Category Archives: Paisa News

Paisa News – News about Business and Finance

20 வருடங்களுக்கு வட்டியில்லா வங்கிக்கடன் – எங்கே ?

20 வருடங்களுக்கு வட்டியில்லா வங்கிக்கடன் – எங்கே ?

Zero Percent Fixed Interest rate loan for 20 Years – Homeowners

வங்கிகளில் கடனுக்கான வட்டி விகிதங்கள் கடந்த சில வருடங்களாக குறைவாகவே காணப்படுகிறது. இதன் காரணமாக வங்கியில் டெபாசிட் செய்பவர்களுக்கான வட்டி விகிதமும் மிக குறைவாக தான் உள்ளது. ஒரு வருட டெபாசிட் தொகைக்கான வட்டி விகிதம் 6 சதவீதத்திற்கு கீழாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக வங்கி வட்டி விகிதங்கள்(Bank rates) குறையும் போது, கடன் பத்திரங்களுக்கான(Bonds) தேவை அதிகரிக்கும். இதன் மூலம் பத்திரங்களுக்கான வட்டி விகிதம், வங்கிகளை காட்டிலும் அதிகரிக்க செய்யும். இது முதலீட்டாளர்களுக்கு சாதகமாக இருக்கும். தற்போதைய நிலையில், வங்கி வட்டி விகிதங்கள் குறைவாக இருப்பதால், பரஸ்பர நிதிகளில் காணப்படும் கடன் பத்திரங்களின்(Debt Mutual Funds) வட்டி விகிதம் ஆண்டுக்கு சராசரியாக 8-9 சதவீதம் என்ற நிலையில் உள்ளது.

வங்கி வட்டி விகிதங்கள் குறையும் போது, முதலீட்டாளர்களுக்கு வங்கியில் வாய்ப்பு இல்லையென்றாலும், வங்கிக்கடன் பெறுவோருக்கு இது அரிய வாய்ப்பாக தான் அமையும். நடப்பில் வீட்டுக்கடனுக்கான(Home loans) வட்டி விகிதம் சராசரியாக 7.5 சதவீதத்திற்கு கீழ் தான் உள்ளது. விலைவாசியை தவிர்த்து பார்க்கும் போது, இது மேலும் நீடிக்கும் நிலை தான் தற்போது உள்ளது.

உலகளவில் காணப்படும் வட்டி விகிதங்களில் பெரும்பாலும் ஆசிய, ஆப்பிரிக்க  நாடுகளில் தான் சற்று அதிகமாக காணப்படுகிறது. வளர்ந்த நாடுகளின் வட்டி விகிதங்கள் ஒரு சதவீதத்திற்கு கீழ் தான் உள்ளது. அமெரிக்கா, ஆத்திரேலியா, பிரிட்டன், கனடா போன்ற நாடுகளில் உள்ள வட்டி விகிதம் 0.5 சதவீதத்திற்கு குறைவே.

ஜப்பானில் சொல்லவே வேண்டாம். வங்கியில் உங்கள் பணத்தை வைத்திருக்க நீங்கள் தான் வங்கிக்கு பணம் கட்ட வேண்டும். அந்த அளவுக்கு அந்நாட்டின் விலைவாசியும்(பணவாட்டம்), வட்டி விகிதமும் உள்ளது. ஜப்பானின் 10 வருட அரசு பத்திரங்களின் வருவாய்(Bond yield) 0% ஆக உள்ளது.

இது போல டென்மார்க்கிலும் அதன் பணவீக்கம் ஒரு சதவீதத்திற்கு கீழ் தான் காணப்படுகிறது. இதன் காரணமாக கடந்த எட்டு வருடங்களாக அந்நாட்டின் வட்டி விகிதம் 0% க்கு குறைவாகவே உள்ளது கவனிக்கத்தக்கது. 2013-2017 காலகட்டங்களில் டென்மார்க் நாட்டின் மத்திய வங்கியினுடைய வட்டி விகிதத்தை, அதன் சராசரி பணவீக்கத்தில் கழிக்கும் போது, கிடைக்கப்பெறும் நிகர விகிதம் (-1.40) சதவீதமாக உள்ளது.

சில வருடங்களுக்கு முன்பு, 20 வருட கடன் பத்திரங்களின் வருவாய், டென்மார்க்கில் 0% ஆக சொல்லப்பட்டிருந்தது. இதனை ஒட்டி தற்போது டென்மார்க்கின் டோட்டல் கிரெடிட்(Totalkredit) என்ற வங்கி, வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதத்தை 0% ஆக கூறியுள்ளது. அதாவது 20 வருட வீட்டுக்கடனுக்கு, வட்டியில்லா அசலை மட்டும் செலுத்துவதை அந்த வங்கி அறிவித்துள்ளது. ஏற்கனவே இதனை போல சில நிறுவனங்கள் கடந்த காலங்களில் மிக குறைந்த வட்டி விகிதத்தை டென்மார்க் நாட்டில் வெளியிட்டுள்ளது.

வரக்கூடிய நாட்களில் மேலும் சில வங்கிகள் இது போன்ற செயல்பாடுகளை கடைபிடிக்கும் என சொல்லப்படுகிறது. பொதுவாக வங்கி வட்டி விகிதங்கள் எதிர்மறை நிலையில்(Negative Rates) செல்லும் போது, நீங்கள் வங்கியில் வைத்திருக்கும் பணத்திற்கு வட்டி வருவாய் அளிக்கப்படாமல், அபராத கட்டணம் செலுத்த நேரிடும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் – ஜனவரி 2021

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் – ஜனவரி 2021

Small savings scheme interest rate for the Period – January to March 2021

நாட்டில் உள்ள சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகித மாற்றம், காலாண்டுக்கு ஒரு முறை அறிவிக்கப்பட்டு வருகிறது. பொதுவாக அஞ்சலகங்கள் மற்றும் வங்கிகளில் காணப்படும் திட்டங்கள், சிறு சேமிப்பு திட்டத்தின் கீழ் தான் வருகிறது. கடந்த சில வருடங்களாக வங்கி டெபாசிட்டுக்கான வட்டி விகிதத்தை மத்திய ரிசர்வ் வங்கி குறைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

நடப்பு 2020-21ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டுக்கான (ஜனவரி-மார்ச்) சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் 2020 வரையிலான வட்டி விகிதமே இம்முறையும் தொடரும் என சொல்லப்பட்டுள்ளது.

அடிப்படை சேமிப்பு கணக்குக்கான(Savings account) வட்டி விகிதம், ஜனவரி-மார்ச் 2021 காலத்திற்கு 4 சதவீதம் என்ற அளவில் கூறப்பட்டுள்ளது. அதே வேளையில் வங்கிகளில் காணப்படும் சேமிப்பு கணக்கிற்கான வட்டி விகிதங்கள், ஒவ்வொரு வங்கிகளுக்கும் மாறுபடும். ஒரு வருட டெபாசிட் தொகைக்கான வட்டி விகிதம் 5.50 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது.

இரண்டு மற்றும் மூன்று வருட டெபாசிட் தொகைக்கான வட்டி விகிதம், சிறு சேமிப்பு திட்டத்தின் கீழ் 5.50 சதவீதமாக உள்ளது. ஐந்து வருட காலத்திற்கான டெபாசிட் தொகைக்கு(Term Deposit) மட்டும் இது 6.70 சதவீதமாக உள்ளது. 5 வருட தொடர் சேமிப்பு திட்டத்திற்கு(Recurring Deposit – RD) 5.80 சதவீதமாக இருக்கிறது.

Small savings scheme interest jan 2021

மூத்த குடிமக்களுக்கான(Senior Citizen savings scheme) ஐந்து வருட திட்டத்திற்கு வட்டி விகிதம் 7.4 சதவீதமாகவும், பெண் குழந்தைகளுக்கான செல்வமகள்(Sukanya Samriddhi) திட்டத்தில் வட்டி விகிதம் 7.60 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. சிறு சேமிப்பு திட்டத்தின் கீழ் அதிக வட்டி விகிதத்தை செல்வமகள் திட்டம் மட்டுமே பெறுகிறது.

5 வருட தேசிய சேமிப்பு பத்திர திட்டத்திற்கு 6.80 சதவீத வட்டி விகிதமும், கிசான் விகாஸ் பத்திரத்திற்கு 6.90 சதவீதமும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாதாந்திர வருவாய் பெறுவோருக்கான(5 Years Monthly Income Scheme) திட்டத்தின் வட்டி விகிதம் 6.60 சதவீதமாக உள்ளது.

பொது வருங்கால வைப்பு(PPF) நிதி திட்டத்தில் 7.10 சதவீத வட்டி விகிதம் சொல்லப்பட்டிருக்கிறது. செல்வமகள் மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டங்கள் முழுமையான வரி சேமிப்பு(Tax Exempted – EEE) திட்டங்களாகும். இந்த இரண்டும் நீண்டகால சேமிப்பு திட்டமாக அமைந்துள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மீண்டும் ஒரு ‘கிரேட் டிப்ரஷன்’ – என்ன சொல்கிறது மாற்றத்திற்கான நிதி ஆயோக்

மீண்டும் ஒரு ‘கிரேட் டிப்ரஷன்’ – என்ன சொல்கிறது மாற்றத்திற்கான நிதி ஆயோக்  

Like a Great Depression – National Institution for Transforming India(NITI) Aayog

கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றின் துவக்கத்தை யாரும் மறந்திருக்க முடியாது. சீனாவில் தானே, அமெரிக்காவில் தான் கொரோனா வந்துள்ளது என்ற நிலை மாறி, உள்நாட்டிலும் கொரோனா பெருந்தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதற்கு முன்பே ஊரடங்கு உத்தரவு அமலானது. நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை விட வேலையிழந்து பொருளாதாரம் சார்ந்து பாதிக்கப்பட்டவர்கள் தான் அதிகம்.

பெருந்தொற்றுக்கு பிறகான காலத்தில் உலகம் முழுவதும் சுமார் 10 கோடி மக்கள் மிகுந்த வறுமை நிலைக்கு தள்ளப்படுவர் என சர்வேதச அமைப்புகள் சொல்லியிருந்தது. ஊரடங்கு காலத்தில் இந்திய வரலாற்றிலேயே காணப்படாத வேலைவாய்ப்பின்மை விகிதம் நிலவியது. அமைப்பு சாரா வேலைகளில் ஏற்பட்ட பாதிப்புகளை இங்கே கணக்கில் எடுத்து கொள்ளவில்லை.

2020ம் ஆண்டின் மார்ச் மாதத்தில் பங்குச்சந்தை குறியீடுகள் வீழ்ச்சி அடைந்திருந்தாலும், பின்னர் விரைவாக மீண்ட உலக சந்தைகள்  அந்த வருடத்தை தனக்கு சாதகமாக முடித்து கொண்டது. அமெரிக்க சந்தை குறியீடு மட்டும் கடந்த ஆண்டில் சுமார் 45 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது. இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் ஆண்டின் முடிவில் 15 சதவீத ஏற்றத்துடன் முடிவு பெற்றது.

இதுவே 2019ம் ஆண்டு அமெரிக்க சந்தை 30 சதவீதமும், இந்திய பங்குச்சந்தை 13 சதவீத ஏற்றமும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. பொருளாதார மந்த நிலை என்ற பாதகத்தை தாண்டி, அதிக முதலீடுகளை பெற்றதால் சந்தை குறியீடுகள் வரலாற்று உச்சத்தில் வர்த்தகமாகி கொண்டிருக்கிறன. இது ஒரு ‘குமிழி (Bubble)’ நிலை போல ஒப்பிடப்படுகிறது. பெரும்பாலான வல்லுநர்கள் பங்கு சந்தையில் அடைந்த லாபத்தை மற்ற முதலீட்டு சாதனங்களில் பரவலாக்குமாறு அறிவுறுத்துகின்றனர். 

பொதுவாக முதலீட்டை பிரித்து முதலீடு செய்வதும்(Asset Allocation), பல்வகைப்படுத்துதலும்(Diversification) அவசியம். ஒரே முதலீட்டு சாதனத்தை காலம் முழுவதும் கொண்டிருப்பது சிறந்த போர்ட்ஃபோலியோ(Portfolio) சாதனமாக அமையாது. நாட்டின் டிசம்பர் 2020 மாத வேலைவாய்ப்பின்மை விகிதம் எதிர்பாராத நிலையில் மீண்டும் அதிகரித்து வருகிறது. வரக்கூடிய நாட்களில் நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டு முடிவுகளும்(Quarterly results), மத்திய பட்ஜெட் தாக்கலும்(Budget India 2021) வெளிவர உள்ளது.

இந்நிலையில் நிதி ஆயோக் என சொல்லப்படும் கொள்கை ஆணையம், கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகான காலத்தை கூறியுள்ளது. நிதி ஆயோக், நாட்டின் திட்டமிடல் அமைச்சகத்தின்(Ministry of Planning) கீழ் செயல்படுகிறது. இதன் தலைவராக பிரதமர் திரு. நரேந்திர மோடி உள்ளார். தலைமை நிர்வாக அதிகாரியாக ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியும்,  துணை தலைவராக ஒரு பொருளாதார வல்லுனரும் உள்ளனர்.

கொரோனாவுக்கு பிந்தைய காலத்தில், உலக பொருளாதாரம் இரண்டு தீவிர நிலைகளில் சுழலக்கூடும் எனவும், பெரும் மந்தநிலையை(Great Depression) ஒத்திருக்கும் சூழ்நிலை ஒன்றாகவும், முதலாம் உலகப்போருக்கு பிறகான காலமாக மற்றொன்றும் இருக்கும் எனவும் நிதி ஆயோக் கூறியுள்ளது. அதாவது 1920-30 காலங்களில் காணப்பட்ட நிலையை ஒப்பிட்டு சொல்லியுள்ளது.

உலகம் முழுவதும் காணப்படும் எதிர்ப்பு வாதம், வர்த்தகம் மீதான அதிக உணர்திறன், வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து வருவது, உலக நாடுகளின் அதிகப்படியான கடன் தன்மை, வறுமை நிலை, உணவுப்பொருட்களில் காணப்படும் ஏற்ற-தாழ்வு, நிதி சந்தைகளில் காணக்கூடிய அதிக ஏற்ற-இறக்கங்கள் ஆகியவை வரக்கூடிய காலங்களில் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தலாம் என இந்த ஆணையம் தனது உலக பார்வையை முன் வைத்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றால் ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட நிதி இழப்பு, ஊரடங்கின் போது ஏற்பட்ட வேலைவாய்ப்பின்மை மற்றும் பொருளாதார நிலையை சரிசெய்ய அதிக பொருளாதார ஊக்குவிப்பு செலவு, நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகமாக காணப்படும் நிலையில், கொரோனா தடுப்பூசிக்கான பெருமளவிலான செலவுகளை அரசு ஏற்கும் நிலை உள்ளது. இதன் காரணமாக வரக்கூடிய நாட்களில் தனிநபர் சேமிப்பும், பொறுப்பும் மிகவும் அவசியமான ஒன்று.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

தனிநபர் வருமான வரி தாக்கலுக்கான காலக்கெடு நீட்டிப்பு – 10, ஜனவரி, 2021

தனிநபர் வருமான வரி தாக்கலுக்கான காலக்கெடு நீட்டிப்பு – 10, ஜனவரி, 2021

Income Tax Returns Filing for Individuals extended to 10, January 2021

2019-20ம் நிதியாண்டுக்கான வருமானத்திற்கு நடப்பு மதிப்பீட்டு (AY 2020-21) வருடத்தில் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட சிரமத்தால் வரி தாக்கல் செய்ய வேண்டிய காலக்கெடு சில மாதங்களுக்கு முன்பு நீட்டிக்கப்பட்டிருந்தது. இதன் படி தனிநபர் வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கான காலக்கெடு இன்றுடன் (31-12-2020) முடிவடையும் நிலையில், மீண்டும் ஒரு முறை இதனை நீட்டித்துள்ளது நிதி அமைச்சகம்.

தனிநபர் வருமான வரி தாக்கலில் ஆண்டு வருவாய் (ஒட்டுமொத்த வருவாய்) ஒரு நிதியாண்டில் ரூ.2.5 லட்சத்தை கடந்தால், ஒருவருக்கு வரிப்பிடித்தம் இல்லையென்றாலும், வருமான வரி தாக்கல் செய்வது அவசியம்.

நேற்று (30-12-2020) மத்திய நிதி அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் மதிப்பீட்டு ஆண்டு 2020-21க்கு வருமான வரி தாக்கல் செய்பவர்களில் தணிக்கை செய்யப்பட்ட கணக்குதாரர்களுக்கு(Accounts audited) முன்னர் இருந்த 31, ஜனவரி 2021 என்ற காலக்கெடு தற்போது 15, பிப்ரவரி 2021 என சொல்லப்பட்டுள்ளது.

இது போல சர்வேதச மற்றும் குறிப்பிட்ட உள்நாட்டு பரிவர்த்தனைகளை மேற்கொண்டவர்களுக்கு முன்னர் இருந்த 31,ஜனவரி 2021 என்ற கடைசி தேதி, இப்போது 2021ம் ஆண்டின் பிப்ரவரி 15ம் தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற வரிதாரர்களுக்கு (தனிநபர் உட்பட) ஏற்கனவே சொல்லப்பட்ட டிசம்பர் 31, 2020 என்ற காலக்கெடு, தற்போது 2021 ஜனவரி மாதம் 10ம் தேதியாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

விவாத்(Vivad Se Vishwas Scheme) திட்டத்திற்கு 31, ஜனவரி 2021 மற்றும் நேரடி வரி மற்றும் பினாமி சட்டத்தின் கீழ் செல்லும் அறிவிப்பிற்கு 31, மார்ச் 2021 எனவும் காலக்கெடு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மத்திய பொருட்கள் மற்றும் சேவை வரி(CGST) 2017 சட்டம், பிரிவு 44ன் கீழ் ஆண்டு வருவாயை சமர்பிப்பதற்கான தேதி 28, பிப்ரவரி 2021 ஆக சொல்லப்பட்டுள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் முதல் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவை – இன்று தொடக்கம்

நாட்டின் முதல் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவை – இன்று தொடக்கம்

India’s First Driverless Metro Rail Service – Starts Today

தானியங்கி ரயில் சேவையில், உலகின் முதல் இயக்கம் கடந்த 1967ம் ஆண்டு லண்டனில் துவங்கப்பட்டது. தொழில்நுட்ப புரட்சி குறைவாக எண்ணப்பட்ட அக்காலத்தில் முதல் தானியங்கி ரயில் சேவை இருந்திருந்தாலும், அவசர தேவைக்காக ஒரு ஓட்டுநர் ரயில் கேபினில் அமர்ந்திருந்தார். முழுமையான ஓட்டுநர் இல்லா ரயில் சேவை முதன்முதலில் 1981ம் ஆண்டு ஜப்பானில் தான் நடைபெற்றது.

ஓட்டுநர் இல்லாத ரயில் சேவையில் பல தொழில்நுட்ப அமைப்புகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. சாதாரண பயணிகள் ரயில் சேவையிலிருந்து, மெட்ரோ பயணிகள் ரயில் சேவை தனித்துவம் மிக்கது. உலகின் ஒட்டுமொத்த மெட்ரோ ரயில் சேவையில் 7 சதவீதம் ஓட்டுநர் இல்லாத ரயில்(Driverless Metro Rail) சேவையை தான் கொண்டுள்ளது.

மெட்ரோ ரயில் சேவையில் நீண்ட தூரம் கொண்ட ரயிலை துபாய் இயக்கி வருகிறது. இதன் தூரம் 75 கி.மீ. உலகின் அதிவேக மெட்ரோ ரயில் சீனாவின் ஷாங்காய் மக்லேவ் சேவையாகும். இதன் வழித்தடம் மணிக்கு 600 கிலோமீட்டர் வேகத்தை ,கொண்டிருந்தாலும், தற்போது மணிக்கு 430 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கி கொண்டிருக்கிறது.

இந்த பங்களிப்பில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது. நாட்டின் முதல் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவையை இன்று(28-12-2020) பிரதமர் அவர்கள் துவக்கி வைக்க உள்ளார். இந்த சேவை டெல்லி மெட்ரோ ரயில் சேவையின் 37 கி.மீ. தூரம் கொண்ட மெஜந்தா தடத்தில் நடைபெற உள்ளது.

டெல்லி மெட்ரோ தற்போது 390 கிலோமீட்டர் தூர சேவையையும், 285 ரயில் நிலையங்களையும் நிர்வகித்து வருகிறது. நாட்டின் முதல் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை இன்று துவங்கப்பட்டாலும், நடப்பில் உள்ள மெட்ரோ ரயில் சேவை பெரும்பாலும் ஓட்டுநர்களை சாராத கட்டுப்பாட்டு அமைப்புகளால் தான் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. புதிய தொழில்நுட்பத்தை கொண்டிருக்கும் இச்சேவை பயணிகளுக்கு மிகவும் பாதுகாப்பான ரயில் சேவையை அளிக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

32 லட்சம் கணக்குகள், 19 லட்சம் முதலீட்டாளர்கள், 8 மாநிலங்கள், 6,380 கோடி ரூபாய் மோசடி – எச்சரிக்கை !

32 லட்சம் கணக்குகள், 19 லட்சம் முதலீட்டாளர்கள், 8 மாநிலங்கள், 6,380 கோடி ரூபாய் மோசடி – எச்சரிக்கை !

Rs.6380 Crore Fraud in 8 States – Ponzi Scam

ஆந்திராவை சேர்ந்த அக்ரி கோல்டு குழும(Agri Gold Group) நிறுவனம், கடந்த சில வருடங்களுக்கு முன்பு, ‘பொன்சி’ என சொல்லப்படும் முதலீட்டு  மோசடியில் சிக்கி கொண்டது. 1995ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனம் கூட்டு முதலீட்டு திட்டத்தின் மூலம் பல முதலீட்டாளர்களை சேர்த்து கொண்டு, முதலீட்டிற்கு அதிக லாபம் தருவதாக சொல்லி நாட்டில் உள்ள பல மாநிலங்களில் மோசடியை ஏற்படுத்தியது.

பணமோசடி தடுப்பு சட்டம்(PMLA), 2002ன் கீழ் இந்நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. அக்ரி கோல்டு குழும நிறுவனங்கள், பூங்கா, வீட்டுமனைகள், பொழுதுபோக்கு வளாகம், இயந்திரங்கள் உள்ளிட்ட 48 ஏக்கர் பரப்பளவில் உள்ள சொத்துக்களின் மதிப்பு அமலாக்க இயக்குநரகத்தால் முடக்கப்பட்டுள்ளது. இதன் நிறுவனர் மற்றும் இயக்குனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சில வருடங்களுக்கு முன்பு இதே போன்ற நிகழ்வு இந்த நிறுவனத்தில் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒழுங்குமுறை ஆணையத்தின் எந்த அனுமதி மற்றும் விதிமுறைகளை பின்பற்றாமல், கூட்டு முதலீட்டு திட்டத்தின்(Collective investment schemes) அடிப்படையில் முதலீட்டாளர்களிடம் பணத்தை வாங்கி விட்டு அதிக லாபம் மற்றும் வீட்டுமனைகள் வழங்க உள்ளதாக சொல்லியிருந்த இந்நிறுவனம் பின்னர் முதலீட்டளார்களுக்கு அதனை தரவில்லை எனவும், செய்த முதலீட்டை திரும்ப பெறவும் முடியாமல் இருந்ததாக புகார் எழுந்துள்ளது.

தமிழகம் உள்பட எட்டு மாநிலங்களில்(Andhra Pradesh, Karnataka, Tamilnadu, Telangana, Maharashtra, Odisha, Chattisgarh, Andaman & Nicobar) சுமார் 19 லட்சம் முதலீட்டாளர்களிடையே 32 லட்சம் கணக்குகள் துவக்கி மோசடி நடைபெற்றுள்ளது. மோசடி நடந்த மதிப்பு ரூ. 6,380 கோடி என சொல்லப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மட்டும் 28,600 முதலீட்டாளர்களிடையே 38,000 கணக்குகளை துவக்கி பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு திரும்பி தராமல் நிலுவையில் உள்ள தொகை மட்டும் நூறு கோடி ரூபாய். பொன்சி மோசடி உத்தியில் இது போன்ற ஏராளமான நிறுவனங்கள், மக்களிடையே பேராசையை காட்டி அதிக லாபம் தருவதாக ஏமாற்றி வருகின்றன.

அரசாங்கத்தால் அனுமதி பெற்ற நிறுவனங்களிலும், அரசு பட்டியலிடும் திட்டத்தில் மட்டுமே முதலீடு செய்யுங்கள். அதிக லாபத்திற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பங்குச்சந்தை முதலீட்டிலும் உத்தரவாதமான வருவாய் என்று எதுவும் இல்லாத சூழ்நிலையில், இது போன்ற புரிந்து கொள்ள முடியாத விஷயங்களில் முதலீடு செய்ய வேண்டாம். நடப்பில் மாதாமாதம் வருவாய், வீட்டுமனை, பண்ணை தோட்டம் என பல மோசடி திட்டங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

டி.டி.எச். சேவையில் நூறு சதவீத அன்னிய முதலீடு – அமைச்சகம் ஒப்புதல்

டி.டி.எச். சேவையில் நூறு சதவீத அன்னிய முதலீடு – அமைச்சகம் ஒப்புதல் 

100 Percent Foreign Direct Investment in DTH Service – Union Cabinet

டி.டி.எச்.(Direct to Home) என்பது செயற்கைக்கோள்களிலிருந்து பெறப்படும் சிக்னல்கள் மூலம் செயற்கைக்கோள் தொலைக்காட்சியைப் பெறும் ஒரு முறையாகும். இந்த நேரடி ஒளிபரப்பு முறை கடந்த 2000ம் ஆண்டு மத்திய அரசால் அனுமதிக்கப்பட்டது. நாட்டின் முதல் டி.டி.எச். தொலைக்காட்சி சேவை, ஜீ குழுமத்தை(Zee Group) சேர்ந்த டிஷ் டி.வி. நிறுவனத்தால் 2003ம் வருடம் அக்டோபர் மாதத்தில் கொண்டு வரப்பட்டது.

டி.டி.எச். சேவையில் உலகின் மிகப்பெரிய சந்தையாகவும் நம் நாடு விளங்குகிறது. கடந்த 2019ம் ஆண்டு முடிவின் படி, நாட்டில் 7 கோடி டி.டி.எச்.(DTH) சந்தாதாரர்கள் உள்ளனர். மார்ச் 2020 காலத்தின் அடிப்படையில் நான்கு கட்டண சேவையை அளிக்கும் நிறுவனங்களும், ஒரு இலவச சேவை வழங்குநரும் உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

7 கோடி சந்தாதாரர்களில், இலவச சந்தாதாரர்கள் சம்மந்தமாக குறிப்பிடப்படவில்லை. இலவச சேவையை மத்திய அரசின் பிரசார் பாரதி நிறுவனமும், கட்டண சேவையில் டாட்டா(Tata Sky), டிஷ் டி.வி., ஏர்டெல் மற்றும் சன் டைரக்ட் உள்ளன.

நாட்டின் மொத்த டி.டி.எச். சேவையில் டாட்டா நிறுவனம் 32 சதவீத பங்களிப்பையும், டிஷ் டி.வி.(Dish TV) 30 சதவீத பங்களிப்பையும், ஏர்டெல்  மற்றும் சன் டைரக்ட்(Sun Direct) முறையே 23 சதவீதம் மற்றும் 14 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன. உள்நாட்டில் சுமார் 18 கோடி தொலைக்காட்சி பெட்டிகள் உள்ளது கவனிக்கத்தக்கது.

டி.டி.எச். சேவையில் துரிதமான வளர்ச்சிக்கும், கூடுதல் பாதுகாப்புக்கும் முதலீடு துணைபுரியும் என்பதால், இந்த துறையில் 100 சதவீத அன்னிய முதலீட்டை ஈர்க்க மத்திய அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் அரசுக்கும் கூடுதலாக வருவாய் கிடைக்கப்பெறுவது மட்டுமில்லாமல், மேம்பட்ட சேவையை பொது மக்களுக்கு அளிக்க முடியும் என அரசு எண்ணுகிறது.

உரிமையை புதுப்பித்தலுக்கான காலத்திலும்(License renewal) 10 வருடத்திலிருந்து 20 வருடமாக நீட்டித்துள்ளது. மேலும் சேவையை வழங்கும் நிறுவனங்களுக்கான உரிமக்கட்டணத்திலும் சலுகை வழங்க போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஐக்கிய ராச்சியத்தின் பொருளாதார வளர்ச்சி – 16 சதவீதம்

ஐக்கிய ராச்சியத்தின் பொருளாதார வளர்ச்சி – 16 சதவீதம் 

GDP growth to 16 Percent in the 3rd Quarter – United Kingdom

கொரோனா பெருந்தொற்றின் உருமாற்றம் பெற்ற வைரஸ் காரணமாக மீண்டும் ஒரு முறை ஊரடங்கு நிலைக்கு பிரிட்டன் தள்ளப்பட்டுள்ளது. ஐக்கிய ராச்சியத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(GDP) சேவை துறை 79 சதவீத பங்களிப்பை கொண்டிருக்கிறது. உற்பத்தி துறை 10 சதவீத பங்களிப்பை நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கொண்டுள்ளது.

சேவை துறையில் அரசின் பங்களிப்பு, கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவை 19 சதவீதம் என்ற அளவினை கொண்டுள்ளது. ஐக்கிய ராச்சியத்தின் மொத்த பொருளாதார மதிப்பில் விவசாயம் ஒரு சதவீத பங்களிப்பை மட்டுமே பெற்றிருக்கிறது.

பொருட்கள் மற்றும் சேவையில் ஏற்றுமதி 28 சதவீதத்தையும், இறக்குமதி 30 சதவீதத்தையும் கொண்டிருக்கிறது. நடப்பாண்டின் செப்டம்பர் காலாண்டிற்கான பொருளாதார வளர்ச்சியை தற்போது வெளியிட்டுள்ளது இந்த அரசு. ஜூலை முதல் செப்டம்பர் 2020 வரையிலான காலாண்டில் ஐக்கிய ராச்சியம் 16 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.

இது கடந்த 65 வருடங்களில் காணப்படாத மிக வேகமான பொருளாதார வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா காலத்தின் ஊரடங்கில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மதிப்பீடும் மாற்றியமைக்கப்பட்டிருந்தது. சொல்லப்பட்ட பொருளாதார வளர்ச்சி கொரோனா காலத்திற்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும் போது இன்னும் பொருளாதாரம் மீட்டெடுக்கப்படவில்லை என்பதனை காட்டுகிறது.

நடப்பாண்டின் முதல் இரு காலாண்டுகள் முறையே (-3) மற்றும் (-18.8) என்ற பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மூன்றாம் காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி அடைந்ததற்கு காரணமாக தனியார் மற்றும் அரசு நுகர்வு இருந்துள்ளது. முதல் ஊரடங்குக்கு பிறகான காலத்தில் தொழிற்துறை சிறிய அளவில் மட்டுமே வளர்ச்சிக்கு துணைபுரிந்துள்ளது.

வாழ்க வளமுடன்,

 நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

2021ம் ஆண்டு வரவிருக்கும் புதிய ஐ.பி.ஓ. முதலீடு – என்ன செய்யலாம் ?

2021ம் ஆண்டு வரவிருக்கும் புதிய ஐ.பி.ஓ. முதலீடு – என்ன செய்யலாம் ?

Are you ready to invest in the upcoming IPO ? (IPO Mania 2021)

நடப்பு வருடத்தில் பங்குச்சந்தை பெரும் வீழ்ச்சியையும், அதற்கடுத்தாற் போல் வரலாற்றில் இல்லாத வெகு குறைவான காலத்தில் மீண்டு வந்ததையும் பார்த்திருப்போம். உலக பொருளாதார மந்தநிலை இன்னும் சரிசெய்யப்படாத நிலையில், வளர்ந்த நாடுகளின் கடன் தன்மை(Debt) அதிகரித்து வரும் நிலையில் பங்குச்சந்தைகள் மட்டும் எப்படி வெற்றி நடைபோடுகின்றன ?

2020ம் வருடத்தின் துவக்கத்தில் மந்தநிலையை சந்தித்து வந்த பங்குச்சந்தை, மார்ச் மாத வீழ்ச்சியில் பல பங்கு முதலீட்டாளர்களை பீதி அடைய வைத்த (வாய்ப்பை அளித்த) சந்தை பின்பு ஐ.பி.ஓ. எனும் முதன்மை சந்தையில் வந்த நிறுவனங்களை வரவேற்று லாபங்களை அள்ளிக்கொடுத்தது எப்படி ?

  • ஐ.பி.ஓ.(IPO) வின் வரலாறு தான் என்ன ?
  • உண்மையில் ஐ.பி.ஓ. மூலம் சிறு முதலீட்டாளர்கள் லாபம் பெற்றுள்ளார்களா ?
  • முதன்மை சந்தையில் லாபம் பார்க்க மற்றும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன ?
  • வாய்ப்புகளும், விரயமும் – சொல்லப்படாத ஐ.பி.ஓ. நிகழ்வு
  • 2021ம் ஆண்டு வரவிருக்கும் ஐ.பி.ஓ. நிறுவனங்கள்
  • இதற்கு முந்தைய ஐ.பி.ஓ. முதலீட்டு வாய்ப்புகளை தவற விட்டீர்களா ?

வாருங்கள், வரும் சனிக்கிழமை மாலை 05:15 மணிக்கு இணையம் வழியாக பேசுவோம்…

பதிவுக்கு:

IPO Mania Webinar – Registration

கட்டணம்: ரூ. 199 மட்டும்

நாள் மற்றும் நேரம்: 26-12-2020 & மாலை 05:15 – 06:30

பதிவுக்கு பின்னர் உங்களுக்கான இணைப்பு (Webinar Link) மின்னஞ்சல் மற்றும்  குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மீண்டும் அதிகரித்து வரும் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம்

மீண்டும் அதிகரித்து வரும் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 

Unemployment rate is rising again – CMIE Data

நடப்பாண்டில் ஏப்ரல் மாத ஊரடங்கின் போது, நாட்டின் பெரும்பாலான தொழிலாளர்கள் தங்களது வேலைகளை இழந்தனர். குறிப்பாக அமைப்பு சாரா வேலைகளில் தான் இதன் பாதிப்பு அதிகமாக இருந்தது. அடுத்தடுத்த மாதங்களில் கொரோனா பெருந்தொற்று எண்ணிக்கை அதிகரித்த நிலையில் ஊரடங்கும் நீட்டிக்கப்பட்டிருந்தது.

எதிர்பாராமல் ஏற்பட்ட தேவையின் காரணமாக உணவுப்பொருட்கள் சார்ந்த துறையில் பெரிதான பாதிப்பு எதுவுமில்லை. மார்ச் மாதத்தில் காணப்பட்ட நாட்டின் 8.75 சதவீத வேலைவாய்ப்பின்மை விகிதம், ஏப்ரல் மாத ஊரடங்கில் 23.52 சதவீதமாக அதிகரித்தது. இது வரலாற்றில் இல்லாத அளவாக சொல்லப்பட்டது.

2020ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் நகர்ப்புறங்களில் 24.95 சதவீதமும், கிராமப்புறங்களில் 22.89 சதவீதமும் வேலைவாய்ப்பின்மை காணப்பட்டது. பின்னர் மே மாதத்தில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 21.73 சதவீதமாகவும், இதுவே ஜூன் மாதத்தின் முடிவில் 10.18 சதவீதமாகவும் இருந்தது.

பின்னர் படிப்படியாக குறைந்த இந்த விகிதம் ஜூலை முதல் நவம்பர் வரையிலான காலத்தில் 6-8 சதவீதம் என்ற அளவிற்குள் இருந்தது கவனிக்கத்தக்கது. பெரும்பாலான உற்பத்தி நிறுவனங்களில் தற்போது 50 சதவீதத்திற்கு மேற்பட்ட பணியாளர்கள் வர தொடங்கியது அடுத்தகட்ட வளர்ச்சிக்கு துணைபுரியும்.

அதே வேளையில், பொருளாதார மந்தநிலை இன்னும் ஓய்ந்தபாடில்லை. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகான காலத்தில் உலகம் முழுவதும் சுமார் 15 கோடி பேர் ஏழ்மைக்கு தள்ளப்படுவர் என சுகாதார புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் குறிப்பாக குறைந்த அளவிலான வருவாய் கொண்டிருப்போர் மற்றும் நீண்டகாலமாக குறைவான வருவாயை மட்டுமே கொண்டிருக்கும் நாடுகள் பாதிக்கப்படும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

உள்நாட்டில் இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஊரடங்கில் பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்புகள் ஒருபுறம் உயர்ந்த நிலையிலும், வேலை இழந்தவர்களில் பெரும்பாலான நபர்கள், இன்னும் கொரோனாவுக்கு முந்தைய ஊதிய விகிதத்தை பெறவில்லை என கொள்கை ஆராய்ச்சிக்கான மையம்(CPR) கூறுகிறது.

நடப்பு மாதத்தில் டிசம்பர் 18ம் தேதி முடிவின் படி, நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 8.3 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 8.6 சதவீதம் மற்றும் கிராமப்புறங்களில் 8.2 சதவீதமாகவும் உள்ளது. டிசம்பர் 1ம் தேதி 6.60 சதவீதமாக இருந்த விகிதம், 18ம் தேதி முடிவில் 8.34 சதவீதமாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

வேளாண்மை சட்டத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தின் காரணமாக, நாளொன்றுக்கு 3500 கோடி ரூபாய் வரை பொருளாதார இழப்பு ஏற்பட உள்ளதாக அசோசம் வர்த்தக அமைப்பு(Assocham) தெரிவித்துள்ளது. வரும் நாட்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிக்கும் நிலையில், பொருளாதார வளர்ச்சியில் மீண்டும் ஒரு பாதகத்தை ஏற்படுத்தலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com