மீண்டும் ஒரு ‘கிரேட் டிப்ரஷன்’ – என்ன சொல்கிறது மாற்றத்திற்கான நிதி ஆயோக்
Like a Great Depression – National Institution for Transforming India(NITI) Aayog
கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றின் துவக்கத்தை யாரும் மறந்திருக்க முடியாது. சீனாவில் தானே, அமெரிக்காவில் தான் கொரோனா வந்துள்ளது என்ற நிலை மாறி, உள்நாட்டிலும் கொரோனா பெருந்தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதற்கு முன்பே ஊரடங்கு உத்தரவு அமலானது. நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை விட வேலையிழந்து பொருளாதாரம் சார்ந்து பாதிக்கப்பட்டவர்கள் தான் அதிகம்.
பெருந்தொற்றுக்கு பிறகான காலத்தில் உலகம் முழுவதும் சுமார் 10 கோடி மக்கள் மிகுந்த வறுமை நிலைக்கு தள்ளப்படுவர் என சர்வேதச அமைப்புகள் சொல்லியிருந்தது. ஊரடங்கு காலத்தில் இந்திய வரலாற்றிலேயே காணப்படாத வேலைவாய்ப்பின்மை விகிதம் நிலவியது. அமைப்பு சாரா வேலைகளில் ஏற்பட்ட பாதிப்புகளை இங்கே கணக்கில் எடுத்து கொள்ளவில்லை.
2020ம் ஆண்டின் மார்ச் மாதத்தில் பங்குச்சந்தை குறியீடுகள் வீழ்ச்சி அடைந்திருந்தாலும், பின்னர் விரைவாக மீண்ட உலக சந்தைகள் அந்த வருடத்தை தனக்கு சாதகமாக முடித்து கொண்டது. அமெரிக்க சந்தை குறியீடு மட்டும் கடந்த ஆண்டில் சுமார் 45 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது. இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் ஆண்டின் முடிவில் 15 சதவீத ஏற்றத்துடன் முடிவு பெற்றது.
இதுவே 2019ம் ஆண்டு அமெரிக்க சந்தை 30 சதவீதமும், இந்திய பங்குச்சந்தை 13 சதவீத ஏற்றமும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. பொருளாதார மந்த நிலை என்ற பாதகத்தை தாண்டி, அதிக முதலீடுகளை பெற்றதால் சந்தை குறியீடுகள் வரலாற்று உச்சத்தில் வர்த்தகமாகி கொண்டிருக்கிறன. இது ஒரு ‘குமிழி (Bubble)’ நிலை போல ஒப்பிடப்படுகிறது. பெரும்பாலான வல்லுநர்கள் பங்கு சந்தையில் அடைந்த லாபத்தை மற்ற முதலீட்டு சாதனங்களில் பரவலாக்குமாறு அறிவுறுத்துகின்றனர்.
பொதுவாக முதலீட்டை பிரித்து முதலீடு செய்வதும்(Asset Allocation), பல்வகைப்படுத்துதலும்(Diversification) அவசியம். ஒரே முதலீட்டு சாதனத்தை காலம் முழுவதும் கொண்டிருப்பது சிறந்த போர்ட்ஃபோலியோ(Portfolio) சாதனமாக அமையாது. நாட்டின் டிசம்பர் 2020 மாத வேலைவாய்ப்பின்மை விகிதம் எதிர்பாராத நிலையில் மீண்டும் அதிகரித்து வருகிறது. வரக்கூடிய நாட்களில் நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டு முடிவுகளும்(Quarterly results), மத்திய பட்ஜெட் தாக்கலும்(Budget India 2021) வெளிவர உள்ளது.
இந்நிலையில் நிதி ஆயோக் என சொல்லப்படும் கொள்கை ஆணையம், கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகான காலத்தை கூறியுள்ளது. நிதி ஆயோக், நாட்டின் திட்டமிடல் அமைச்சகத்தின்(Ministry of Planning) கீழ் செயல்படுகிறது. இதன் தலைவராக பிரதமர் திரு. நரேந்திர மோடி உள்ளார். தலைமை நிர்வாக அதிகாரியாக ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியும், துணை தலைவராக ஒரு பொருளாதார வல்லுனரும் உள்ளனர்.
கொரோனாவுக்கு பிந்தைய காலத்தில், உலக பொருளாதாரம் இரண்டு தீவிர நிலைகளில் சுழலக்கூடும் எனவும், பெரும் மந்தநிலையை(Great Depression) ஒத்திருக்கும் சூழ்நிலை ஒன்றாகவும், முதலாம் உலகப்போருக்கு பிறகான காலமாக மற்றொன்றும் இருக்கும் எனவும் நிதி ஆயோக் கூறியுள்ளது. அதாவது 1920-30 காலங்களில் காணப்பட்ட நிலையை ஒப்பிட்டு சொல்லியுள்ளது.
உலகம் முழுவதும் காணப்படும் எதிர்ப்பு வாதம், வர்த்தகம் மீதான அதிக உணர்திறன், வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து வருவது, உலக நாடுகளின் அதிகப்படியான கடன் தன்மை, வறுமை நிலை, உணவுப்பொருட்களில் காணப்படும் ஏற்ற-தாழ்வு, நிதி சந்தைகளில் காணக்கூடிய அதிக ஏற்ற-இறக்கங்கள் ஆகியவை வரக்கூடிய காலங்களில் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தலாம் என இந்த ஆணையம் தனது உலக பார்வையை முன் வைத்துள்ளது.
கொரோனா பெருந்தொற்றால் ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட நிதி இழப்பு, ஊரடங்கின் போது ஏற்பட்ட வேலைவாய்ப்பின்மை மற்றும் பொருளாதார நிலையை சரிசெய்ய அதிக பொருளாதார ஊக்குவிப்பு செலவு, நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகமாக காணப்படும் நிலையில், கொரோனா தடுப்பூசிக்கான பெருமளவிலான செலவுகளை அரசு ஏற்கும் நிலை உள்ளது. இதன் காரணமாக வரக்கூடிய நாட்களில் தனிநபர் சேமிப்பும், பொறுப்பும் மிகவும் அவசியமான ஒன்று.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை