Category Archives: Paisa News

Paisa News – News about Business and Finance

2019-20ம் நிதியாண்டில் ரூ. 16,594 கோடி நிகர லாபம் – இன்போசிஸ்

2019-20ம் நிதியாண்டில் ரூ. 16,594 கோடி நிகர லாபம் – இன்போசிஸ் 

Infosys Net profit of Rs. 16,594 Crore in FY2019-20

இந்திய பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் கடந்த 1981ம் ஆண்டு துவங்கப்பட்டது. கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்நிறுவனம் நாட்டின் 2வது மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமாக வலம் வருகிறது. முதலிடத்தில் டி.சி.எஸ்.(TCS) நிறுவனம் உள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் சில இந்திய நிறுவனங்களில் இன்போசிஸ் உள்ளது.

சுமார் 2.42 லட்சம் பணியாளர்களை கொண்டு உலகெங்கிலும் 120 க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டு இயங்கும் இன்போசிஸ் தொழில்நுட்பம் சார்ந்த ஆலோசனைகள், அவுட்சோர்சிங் மற்றும் அடுத்த தலைமுறைக்கான டிஜிட்டல் சேவைகளை அளித்து வருகிறது. இவற்றில் முக்கியத்துவம் என்னவென்றால், சொல்லப்பட்ட பணியாளர்களில் மகளிரின் எண்ணிக்கை மட்டும் மூன்றில் ஒரு பங்கு – 37 சதவீத பெண் பணியாளர்கள். இன்போசிஸ் நிறுவனத்தின் இந்திய சந்தை மதிப்பு ரூ. 3.01 லட்சம் கோடி. 250 அமெரிக்க டாலர் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் இன்று 35 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்ட நிறுவனமாக மாறியுள்ளது.

1993ம் ஆண்டு சந்தையில் பட்டியலிடப்பட்ட இந்நிறுவனம் பங்கு ஒன்றுக்கு 95 ரூபாய் விலையில் வெளியிடப்பட்டது. ஆனால் இந்த பங்கு பெரியளவில் முதலீட்டாளர்களை ஈர்க்கவில்லை. பின்னாளில் இந்த பங்கு ஒருவரை கோடீஸ்வரராக்கும் என பெரும்பாலான முதலீட்டாளர்களுக்கு தெரியவில்லை. கடந்த 36 வருடங்களில் இந்த பங்கு 3000 மடங்கு அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது. அதாவது 1993ம் வருடம் ஒருவர் இன்போசிஸ் பங்குகளில் ரூ. 10,000 ஐ முதலீடு செய்திருக்கும் பட்சத்தில், இன்று சுமார் 3.2 கோடி ரூபாயை பெறும். ஆண்டுக்கு 40 சதவீத வருவாய் வளர்ச்சியில் இந்த பங்கு முதலீட்டாளரை செழிக்க வைத்திருக்கும்.

நிறுவனத்திற்கு கடன் எதுவும் பெரிதாக இல்லை. கூட்டாளிகளுடன் துவங்கப்பட்ட நிறுவனம் என்பதால், இந்நிறுவனத்தின் நிறுவனர்களின் பங்களிப்பு 13 சதவீதமாக உள்ளது. நிறுவனர்கள் சார்பில் பங்குகள் எதுவும் அடமானம் வைக்கப்படவில்லை. வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) சுமார் 130 மடங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

2019-20ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 90,791 கோடியாகவும், செலவினம் ரூ. 68,524 கோடியாகவும் இருந்துள்ளது. இதர வருமானமாக ரூ. 2,803 கோடி சொல்லப்பட்டுள்ளது. நிகர லாபம் ரூ. 16,594 கோடியாக இருக்கிறது. இது கடந்த 2018-19ம் நிதியாண்டை காட்டிலும் 7 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.

கடந்த 5 வருட காலத்தில் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி(Sales Growth) 11 சதவீதமும், லாப வளர்ச்சி(Profit Growth) 6 சதவீதமும் ஏற்றம் பெற்றுள்ளது. பங்கு மூலதனம் மீதான வருவாய்(ROE) ஐந்து வருடஙக்ளில் 24 சதவீதம் உயர்ந்துள்ளது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ. 63,328 கோடி என சொல்லப்பட்டுள்ளது.

இன்போசிஸ் இதுவரை 8 முறை போனஸ் பங்குகளை(Bonus issue) தனது முதலீட்டாளர்களுக்கு அளித்துள்ளது. நடப்பு டிவிடெண்ட் தொகை(Dividend yield) 3 சதவீதமாக உள்ளது. இது வங்கி சேமிப்பு கணக்கு வட்டி விகிதத்தை காட்டிலும் அதிகமாக இருப்பது கவனிக்கத்தக்கது. இன்போசிஸ் நிறுவனத்தின் பணவரத்து அறிக்கையும் சாதகமாக இருந்து வருகிறது.

பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வை பூர்த்தி செய்யும் நிறுவனமாக இன்போசிஸ் உள்ளது. எனினும் தற்போது இதன் பங்கு விலை ஏற்றத்தில் உள்ளது. வரக்கூடிய நாட்களில் சுமார் 10-20 சதவீதம் என்ற அளவில் இந்த பங்கு இறக்கம் பெறக்கூடிய நிலையில், நீண்ட கால முதலீட்டிற்கு வாங்கி வைக்கலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பங்குச்சந்தை சமீபத்திய ஏற்றம் – எச்சரிக்கை தேவை

பங்குச்சந்தை சமீபத்திய ஏற்றம் – எச்சரிக்கை தேவை 

Bear Market Rally – Recession 2020 – Caution is needed

பொதுவாக பொருளாதாரத்தில் வாய்ப்பை தவற விட்டு விடுவோமோ என்ற அச்சம் நம்மில் பலருக்கு உண்டு. இந்த விடுபடும் என்ற பயம் அல்லது சமூக பதற்றம்(Fear of Missing out – FOMO) பங்குச்சந்தைக்கு மிகவும் பொருந்தும். நாட்டின் பொருளாதாரம் கடந்த இரண்டு வருடங்களாக மந்தநிலையில் இருந்து வந்த சமயம், கொரோனா வைரஸ் தொற்று அலைக்கு பின், கடந்த மார்ச் மாத இறுதியில் பங்குச்சந்தை பலத்த அடி வாங்கியது.

நடப்பு வருடத்தில் தேசிய பங்குச்சந்தை குறியீடான நிப்டி(Nifty50) வாழ்நாள் உச்சபட்சமாக 12,430 புள்ளிகள் வரை சென்றது. இது போல மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ்(Sensex) அதிகபட்சமாக 42,274 புள்ளிகள் வரை ஏற்றமடைந்தது. மார்ச் இறுதி வாரத்தில் உலகளவில் பங்குச்சந்தை வீழ்ச்சி கண்டது. சென்செக்ஸ் குறியீடு 52 வார குறைவாக 25,638 புள்ளிகளும், நிப்டி 7,511 புள்ளிகள் என்ற அளவில் வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது.

மார்ச் மாத பங்குச்சந்தை வீழ்ச்சி, முதலீட்டாளர்களின் ஐந்து வருட முதலீட்டை பதம் பார்த்தது. அந்நிய முதலீட்டாளர்களும் பொருளாதார பின்னடைவை கருத்தில் கொண்டு, தங்களது முதலீட்டை வெளியே எடுக்க துவங்கினர். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலகெங்கிலும் அதிகரிக்க தொடங்கியது.

ஏப்ரல் மாத முடிவில் பங்குச்சந்தை குறியீடுகள் ஏற்றம் பெற்றது. இது பொருளாதார மீட்டெடுப்பின் ஒரு அங்கமாக முதலீட்டாளர்களிடம் காணப்பட்டது. பின்னர் மே மாதத்திலும் இந்த ஏற்றம் தொடர்ந்தது. மார்ச் மாத வீழ்ச்சிக்கு பின், இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் சுமார் 25 சதவீதத்திற்கு மேலாக ஏற்றம் கண்டுள்ளது.

கடந்த ஒரு வார வர்த்தகத்தில் பங்குச்சந்தை 11 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது. புதன்கிழமை (03-06-2020) அன்று நிப்டி 10,061 புள்ளிகளிலும், சென்செக்ஸ்(BSE Sensex) 34,109 புள்ளிகளிலும் தனது வர்த்தகத்தை முடித்து கொண்டது. இருப்பினும், தேசிய பங்குச்சந்தையான நிப்டி குறியீடு கடந்த ஒரு வருட காலத்தில் 17.50 சதவீத இறக்கத்தையும், மூன்று வருட கால அளவில் 3.50 சதவீத ஏற்றத்தையும் பெற்றுள்ளது.

அமெரிக்க சந்தை குறியீடுகளும் கிடுகிடுவென ஏறி கொண்டிருக்கிறது. பங்குச்சந்தை குறியீடுகள் பழைய நிலைக்கு மேல் சென்று விடும். இனி, காளை ஆட்டம் தொடங்கி விட்டது என்ற வாசகமும் சந்தையில் அடிபட்டு கொண்டு தான் இருக்கின்றன. பொதுவாக பங்குச்சந்தை எதிர்காலத்தில் நிகழப்போகும் ஒரு பொருளாதார காரணிக்கு சந்தையில் முன்னரே பிரதிபலிக்க செய்யும் இயல்பு உண்டு. சில வேளைகளில் எதிர்பாராத ஏற்றத்தை ஜீரணிக்க முடியாமல் இறக்கத்தையும் மெதுவாக காட்டுவதுண்டு.

அதனால் தான், சந்தையின் போக்கை கணிக்காதீர்கள், பங்குகளை கவனியுங்கள் என சந்தை வல்லுநர்கள் சொல்வதுண்டு. மார்ச் மாத இறக்கத்தில் பங்குகளை அலசி ஆராய்ந்து வாங்கியவர்கள், இன்று குறிப்பிடத்தக்க லாபத்தை பார்த்திருப்பார்கள். அதே வேளையில் சந்தை இன்னும் இறங்கும் என காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைவதுண்டு. இதன் விளைவாக சந்தையில் வாய்ப்பை விட்டு விடுவோமோ என்ற பதட்டத்தில் இப்போது பங்குகளை வாங்க ஆர்வம் காட்டுவதுண்டு.

பலர் கடந்த மே மாத ஏற்றத்தில் முதலீடு செய்திருக்கலாம். அவர்களின் பங்குகள் மீதான லாபம் தற்போது பெரிதாக ஏறி இருக்க வாய்ப்பில்லை. இப்போது நிப்டி 10,060 புள்ளிகள் தானே இருக்கிறது. விரைவாக முதலீடு செய்து விடலாம் என சமீபத்தில் ஏறக்கூடிய பங்குகளை எல்லாம் வாங்குவர். இது தான் இங்கு பிரச்சனையே. நினைவில் கொள்ளுங்கள், இது கரடி ஆட்டம் மற்றும் பொருளாதார மந்தநிலை காலம். தற்போது நிகழ்வது காளை சந்தையல்ல.

காளை-கரடியில் உங்களுக்கு முரண்பாடு இருந்தாலும், உண்மையில் உலக பொருளாதாரம் சரியான நிலையில் இல்லை என்பதே உண்மை. கடந்த இரண்டு வருட பொருளாதார மந்தநிலை பங்குச்சந்தை குறியீடுகளில் பெரிதாக பிரதிபலிக்கவில்லை என்றாலும், பெரும்பாலான பங்குகளில் அதன் விளைவு காணப்பட்டது. வங்கிகளில் ஏற்பட்ட குறைபாடு வங்கி சார்ந்த பங்குகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவன பங்குகளில் தென்பட்டது. சொல்லப்பட்ட துறையின் பங்குகள் இப்போதும் ஐந்து வருட குறைவாக தான் வர்த்தகமாகி வருகிறது. இது மெட்டல் மற்றும் வாகனத்துறைக்கும் பொருந்தும்.

மார்ச் மாத இறக்கம், கொரோனா கால ஊரடங்கை சந்தையில் காண்பித்து விட்டது. கடந்த 2019-20ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டு பொருளாதார வளர்ச்சி(Q4FY20 GDP) எண்களும் பெரிதாக வளர்ச்சியில் இல்லை. ஆனால், ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நிறுவனங்கள் உண்மையில் வருவாயை பெறுமா, அதன் நஷ்ட அளவுகள் எவ்வளவு தூரம் செல்லும், கடன் மற்றும் திவால் நிலைக்கு செல்லும் நிறுவனங்கள் எத்தனை என்பதெல்லாம் வரக்கூடிய காலங்களில் மட்டுமே தெரியும். அப்போது தான் பங்குச்சந்தையின் உண்மையான போக்கை நாம் அறிய முடியும்.

பொதுவாக பங்குச்சந்தை வீழ்ச்சி ஏற்படும் சமயங்களில், நல்ல நிறுவன பங்குகளின் அடிப்படை பகுப்பாய்வை(Fundamental Analysis) ஆராய்ந்து மலிவான விலையில் பங்குகளை வாங்குவதே சிறந்தது. இந்த வாய்ப்பு எப்போதும் சந்தையில் உள்ளது. ஆனால், பங்குச்சந்தை வீழ்ச்சி காலங்களில் இது அதிக வாய்ப்பை ஏற்படுத்தும், அவ்வளவே. நமக்கான வாய்ப்பு மார்ச் மாத வீழ்ச்சியில் தென்பட்டது. இப்போதைய ஏற்றத்தில் லாபம் பார்த்திருக்கலாம். பெரும்பாலான பங்குகள் 80-100 சதவீத ஏற்றத்தை கடந்த 50 நாட்களில் அடைந்துள்ளன. இது எதிர்பாராத அபரிதமான முதலீட்டு வளர்ச்சி.

நீண்ட கால முதலீட்டாளர்கள் தங்கள் லாபத்தில் ஒரு பகுதியை பதிவு செய்யும் பட்சத்தில், செய்த முதலீட்டு தொகையை திரும்ப பெறலாம். மீதமிருக்கும் பங்குகளை அப்படியே சில வருடங்களுக்கு விட்டு விடுவது நன்று. அவை தான் உங்களுக்கான செல்வ வளத்தை ஏற்படுத்தும். கையில் இருக்கும் தொகைக்கு அடுத்த வீழ்ச்சியில் மலிவான விலைக்கு பங்குகளை வாங்கலாம். இதனையெல்லாம் விடுத்து, சந்தை இன்னும் பெரியளவில் ஏறி விடுமோ என அதன் போக்கை பின்தொடர வேண்டாம்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளை(Quarterly Earnings) அடுத்தடுத்து பின் தொடருங்கள். பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வை பின்பற்றி, தற்போது மலிவான விலையில் பங்குகள் கிடைக்க பெற்றிருந்தால் மட்டும் வாங்குங்கள். இல்லையெனில், அவசரம் வேண்டாம்.

அந்நிய முதலீட்டாளர்கள்(FII) வாங்குகிறார்கள் என நீங்கள் வாங்க வேண்டாம். அந்நிய முதலீட்டாளர்கள் என்பவர் நம்மூர் மியூச்சுவல் பண்டு நிறுவனங்களை போல தான். அவர்கள் வேறு யாருமல்ல. பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் அரசு அவர்களின் மக்களுக்கு பண உதவி செய்து வருகிறது. பணம் தேவைப்பட்டால் தான் அவர்கள் நம் சந்தையிலிருந்து முழுவதுமாக முதலீட்டை எடுப்பதுண்டு. அரசு உதவி செய்யும் போது, சந்தையிலும் பணம் புழங்க தான் செய்யும். அது தான் இப்போது நடந்து வருகிறது. நமது நாட்டிலும், பரஸ்பர நிதி முதலீடுகள்(Mutual Funds – DII) அதிகமாக உள்ளது.

நீங்கள் மாதாமாதம் எஸ்.ஐ.பி. முதலீட்டை தொடரும் பட்சத்தில் சந்தைக்கு உள்ளூர் முதலீட்டாளர்கள்(Domestic Investors) மூலம் முதலீடு வர தான் செய்யும். எனவே தற்போதைய சந்தை ஏற்றத்தில் மிகவும் கவனமாக இருங்கள். கடன் அதிகம் கொண்ட நிறுவனங்களை தவிர்ப்பது நலம். உங்கள் நிதி இலக்குகளுக்கு பரஸ்பர நிதிகளை(SIP Investing for Goals) எப்போதும் போல தொடருங்கள். ஆனால், நேரடி சந்தை முதலீட்டில் இப்போது எச்சரிக்கை தேவை.

நினைவில் கொள்க:

பங்குகளில் குறுகிய கால மூலதன ஆதாயத்திற்கு(STCG Tax) 15 சதவீத வரி செலுத்த வேண்டும். அதே வேளையில் சொல்லப்பட்ட நிதியாண்டில் ஒருவருக்கு ஏற்பட்ட குறுகிய கால மூலதன இழப்பை சரி செய்து கொள்ள இந்த லாபத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.

வருமான வரி வரம்பில் இல்லாதோருக்கு குறுகிய கால மூலதன ஆதாயத்தில் வரி விலக்கு உண்டு. எனவே தகுந்த நிதி ஆலோசகரின் முன்னிலையில் உங்கள் முதலீட்டு முடிவுகளை எடுக்க வேண்டும்.

குறுகிய காலத்தில் பங்கு விற்பனை மூலம் 50 முதல் 100 சதவீதத்திற்கு மேல் லாபம் பெறுபவர்களுக்கு வரி செலுத்துவதில் பெரிய இழப்பு எதுவும் இருக்காது. இந்த முறையை தற்போதைய பொருளாதார மந்தநிலை ஆதாயமாக பயன்படுத்தி கொள்ளலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மந்தமடைந்த வாகனத்துறை விற்பனை நிலவரம் – மே 2020

மந்தமடைந்த வாகனத்துறை விற்பனை நிலவரம் – மே 2020

Weak Auto Sales Data in the month of May 2020 – SIAM

கொரோனா தாக்கத்தின் விளைவாக நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக கடந்த ஒன்றரை வருடமாக மந்தநிலையில் இருந்த வாகனத்துறையின் விற்பனை மேலும் பாதித்தது. துறையில் உள்ள முக்கிய நிறுவனங்கள் ஏப்ரல் மாதத்தில் ஒரு வாகனத்தை கூட விற்க முடியாத நிலைக்கு சென்றன.

வாகனத்துறையின் மே மாதத்திற்கான விற்பனை நிலவரம் நேற்று வெளிவந்தது. மே மாதத்தின் இரண்டாவது வாரத்திற்கு பிறகு ஊரடங்கு நிலை சற்று தளர்த்தப்பட்டது. இதன் காரணமாக உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்கள் சில கட்டுப்பாடுகளுடன் தங்களது தொழிலை புரிய அனுமதி வழங்கப்பட்டது.

கடந்த மாதத்தில் மாருதி சுசூகி(Maruti Suzuki) நிறுவனம் 18,539 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இவற்றில் உள்ளூர் விற்பனையாக 13,888 வாகனங்களும், 4,651 வாகனங்கள் ஏற்றுமதியாக செய்யப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டின் மே மாதத்தில் விற்பனையான மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 1,34,640 ஆகும். எனவே தற்போது சொல்லப்பட்ட வாகன விற்பனை கடந்த காலத்துடன் ஒப்பிடும் போது, 86 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

மே மாதம் இரண்டாம் வாரத்திற்கு பிறகு தான் தங்களது சேவை துவங்கப்பட்டதாக மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது போல மஹிந்திரா நிறுவனம் மே மாத நிலவரமாக 9,560 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. உள்ளூர் விற்பனையாக 9,076 வாகனங்களும், ஏற்றுமதியில் 484 வாகனங்களும் விற்கப்பட்டுள்ளன.

எனினும் கடந்த மாத விற்பனை வளர்ச்சி 79 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இரு சக்கர வாகன பிரிவில் உள்ள ஹீரோ மோட்டார் நிறுவனம்(Hero Motocorp) 1,12,682 வாகனங்களை மே மாதம் விற்பனை செய்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டின் இதே காலத்தில் நிறுவனம் விற்பனை செய்த வாகனங்களின் எண்ணிக்கை 6,52,028. ஆக தற்போதைய விற்பனை 83 சதவீதம் இறக்கம் கண்டுள்ளது.

சொல்லப்பட்ட வாகனங்களில் 3,834 வாகனங்களை ஹீரோ மோட்டார் நிறுவனம் ஏற்றுமதி(Exports) செய்துள்ளது. ஐஷர் மோட்டார்ஸ்(Eicher Motors) நிறுவனத்தின் ராயல் என்பீல்ட் பிரிவு 69 சதவீத விற்பனை வீழ்ச்சியை மே மாதத்தில் சந்தித்துள்ளது. இந்த இரு சக்கர வாகனம் மே மாதத்தில் 19,113 எண்ணிக்கையில் விற்பனை செய்துள்ளது.

Automobile sales may 2020

இது கடந்த 2019ம் ஆண்டின் இதே காலத்தில் நடந்த விற்பனையின் எண்ணிக்கை 62,371. அசோக் லேலண்ட் நிறுவனம் மே மாத விற்பனையாக 1,420 வாகனங்களை மட்டுமே கொண்டுள்ளது. இதற்கு முந்தைய ஆண்டின் சொல்லப்பட்ட காலத்தில் 13,172 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. எனவே, தற்போதைய விற்பனை 89 சதவீதம் வீழ்ச்சியை கண்டுள்ளது. அதே வேளையில் மஹிந்திரா டிராக்டர் விற்பனை 2 சதவீதம் வளர்ச்சியை பெற்றுள்ளது. வரக்கூடிய மாதங்களில் வாகன விற்பனை ஊக்குவிக்கப்படுமா என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். சமூக இடைவெளி காரணமாக பொது போக்குவரத்தை தவிர்க்கும் பட்சத்தில் வாகன விற்பனை சிறிதளவு அதிகரிக்கலாம். ஆனால், வாகனத்துறை கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக சவாலான விஷயங்களை எதிர்கொண்டு வருகிறது. நாட்டில் நுகர்வு தன்மையை அதிகப்படுத்தினால் மட்டுமே, இதன் விற்பனை வளர்ச்சி வரும் நாட்களில் அதிகரிக்கும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 3.1 சதவீதம் – மார்ச் 2020

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 3.1 சதவீதம் – மார்ச் 2020

India’s Q4FY20 GDP to 3.1 Percent and 4.2 Percent in FY2019-20

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சார்ந்த வளர்ச்சி அறிக்கை, தேசிய புள்ளியியல் மையத்தால் இன்று அறிவிக்கப்பட்டது. மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டில் (Jan – Mar 2020) நாட்டின் பொருளாதார வளர்ச்சி 3.1 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. 2019-20ம் நிதியாண்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 4.2 சதவீதமாக அறிவித்துள்ளது.

மூன்றாம் காலாண்டில் 4.7 சதவீதமாக இருந்த நிலையில், நான்காம் காலாண்டான மார்ச் காலத்தில் 3.1 சதவீதமாக குறைந்துள்ளது. இருப்பினும், சந்தை எதிர்பார்த்த அளவை காட்டிலும், மொத்த உள்நாட்டு உற்பத்தி குறியீடு அதிகரித்துள்ளது. மேலும் மார்ச் மாதத்தில் ஏற்பட்ட ஊரடங்கு காலம் ஒரு வாரமாக இருந்ததால், அதனால் பெரிதும் பாதிப்பு ஏற்படவில்லை.

உலகின் மொத்த பொருளாதார உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு 2.31 சதவீதமாக இருக்கிறது. கடந்த நிதியாண்டில் காணப்பட்ட பொருளாதார வளர்ச்சி எண்களும் மற்றும் அதன் மதிப்பீடுகளும் திருத்தப்பட்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி 2019-20ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 5.6 சதவீதமாக இருந்த வளர்ச்சி தற்போது 5.2 சதவீதமாக குறைத்து திருத்தப்பட்டுள்ளது.

இது போல இரண்டாம் காலாண்டில் 5.1 சதவீதத்திலிருந்து 4.4 சதவீதமாகவும், மூன்றாம் காலாண்டில் இருந்த 4.7 சதவீதத்தை 4.1 சதவீதமாகவும் திருத்தப்பட்டுள்ளது. பொருளாதார மொத்த மதிப்பு (GVA) 2019-20ம் நிதியாண்டில் 3.9 சதவீதமாக இருந்துள்ளது கவனிக்கத்தக்கது.

ஏப்ரல் மாத துறை சார்ந்த(Core Sector) தகவல்களும் வெளியிடப்பட்டன. நாட்டின் முக்கிய எட்டு துறைகள் சார்ந்த குறியீடு ஏப்ரல் மாதத்தில் (-38) சதவீதமாக உள்ளது. இது மார்ச் மாதத்தில் (-9) சதவீதமாக இருந்துள்ளது. நிலக்கரி துறை 15.50 சதவீதமும், எஃகு துறை(Steel) 84 சதவீதமும் வீழ்ச்சியடைந்துள்ளது. சிமெண்ட் துறை அதிகபட்சமாக 86 சதவீதமும், இயற்கை எரிவாயு 20 சதவீதமும் வீழ்ச்சி பெற்றுள்ளது. உரம் மற்றும் கச்சா எண்ணெய்யும் 5 சதவீதத்திற்கு மேல் ஏப்ரல் மாதத்தில் இறக்கமடைந்துள்ளது.

சொல்லப்பட்ட மார்ச் காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP growth) 16 வருட குறைவான அளவாக சொல்லப்படுகிறது. பொருளாதார வளர்ச்சி எண்களில் திருத்தம் செய்யப்படாத பட்சத்தில், அது இருபது வருடங்களுக்கு மேலான குறைவாக காணப்படலாம் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

2019-20ம் நிதியாண்டில் வருவாய் மற்றும் நிதி பற்றாக்குறை(Revenue & Fiscal Deficit) அதிகமாக ஏற்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறை பட்ஜெட் மதிப்பில் 122 சதவீதம் அதிகரித்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.59 சதவீதமாக இருந்துள்ளது. ஆனால் அரசு நிர்ணயித்த இலக்கு 3.8 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. இது போல வருவாய் பற்றாக்குறை மூன்று சதவீதத்திற்கு மேலாக இருந்துள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

.

சன் பார்மா மூன்றாம் காலாண்டு நிகர லாபம் ரூ. 400 கோடி

சன் பார்மா மூன்றாம் காலாண்டு நிகர லாபம் ரூ. 400 கோடி

Sun Pharma’s Net profit falls 37 Percent to Rs. 400 Crore – Q4FY20

நாட்டின் மிகப்பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனமான சன் பார்மா(Sun Pharmaceutical) மருந்து உற்பத்தி, விற்பனை மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. 1983ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனம் 2014ம் வருடம் ரான்பாக்ஸி மருந்து தயாரிப்பு நிறுவனத்தை கையகப்படுத்தியது. இதன் மூலம் உலகின் ஐந்தாவது பெரிய நிறுவனமாக வலம் வந்தது.

சன் பார்மா நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.1,10,160 கோடி. நிறுவனத்தின் புத்தக மதிப்பு 173 ரூபாயாக உள்ளது. கடன்-பங்கு விகிதம்(Debt to Equity) 0.25 என்ற அளவிலும், வட்டி பாதுகாப்பு விகிதம் 14 மடங்கிலும் இருக்கிறது. நிறுவனர்களின் பங்களிப்பு 55 சதவீதமாக உள்ளது. நிறுவனர்கள் சார்பில் 14 சதவீத பங்குகள் அடமானமாக உள்ளது கவனிக்கத்தக்கது.

தற்போதைய பங்கின் விலை புத்தக மதிப்பை காட்டிலும் மூன்று மடங்காக உள்ளது. 2019-20ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 8,185 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ. 6,822 கோடியாகவும் இருந்துள்ளது. வரிக்கு முந்தைய லாபம் 577 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் ரூ. 400 கோடியாகவும் உள்ளது.

கடந்த 2018-19ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டுடன் ஒப்பிடும் போது, தற்போதைய லாபம் 37 சதவீதம் குறைந்துள்ளது. மார்ச் 2019 காலாண்டில்(quarterly results) நிறுவனத்தின் வருவாய் ரூ. 7,164 கோடி மற்றும் நிகர லாபம் ரூ. 636 கோடி. ஒரு முறை வழக்கு செலவாக(Litigation cost) ஒதுக்கிய தொகை காரணமாக லாபம் குறைந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஐந்து வருடங்களில், நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 30 சதவீதமும், லாப வளர்ச்சி 102 சதவீதமும் உயர்ந்துள்ளது. அதே வேளையில், பங்கு மீதான வருவாய்(ROE) எதிர்மறையாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்புநிலை அறிக்கையில் கையிருப்பு தொகை ரூ. 23,353 கோடியாக சொல்லப்பட்டுள்ளது.

நிறுவனத்திற்கான பணவரத்து அறிக்கை(Cash Flow) சொல்லிக்கொள்ளும்படி இல்லை. கடந்த நான்கு நிதியாண்டுகளாக பணவரத்து எதிர்மறையாக தான் உள்ளது. அதே வேளையில் நிலையான சொத்துக்களின் மதிப்பு குறிப்பிடும் அளவில் உள்ளது. கடனாளர் நாட்கள்(Debtor Days) அதிகரித்து வருவது நிறுவனத்திற்கு பாதகமாக அமையும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

தைரோகேர் நிறுவன காலாண்டு முடிவுகள் – ரூ. 18 கோடி நிகர நஷ்டம்

தைரோகேர் நிறுவன காலாண்டு முடிவுகள் – ரூ. 18 கோடி நிகர நஷ்டம் 

Rs. 18 Crore Net loss of Q4FY20 – Thyrocare Quarterly results

இன்று உலக தைராய்டு தினம் – மே 25. சுகாதார பிரிவில் இயங்கும் நிறுவனம் தைரோகேர் டெக்னாலஜிஸ்(Thyrocare Technologies) நிறுவனம். 1996ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனம் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஆய்வகங்களை மேற்கொண்டு வருகிறது. இந்திய தைராய்டு பரிசோதனையில் முக்கியத்துவமாக பார்க்கப்படும் நிறுவனமாக தைரோகேர் விளங்குகிறது.

இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 2,800 கோடி. புத்தக மதிப்பு 75 ரூபாயாகவும், கடன்-பங்கு விகிதம்(Debt to Equity) 0.03 என்ற அளவிலும் உள்ளது. நிறுவனத்திற்கு கடன் எதுவும் பெரிதாக இல்லை. நிறுவனர்களின் பங்களிப்பு 66 சதவீதமாகவும், நிறுவனர்கள் சார்பில் பங்குகள் அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை.

வட்டி பாதுகாப்பு விகிதம் 120 மடங்கில் உள்ளது கவனிக்கத்தக்கது. நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி கடந்த ஐந்து வருடங்களில் 20 சதவீதமாகவும், லாப வளர்ச்சி 15 சதவீதமாகவும் உள்ளது. பங்கு முதலீடு மீதான வருமானம்(ROE) கடந்த 5 வருடங்களில் 19 சதவீதம் உயர்ந்துள்ளது.

2019-20ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 94 கோடி ரூபாயாகவும், செலவினம் 64 கோடி ரூபாயாகவும் சொல்லப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ்(Covid-19) தாக்குதலால், துணை நிறுவனமான நியூக்ளியர் ஹெல்த்கேர் லிமிடெட்டில் முதலீடுகளை குறைப்பதற்கான ஏற்பாடாக, 44.33 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகை தைரோகேர் நிறுவனத்திலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக நிறுவனத்திற்கு நான்காம் காலாண்டில் 18 கோடி ரூபாய் நிகர நஷ்டமாக காட்டப்பட்டுள்ளது. சொல்லப்பட்ட ரூ. 44.33 கோடி ஒரு குறைபாட்டு கட்டணமாக(Exceptional charge) நிறுவனத்தின் நிதி அறிக்கையில் உள்ளது. 2019-20ம் நிதியாண்டின் வருவாய் 400 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் ரூ. 79.45 கோடியாகவும் இருந்துள்ளது.

கடந்த 2018-19ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் 370 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் ரூ. 95 கோடியாக இருந்தது கவனிக்கத்தக்கது. இருப்புநிலை கையிருப்பு ரூ. 344 கோடி. ஹெல்த் கேர் பிரிவில் இருக்கும் இந்நிறுவனத்தின் பங்கு விலை தற்போது 500 ரூபாய்க்கு மேல் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது. 10-20 சதவீதம் வீழ்ச்சியடையும் போது, இந்த பங்கின் உண்மையான விலைக்கு அருகில் வர்த்தகமாக கூடும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

உலக சந்தைக்கு காத்திருக்கும் அடுத்த நான்கு பெரிய சவால்கள்

உலக சந்தைக்கு காத்திருக்கும் அடுத்த நான்கு பெரிய சவால்கள் 

The next Four Big challenges await for the Global Market 

2020ம் ஆண்டு உலக சந்தையின் மற்றொரு பொருளாதார வீழ்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது கோவிட்-19. வரலாற்றில் Great Depression, Great Recession என்ற நிலையை தாண்டி இப்போது Great Shutdown (Lockdown) என்ற நிலைக்கு வந்துள்ளது உலக நாடுகள்.

பொதுவாக பொருளாதார வீழ்ச்சிக்கான(Recession) காலங்கள் குறைந்தது ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடத்திற்கு மேலாக இருக்கலாம். நடப்பில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பெரும்பாலான வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் தான் ஊரடங்கு காலம் அதிகமாக இருந்துள்ளது. இதன் தாக்கம் வரும் காலாண்டுகளின் பொருளாதார எண்களில் தெரிய வரும்.

கடந்த 2007ம் ஆண்டு நிகழ்ந்த சப் பிரைம் அடமான நெருக்கடியால் உலக சந்தை ஆட்டம் கண்டது. அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி மீண்டு வருவதற்கு 18 மாதங்கள் எடுத்து கொண்டன. 2001ம் ஆண்டு ஏற்பட்ட டாட் காம் குமிழி(Dotcom Bubble) பொருளாதார மந்த நிலையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அமெரிக்க சந்தை 75 சதவீதம் வீழ்ச்சியை கண்டது. சொல்லப்பட்ட பொருளாதார மந்தநிலை எடுத்து கொண்ட காலம் வெறும் 8 மாதங்களே.

1929ம் ஆண்டு ஏற்பட்ட உலக பொருளாதார மந்தநிலை சுமார் நான்கு ஆண்டுகள்  இருந்தது. 1929 முதல் 1933 வரை இருந்த இந்த மந்தநிலை, பொருளாதார உலகில் மிகப்பெரிய சரிவாக(Great Depression) சொல்லப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போருக்கு தயாரான நிலையில், இந்த பொருளாதார மந்தநிலை மீண்டு வர காரணமாக இருந்தது என பொருளாதார வல்லுனர்களும் அக்காலத்தில் கூறியிருந்தனர்.

நடப்பில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை எப்போது சரியாகும் என்பதற்கான அறிகுறி தற்போதைய நிலையில் கிடைக்க  பெறவில்லை. இருப்பினும் அடுத்த இரு வருடங்கள் இந்த நிலை நீடிக்கலாம் எனவும், அதன் காரணமாக பெரும்பாலான நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறையும் எனவும் பொருளாதார வல்லுநர்களால் சொல்லப்பட்டுள்ளது.

கொரோனா தாக்கம் காரணமாக ஏற்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு மெல்ல மெல்ல தளர்வின் மூலம் விடுவிக்கப்பட்டு வருகிறது. மார்ச் மாதத்தில் பெரிய வீழ்ச்சி கண்ட உலக பங்குச்சந்தை குறியீடுகள் ஏப்ரல் மாதத்தில் நல்ல ஒரு ஏற்றத்தை சந்தித்தன. இருப்பினும் அமெரிக்க பங்குச்சந்தை குறியீடுகள் தவிர மற்ற நாடுகளில் உள்ள சந்தைகள் பெரியளவில் பழைய நிலைக்கு திரும்பவில்லை.

நடப்பு மாதத்தின் இறுதியில் நாட்டின் ஜனவரி – மார்ச் காலத்திற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) வளர்ச்சியை அறிவிக்க உள்ளது ரிசர்வ் வங்கி. பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வரும் நாட்களில் பெரும்பாலானவை வெளிவர உள்ளது. இதன் காரணமாக சந்தை போக்கு மாறலாம்.

உலக சந்தைக்கு காத்திருக்கும் அடுத்த சவாலாக சில முக்கிய காரணிகள் நடப்பு 2020ம் ஆண்டில் உள்ளது. ஊரடங்குக்கு பிறகான தொழில்கள் மற்றும் வேலைவாய்ப்புகளின் நிலைமை முக்கியத்துவம் பெறுகிறது. இதனை ஒட்டியே வரக்கூடிய காலாண்டுகளில் பொருளாதார மாற்றம் நிகழும்.

இரண்டாவதாக ஏற்கனவே எரிந்து கொண்டிருந்த அமெரிக்க – சீன வர்த்தக போர் எவ்வாறு சூடுபிடிக்க உள்ளது என்பதனையும் உலக சந்தைகள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றன. இதன் ஒரு பகுதியாக அமெரிக்க சந்தையில் பட்டியலிடப்பட்ட சீன நிறுவனங்களின் நிலை என்ன என்பதும் அவசியமாக உள்ளது. கொரோனா வைரஸ் பரவல் சம்மந்தமாக அமெரிக்கா மற்ற நாடுகளை கூட்டு சேர்த்துள்ளது. இது சீனாவுக்கு எதிராக செயல்படும் நிலையில், உலகின் முக்கிய பொருளாதார நாடாக விளங்கும் சீனா, அதனை எப்படி கையாள போகிறது என்பதும் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இதுவரை தொற்றுநோய் என்றாலே மூன்று நிலைகளுக்கு மேல் இருந்ததாக வரலாற்று தகவல்கள் சொல்கின்றன. ஆனால் சார்ஸ் மற்றும் மெர்ஸ் போன்ற தொற்றுகளில் அவ்வாறான பாதிப்புகள் பெரியளவில் ஏற்படவில்லை. ஒரு வேளை கோவிட்-19 மனிதர்களின் உடலுக்குள் மாற்றமடைந்து(Mutation) விட்டால், அது இரண்டாவது அலைக்கு வித்திடலாம். இன்றைய அறிவியல் வளர்ச்சி, மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் எப்படி எதிர்கொள்ள போகின்றன என்பதும் சவாலான விஷயம் தான்.

வைரஸ்களின் வரலாற்றில் இதுவரை பெரும்பான்மையான மற்றும் முக்கிய தொற்றுநோய்களுக்கு மருந்துகளோ, தடுப்பூசிகளோ கண்டுபிடிக்கப்படவில்லை அல்லது ஆராய்ச்சியில் உள்ளது எனலாம். தொற்றுநோய்களின் தன்மை தானாக வந்து, மறைவதாக தான் உள்ளது. இரண்டாம் அலை வந்தால், ஊரடங்கை அமல்படுத்த போவதில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் தேர்தல் நடைபெற உள்ளது. இது திட்டமிட்டபடி நடக்குமா, நடக்கும் பட்சத்தில் ட்ரம்ப் மீண்டும் ஆட்சியை பிடித்தால், அமெரிக்காவின் புதிய கொள்கைகள் எப்படி இருக்கும் என்பதனையும் சந்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. ஆக, 2020ம் ஆண்டு பங்குச்சந்தைக்கு பண்டிகை காலமாக மாறியுள்ளது என்றால் மறுப்பதற்கில்லை. உலக பங்குச்சந்தை பல வீழ்ச்சிகளையும், பிரமாண்டமான ஏற்றங்களையும் பார்த்த வரலாறு உண்டு.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மீண்டும் குறைக்கப்பட்ட வங்கி வட்டி விகிதங்கள் – பாரத ரிசர்வ் வங்கி

மீண்டும் குறைக்கப்பட்ட வங்கி வட்டி விகிதங்கள் – பாரத ரிசர்வ் வங்கி 

Repo rate cut 40 basis points to 4 Percent – RBI

கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற மத்திய நிதி கொள்கை குழு கூட்டம் இன்றுடன் முடிவடைந்தது. கடைசி நாளான இன்று பாரத ரிசர்வ் வங்கி கவர்னர் கூறிய அறிவிப்பில், வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம்(Repo Rate) 40 புள்ளிகள் குறைக்கப்படுவதாக சொல்லப்பட்டது. முன்னர் 4.40 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் இப்போது 4 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது.

இது போல ரிவர்ஸ் ரெப்போ விகிதமும்(Reverse Repo) 3.75 சதவீதத்திலிருந்து 3.35 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. வங்கி வட்டி விகிதமும்(Bank Rate) 4.65 சதவீதத்திலிருந்து 4.25 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. வட்டி விகிதத்தை குறைப்பது சம்மந்தமாக இம்முறை நிதி கொள்கை குழுவில் உள்ள ஆறு உறுப்பினர்களும் குறைக்க வேண்டுமென தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

மார்ச் 2020 முதல் நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவால் பெரும்பாலான தொழில்கள்  சுணக்கம் அடைந்துள்ளதாகவும் பாரத ரிசர்வ் வங்கி சார்பில் கூறப்பட்டுள்ளது. பணவீக்க விகிதத்தை அறிய முறையான தகவல்களை தற்போது சேகரிக்க முடியவில்லை எனவும், வரும் மாதங்களில் பணவீக்க விகிதங்களில் எதிர்பாராத மாற்றங்கள் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், மத்திய வங்கியின் இலக்கான 4 சதவீத பணவீக்கம் என்ற அளவை ஒட்டி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 4 சதவீதத்திலிருந்து 2 சதவீதம் கூடுதலாக அல்லது குறைவாக இருக்கக்கூடும். ஜனவரி – மார்ச் காலாண்டில் வளர்ந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சி எதிர்மறையாக சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வேகமாக வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் சீனாவின் வளர்ச்சி பெருமளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் உலக முதலீட்டாளர்கள் பாதுகாப்பான மற்றும் தங்கம் போன்ற முதலீடுகளில் தங்கள் முதலீட்டை பரவலாக்கி உள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

வீழ்ச்சியடைந்த பங்குச்சந்தைகள் ஓரளவு ஏற்றம் பெற்றிருந்தாலும், நடப்பாண்டில் முதல் இரு காலாண்டுகளில் வளர்ச்சி எதுவும் பெரும்பாலும் இருக்காது என சொல்லப்பட்டுள்ளது. 2020-21ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்மறையாக(Negative GDP) இருக்கும் என பாரத ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ஆனால், எந்த மதிப்பை கொண்டிருக்கும் என சொல்லப்படவில்லை.

வங்கிகளில் கடன் பெறுபவர்களை ஊக்குவிக்கவும், நிதி சந்தைகளை வலுப்படுத்தவும் வங்கி வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. வட்டி செலுத்தும் தொழில் நிறுவனங்களுக்கு இது சாதகமாக இருக்கும். அதே வேளையில், இது வங்கிகளின் வருவாய்க்கு நன்மையாக அமையாது. கடனுக்கான மாத தவணையை செலுத்துவதில் மீண்டும் மூன்று மாத கால அவகாசம்(Moratorium) வழங்கப்பட்டுள்ளது.

இது அடுத்த மாதம் ஜூன் முதல் ஆகஸ்ட் 2020 வரையிலான காலத்திற்கு பொருந்தும். இருப்பினும், இது வட்டிக்கு வட்டி என்ற விகிதத்தின் அடிப்படையிலும், மூன்று மாதங்களுக்கான தவணையை அதிக தொகையுடன் செலுத்த வேண்டிய நிலையும் ஏற்படும். வங்கி வட்டி தள்ளுபடி அல்லது கடன்களை மறுசீராய்வு செய்வதால் மட்டுமே அது வங்கிகளுக்கும், அதன் வாடிக்கையாளர்களுக்கும் பலன் அளிக்கும்.

இன்று வங்கி துறையில் உள்ள பங்குகள் அதிக சரிவையும், நிப்டி வங்கி குறியீடு 2.57 சதவீதம் என்ற அளவிலும் வீழ்ச்சி கண்டது. நடப்பில் வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் கடன் மற்றும் பணப்புழக்கம் சார்ந்த நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன.

வங்கிகளின் வட்டி விகிதம் குறையும் சூழ்நிலையில், முதலீட்டாளர்களின் பார்வையில் கடன் பத்திரங்கள்(Bonds) மீதான ஆர்வம் ஏற்படும். வட்டி விகிதம் குறையும் போது, கடன் பண்டுகளின் வருவாய் அதிகரிக்கும். எனவே இது போன்ற நிலையில், முதலீடு செய்வோர் சற்று ரிஸ்க் குறைந்த கடன் பத்திர பரஸ்பர நிதிகளில்(Debt Mutual Funds) முதலீடு செய்யலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு என்ன – 2020 ?

உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு என்ன – 2020 ?

India’s GDP share in the Global Economy – 2020

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) என சொல்லப்படும் பொருளாதார குறியீட்டில் வரும் 2024ம் ஆண்டு ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய வேண்டும் என்ற இலக்கை மத்திய அரசு கடந்த ஆண்டு நிர்ணயித்திருந்தது. இதனை அடைவதற்கான சில திட்டங்களும், அதனை சார்ந்த இலக்கு வரைபடங்களும் சொல்லப்பட்டது.

2019ம் ஆண்டில் சர்வேதச நாணய நிதியம்(IMF) வெளியிட்ட பொருளாதார பார்வையின் படி, நாட்டின் பொருளாதாரம் 2.9 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் என கூறப்பட்டுள்ளது. தற்போது உலக பொருளாதாரத்தில் முதலிடத்தில் இருக்கும் நாடு அமெரிக்கா. அந்நாட்டின் பொருளாதாரம் சுமார் 22 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். இரண்டாவது இடத்தில் இருக்கும் சீனாவின் மதிப்பு 14 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். மூன்றாம் இடத்தில் ஜப்பானும், நான்காம் இடத்தில் ஜெர்மனியும் உள்ளது.

நம் நாடு உலக பொருளாதாரத்தில் ஐந்தாம் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. வேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் நம் நாட்டின் பங்கு முக்கியத்துவமானது. வாங்கும் திறன் சமநிலை(Purchasing Power Parity) அடிப்படையில் உலகளவில் சீனா முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் அமெரிக்காவும், மூன்றாம் இடத்தில் இந்தியாவும் உள்ளது.

நுகர்வு தன்மையை அதிகமாக கொண்டிருக்கும் நம் நாட்டில் விவசாயம் மற்றும் உற்பத்தி துறையை காட்டிலும், சேவை துறையின் பங்கு அதிகமாக உள்ளது. இன்றைய தேதியில் நம் நாட்டின் வளர்ச்சிக்கு சேவை துறையின் மூலம் 60 சதவீத பங்களிப்பும், 28 சதவீத வேலைவாய்ப்புகளும் உருவாகியுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனிநபர் வருவாய் எனும் போது, குறைவாக தான் காணப்படுகிறது.

நம் நாட்டில் விவசாயத்தின் பங்கு குறைந்திருந்தாலும், மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும் போது, கணிசமாக விவசாய உற்பத்தி மற்றும் சேவை இருந்து வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமாக துணைபுரிவது உள்நாட்டில் காணப்படும் நுகர்வு சந்தை, அத்தியாவசிய பொருட்களுக்கான தேவைப்பாடு, அதிகப்படியான சேமிப்பு ஆகியவை. இருப்பினும் உட்கட்டமைப்பு மற்றும் சுகாதாரத்தில் குறிப்பிடத்தக்க அளவை எட்டவில்லை.

பெட்ரோலிய பொருட்கள், விலைமதிப்பற்ற உலோகங்கள் மற்றும் கற்கள், மின் இயந்திரங்கள், ரசாயனங்கள், இரும்பு மற்றும் எஃகு பொருட்கள், மருந்து பொருட்கள் ஆகியவை நமது நாட்டின் முக்கிய ஏற்றுமதியாக உள்ளது. இறக்குமதியில் கச்சா எண்ணெய், தங்கம், முத்துக்கள், பெட்ரோலிய பொருட்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள், மின்னணு பாகங்கள், எண்ணெய், மெழுகு, பிளாஸ்டிக் மற்றும் மருத்துவ இயந்திரங்கள் ஆகியவை உள்ளன.

நாம் அதிகமாக இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் அமெரிக்காவும், மூன்றாவது இடத்தில் ஐக்கிய அரபு நாடும் உள்ளது. நம் நாடு ஏற்றுமதி செய்யும் பொருட்களை வாங்கும் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. ஐக்கிய அரபு மற்றும் சீனா முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் உள்ளது. சீனாவுடனான வர்த்தகத்தில் நமக்கு வர்த்தக பற்றாக்குறை இருந்து வருகிறது. அதே வேளையில் 2018-19ம் நிதியாண்டில் அமெரிக்காவுடன் நமது வர்த்தகத்தில் உபரியாக உள்ளது.

உலக பொருளாதாரத்தில் அமெரிக்காவின் பங்களிப்பு 23.6 சதவீதமாக உள்ளது. சீனாவின் பங்களிப்பு 15.50 சதவீதமும், ஜப்பான் 5.7 சதவீதமும், ஜெர்மனி 4.6 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளது. இந்தியா உலகளவில் உள்ள மொத்த பொருளாதார உற்பத்தியில் 2.31 சதவீத பங்களிப்புடன் உள்ளது. உலகின் பொருளாதார வளர்ச்சியில் முதல் 20 இடங்களில் அங்கம் வகிக்கும் நாடுகளின் மொத்த பங்களிப்பு மட்டும் 78.8 சதவீதமாகும். மீதமுள்ள வெறும் 21.2 சதவீதத்தை 173 நாடுகள் பகிர்ந்துள்ளன.

வேகமாக வளரும் நாடுகளை தவிர்த்து, ஏனைய நாடுகளில் அத்தியாவசிய தேவை கூட பூர்த்தி செய்ய முடியாமல், உலக பொருளாதாரம் திணறி கொண்டிருக்கிறது. பெரும்பாலான வளர்ந்த நாடுகள் தங்களுக்கு அருகில் உள்ள சிறு மற்றும் குறு நாடுகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நடந்த வண்ணம் தான் உள்ளது. பெரும்பாலும் வளரும் நாடுகளின் எல்லை பதற்றத்துடன் தான் காணப்படுகிறது.

வளரும் மற்றும் வளர்ந்த நாடுகள் மூலதன சந்தையை(Capital Market) நோக்கி தான் தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்தி கொண்டிருக்கிறது. சரியான நிர்வாகம் இல்லாததும் இது போன்ற நாடுகளில் ஒரு பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. நாட்டின் நுகர்வு தன்மைக்கு ஏற்ப அதன் கடன் தன்மையும் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான நாடுகள் அன்னிய முதலீடு மற்றும் மத்திய வங்கியின் பண அச்சடிப்பு நடவடிக்கைகளில் தான் பொருளாதாரத்தை ஊக்குவிக்கக்கூடியதாக அமைந்துள்ளது.

நடப்பில் காணப்படும் உலக பொருளாதார மந்தநிலை மற்றும் கோவிட்-19 பெரும்பாலும் மேலை நாடுகளை தான் அதிகமாக பாதித்துள்ளது. ஐரோப்பா மற்றும் அமெரிக்க அரசுகளுக்கு முதலீடாக ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் துணைபுரிகிறது. உலகளவில் வேகமாக வளரும் நாடுகளில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சி எண்கள் எதிர்மறையாக தான் உள்ளது.

வியட்நாம் மட்டும் ஜனவரி-மார்ச் காலாண்டில் நேர்மறையான வளர்ச்சியை கொண்டுள்ளது. ஆசிய பிராந்தியத்தில் வேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் வியட்நாம், இந்தோனேஷியா, தென் கொரியா, ஹாங்காங், சீனா மற்றும் இந்தியாவின் பங்கு முக்கியத்துவமானது.

இருப்பினும், நடப்பில் காணப்படும் பொருளாதார வீழ்ச்சி அடுத்த சில காலாண்டுகள் தொடரும் நிலையில், வேகமாக வளரும் நாடுகளில் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது அவ்வளவு எளிதான செயல்பாடு அல்ல. பொருளாதார ஊக்குவிப்பு சார்ந்த அறிவிப்புகள் பல நாடுகளில் சொல்லப்பட்டிருந்தாலும், உண்மையில் நுகர்வு தேவையை ஏற்படுத்தினால் மட்டுமே அது வளர்ச்சிக்கு துணைபுரியும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நீங்களும் பங்குச்சந்தை ராஜா தான் – புத்தக அறிமுகம்

நீங்களும் பங்குச்சந்தை ராஜா தான் – புத்தக அறிமுகம் 

How to pick the right stock in the Share Market ?  Amazon Kindle Edition – Free ebook

நமது வர்த்தக மதுரை தளத்தின் சார்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (17-05-2020) மாலையில் பங்குச்சந்தை அடிப்படை சார்ந்த புத்தகம் ஒன்று இணைய வழியாக வெளியிடப்பட்டது. வாசகர்கள் மற்றும் பங்குச்சந்தை ஆர்வலர்களின் நீண்ட நாள் வேண்டுகோளுக்கிணங்க, பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு சிறந்த கையேடாக இந்த புத்தகம் இருக்கும் என நம்பிக்கை கொள்கிறோம்.

பங்குசந்தை சார்ந்த புத்தகங்களை நீங்கள் வலைத்தளங்களில் தேடுவீர்களானால், பெரும்பாலும் அமெரிக்க பங்குச்சந்தை சார்ந்த புத்தகங்களை தான் அதிகமாக காண முடியும். இந்திய பங்குச்சந்தை பற்றி மிகக்குறைவான புத்தகங்கள் தான் இருக்கின்றன. நமது தாய்மொழி தமிழில் அதுவும் மிக குறைவு. பங்குச்சந்தை துறையில் உள்ள புத்தகங்களை அளித்த நமது முந்தைய எழுத்தாளர்களின் அறிவும், அனுபவமும் அளப்பரியது. ஆனால், அவர்கள் எழுதிய காலங்கள் மிகவும் பின்னோக்கியதாகும். நமது எழுத்தாளர் விவரிக்கும் பங்குச்சந்தையின் அடிப்படை , நிகழ்கால சந்தையுடன் ஒப்பிட முடியும். அவரின் எழுத்துக்கள் வாசகர்கள் படிப்பதையும், அவர்களின் முதலீட்டு சிந்தனையையும் தூண்டுகிறது. பங்குச்சந்தையில் அ முதல் ஃ வரை விளக்குகிறார்.

பங்குச்சந்தையில் அடிப்படை கல்வி இல்லையென்றால், முதலீடு என்பது தண்ணீரில் போட்ட உப்புக்கு சமமாகும். உதாரணமாக, மற்ற மொழிகளை  நாம் கற்க வேண்டுமென்றால், அந்த மொழியின் உயிரெழுத்து மற்றும் மெய்யெழுத்து ஆகியவற்றிலிருந்து தான் தொடங்க வேண்டும்.

இவ்வுலகில் பங்குச்சந்தை மூலம் மிகப்பெரிய செல்வந்தர்களான அனைவரும் பொதுவாக அடிப்படைவாதிகளே(Fundamentals and Value Investors). மற்ற முறைகளில் வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கை மிக குறைவு. முதலீடு மற்றும் அதன் மூலம் பணத்தை பெருக்குவதற்கான அடிப்படை பகுப்பாய்வை பின்பற்றியவர்களில் மாபெரும் செல்வந்தரான திரு. வாரன் பப்பெட்டும்(Warren Buffet) ஒருவராவார்.

பங்குச்சந்தை வரலாறு ஆரம்பிக்கப்பட்டது சுமார் 400 வருடங்களுக்கு முன்னால்… முதன்முதலில் டச்சு நாட்டில் தான் ஒருமிக்கப்படாத பங்குச்சந்தை தோற்றம் பெற்றது. பின்னர் அது மற்ற நாடுகளுக்கு பரவியது, கடன் பத்திரங்கள் தான் முதன்முதலில் விநியோகம் செய்யப்பட்டது. பின்னர் மாற்றமடைந்து, பொருள் சந்தை வர்த்தகம் தான் அதிகமாக நடைபெற்றது. அதாவது டிம்பர், சோயா பீன்ஸ் மற்ற பல பொருட்கள் இச்சந்தையில் வர்த்தகமானது. இவ்வாறாக சென்று கொண்டிருந்த சந்தை இன்று மிகப்பெரிய அளவில் மாற்றம் பெற்றுள்ளது.

அனைவரும் பங்குச்சந்தையில் ஈடுபட்டு முதலீட்டை மேற்கொள்ளலாம். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கும், நல்ல நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் இது துணை புரியும். நல்லதொரு முதலீட்டை மேற்கொள்ள, அடிப்படை கல்வி அவசியம். அதுவே இந்த அறிமுக புத்தகத்தின் வழியாக கிடைக்கப்பெறும்.

மின்னணு புத்தகத்தை அமேசான் கிண்டில்(Amazon Kindle) பக்கத்தில் பதிவு செய்து கொள்ளலாம். நடப்பில் இந்த புத்தகம் இலவசமாக வழங்கப்படுகிறது. படித்து பயன் பெறுங்கள்.

நீங்களும் பங்ச்சந்தை ராஜா தான் – புத்தகம் 

வாழ்க  வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com