32 லட்சம் கணக்குகள், 19 லட்சம் முதலீட்டாளர்கள், 8 மாநிலங்கள், 6,380 கோடி ரூபாய் மோசடி – எச்சரிக்கை !
Rs.6380 Crore Fraud in 8 States – Ponzi Scam
ஆந்திராவை சேர்ந்த அக்ரி கோல்டு குழும(Agri Gold Group) நிறுவனம், கடந்த சில வருடங்களுக்கு முன்பு, ‘பொன்சி’ என சொல்லப்படும் முதலீட்டு மோசடியில் சிக்கி கொண்டது. 1995ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனம் கூட்டு முதலீட்டு திட்டத்தின் மூலம் பல முதலீட்டாளர்களை சேர்த்து கொண்டு, முதலீட்டிற்கு அதிக லாபம் தருவதாக சொல்லி நாட்டில் உள்ள பல மாநிலங்களில் மோசடியை ஏற்படுத்தியது.
பணமோசடி தடுப்பு சட்டம்(PMLA), 2002ன் கீழ் இந்நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. அக்ரி கோல்டு குழும நிறுவனங்கள், பூங்கா, வீட்டுமனைகள், பொழுதுபோக்கு வளாகம், இயந்திரங்கள் உள்ளிட்ட 48 ஏக்கர் பரப்பளவில் உள்ள சொத்துக்களின் மதிப்பு அமலாக்க இயக்குநரகத்தால் முடக்கப்பட்டுள்ளது. இதன் நிறுவனர் மற்றும் இயக்குனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சில வருடங்களுக்கு முன்பு இதே போன்ற நிகழ்வு இந்த நிறுவனத்தில் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒழுங்குமுறை ஆணையத்தின் எந்த அனுமதி மற்றும் விதிமுறைகளை பின்பற்றாமல், கூட்டு முதலீட்டு திட்டத்தின்(Collective investment schemes) அடிப்படையில் முதலீட்டாளர்களிடம் பணத்தை வாங்கி விட்டு அதிக லாபம் மற்றும் வீட்டுமனைகள் வழங்க உள்ளதாக சொல்லியிருந்த இந்நிறுவனம் பின்னர் முதலீட்டளார்களுக்கு அதனை தரவில்லை எனவும், செய்த முதலீட்டை திரும்ப பெறவும் முடியாமல் இருந்ததாக புகார் எழுந்துள்ளது.
தமிழகம் உள்பட எட்டு மாநிலங்களில்(Andhra Pradesh, Karnataka, Tamilnadu, Telangana, Maharashtra, Odisha, Chattisgarh, Andaman & Nicobar) சுமார் 19 லட்சம் முதலீட்டாளர்களிடையே 32 லட்சம் கணக்குகள் துவக்கி மோசடி நடைபெற்றுள்ளது. மோசடி நடந்த மதிப்பு ரூ. 6,380 கோடி என சொல்லப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மட்டும் 28,600 முதலீட்டாளர்களிடையே 38,000 கணக்குகளை துவக்கி பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு திரும்பி தராமல் நிலுவையில் உள்ள தொகை மட்டும் நூறு கோடி ரூபாய். பொன்சி மோசடி உத்தியில் இது போன்ற ஏராளமான நிறுவனங்கள், மக்களிடையே பேராசையை காட்டி அதிக லாபம் தருவதாக ஏமாற்றி வருகின்றன.
அரசாங்கத்தால் அனுமதி பெற்ற நிறுவனங்களிலும், அரசு பட்டியலிடும் திட்டத்தில் மட்டுமே முதலீடு செய்யுங்கள். அதிக லாபத்திற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பங்குச்சந்தை முதலீட்டிலும் உத்தரவாதமான வருவாய் என்று எதுவும் இல்லாத சூழ்நிலையில், இது போன்ற புரிந்து கொள்ள முடியாத விஷயங்களில் முதலீடு செய்ய வேண்டாம். நடப்பில் மாதாமாதம் வருவாய், வீட்டுமனை, பண்ணை தோட்டம் என பல மோசடி திட்டங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை