2019-20ம் நிதியாண்டில் ரூ. 16,594 கோடி நிகர லாபம் – இன்போசிஸ்
Infosys Net profit of Rs. 16,594 Crore in FY2019-20
இந்திய பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் கடந்த 1981ம் ஆண்டு துவங்கப்பட்டது. கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்நிறுவனம் நாட்டின் 2வது மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமாக வலம் வருகிறது. முதலிடத்தில் டி.சி.எஸ்.(TCS) நிறுவனம் உள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் சில இந்திய நிறுவனங்களில் இன்போசிஸ் உள்ளது.
சுமார் 2.42 லட்சம் பணியாளர்களை கொண்டு உலகெங்கிலும் 120 க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டு இயங்கும் இன்போசிஸ் தொழில்நுட்பம் சார்ந்த ஆலோசனைகள், அவுட்சோர்சிங் மற்றும் அடுத்த தலைமுறைக்கான டிஜிட்டல் சேவைகளை அளித்து வருகிறது. இவற்றில் முக்கியத்துவம் என்னவென்றால், சொல்லப்பட்ட பணியாளர்களில் மகளிரின் எண்ணிக்கை மட்டும் மூன்றில் ஒரு பங்கு – 37 சதவீத பெண் பணியாளர்கள். இன்போசிஸ் நிறுவனத்தின் இந்திய சந்தை மதிப்பு ரூ. 3.01 லட்சம் கோடி. 250 அமெரிக்க டாலர் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் இன்று 35 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்ட நிறுவனமாக மாறியுள்ளது.
1993ம் ஆண்டு சந்தையில் பட்டியலிடப்பட்ட இந்நிறுவனம் பங்கு ஒன்றுக்கு 95 ரூபாய் விலையில் வெளியிடப்பட்டது. ஆனால் இந்த பங்கு பெரியளவில் முதலீட்டாளர்களை ஈர்க்கவில்லை. பின்னாளில் இந்த பங்கு ஒருவரை கோடீஸ்வரராக்கும் என பெரும்பாலான முதலீட்டாளர்களுக்கு தெரியவில்லை. கடந்த 36 வருடங்களில் இந்த பங்கு 3000 மடங்கு அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது. அதாவது 1993ம் வருடம் ஒருவர் இன்போசிஸ் பங்குகளில் ரூ. 10,000 ஐ முதலீடு செய்திருக்கும் பட்சத்தில், இன்று சுமார் 3.2 கோடி ரூபாயை பெறும். ஆண்டுக்கு 40 சதவீத வருவாய் வளர்ச்சியில் இந்த பங்கு முதலீட்டாளரை செழிக்க வைத்திருக்கும்.
நிறுவனத்திற்கு கடன் எதுவும் பெரிதாக இல்லை. கூட்டாளிகளுடன் துவங்கப்பட்ட நிறுவனம் என்பதால், இந்நிறுவனத்தின் நிறுவனர்களின் பங்களிப்பு 13 சதவீதமாக உள்ளது. நிறுவனர்கள் சார்பில் பங்குகள் எதுவும் அடமானம் வைக்கப்படவில்லை. வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) சுமார் 130 மடங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
2019-20ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 90,791 கோடியாகவும், செலவினம் ரூ. 68,524 கோடியாகவும் இருந்துள்ளது. இதர வருமானமாக ரூ. 2,803 கோடி சொல்லப்பட்டுள்ளது. நிகர லாபம் ரூ. 16,594 கோடியாக இருக்கிறது. இது கடந்த 2018-19ம் நிதியாண்டை காட்டிலும் 7 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.
கடந்த 5 வருட காலத்தில் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி(Sales Growth) 11 சதவீதமும், லாப வளர்ச்சி(Profit Growth) 6 சதவீதமும் ஏற்றம் பெற்றுள்ளது. பங்கு மூலதனம் மீதான வருவாய்(ROE) ஐந்து வருடஙக்ளில் 24 சதவீதம் உயர்ந்துள்ளது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ. 63,328 கோடி என சொல்லப்பட்டுள்ளது.
இன்போசிஸ் இதுவரை 8 முறை போனஸ் பங்குகளை(Bonus issue) தனது முதலீட்டாளர்களுக்கு அளித்துள்ளது. நடப்பு டிவிடெண்ட் தொகை(Dividend yield) 3 சதவீதமாக உள்ளது. இது வங்கி சேமிப்பு கணக்கு வட்டி விகிதத்தை காட்டிலும் அதிகமாக இருப்பது கவனிக்கத்தக்கது. இன்போசிஸ் நிறுவனத்தின் பணவரத்து அறிக்கையும் சாதகமாக இருந்து வருகிறது.
பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வை பூர்த்தி செய்யும் நிறுவனமாக இன்போசிஸ் உள்ளது. எனினும் தற்போது இதன் பங்கு விலை ஏற்றத்தில் உள்ளது. வரக்கூடிய நாட்களில் சுமார் 10-20 சதவீதம் என்ற அளவில் இந்த பங்கு இறக்கம் பெறக்கூடிய நிலையில், நீண்ட கால முதலீட்டிற்கு வாங்கி வைக்கலாம்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை