தைரோகேர் நிறுவன காலாண்டு முடிவுகள் – ரூ. 18 கோடி நிகர நஷ்டம்
Rs. 18 Crore Net loss of Q4FY20 – Thyrocare Quarterly results
இன்று உலக தைராய்டு தினம் – மே 25. சுகாதார பிரிவில் இயங்கும் நிறுவனம் தைரோகேர் டெக்னாலஜிஸ்(Thyrocare Technologies) நிறுவனம். 1996ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனம் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஆய்வகங்களை மேற்கொண்டு வருகிறது. இந்திய தைராய்டு பரிசோதனையில் முக்கியத்துவமாக பார்க்கப்படும் நிறுவனமாக தைரோகேர் விளங்குகிறது.
இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 2,800 கோடி. புத்தக மதிப்பு 75 ரூபாயாகவும், கடன்-பங்கு விகிதம்(Debt to Equity) 0.03 என்ற அளவிலும் உள்ளது. நிறுவனத்திற்கு கடன் எதுவும் பெரிதாக இல்லை. நிறுவனர்களின் பங்களிப்பு 66 சதவீதமாகவும், நிறுவனர்கள் சார்பில் பங்குகள் அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை.
வட்டி பாதுகாப்பு விகிதம் 120 மடங்கில் உள்ளது கவனிக்கத்தக்கது. நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி கடந்த ஐந்து வருடங்களில் 20 சதவீதமாகவும், லாப வளர்ச்சி 15 சதவீதமாகவும் உள்ளது. பங்கு முதலீடு மீதான வருமானம்(ROE) கடந்த 5 வருடங்களில் 19 சதவீதம் உயர்ந்துள்ளது.
2019-20ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 94 கோடி ரூபாயாகவும், செலவினம் 64 கோடி ரூபாயாகவும் சொல்லப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ்(Covid-19) தாக்குதலால், துணை நிறுவனமான நியூக்ளியர் ஹெல்த்கேர் லிமிடெட்டில் முதலீடுகளை குறைப்பதற்கான ஏற்பாடாக, 44.33 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகை தைரோகேர் நிறுவனத்திலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக நிறுவனத்திற்கு நான்காம் காலாண்டில் 18 கோடி ரூபாய் நிகர நஷ்டமாக காட்டப்பட்டுள்ளது. சொல்லப்பட்ட ரூ. 44.33 கோடி ஒரு குறைபாட்டு கட்டணமாக(Exceptional charge) நிறுவனத்தின் நிதி அறிக்கையில் உள்ளது. 2019-20ம் நிதியாண்டின் வருவாய் 400 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் ரூ. 79.45 கோடியாகவும் இருந்துள்ளது.
கடந்த 2018-19ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் 370 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் ரூ. 95 கோடியாக இருந்தது கவனிக்கத்தக்கது. இருப்புநிலை கையிருப்பு ரூ. 344 கோடி. ஹெல்த் கேர் பிரிவில் இருக்கும் இந்நிறுவனத்தின் பங்கு விலை தற்போது 500 ரூபாய்க்கு மேல் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது. 10-20 சதவீதம் வீழ்ச்சியடையும் போது, இந்த பங்கின் உண்மையான விலைக்கு அருகில் வர்த்தகமாக கூடும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை