நாட்டின் முதல் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவை – இன்று தொடக்கம்
India’s First Driverless Metro Rail Service – Starts Today
தானியங்கி ரயில் சேவையில், உலகின் முதல் இயக்கம் கடந்த 1967ம் ஆண்டு லண்டனில் துவங்கப்பட்டது. தொழில்நுட்ப புரட்சி குறைவாக எண்ணப்பட்ட அக்காலத்தில் முதல் தானியங்கி ரயில் சேவை இருந்திருந்தாலும், அவசர தேவைக்காக ஒரு ஓட்டுநர் ரயில் கேபினில் அமர்ந்திருந்தார். முழுமையான ஓட்டுநர் இல்லா ரயில் சேவை முதன்முதலில் 1981ம் ஆண்டு ஜப்பானில் தான் நடைபெற்றது.
ஓட்டுநர் இல்லாத ரயில் சேவையில் பல தொழில்நுட்ப அமைப்புகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. சாதாரண பயணிகள் ரயில் சேவையிலிருந்து, மெட்ரோ பயணிகள் ரயில் சேவை தனித்துவம் மிக்கது. உலகின் ஒட்டுமொத்த மெட்ரோ ரயில் சேவையில் 7 சதவீதம் ஓட்டுநர் இல்லாத ரயில்(Driverless Metro Rail) சேவையை தான் கொண்டுள்ளது.
மெட்ரோ ரயில் சேவையில் நீண்ட தூரம் கொண்ட ரயிலை துபாய் இயக்கி வருகிறது. இதன் தூரம் 75 கி.மீ. உலகின் அதிவேக மெட்ரோ ரயில் சீனாவின் ஷாங்காய் மக்லேவ் சேவையாகும். இதன் வழித்தடம் மணிக்கு 600 கிலோமீட்டர் வேகத்தை ,கொண்டிருந்தாலும், தற்போது மணிக்கு 430 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கி கொண்டிருக்கிறது.
இந்த பங்களிப்பில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது. நாட்டின் முதல் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவையை இன்று(28-12-2020) பிரதமர் அவர்கள் துவக்கி வைக்க உள்ளார். இந்த சேவை டெல்லி மெட்ரோ ரயில் சேவையின் 37 கி.மீ. தூரம் கொண்ட மெஜந்தா தடத்தில் நடைபெற உள்ளது.
டெல்லி மெட்ரோ தற்போது 390 கிலோமீட்டர் தூர சேவையையும், 285 ரயில் நிலையங்களையும் நிர்வகித்து வருகிறது. நாட்டின் முதல் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை இன்று துவங்கப்பட்டாலும், நடப்பில் உள்ள மெட்ரோ ரயில் சேவை பெரும்பாலும் ஓட்டுநர்களை சாராத கட்டுப்பாட்டு அமைப்புகளால் தான் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. புதிய தொழில்நுட்பத்தை கொண்டிருக்கும் இச்சேவை பயணிகளுக்கு மிகவும் பாதுகாப்பான ரயில் சேவையை அளிக்கும் எனவும் சொல்லப்படுகிறது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை