Bull Bear market

பங்குச்சந்தை சமீபத்திய ஏற்றம் – எச்சரிக்கை தேவை

பங்குச்சந்தை சமீபத்திய ஏற்றம் – எச்சரிக்கை தேவை 

Bear Market Rally – Recession 2020 – Caution is needed

பொதுவாக பொருளாதாரத்தில் வாய்ப்பை தவற விட்டு விடுவோமோ என்ற அச்சம் நம்மில் பலருக்கு உண்டு. இந்த விடுபடும் என்ற பயம் அல்லது சமூக பதற்றம்(Fear of Missing out – FOMO) பங்குச்சந்தைக்கு மிகவும் பொருந்தும். நாட்டின் பொருளாதாரம் கடந்த இரண்டு வருடங்களாக மந்தநிலையில் இருந்து வந்த சமயம், கொரோனா வைரஸ் தொற்று அலைக்கு பின், கடந்த மார்ச் மாத இறுதியில் பங்குச்சந்தை பலத்த அடி வாங்கியது.

நடப்பு வருடத்தில் தேசிய பங்குச்சந்தை குறியீடான நிப்டி(Nifty50) வாழ்நாள் உச்சபட்சமாக 12,430 புள்ளிகள் வரை சென்றது. இது போல மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ்(Sensex) அதிகபட்சமாக 42,274 புள்ளிகள் வரை ஏற்றமடைந்தது. மார்ச் இறுதி வாரத்தில் உலகளவில் பங்குச்சந்தை வீழ்ச்சி கண்டது. சென்செக்ஸ் குறியீடு 52 வார குறைவாக 25,638 புள்ளிகளும், நிப்டி 7,511 புள்ளிகள் என்ற அளவில் வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது.

மார்ச் மாத பங்குச்சந்தை வீழ்ச்சி, முதலீட்டாளர்களின் ஐந்து வருட முதலீட்டை பதம் பார்த்தது. அந்நிய முதலீட்டாளர்களும் பொருளாதார பின்னடைவை கருத்தில் கொண்டு, தங்களது முதலீட்டை வெளியே எடுக்க துவங்கினர். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலகெங்கிலும் அதிகரிக்க தொடங்கியது.

ஏப்ரல் மாத முடிவில் பங்குச்சந்தை குறியீடுகள் ஏற்றம் பெற்றது. இது பொருளாதார மீட்டெடுப்பின் ஒரு அங்கமாக முதலீட்டாளர்களிடம் காணப்பட்டது. பின்னர் மே மாதத்திலும் இந்த ஏற்றம் தொடர்ந்தது. மார்ச் மாத வீழ்ச்சிக்கு பின், இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் சுமார் 25 சதவீதத்திற்கு மேலாக ஏற்றம் கண்டுள்ளது.

கடந்த ஒரு வார வர்த்தகத்தில் பங்குச்சந்தை 11 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது. புதன்கிழமை (03-06-2020) அன்று நிப்டி 10,061 புள்ளிகளிலும், சென்செக்ஸ்(BSE Sensex) 34,109 புள்ளிகளிலும் தனது வர்த்தகத்தை முடித்து கொண்டது. இருப்பினும், தேசிய பங்குச்சந்தையான நிப்டி குறியீடு கடந்த ஒரு வருட காலத்தில் 17.50 சதவீத இறக்கத்தையும், மூன்று வருட கால அளவில் 3.50 சதவீத ஏற்றத்தையும் பெற்றுள்ளது.

அமெரிக்க சந்தை குறியீடுகளும் கிடுகிடுவென ஏறி கொண்டிருக்கிறது. பங்குச்சந்தை குறியீடுகள் பழைய நிலைக்கு மேல் சென்று விடும். இனி, காளை ஆட்டம் தொடங்கி விட்டது என்ற வாசகமும் சந்தையில் அடிபட்டு கொண்டு தான் இருக்கின்றன. பொதுவாக பங்குச்சந்தை எதிர்காலத்தில் நிகழப்போகும் ஒரு பொருளாதார காரணிக்கு சந்தையில் முன்னரே பிரதிபலிக்க செய்யும் இயல்பு உண்டு. சில வேளைகளில் எதிர்பாராத ஏற்றத்தை ஜீரணிக்க முடியாமல் இறக்கத்தையும் மெதுவாக காட்டுவதுண்டு.

அதனால் தான், சந்தையின் போக்கை கணிக்காதீர்கள், பங்குகளை கவனியுங்கள் என சந்தை வல்லுநர்கள் சொல்வதுண்டு. மார்ச் மாத இறக்கத்தில் பங்குகளை அலசி ஆராய்ந்து வாங்கியவர்கள், இன்று குறிப்பிடத்தக்க லாபத்தை பார்த்திருப்பார்கள். அதே வேளையில் சந்தை இன்னும் இறங்கும் என காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைவதுண்டு. இதன் விளைவாக சந்தையில் வாய்ப்பை விட்டு விடுவோமோ என்ற பதட்டத்தில் இப்போது பங்குகளை வாங்க ஆர்வம் காட்டுவதுண்டு.

பலர் கடந்த மே மாத ஏற்றத்தில் முதலீடு செய்திருக்கலாம். அவர்களின் பங்குகள் மீதான லாபம் தற்போது பெரிதாக ஏறி இருக்க வாய்ப்பில்லை. இப்போது நிப்டி 10,060 புள்ளிகள் தானே இருக்கிறது. விரைவாக முதலீடு செய்து விடலாம் என சமீபத்தில் ஏறக்கூடிய பங்குகளை எல்லாம் வாங்குவர். இது தான் இங்கு பிரச்சனையே. நினைவில் கொள்ளுங்கள், இது கரடி ஆட்டம் மற்றும் பொருளாதார மந்தநிலை காலம். தற்போது நிகழ்வது காளை சந்தையல்ல.

காளை-கரடியில் உங்களுக்கு முரண்பாடு இருந்தாலும், உண்மையில் உலக பொருளாதாரம் சரியான நிலையில் இல்லை என்பதே உண்மை. கடந்த இரண்டு வருட பொருளாதார மந்தநிலை பங்குச்சந்தை குறியீடுகளில் பெரிதாக பிரதிபலிக்கவில்லை என்றாலும், பெரும்பாலான பங்குகளில் அதன் விளைவு காணப்பட்டது. வங்கிகளில் ஏற்பட்ட குறைபாடு வங்கி சார்ந்த பங்குகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவன பங்குகளில் தென்பட்டது. சொல்லப்பட்ட துறையின் பங்குகள் இப்போதும் ஐந்து வருட குறைவாக தான் வர்த்தகமாகி வருகிறது. இது மெட்டல் மற்றும் வாகனத்துறைக்கும் பொருந்தும்.

மார்ச் மாத இறக்கம், கொரோனா கால ஊரடங்கை சந்தையில் காண்பித்து விட்டது. கடந்த 2019-20ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டு பொருளாதார வளர்ச்சி(Q4FY20 GDP) எண்களும் பெரிதாக வளர்ச்சியில் இல்லை. ஆனால், ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நிறுவனங்கள் உண்மையில் வருவாயை பெறுமா, அதன் நஷ்ட அளவுகள் எவ்வளவு தூரம் செல்லும், கடன் மற்றும் திவால் நிலைக்கு செல்லும் நிறுவனங்கள் எத்தனை என்பதெல்லாம் வரக்கூடிய காலங்களில் மட்டுமே தெரியும். அப்போது தான் பங்குச்சந்தையின் உண்மையான போக்கை நாம் அறிய முடியும்.

பொதுவாக பங்குச்சந்தை வீழ்ச்சி ஏற்படும் சமயங்களில், நல்ல நிறுவன பங்குகளின் அடிப்படை பகுப்பாய்வை(Fundamental Analysis) ஆராய்ந்து மலிவான விலையில் பங்குகளை வாங்குவதே சிறந்தது. இந்த வாய்ப்பு எப்போதும் சந்தையில் உள்ளது. ஆனால், பங்குச்சந்தை வீழ்ச்சி காலங்களில் இது அதிக வாய்ப்பை ஏற்படுத்தும், அவ்வளவே. நமக்கான வாய்ப்பு மார்ச் மாத வீழ்ச்சியில் தென்பட்டது. இப்போதைய ஏற்றத்தில் லாபம் பார்த்திருக்கலாம். பெரும்பாலான பங்குகள் 80-100 சதவீத ஏற்றத்தை கடந்த 50 நாட்களில் அடைந்துள்ளன. இது எதிர்பாராத அபரிதமான முதலீட்டு வளர்ச்சி.

நீண்ட கால முதலீட்டாளர்கள் தங்கள் லாபத்தில் ஒரு பகுதியை பதிவு செய்யும் பட்சத்தில், செய்த முதலீட்டு தொகையை திரும்ப பெறலாம். மீதமிருக்கும் பங்குகளை அப்படியே சில வருடங்களுக்கு விட்டு விடுவது நன்று. அவை தான் உங்களுக்கான செல்வ வளத்தை ஏற்படுத்தும். கையில் இருக்கும் தொகைக்கு அடுத்த வீழ்ச்சியில் மலிவான விலைக்கு பங்குகளை வாங்கலாம். இதனையெல்லாம் விடுத்து, சந்தை இன்னும் பெரியளவில் ஏறி விடுமோ என அதன் போக்கை பின்தொடர வேண்டாம்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளை(Quarterly Earnings) அடுத்தடுத்து பின் தொடருங்கள். பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வை பின்பற்றி, தற்போது மலிவான விலையில் பங்குகள் கிடைக்க பெற்றிருந்தால் மட்டும் வாங்குங்கள். இல்லையெனில், அவசரம் வேண்டாம்.

அந்நிய முதலீட்டாளர்கள்(FII) வாங்குகிறார்கள் என நீங்கள் வாங்க வேண்டாம். அந்நிய முதலீட்டாளர்கள் என்பவர் நம்மூர் மியூச்சுவல் பண்டு நிறுவனங்களை போல தான். அவர்கள் வேறு யாருமல்ல. பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் அரசு அவர்களின் மக்களுக்கு பண உதவி செய்து வருகிறது. பணம் தேவைப்பட்டால் தான் அவர்கள் நம் சந்தையிலிருந்து முழுவதுமாக முதலீட்டை எடுப்பதுண்டு. அரசு உதவி செய்யும் போது, சந்தையிலும் பணம் புழங்க தான் செய்யும். அது தான் இப்போது நடந்து வருகிறது. நமது நாட்டிலும், பரஸ்பர நிதி முதலீடுகள்(Mutual Funds – DII) அதிகமாக உள்ளது.

நீங்கள் மாதாமாதம் எஸ்.ஐ.பி. முதலீட்டை தொடரும் பட்சத்தில் சந்தைக்கு உள்ளூர் முதலீட்டாளர்கள்(Domestic Investors) மூலம் முதலீடு வர தான் செய்யும். எனவே தற்போதைய சந்தை ஏற்றத்தில் மிகவும் கவனமாக இருங்கள். கடன் அதிகம் கொண்ட நிறுவனங்களை தவிர்ப்பது நலம். உங்கள் நிதி இலக்குகளுக்கு பரஸ்பர நிதிகளை(SIP Investing for Goals) எப்போதும் போல தொடருங்கள். ஆனால், நேரடி சந்தை முதலீட்டில் இப்போது எச்சரிக்கை தேவை.

நினைவில் கொள்க:

பங்குகளில் குறுகிய கால மூலதன ஆதாயத்திற்கு(STCG Tax) 15 சதவீத வரி செலுத்த வேண்டும். அதே வேளையில் சொல்லப்பட்ட நிதியாண்டில் ஒருவருக்கு ஏற்பட்ட குறுகிய கால மூலதன இழப்பை சரி செய்து கொள்ள இந்த லாபத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.

வருமான வரி வரம்பில் இல்லாதோருக்கு குறுகிய கால மூலதன ஆதாயத்தில் வரி விலக்கு உண்டு. எனவே தகுந்த நிதி ஆலோசகரின் முன்னிலையில் உங்கள் முதலீட்டு முடிவுகளை எடுக்க வேண்டும்.

குறுகிய காலத்தில் பங்கு விற்பனை மூலம் 50 முதல் 100 சதவீதத்திற்கு மேல் லாபம் பெறுபவர்களுக்கு வரி செலுத்துவதில் பெரிய இழப்பு எதுவும் இருக்காது. இந்த முறையை தற்போதைய பொருளாதார மந்தநிலை ஆதாயமாக பயன்படுத்தி கொள்ளலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s