உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு என்ன – 2020 ?
India’s GDP share in the Global Economy – 2020
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) என சொல்லப்படும் பொருளாதார குறியீட்டில் வரும் 2024ம் ஆண்டு ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய வேண்டும் என்ற இலக்கை மத்திய அரசு கடந்த ஆண்டு நிர்ணயித்திருந்தது. இதனை அடைவதற்கான சில திட்டங்களும், அதனை சார்ந்த இலக்கு வரைபடங்களும் சொல்லப்பட்டது.
2019ம் ஆண்டில் சர்வேதச நாணய நிதியம்(IMF) வெளியிட்ட பொருளாதார பார்வையின் படி, நாட்டின் பொருளாதாரம் 2.9 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் என கூறப்பட்டுள்ளது. தற்போது உலக பொருளாதாரத்தில் முதலிடத்தில் இருக்கும் நாடு அமெரிக்கா. அந்நாட்டின் பொருளாதாரம் சுமார் 22 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். இரண்டாவது இடத்தில் இருக்கும் சீனாவின் மதிப்பு 14 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். மூன்றாம் இடத்தில் ஜப்பானும், நான்காம் இடத்தில் ஜெர்மனியும் உள்ளது.
நம் நாடு உலக பொருளாதாரத்தில் ஐந்தாம் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. வேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் நம் நாட்டின் பங்கு முக்கியத்துவமானது. வாங்கும் திறன் சமநிலை(Purchasing Power Parity) அடிப்படையில் உலகளவில் சீனா முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் அமெரிக்காவும், மூன்றாம் இடத்தில் இந்தியாவும் உள்ளது.
நுகர்வு தன்மையை அதிகமாக கொண்டிருக்கும் நம் நாட்டில் விவசாயம் மற்றும் உற்பத்தி துறையை காட்டிலும், சேவை துறையின் பங்கு அதிகமாக உள்ளது. இன்றைய தேதியில் நம் நாட்டின் வளர்ச்சிக்கு சேவை துறையின் மூலம் 60 சதவீத பங்களிப்பும், 28 சதவீத வேலைவாய்ப்புகளும் உருவாகியுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனிநபர் வருவாய் எனும் போது, குறைவாக தான் காணப்படுகிறது.
நம் நாட்டில் விவசாயத்தின் பங்கு குறைந்திருந்தாலும், மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும் போது, கணிசமாக விவசாய உற்பத்தி மற்றும் சேவை இருந்து வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமாக துணைபுரிவது உள்நாட்டில் காணப்படும் நுகர்வு சந்தை, அத்தியாவசிய பொருட்களுக்கான தேவைப்பாடு, அதிகப்படியான சேமிப்பு ஆகியவை. இருப்பினும் உட்கட்டமைப்பு மற்றும் சுகாதாரத்தில் குறிப்பிடத்தக்க அளவை எட்டவில்லை.
பெட்ரோலிய பொருட்கள், விலைமதிப்பற்ற உலோகங்கள் மற்றும் கற்கள், மின் இயந்திரங்கள், ரசாயனங்கள், இரும்பு மற்றும் எஃகு பொருட்கள், மருந்து பொருட்கள் ஆகியவை நமது நாட்டின் முக்கிய ஏற்றுமதியாக உள்ளது. இறக்குமதியில் கச்சா எண்ணெய், தங்கம், முத்துக்கள், பெட்ரோலிய பொருட்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள், மின்னணு பாகங்கள், எண்ணெய், மெழுகு, பிளாஸ்டிக் மற்றும் மருத்துவ இயந்திரங்கள் ஆகியவை உள்ளன.
நாம் அதிகமாக இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் அமெரிக்காவும், மூன்றாவது இடத்தில் ஐக்கிய அரபு நாடும் உள்ளது. நம் நாடு ஏற்றுமதி செய்யும் பொருட்களை வாங்கும் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. ஐக்கிய அரபு மற்றும் சீனா முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் உள்ளது. சீனாவுடனான வர்த்தகத்தில் நமக்கு வர்த்தக பற்றாக்குறை இருந்து வருகிறது. அதே வேளையில் 2018-19ம் நிதியாண்டில் அமெரிக்காவுடன் நமது வர்த்தகத்தில் உபரியாக உள்ளது.
உலக பொருளாதாரத்தில் அமெரிக்காவின் பங்களிப்பு 23.6 சதவீதமாக உள்ளது. சீனாவின் பங்களிப்பு 15.50 சதவீதமும், ஜப்பான் 5.7 சதவீதமும், ஜெர்மனி 4.6 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளது. இந்தியா உலகளவில் உள்ள மொத்த பொருளாதார உற்பத்தியில் 2.31 சதவீத பங்களிப்புடன் உள்ளது. உலகின் பொருளாதார வளர்ச்சியில் முதல் 20 இடங்களில் அங்கம் வகிக்கும் நாடுகளின் மொத்த பங்களிப்பு மட்டும் 78.8 சதவீதமாகும். மீதமுள்ள வெறும் 21.2 சதவீதத்தை 173 நாடுகள் பகிர்ந்துள்ளன.
வேகமாக வளரும் நாடுகளை தவிர்த்து, ஏனைய நாடுகளில் அத்தியாவசிய தேவை கூட பூர்த்தி செய்ய முடியாமல், உலக பொருளாதாரம் திணறி கொண்டிருக்கிறது. பெரும்பாலான வளர்ந்த நாடுகள் தங்களுக்கு அருகில் உள்ள சிறு மற்றும் குறு நாடுகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நடந்த வண்ணம் தான் உள்ளது. பெரும்பாலும் வளரும் நாடுகளின் எல்லை பதற்றத்துடன் தான் காணப்படுகிறது.
வளரும் மற்றும் வளர்ந்த நாடுகள் மூலதன சந்தையை(Capital Market) நோக்கி தான் தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்தி கொண்டிருக்கிறது. சரியான நிர்வாகம் இல்லாததும் இது போன்ற நாடுகளில் ஒரு பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. நாட்டின் நுகர்வு தன்மைக்கு ஏற்ப அதன் கடன் தன்மையும் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான நாடுகள் அன்னிய முதலீடு மற்றும் மத்திய வங்கியின் பண அச்சடிப்பு நடவடிக்கைகளில் தான் பொருளாதாரத்தை ஊக்குவிக்கக்கூடியதாக அமைந்துள்ளது.
நடப்பில் காணப்படும் உலக பொருளாதார மந்தநிலை மற்றும் கோவிட்-19 பெரும்பாலும் மேலை நாடுகளை தான் அதிகமாக பாதித்துள்ளது. ஐரோப்பா மற்றும் அமெரிக்க அரசுகளுக்கு முதலீடாக ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் துணைபுரிகிறது. உலகளவில் வேகமாக வளரும் நாடுகளில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சி எண்கள் எதிர்மறையாக தான் உள்ளது.
வியட்நாம் மட்டும் ஜனவரி-மார்ச் காலாண்டில் நேர்மறையான வளர்ச்சியை கொண்டுள்ளது. ஆசிய பிராந்தியத்தில் வேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் வியட்நாம், இந்தோனேஷியா, தென் கொரியா, ஹாங்காங், சீனா மற்றும் இந்தியாவின் பங்கு முக்கியத்துவமானது.
இருப்பினும், நடப்பில் காணப்படும் பொருளாதார வீழ்ச்சி அடுத்த சில காலாண்டுகள் தொடரும் நிலையில், வேகமாக வளரும் நாடுகளில் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது அவ்வளவு எளிதான செயல்பாடு அல்ல. பொருளாதார ஊக்குவிப்பு சார்ந்த அறிவிப்புகள் பல நாடுகளில் சொல்லப்பட்டிருந்தாலும், உண்மையில் நுகர்வு தேவையை ஏற்படுத்தினால் மட்டுமே அது வளர்ச்சிக்கு துணைபுரியும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை