மீண்டும் அதிகரித்து வரும் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம்
Unemployment rate is rising again – CMIE Data
நடப்பாண்டில் ஏப்ரல் மாத ஊரடங்கின் போது, நாட்டின் பெரும்பாலான தொழிலாளர்கள் தங்களது வேலைகளை இழந்தனர். குறிப்பாக அமைப்பு சாரா வேலைகளில் தான் இதன் பாதிப்பு அதிகமாக இருந்தது. அடுத்தடுத்த மாதங்களில் கொரோனா பெருந்தொற்று எண்ணிக்கை அதிகரித்த நிலையில் ஊரடங்கும் நீட்டிக்கப்பட்டிருந்தது.
எதிர்பாராமல் ஏற்பட்ட தேவையின் காரணமாக உணவுப்பொருட்கள் சார்ந்த துறையில் பெரிதான பாதிப்பு எதுவுமில்லை. மார்ச் மாதத்தில் காணப்பட்ட நாட்டின் 8.75 சதவீத வேலைவாய்ப்பின்மை விகிதம், ஏப்ரல் மாத ஊரடங்கில் 23.52 சதவீதமாக அதிகரித்தது. இது வரலாற்றில் இல்லாத அளவாக சொல்லப்பட்டது.
2020ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் நகர்ப்புறங்களில் 24.95 சதவீதமும், கிராமப்புறங்களில் 22.89 சதவீதமும் வேலைவாய்ப்பின்மை காணப்பட்டது. பின்னர் மே மாதத்தில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 21.73 சதவீதமாகவும், இதுவே ஜூன் மாதத்தின் முடிவில் 10.18 சதவீதமாகவும் இருந்தது.
பின்னர் படிப்படியாக குறைந்த இந்த விகிதம் ஜூலை முதல் நவம்பர் வரையிலான காலத்தில் 6-8 சதவீதம் என்ற அளவிற்குள் இருந்தது கவனிக்கத்தக்கது. பெரும்பாலான உற்பத்தி நிறுவனங்களில் தற்போது 50 சதவீதத்திற்கு மேற்பட்ட பணியாளர்கள் வர தொடங்கியது அடுத்தகட்ட வளர்ச்சிக்கு துணைபுரியும்.
அதே வேளையில், பொருளாதார மந்தநிலை இன்னும் ஓய்ந்தபாடில்லை. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகான காலத்தில் உலகம் முழுவதும் சுமார் 15 கோடி பேர் ஏழ்மைக்கு தள்ளப்படுவர் என சுகாதார புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் குறிப்பாக குறைந்த அளவிலான வருவாய் கொண்டிருப்போர் மற்றும் நீண்டகாலமாக குறைவான வருவாயை மட்டுமே கொண்டிருக்கும் நாடுகள் பாதிக்கப்படும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
உள்நாட்டில் இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஊரடங்கில் பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்புகள் ஒருபுறம் உயர்ந்த நிலையிலும், வேலை இழந்தவர்களில் பெரும்பாலான நபர்கள், இன்னும் கொரோனாவுக்கு முந்தைய ஊதிய விகிதத்தை பெறவில்லை என கொள்கை ஆராய்ச்சிக்கான மையம்(CPR) கூறுகிறது.
நடப்பு மாதத்தில் டிசம்பர் 18ம் தேதி முடிவின் படி, நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 8.3 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 8.6 சதவீதம் மற்றும் கிராமப்புறங்களில் 8.2 சதவீதமாகவும் உள்ளது. டிசம்பர் 1ம் தேதி 6.60 சதவீதமாக இருந்த விகிதம், 18ம் தேதி முடிவில் 8.34 சதவீதமாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
வேளாண்மை சட்டத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தின் காரணமாக, நாளொன்றுக்கு 3500 கோடி ரூபாய் வரை பொருளாதார இழப்பு ஏற்பட உள்ளதாக அசோசம் வர்த்தக அமைப்பு(Assocham) தெரிவித்துள்ளது. வரும் நாட்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிக்கும் நிலையில், பொருளாதார வளர்ச்சியில் மீண்டும் ஒரு பாதகத்தை ஏற்படுத்தலாம்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை