Tag Archives: infosys

இன்போசிஸ் நிறுவனத்தின் முதலாம் காலாண்டு நிகர லாபம் – ரூ. 5,945 கோடி

இன்போசிஸ் நிறுவனத்தின் முதலாம் காலாண்டு நிகர லாபம் – ரூ. 5,945 கோடி 

Infosys reported a net profit of Rs.5,945 Crore in Q1FY24

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் லிமிடெட் தனது 2023-24ம் நிதியாண்டின் முதலாம் காலாண்டு முடிவுகளை இன்று வெளியிட்டிருந்தது. சொல்லப்பட்ட ஏப்ரல்-ஜூன்  காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 37,933 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ. 28,869 கோடியாகவும் இருந்துள்ளது.

நிறுவனத்தின் இயக்க லாபம் 9,064 கோடி ரூபாய் மற்றும் இயக்க லாப விகிதம்(OPM) 24 சதவீதமாக உள்ளது. இதர வருமானமாக ஜூன் காலாண்டில் 561 கோடி ரூபாயை நிறுவனம் ஈட்டியுள்ளது. வரிக்கு முந்தைய லாபம் ரூ.8,362 கோடியாகவும், நிகர லாபம் ரூ.5,945 கோடியாகவும் சொல்லப்பட்டுள்ளது.

கடந்த 2022-23ம் நிதியாண்டின் முதலாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில், தற்போது சொல்லப்பட்ட வருவாய் 10 சதவீதமும், நிகர லாபம் 11 சதவீதமுமாக வளர்ச்சியடைந்துள்ளது. ஜூன் 2022ல் ஒரு பங்கு மீதான வருவாய்(EPS) ரூ. 12.74 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.14.32 ஆக உள்ளது.

இன்போசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.6.01 லட்சம் கோடி. நிறுவனத்திற்கு கடன் பெரிதாக எதுவுமில்லை. மார்ச் 2023ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) 73,338 கோடி ரூபாய். இன்போசிஸ் நிறுவனத்தின் வருவாய் பெரும்பாலும் நிதித்துறை சார்ந்த சேவைகளிலிருந்து பெறப்படுகிறது. 

இன்போசிஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு ஜூன் காலாண்டின் படி 1,883 வாடிக்கையாளர்கள்(நிறுவனங்கள்) உள்ளனர். நூறு மில்லியன் டாலர்களுக்கு மேலாக வருவாய் அளிக்கும் வாடிக்கையாளர்கள் மட்டும் 38 பேர். 940 நிறுவன வாடிக்கையாளர்கள் சுமார் ஒரு மில்லியன் டாலர்களுக்கு மேலான வருவாயை இன்போசிஸ் நிறுவனத்திற்கு அளிக்கின்றனர்.

முதல் 25 நிறுவன வாடிக்கையாளர்கள்(Top 25 Clients) மட்டும், நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாயில் 35 சதவீத பங்களிப்பை வழங்கியுள்ளனர். ஜூன் காலாண்டு முடிவில் நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 3.36 லட்சம். இவற்றில் 3.17 லட்சம் ஊழியர்கள் தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களாகவும், மற்றவர்கள் விற்பனை மற்றும் அதற்கு பிறகான சேவையை வழங்குவதிலும் உள்ளனர். 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

2022-23ம் நிதியாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் நிகர லாபம் – ரூ. 24,108 கோடி

2022-23ம் நிதியாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் நிகர லாபம் – ரூ. 24,108 கோடி 

Infosys reported a net profit of Rs.24,108 Crore in the Financial year 2022-23 – Results

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் லிமிடெட், கடந்த வார முடிவில் தனது 2022-23ம் நிதியாண்டுக்கான நான்காம் காலாண்டு முடிவு மற்றும் ஒட்டுமொத்த ஆண்டுக்கான நிதி அறிக்கையையும் வெளியிட்டிருந்தது. 

மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 37,441 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ. 28,443 கோடியாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட காலாண்டில் இயக்க லாப விகிதம்(OPM %) 24 சதவீதமாக உள்ளது. நான்காம் காலாண்டின் முடிவில் நிறுவனம் ரூ. 6,134 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. 

இதற்கு முந்தைய ஆண்டின்(2021-22) நான்காம் காலாண்டுடன் ஒப்பிடுகையில், தற்போது சொல்லப்பட்டிருக்கும் வருவாய் 16 சதவீதமும், நிகர லாபம் 8 சதவீதமுமாக வளர்ந்துள்ளது. 2022-23ம் நிதியாண்டினை ஒட்டுமொத்தமாக காணும் போது, நிறுவனத்தின் வருவாய் ரூ. 1,46,767 கோடியாகவும், செலவினம் 1,11,637 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. 

சொல்லப்பட்ட நிதியாண்டின் முடிவில் நிறுவனம் 24,108 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. நிறுவனத்தின் பங்கு மீதான வருவாய்(EPS) 58 ரூபாயாக உள்ளது. 2011-12ம் நிதியாண்டில் இது 18 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் பெரும்பாலான வருவாய் டிஜிட்டல் சேவையை சார்ந்தும், நிதித்துறை(Financial Services) சார்ந்த சேவைகளிலிருந்தும் பெறப்படுகிறது.  

புவியியல் சார்ந்து காணும் போது, நிறுவனத்தின் 62 சதவீத வருவாய் வட அமெரிக்காவிலிருந்து கிடைக்கப்பெறுகிறது. ஐரோப்பாவில் 25 சதவீதமும், உள்நாட்டில் 3 சதவீதத்திற்கும் குறைவாகவே வருவாய் ஈட்டப்படுகிறது. உலகின் சிறப்பான 500 நிறுவனங்களில் இன்போசிஸ் நிறுவனமும் இருப்பது கவனிக்கத்தக்கது.

இன்போசிஸ் நிறுவனத்தின்(Infosys Limited) முக்கிய வாடிக்கையாளர்களாக மெர்சிடஸ்-பென்ஸ், எச்.எஸ்.பி.சி. வங்கி, லாக்கீட் மார்ட்டின், அமெரிக்க ராணுவம், அமெரிக்க கடற்படை, ஐ.பி.எம், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, கோல்ட்மேன் சாக்ஸ் மற்றும் டச்சு வங்கி ஆகிய நிறுவனங்கள் உள்ளன. இன்போசிஸ் நிறுவனத்தின் இந்திய சந்தை மதிப்பு ரூ. 5.22 லட்சம் கோடி. 

கடந்த நிதியாண்டில் எதிர்பார்த்த வருவாய் மற்றும் லாப மதிப்பீட்டை காட்டிலும் குறைவாக இருந்ததும், நடப்பு நிதியாண்டுக்கான வருவாய் வழிகாட்டல்(Financial Guidance) நிறுவனத்தின் சார்பில் குறைவாக மதிப்பிடப்பட்டிருந்ததால், திங்கள் கிழமை அன்று (17-04-2023) இந்த பங்கின் விலை 10 சதவீதத்திற்கும் மேல் வீழ்ச்சியை சந்தித்தது. நீண்டகால முதலீட்டாளர்களிடையே இது எந்த சலசலப்பையும் ஏற்படுத்தாது, விலை வீழ்ச்சியால் பங்கு வாங்குவதற்கான வாய்ப்பையும் இது போன்ற நிகழ்வு வழங்குகிறது.

உலக அளவில் காணப்படும் பொருளாதார மந்தநிலை அச்சம் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மாற்றம் ஆகியவற்றால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்கு விலை சரிவது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. இன்போசிஸ் நிறுவனத்திற்கு கடன் பெரிதாக எதுவுமில்லை. அதன் கடன்-பங்கு விகிதம் 0.11 என்ற அளவில் உள்ளது. மார்ச் 2023 முடிவின் படி, நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ. 73,338 கோடியாக உள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளில் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி சராசரியாக 14 சதவீதமும், லாப வளர்ச்சி 10 சதவீதமாகவும் இருந்துள்ளது. கடந்த ஐந்து வருடங்களில் இன்போசிஸ் நிறுவனத்தின் பங்கு விலை 17 சதவீதம் (கூட்டு வட்டியில்) ஏற்றம் பெற்றுள்ளது. ஒரு வருட காலத்தில் 28 சதவீதம் இறக்கமடைந்துள்ளது. அடிப்படை பகுப்பாய்வின் படி(Cash Flow – Fundamental Analysis), இன்போசிஸ் பங்கின் விலை ரூ. 900 – ரூ. 1,100 என்ற அளவில் அமைந்துள்ளது.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

2021-22ம் நிதியாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் நிகர லாபம் – ரூ.22,110 கோடி

2021-22ம் நிதியாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் நிகர லாபம் – ரூ.22,110 கோடி 

Infosys reported a Net Profit of Rs.22,110 Crore in the Financial year 2021-22 – Results

இந்திய பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் கடந்த 1981ம் ஆண்டு துவங்கப்பட்டது. தகவல் தொழில்நுட்ப பிரிவில் டி.சி.எஸ். நிறுவனத்திற்கு பிறகு நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாக இன்போசிஸ் திகழ்கிறது. வருவாய் அடிப்படையில் உலகின் முதல் 1000 நிறுவனங்களில்(Public Company) ஒன்றாகவும் இந்நிறுவனம் உள்ளது. 

சுமார் 2.76 லட்சம் பணியாளர்களை கொண்டு இயங்கும் இன்போசிஸ் நிறுவனத்தின் சொத்து மதிப்பு மட்டும் 14 பில்லியன் அமெரிக்க டாலர்கள். நிதித்துறை, காப்பீடு, உற்பத்தி மற்றும் பிற துறைகளுக்கு தேவையான தகவல் தொழில்நுட்ப சேவையை வழங்கி கொண்டிருக்கும் இந்நிறுவனம் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் 200க்கும் அதிகமான அலுவலகங்களை கொண்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய பெருநிறுவன பல்கலைக்கழகம்(Corporate University) ஒன்றை சுமார் 337 ஏக்கர் பரப்பளவில் இன்போசிஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த வளாகத்தில் 400க்கும் மேற்பட்ட பயிற்றுனர்களும், 200 வகுப்பறைகளும் உள்ளன. தொழில்நுட்ப பயிற்சி மற்றும் அதனை சார்ந்த வேலைகளுக்கு இப்பல்கலைக்கழகம் பயன்படுகிறது. 

இன்போசிஸ் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 7.35 லட்சம் கோடி ரூபாய். நிறுவனத்தின் கடன்-பங்கு விகிதம் 0.07 ஆக உள்ளது. நிறுவனர்களின் பங்களிப்பு 13 சதவீதமாகவும், நிறுவனத்தின் சார்பாக பங்கு அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை. நிறுவனத்தின் வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 152 மடங்குகளில் உள்ளது. 

2021-22ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.1,21,641 கோடியாகவும், செலவினம் 90,150 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. நிறுவனத்தின் இயக்க லாப விகிதம்(OPM) 26 சதவீதமும், வரிக்கு முந்தைய லாபம் 30,110 கோடி ரூபாயாகவும் உள்ளது.

சொல்லப்பட்ட காலத்தில் நிறுவனம் நிகர லாபமாக 22,110 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது. மார்ச் 2022 முடிவின் படி, நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) ரூ.73,252 கோடி. செயல்பாட்டு மூலதனம்(Working Capital) மார்ச் 2022ல் 48 நாட்களாக உள்ளது. 

அன்னிய முதலீட்டாளர்களிடம் சுமார் 33 சதவீத பங்குகளும்,  உள்நாட்டு முதலீட்டாளர்களிடம்(Domestic Institutional Investors) 16 சதவீத பங்குகளும் உள்ளது கவனிக்கத்தக்கது. எல்.ஐ.சி. இந்தியா(LIC) காப்பீடு நிறுவனத்திடம் சுமார் 6 சதவீத இன்போசிஸ் பங்குகள் கைவசம் உள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இன்போசிஸ் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் – ரூ.5,197 கோடி

இன்போசிஸ் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் – ரூ.5,197 கோடி 

Infosys net profit of Rs.5,197 Crore – Q3FY21

இந்திய பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ், 2020-21ம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டு முடிவுகளை(Quarterly results) வெளியிட்டுள்ளது. மூன்றாம் காலண்டான டிசம்பர் 2020 காலத்தில் நிறுவனத்தின் வருவாய் 25,927 கோடி ரூபாயாகவும், செலவினம் 18,512 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.

சொல்லப்பட்ட காலாண்டில் இயக்க லாப விகிதம் 29 சதவீதமாக உள்ளது. இந்நிறுவனத்தின் சராசரி காலாண்டு இயக்க லாப விகிதம்(Operating Profit Margin) 25 சதவீதத்திற்கு மேலாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதர வருமானமாக 610 கோடி ரூபாய் சொல்லப்பட்டுள்ளது. மூன்றாம் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.5,197 கோடியாக உள்ளது.

நடப்பு நிதியாண்டின் ஒன்பது மாத முடிவில் நிறுவனத்தின் வருவாய் ரூ.63,415 கோடியாகவும், நிகர லாபம் 13,588 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இதுவரை பங்கு ஒன்றுக்கு 12 ரூபாய் ஈவுத்தொகையாக அளிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் காலாண்டில் ஈவுத்தொகை(Dividend) எதுவும் அறிவிக்கப்படவில்லை.

இன்போசிஸ்(Infosys) நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.5.84 லட்சம் கோடி. 1981ம் ஆண்டு 250 டாலர்களை கொண்டு, ஏழு பொறியியலார்களால் துவங்கப்பட்ட இந்நிறுவனம் இன்று பில்லியன் டாலர் பன்னாட்டு நிறுவனமாக மாறியுள்ளது. இதன் கிளைகள் பல நாடுகளிலும், நூறுக்கு மேற்பட்ட துணை நிறுவனங்களும், சுமார் 2.43 லட்சம் பணியாளர்களும் இன்போசிஸ் நிறுவனத்தின் வெற்றிக்கு அடையாளமாக உள்ளது.

நிறுவனத்தின் கடன்-பங்கு விகிதம்(Debt to Equity) 0.07 ஆகவும், வட்டி பாதுகாப்பு விகிதம் 134 மடங்கிலும் உள்ளது. கடந்த பத்து வருடங்களில் விற்பனை  வருவாய் 15 சதவீதமாகவும், லாபம் 10 சதவீதமாகவும் வளர்ச்சி பெற்றுள்ளது. கடந்த ஒரு வருட காலத்தில் இந்த பங்கின் விலை 80 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது.

நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு 69,492 கோடி ரூபாயாகவும், பணவரத்து(Cash flow) ஒவ்வொரு நிதியாண்டிலும் நிறுவனத்திற்கு சாதகமாக உள்ளது. நிறுவனர்கள் சார்பில் பங்குகள் அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

2019-20ம் நிதியாண்டில் ரூ. 16,594 கோடி நிகர லாபம் – இன்போசிஸ்

2019-20ம் நிதியாண்டில் ரூ. 16,594 கோடி நிகர லாபம் – இன்போசிஸ் 

Infosys Net profit of Rs. 16,594 Crore in FY2019-20

இந்திய பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் கடந்த 1981ம் ஆண்டு துவங்கப்பட்டது. கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்நிறுவனம் நாட்டின் 2வது மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமாக வலம் வருகிறது. முதலிடத்தில் டி.சி.எஸ்.(TCS) நிறுவனம் உள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் சில இந்திய நிறுவனங்களில் இன்போசிஸ் உள்ளது.

சுமார் 2.42 லட்சம் பணியாளர்களை கொண்டு உலகெங்கிலும் 120 க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டு இயங்கும் இன்போசிஸ் தொழில்நுட்பம் சார்ந்த ஆலோசனைகள், அவுட்சோர்சிங் மற்றும் அடுத்த தலைமுறைக்கான டிஜிட்டல் சேவைகளை அளித்து வருகிறது. இவற்றில் முக்கியத்துவம் என்னவென்றால், சொல்லப்பட்ட பணியாளர்களில் மகளிரின் எண்ணிக்கை மட்டும் மூன்றில் ஒரு பங்கு – 37 சதவீத பெண் பணியாளர்கள். இன்போசிஸ் நிறுவனத்தின் இந்திய சந்தை மதிப்பு ரூ. 3.01 லட்சம் கோடி. 250 அமெரிக்க டாலர் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் இன்று 35 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்ட நிறுவனமாக மாறியுள்ளது.

1993ம் ஆண்டு சந்தையில் பட்டியலிடப்பட்ட இந்நிறுவனம் பங்கு ஒன்றுக்கு 95 ரூபாய் விலையில் வெளியிடப்பட்டது. ஆனால் இந்த பங்கு பெரியளவில் முதலீட்டாளர்களை ஈர்க்கவில்லை. பின்னாளில் இந்த பங்கு ஒருவரை கோடீஸ்வரராக்கும் என பெரும்பாலான முதலீட்டாளர்களுக்கு தெரியவில்லை. கடந்த 36 வருடங்களில் இந்த பங்கு 3000 மடங்கு அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது. அதாவது 1993ம் வருடம் ஒருவர் இன்போசிஸ் பங்குகளில் ரூ. 10,000 ஐ முதலீடு செய்திருக்கும் பட்சத்தில், இன்று சுமார் 3.2 கோடி ரூபாயை பெறும். ஆண்டுக்கு 40 சதவீத வருவாய் வளர்ச்சியில் இந்த பங்கு முதலீட்டாளரை செழிக்க வைத்திருக்கும்.

நிறுவனத்திற்கு கடன் எதுவும் பெரிதாக இல்லை. கூட்டாளிகளுடன் துவங்கப்பட்ட நிறுவனம் என்பதால், இந்நிறுவனத்தின் நிறுவனர்களின் பங்களிப்பு 13 சதவீதமாக உள்ளது. நிறுவனர்கள் சார்பில் பங்குகள் எதுவும் அடமானம் வைக்கப்படவில்லை. வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) சுமார் 130 மடங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

2019-20ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 90,791 கோடியாகவும், செலவினம் ரூ. 68,524 கோடியாகவும் இருந்துள்ளது. இதர வருமானமாக ரூ. 2,803 கோடி சொல்லப்பட்டுள்ளது. நிகர லாபம் ரூ. 16,594 கோடியாக இருக்கிறது. இது கடந்த 2018-19ம் நிதியாண்டை காட்டிலும் 7 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.

கடந்த 5 வருட காலத்தில் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி(Sales Growth) 11 சதவீதமும், லாப வளர்ச்சி(Profit Growth) 6 சதவீதமும் ஏற்றம் பெற்றுள்ளது. பங்கு மூலதனம் மீதான வருவாய்(ROE) ஐந்து வருடஙக்ளில் 24 சதவீதம் உயர்ந்துள்ளது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ. 63,328 கோடி என சொல்லப்பட்டுள்ளது.

இன்போசிஸ் இதுவரை 8 முறை போனஸ் பங்குகளை(Bonus issue) தனது முதலீட்டாளர்களுக்கு அளித்துள்ளது. நடப்பு டிவிடெண்ட் தொகை(Dividend yield) 3 சதவீதமாக உள்ளது. இது வங்கி சேமிப்பு கணக்கு வட்டி விகிதத்தை காட்டிலும் அதிகமாக இருப்பது கவனிக்கத்தக்கது. இன்போசிஸ் நிறுவனத்தின் பணவரத்து அறிக்கையும் சாதகமாக இருந்து வருகிறது.

பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வை பூர்த்தி செய்யும் நிறுவனமாக இன்போசிஸ் உள்ளது. எனினும் தற்போது இதன் பங்கு விலை ஏற்றத்தில் உள்ளது. வரக்கூடிய நாட்களில் சுமார் 10-20 சதவீதம் என்ற அளவில் இந்த பங்கு இறக்கம் பெறக்கூடிய நிலையில், நீண்ட கால முதலீட்டிற்கு வாங்கி வைக்கலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இன்போசிஸ் நிறுவன காலாண்டு நிகர லாபம் ரூ. 4,457 கோடி

இன்போசிஸ் நிறுவன காலாண்டு நிகர லாபம் ரூ. 4,457 கோடி

Infosys reported a Net Profit of Rs. 4,457 Crore – Q3FY20 – Quarterly Results

நாட்டின் மிகப்பெரிய தொழில்நுட்ப பன்னாட்டு நிறுவனமான இன்போசிஸ்(Infosys) 2019-20ம் நிதியாண்டுக்கான மூன்றாம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. கடந்த டிசம்பர் 2019 காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 23,092 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது. இது கடந்த 2018ம் ஆண்டின் டிசம்பர் காலத்தில் ரூ. 21,400 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 3.14 லட்சம் கோடி. புத்தக மதிப்பு(Book Value) ஒரு பங்குக்கு ரூ. 142 விலையிலும், முகமதிப்பு 5 ரூபாய் விலையிலும் காணப்படுகிறது. வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 172 மடங்குகளில் உள்ளது. நிறுவனத்திற்கு கடன் எதுவும் பெரிதாக இல்லை. தற்போதைய பங்கு விலை புத்தக மதிப்பை காட்டிலும் 5 மடங்கில் உள்ளது கவனிக்கத்தக்கது.

இன்போசிஸ் நிறுவனத்தின் இயக்க லாப வளர்ச்சி(Operating Profit Margin) சராசரியாக 25 சதவீதம் என்ற அளவில் இருப்பது முதலீட்டாளர்களுக்கு சாதகமானது. டிசம்பர் 2019 காலாண்டில் நிறுவனத்தின் செலவினம் 17,291 கோடி ரூபாய். தேய்மானமாக(Depreciation) நிறுவனத்தின் சார்பில் ரூ. 737 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சொல்லப்பட்ட காலத்தில் நிறுவனத்தின் நிகர லாபம்(Net Profit) ரூ. 4,457 கோடி. இது கடந்த டிசம்பர் 2018ம் காலாண்டில் ரூ. 3,609 கோடியாக இருந்தது கவனிக்கத்தக்கது. 2018-19ம் நிதியாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் வருவாய் ரூ. 82,675 கோடி மற்றும் நிகர லாபம் 15,404 கோடி ரூபாய்.

நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி கடந்த ஐந்து வருடங்களில் 11 சதவீதமும், பத்து வருட காலத்தில் 14 சதவீதமாகவும் உள்ளது. லாப வளர்ச்சி கடந்த 5 வருடங்களில் 7.5 சதவீதமாகவும், பத்து வருட கால அளவில் 10 சதவீதமாகவும் . இருந்துள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஒரு வருடத்தில் 8.50 சதவீதம் அதிகரித்துள்ளது.

மூன்று வருட காலத்தில் 15 சதவீதமும், 10 வருடங்களில் 8.60 சதவீதமும் பங்கு விலை உயர்ந்துள்ளது. நிறுவனத்தின் கையிருப்பாக(Reserves) செப்டம்பர் 2019ம் காலாண்டு முடிவில் 58,400 கோடி ரூபாய் சொல்லப்பட்டுள்ளது. நிறுவனத்திற்கு பணவரவு சரியாக வந்து கொண்டிருக்கிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

சிக்கலில் இந்திய ஐ.டி. நிறுவனம் இன்போசிஸ்

சிக்கலில் இந்திய ஐ.டி. நிறுவனம் இன்போசிஸ் 

Indian Tech Firm Infosys trouble in Whistleblower Complaint

நாட்டின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 3.27 லட்சம் கோடி ரூபாய். 2018-19ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 82,675 கோடியாகவும், ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ. 15,404 கோடியாகவும் இருந்தது.

நிறுவனத்தின் கையிருப்பாக செப்டம்பர் காலாண்டு முடிவில் ரூ. 58,400 கோடி என இருப்பு நிலை அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. டி.சி.எஸ்.(TCS) நிறுவனத்திற்கு அடுத்தாற் போல், மிகவும் கவுரமாக பார்க்கப்படும் நிறுவனம் தான் இன்போசிஸ்.

பொதுவாக பெரு நிறுவனங்கள் ஏதேனும் செய்திகள் அல்லது சிக்கலில் மாட்டி கொண்டால், அதன் தாக்கம் சந்தை முழுவதையும் தொற்றி கொள்ளும். இதனை நாம் டாட்டா, ரிலையன்ஸ், சன் பார்மா போன்ற பெரிய நிறுவனங்களிடம் காணலாம். முன்பு நிர்வாக குறைபாடு என குற்றம் சாட்டப்பட்ட்டிருந்த இன்போசிஸ் நிறுவனம், பின்னர் அந்த பிரச்சினையை களைந்து மீண்டு வந்தது.

தற்போது மீண்டும் ஒரு சிக்கலில் இன்போசிஸ் நிறுவனம், இந்த சமயம் சிக்கல் இன்போசிஸ் ஊழியர்களிடம் இருந்து துவங்கியுள்ளது. அவர்களின் குற்றசாட்டு, ‘ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி(CEO) மற்றும் தலைமை நிதி அதிகாரி(CFO) இருவரும் பல காலாண்டுகளாக நெறிமுறையற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக ‘ கூறியுள்ளனர்.

இந்த குற்றசாட்டை இன்போசிஸ் நிறுவனம் தனது புகார் பட்டியலில் பெற்றுள்ளது. மேலும் இதனை சந்தை அமைப்புகளிடமும்(Stock Exchange) நிறுவனம் சார்பில் சமர்ப்பித்துள்ளது. குற்றம் சாட்டியுள்ளவர்கள் எழுதிய இரண்டு பக்க கடிதத்தில், தாங்கள் இன்போசிஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் எனவும், அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டதற்கு தங்களிடம் மின்னஞ்சல் மற்றும் குரல் வழியிலான சான்றுகள் உள்ளதெனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இயக்குனர்கள் மற்றும் தணிக்கையாளர்களிடம்(Audit) இருந்து தகவல்களை மறைக்க உயர் நிர்வாகம் சில ஊழியர்களை கேட்டு கொண்டதாகவும் கூறப்படுகிறது. வெரிசோன்(Verizon), இன்டெல் மற்றும் கூட்டு முயற்சிகள்(Joint Ventures) போன்ற பெரிய ஒப்பந்தங்கள், ஏ.பி.என். அம்ரோ(ABN AMRO) கையகப்படுத்தல் போன்றவற்றில் நெறிமுறையற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக நேற்றைய அமெரிக்க நியூயார்க் சந்தையில்(NYSE) இன்போசிஸ் நிறுவனத்தின் பங்கு விலை 12 சதவீதம் வீழ்ச்சி கண்டது. சந்தை துவங்கும் முன் நடைபெற்ற வர்த்தகத்தில் 18 சதவீதம் வரை இந்த பங்கு இறக்கம் கண்டது. இந்திய பங்குச்சந்தை நேற்று விடுமுறை தினம் என்பதால், இன்று (22-10-2019) வர்த்தகத்தின் போது, இன்போசிஸ் நிறுவன பங்கின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் – ரூ. 4,019 கோடி

இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் – ரூ. 4,019 கோடி

Infosys Q2Fy20 Net profit to Rs. 4,019 Crore – Quarterly Results

பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்திய பன்னாட்டு ஐ.டி. நிறுவனம் இன்போசிஸ்(Infosys). இந்த நிறுவனம் அதன் இரண்டாம் காலாண்டு முடிவுகளை வெள்ளிக்கிழமை அன்று (11-10-2019) சந்தையில் வெளியிட்டது. 2019-20ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 22,629 கோடி ரூபாயாக உள்ளது.

நிறுவனத்தின் செலவினங்கள் 16,990 கோடி ரூபாயாகவும், இயக்க லாபம்(Operating Profit) ரூ. 5,639 கோடியாகவும் இருந்துள்ளது. இதர வருமானமாக 626 கோடி ரூபாய் சொல்லப்பட்டுள்ளது. ஆக இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் ரூ. 4,019 கோடி. வரிக்கு முந்தைய லாபம் 5,496 கோடி ரூபாயாக உள்ளது.

கடந்த 12 மாதங்கள் அடிப்படையில் நிறுவனத்தின் நிகர லாபம் 15,500 கோடி ரூபாயாகவும், வருவாய் ரூ. 87,371 கோடியாகவும் உள்ளது. கடந்த ஐந்து வருட காலத்தில் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 10.52 சதவீதமாகவும், லாப வளர்ச்சி 7.45 சதவீதமாகவும் உள்ளது.

நிறுவனத்தின் இருப்புநிலை அறிக்கையில் கையிருப்பு தொகை(Reserves) 58,400 கோடி ரூபாயாக உள்ளது. 2019-20ம் நிதியாண்டின் முதலாம் காலாண்டுடன் ஒப்பிடும் போது நிறுவன வருவாய் 3.79 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. அதே வேளையில் கடந்த வருட செப்டம்பர் மாத காலாண்டுடன் பார்க்கும் போது, 9.80 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.

இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், 2.21 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இயக்க லாப அளவு(Operating profit Margin) கடந்த ஒரு வருடத்தில் சராசரியாக 24 சதவீதம் என்ற அளவில் உள்ளது. தற்போது நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 3.47 லட்சம் கோடியாக உள்ளது.

முதலீட்டு பங்கு மீதான வருவாய்(Return on Equity) கடந்த ஐந்து வருட கால அளவில் 24 சதவீதமாகவும், இதுவே பத்து வருடங்களில் 25 சதவீதமும் உள்ளது. பங்கு முதலீட்டாளர்களுக்கு இது சாதகமான விஷயமும் கூட. நிறுவனத்திற்கு கடன் எதுவும் இல்லை. தற்போதைய கடன் பொறுப்புகளாக(Current Liabilities) ரூ. 19,211 கோடியும், சொத்துக்களாக 48,850 கோடி ரூபாயும் உள்ளது கவனிக்கத்தக்கது.

வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 258 மடங்குகளில் உள்ளது. அதாவது நிறுவனத்திற்கு ஏதேனும் கடன் இருந்தால், அந்த தொகையை போல 258 மடங்குகளில் சொத்து உள்ளதை குறிக்கிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நான்காம் காலாண்டு முடிவுகள் – ரூ. 4,074 கோடியை லாபமாக ஈட்டிய இன்போசிஸ்

நான்காம் காலாண்டு முடிவுகள் – ரூ. 4,074 கோடியை லாபமாக ஈட்டிய இன்போசிஸ்

Infosys gains profit of Rs. 4,074 Crore in the Fourth Quarter – FY19

 

2018-19ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் இன்போசிஸ் நிறுவனம் 4,074 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. சொல்லப்பட்ட காலத்தில் இதன் வருவாய் 21,539 கோடி ரூபாயாகவும், இயக்க லாபம்(Operating Profit) ரூ. 5,149 கோடியாகவும் இருந்துள்ளது. இதர வருமானம் நான்காம் காலாண்டில் 665 கோடி ரூபாயாக இருக்கிறது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

வரிக்கு முந்தைய லாபம்(PBT) 5,283 கோடி ரூபாய் ஆகும். கடந்த மார்ச் 2017-18ம் காலத்தில்(Quarterly Results) நிறுவனத்தின் வருவாய் 18,083 கோடி ரூபாயும், நிகர லாபம் ரூ. 3,690 கோடியாகும். இதனை ஒப்பிடுகையில் தற்போதைய வருவாய் 19 சதவீத வளர்ச்சியை (YoY) பெற்றுள்ளது.

 

2018-19ம் நிதியாண்டின் முடிவில் இன்போசிஸ் நிறுவனத்தின் கையிருப்பு 62,778 கோடி ரூபாயாக இருப்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக நிறுவனத்தின் கையிருப்பு தொகை எவ்வளவு என்பதை, ஆண்டு இருப்பு நிலை அறிக்கையை(Balance Sheet) பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

 

மூன்றாம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 21,400 கோடியாகவும், நிகர லாபம் ரூ. 3,609 கோடியாகவும் இருந்துள்ளது. இதனை ஒப்பிடுகையிலும், தற்போது வெளியிடப்பட்ட நிகர லாபம் 13 சதவீத வளர்ச்சியை கொண்டிருக்கிறது.

 

நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் செலவின விகிதம் ரூ. 16,390 கோடியாகவும், இது மூன்றாம் காலாண்டு செலவினத்தை காட்டிலும் சற்று குறைவாக இருக்கிறது. பணத்திற்கு சமமாக(Cash Equivalents) நிறுவனத்திற்கு 2018-19ம் நிதி ஆண்டில் 19,568 கோடி ரூபாய் உள்ளது.

 

கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் ஆராயும் போது, இன்போசிஸ்(Infosys) நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாப விகிதங்கள் பத்து சதவீதத்திற்கு மேலான வளர்ச்சியை பெற்றுள்ளன. அதே வேளையில், கடந்த மூன்று ஆண்டு காலத்தில் நிறுவனத்தின் விற்பனை (வருவாய்) அளவு வளர்ச்சி குறைந்து வருகிறது.

 

பங்கு மூலதனத்தின் மூலமான வருவாய்(ROCE & ROE) ஆண்டுக்கு சராசரியாக 20 சதவீதத்திற்கு மேல் உள்ளது. இது நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு நல்ல வருமானம் கொடுத்துள்ளதை காட்டுகிறது.

 

வாழ்க  வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com