன்ஸ் இன்ப்ரா(Reliance Infra), ரிலையன்ஸ் பவர் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் ஆகியவை ரிலையன்ஸ் குழும நிறுவனங்களாக உள்ளது. செப்டம்பர் காலாண்டில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் 30,000 கோடி ரூபாய் நஷ்டத்தை அடைந்ததை ஒட்டி, அதன் நிறுவனர் அனில் அம்பானி இயக்குனர் பதவியை ராஜினாமா செய்தார்.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் ஏற்கனவே திவால் நிலைக்கு தள்ளப்பட்டு, அதற்கான தீர்வை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஒரு வருடத்தில் அதன் முதலீட்டாளர்களுக்கு 96 சதவீத முதலீட்டு இழப்பை ஏற்படுத்தியுள்ளது கவனிக்கத்தக்கது.
தொடர்ச்சியாக பத்து காலாண்டுகளுக்கும் மேலாக நஷ்டத்தை சந்தித்து வரும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் சுமார் 47,600 கோடி ரூபாய் கடன் சுமையையும் கொண்டுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு பங்கு ஒன்றின் விலை 100 ரூபாய்க்கு மேலாக இருந்த நிலையில், தற்போது வெறும் 60 பைசாவில் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது.
2018-19ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் நிகர நஷ்டம் ரூ. 7,767 கோடியாகும். கடந்த 2008ம் ஆண்டில் இந்நிறுவனம் 5400 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியது குறிப்பிடத்தக்கது.
நீண்டகால முதலீட்டாளர்கள் பங்குகளில் முதலீடு செய்யும் முன்னர், நிறுவனத்தின் அடிப்படை பகுப்பாய்வை(Fundamental Analysis) ஆராய்ந்த பின்னரே முதலீட்டு முடிவை எடுப்பது பாதுகாப்பானது. பொதுவாக கடனில்லாத(Debt Free) நிறுவனங்கள், தொடர்ச்சியான விற்பனை மற்றும் லாப வளர்ச்சியை கொண்டிருக்கும் நிறுவனங்கள், நல்ல நிர்வாக திறனை கொண்டிருப்பவை முதலீட்டாளர்களின் நலனை பாதுகாக்கும் எனலாம்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை