Category Archives: Paisa News

Paisa News – News about Business and Finance

சுமாராக இருந்த பட்ஜெட், சூப்பராக மாறுமா ? – பட்ஜெட் தாக்கல் அறிக்கை 2021

சுமாராக இருந்த பட்ஜெட், சூப்பராக மாறுமா ? – பட்ஜெட் தாக்கல் அறிக்கை 2021

Budget India 2021 – Highlights & Insights

 

2021-22ம் நிதியாண்டுக்கான நாட்டின் பட்ஜெட் திங்கட்கிழமை அன்று(01-02-2021) நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது. நாட்டின் முதல் காகிதமில்லா மின்னணு பட்ஜெட்டாக இது சொல்லப்பட்டது. ஒரு ரூபாய் பட்ஜெட்டாக இதனை கணக்கில் கொள்ளும் போது, மத்திய அரசின் வரவு-செலவினை எளிமையாக புரிந்து கொள்ளலாம்.

 

அரசின் வருவாய் பெரும்பாலும் வரி சார்ந்த வருவாயாக தான் இருக்கும். ஒரு ரூபாய் பட்ஜெட்(One Rupee Budget) வருவாயில் 15 பைசா சரக்கு மற்றும் சேவை வரியாகவும்(GST), வருமான வரி மூலம் 14 பைசாவும், நிறுவனங்களுக்கான வரி மூலம் 13 பைசாவும் வருமானமாக ஈட்டப்படுகிறது. கடன்கள் மற்றும் பிற பொறுப்புகள் மூலம் 36 பைசா மற்றும் தொழில் சார்ந்த கலால் வரி மூலம் 8 பைசாவும் பெறப்படுகிறது. சுங்க வரி மூலமான வருவாய் 3 பைசாவும், வரி அல்லாத வருவாய் 6 பைசாவாகவும், கடன் அல்லாத மூலதன ரசீதுகள் மூலம் கிடைக்கப்பெற்ற வருவாய் 5 பைசாவாகவும் உள்ளது.

 

செலவுகள் பிரிவில் காணும் போது அரசின் பெரும்பாலான செலவு வட்டி செலுத்துவதிலும், வரிகளை பகிர்ந்தளித்தல் மற்றும் மத்திய துறை சார்ந்த திட்டங்களுக்கு தான். வட்டி செலவுகள் 20 பைசாவாகவும், மாநிலங்களுக்கு வரிகளை பகிர்ந்தளிப்பதில் 16 பைசாவும் மற்றும் மத்திய அரசின் துறை சார்ந்த திட்டங்களுக்கு 14 பைசாவும் செலவிடப்படுகிறது. நிதி ஆணையம் மற்றும் பிற பரிமாற்றங்களுக்கு 10 பைசாவும், மானியங்களுக்கு 8 பைசாவும் சொல்லப்பட்டுள்ளது. ஓய்வூதியத்திற்கு 5 பைசாவும், பாதுகாப்பு துறைக்கு 8 பைசாவும் மற்றும் இதர செலவுகளுக்கு 10 பைசாவாக உள்ளது.

 

கடந்த ஆண்டு பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு 4.72 லட்சம் கோடி ரூபாய் சொல்லப்பட்ட நிலையில் இம்முறை கூடுதலாக 1.5 சதவீதம் என்ற அளவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2021-22ம் நிதியாண்டுக்கான மூலதன செலவு 19 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் விவசாய நலனுக்காக சுமார் 6 சதவீதம் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. 

 

சாலை மற்றும் ரயில் போக்குவரத்துக்காக முறையே ரூ. 1.18 லட்சம் கோடி மற்றும் ரூ.1.10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு துறைக்கு 4.78 லட்சம் கோடி ரூபாயும், உள்நாட்டு விவகாரங்களுக்கு ரூ. 1.66 லட்சம் கோடி மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்காக ரூ.1.33 லட்சம் கோடி என சொல்லப்பட்டுள்ளது. கல்வி வளர்ச்சிக்கு 93,224 கோடி ரூபாயும், சுகாதார துறைக்கு 73,932 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுக்காக 54,580 கோடி ரூபாய் மற்றும் நுகர்வோர், உணவு மற்றும் பொது விநியோக தேவைகளுக்கு 2.56 லட்சம் கோடி ரூபாயும் பட்ஜெட் தாக்கலில் அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் மருத்துவம் சார்ந்த திட்டங்களுக்கு கணிசமான தொகை சொல்லப்பட்டிருந்தாலும், வளர்ந்த மற்றும் வேகமாக வளரும் நாடுகளில் நம் நாட்டின் பங்கு மிகவும் குறைவான அளவில் தான் உள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இதன் பங்களிப்பு வெறும் ஒரு சதவீதம் மட்டுமே.

 

நடப்பு நிதியாண்டில் நிதி பற்றாக்குறையாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.5 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020-21ம் நிதியாண்டின் அடுத்த இரு மாதங்களுக்கான செலவுகளுக்காக அரசு சுமார் 80,000 கோடி ரூபாய் கடன் வாங்க உள்ளது. அடுத்த நிதியாண்டில் ரூ.12 லட்சம் கோடியை கடனாக பெற உள்ளதாக நிதியமைச்சர் கூறியுள்ளார். 2021-22ம் நிதியாண்டின் மொத்த செலவுகள் 34.83 லட்சம் கோடி ரூபாயாக இருக்கலாம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

அன்னிய முதலீட்டை காப்பீடு துறையில் அதிகரிப்பது, சாலை மற்றும் ரயில் போக்குவரத்துக்கான ஒதுக்கீடு, வங்கிகளில் மறு மூலதனமாக்கல், வங்கிகளில் காணப்படும் வாராக்கடனுக்கான தீர்வு, பொதுத்துறை நிறுவனங்களின் மூலம் பங்கு விலக்கல் நடவடிக்கை ஆகியவை அரசுக்கான நிதி சுமையை குறைக்கலாம். 

 

நேரடி வரி(Direct Tax) சார்ந்த நடவடிக்கைகளில் பெரிதான மாற்றம் எதுவும் சொல்லப்படவில்லை. 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான வருமான வரி தாக்கலில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. சொல்லப்பட்ட வயதுக்கு மேற்பட்டவர்கள் வரி தாக்கல் செய்ய தேவையில்லை. அதே வேளையில் வருமான வரி சட்டத்தின் 194பி என்ற பிரிவின் படி ஓய்வூதியதாரர்களுக்கான வரி பிடித்தம் மற்றும் வட்டி வருவாய்க்கான டி.டி.எஸ். பிடித்ததை வங்கிகள் மேற்கொள்ளுமாறு சொல்லப்பட்டுள்ளது.  

 

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் உள்நாட்டிற்கு திரும்பும் போது, அவர்களின் வெளிநாட்டு ஓய்வூதிய கணக்குகளில் அவர்கள் சம்பாதித்த வருமானம் தொடர்பான சிக்கல்கள் உள்ளன. இதன் காரணமாக அவர்கள் இரட்டை வரி விதிப்பு முறைக்கு ஆளாக நேரிடுவதுண்டு. இந்த சிக்கல்களை நீக்குவதற்கான திட்டம் உள்ளதாக நிதி அமைச்சர் கூறியுள்ளார். 

 

இனி மேல் வருமான வரி தாக்கல் செய்யும் போது, வங்கிகளின் டி.டி.எஸ். பிடித்தம் மற்றும் படிவம் 16ன் கீழ் உள்ள விவரங்கள் தானியங்கியாக சொல்லப்படுவது போல, பட்டியலிடப்பட்ட பங்குகள் மற்றும் டிவிடெண்ட் வருவாய் போன்ற மூலதன ஆதாயம் சார்ந்த விவரங்கள் முன்னரே நிரப்பப்பட்டிருக்கும். இதனை பற்றி நாம் ஏற்கனவே(பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக) மற்றொரு பதிவில் சொல்லியிருந்தோம்.  

 

2020-21ம் நிதியாண்டில் மத்திய அரசு நிர்ணயித்த பங்கு விலக்கல் நடவடிக்கை மூலமான இலக்கு ரூ.2.1 லட்சம் கோடியாக இருந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக சுமார் 15,000 கோடி ரூபாய் அளவில் மட்டுமே ஈர்க்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 2021-22ம் நிதியாண்டில் பங்கு விலக்கல் இலக்கு தொகை ரூ.1.75 லட்சம் கோடியாக சொல்லப்பட்டுள்ளது. 

 

விவசாய உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ்(AIDC) என்ற வரி விதிப்பு எரிபொருட்களுக்கு(Petrol & Diesel) சொல்லப்பட்டுள்ளது. காப்பர் கழிவுகளுக்கான(Copper Scrap) வரி குறைக்கப்பட்டிருந்தாலும், சோலார் இன்வெர்ட்டர்கள் மற்றும் சூரிய விளக்குகளுக்கான வரி மூன்று முதல் நான்கு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. பெரும்பாலான பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி விதிப்பு இன்று(02-02-2021) முதல் அமலுக்கு வருகிறது.

 

மகளிர் மற்றும் குழந்தை வளர்ச்சிக்கான ஒதுக்கீட்டில் பெரிதான தொகை எதுவும் சொல்லப்படவில்லை. அவை பெரும்பாலும் ஒரு குழுவின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது எனலாம். பொதுவாக ஒவ்வொரு துறையின் கீழ் சொல்லப்படும் பட்ஜெட் ஒதுக்கீட்டு தொகை அந்தந்த நிதியாண்டில் பெறப்படுகிறதா என்று கேள்வி எழுப்பினால் அது சந்தேகமே. 

 

அரசுக்கான வருவாய் சரியான நிலையில் வந்தடைந்து, செலவுகள் சொல்லப்பட்ட அளவில் கட்டுப்படுத்தப்பட்டால் மட்டுமே அனைத்து துறைக்கான ஊக்கமும் சாத்தியமாகும். நாம் வீட்டில் போடும் பட்ஜெட் போலத்தான் நாட்டின் பட்ஜெட் தாக்கலும். பட்ஜெட்டில் துண்டு விழாமல் இருக்க போவதில்லை. அதே நேரத்தில், கடன் தன்மை அதிகரிப்பதை எச்சரிக்கையாக கையாள வேண்டும்.

 

அரசு மீண்டும் அதிகப்படியான கடனை பெற போவது, உட்கட்டமைப்புக்கான நிலங்களை கையகப்படுத்துவது, அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பங்கு விலக்கல், வங்கிகளின் வாராக்கடனுக்கான புதிய திட்டம், தனியார் மயம் மற்றும் தனியார் முதலீடு ஆகியவை வரக்கூடிய காலங்களில் சவாலான விஷயமாக அமையக்கூடும். 

 

பட்ஜெட் தாக்கலின் போது இந்திய பங்குச்சந்தையில் காணப்பட்ட ஏற்றத்திற்கு அன்றைய உலக சந்தை குறியீடுகளும் முக்கிய காரணமாக அமைந்திருந்தன. ஹாங்காங், தைவான், தென் கொரியா மற்றும் இந்தோனேஷியா நாடுகளின் பங்குச்சந்தை குறியீடுகள் இரண்டு சதவீதத்திற்கும் மேல் ஏற்றம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மதிய வேளையில் வர்த்தகமாகிய புட்சீ(FTSE) குறியீடும் ஏற்றத்தில் தான் துவங்கின. சுமாரான பட்ஜெட், வரும் நாட்களில் சூப்பரான பட்ஜெட்டாக மாறுமா ? இல்லையெனில், நடுத்தர மக்களிடையே பணவீக்கத்தை அதிகரித்து மீண்டும் ஒரு மந்தநிலையை ஏற்படுத்துமா என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம். 

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com



பொருளாதார ஆய்வறிக்கை 2021 – என்ன சொல்கிறது ?

பொருளாதார ஆய்வறிக்கை 2021 – என்ன சொல்கிறது ?

Budget India 2021 – Economic Survey

மத்திய அரசின் பட்ஜெட் காலத்திற்கான நாடாளுமன்ற கூட்டம் நேற்று(29-01-2021) துவங்கியது. வரும் திங்கட்கிழமை(01-02-2021) மத்திய அரசு சார்பில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டின் பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு, நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்படும். இது அரசின் அடுத்தகட்ட பொருளாதார நடவடிக்கைக்கு உதவும்.

மூன்றாவது முறையாக நாட்டின் பட்ஜெட் தாக்கலை நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அறிவிக்க உள்ளார். நடப்பு நிதியாண்டில் காணப்பட்ட நடப்பு கணக்கு உபரித்தொகை(Current Account Surplus) கடந்த 17 வருடங்களில் இல்லாத அளவாகும். வரக்கூடிய 2021-22ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11 சதவீதமாக இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பீடு நாடு சுதந்திரம் பெற்ற பிறகு சொல்லப்பட்ட அதிகபட்ச அளவாகும்.

கொரோனா நிவாரண நடவடிக்கைக்கு பின்னர், நாட்டில் உள்ள வங்கிகள் பழைய தவறுகளை மீண்டும் செய்யாமல் வங்கி நிதி நிலைமையை கவனத்துடன் வைத்திருக்க வேண்டும் என தலைமை பொருளாதார ஆலோசகர் திரு. கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் கூறியுள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் உயரும் போது, கடன் தன்மையிலும் எச்சரிக்கையாக செயல்படுவது அவசியம். நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் (-7.7%) என்ற அளவில் முடிவடையலாம்.

உலகளாவிய கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி(GDP Growth) அதிகமாக இருந்த போதிலும், சாதகமான நடப்பு கணக்கு, நிலையான நாணயம், அந்நிய செலவாணி கையிருப்பு அதிகரித்து வருவது, உற்பத்தி துறையில் ஊக்குவிப்பு ஆகியவை வரக்கூடிய காலங்களில் நிலையான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் என சொல்லப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் அரசு ஈட்டிய வரி வருவாய் 12.6 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது. இதன் மதிப்பு 10.26 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது கவனிக்கத்தக்கது.

அரசு நிறுவனங்களின் பங்கு விலக்கல்(Disinvestment) மூலமான இலக்கு 2.1 லட்சம் கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக சுமார் 15,000 கோடி ரூபாய் மதிப்பில் மட்டுமே அடையப்பட்டுள்ளது. வரக்கூடிய பட்ஜெட் தாக்கலில் அரசுக்கான வருவாயை அதிகரிப்பதற்கான திட்டங்கள் விவாதிக்கப்படலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

கொரோனா பெருந்தொற்றிலும் அதிகரித்த சமத்துவமின்மை விகிதம்

கொரோனா பெருந்தொற்றிலும் அதிகரித்த சமத்துவமின்மை விகிதம் 

The Covid-19 Inequality Rate – Rich gets Richer

ஆக்ஸ்பேம்(Oxfam) நிறுவனம் சார்பில் கடந்த 2020ம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் பணக்காரர்கள் மற்றும் ஏழைகளுக்கு இடையிலான தரவுகள் சிலவற்றை கூறியிருந்தது. ‘உலகின் 60 சதவீத மக்கள் சம்பாதிக்கும் பணத்தை காட்டிலும், அதிக சொத்து மதிப்பு கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை வெறும் 2,153 பில்லினியர்கள். ஆப்பிரிக்காவில் உள்ள அனைத்து பெண்கள் சம்பாதிக்கும் வளத்தை விட அதிக சொத்து, உலகின் 22 பணக்காரர்களிடம் உள்ளது. நம் நாட்டில் 95.3 கோடி மக்களின் வளத்தை காட்டிலும் நான்கு மடங்கில் ஒரு சதவீத இந்தியர்களிடம் உள்ளது ‘ என சொல்லப்பட்டிருந்தது.

நாட்டில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தின் தலைமை அதிகாரி சம்பாதிக்கும் ஒரு வருட வருவாயை பெற, பெண் ஊழியர் ஒருவர் 22,277 வருடங்கள் வேலை பார்த்தாக வேண்டும். அவர் பத்து நிமிடங்களில் சேர்க்கும் பணத்தை, தொழிலாளர் ஒருவர் ஒரு வருடம் முழுவதும் உழைத்தால் மட்டுமே கிடைக்கும்.

சமத்துவம் சார்ந்த கொள்கைகள் வழிவகுக்கப்பட்டால் ஒழிய பணக்காரர்கள் – ஏழைகளுக்கு இடையிலான இடைவெளியை குறைக்க இயலாது என இந்த கூட்டமைப்பு சொல்கிறது. நிறுவனங்கள் மற்றும் செல்வந்தர்கள் தங்கள் வரியை நியாயமாக செலுத்துவதை அரசு உறுதி செய்ய வேண்டுமெனவும், கிடைக்கும் வரி பணத்தை அரசு முறையாக பொது சேவைகள் மற்றும் உட்கட்டமைப்புக்கு பயன்படுத்துவதை கண்காணிக்கும் முறைகள் கையாளப்பட வேண்டும் எனவும் ஆக்ஸ்பேம் மேற்கோள் காட்டுகிறது.

தற்போது கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட ஊரடங்கு மற்றும் அதனை சார்ந்த சமத்துவமின்மை விகித புள்ளிவிவரங்களை இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. மார்ச் 2020க்கு பிறகு, இந்தியாவில் 100 பில்லியனர்களின் சொத்து மதிப்பு 12.97 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அதாவது நாட்டில் காணப்படும் சுமார் 14 கோடி ஏழைகளுக்கு, நபர் ஒன்றுக்கு 94,045 ரூபாயாக பிரித்து கொடுக்கலாம் என சொல்கிறது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் திரு. முகேஷ் அம்பானி ஒவ்வொரு மணி வேளையில்(an Hour) சம்பாதித்த வருவாயை, அமைப்பு சாரா தொழிலாளி ஒருவர் சம்பாதிக்க 10,000 வருடங்கள் தேவைப்படும் என இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. ஊரடங்கு காலத்தில் சுமார் 40 கோடி பேர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், இவர்களில் பெரும்பாலானோர் அமைப்பு சாரா துறையில் உள்ளவர்கள் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் கணினி பயன்பாடு நான்கு சதவீதம் மட்டுமே உள்ளது. இணைய சேவையும் 15 சதவீதத்திற்கு குறைவாகவே கிராமப்புறங்களில் காணப்படுகிறது. கொரோனா காலத்தில் அடிப்படை ஆரம்ப கல்வி(பள்ளிக்கல்வி) தடைப்பட்டுள்ளது. அதே நேரம் சொல்லப்பட்ட காலத்தில் பைஜூ(Byju’s) போன்ற இணைய வழி கல்வி சார்ந்த நிறுவனங்களின் மதிப்பு அதிகரித்துள்ளது.

இந்திய மக்கள் தொகையில் 60 சதவீத மக்கள் ஒரு வீடு அல்லது அதற்கு குறைவான இருப்பிடத்தில் வசித்து வருகின்றனர். சுகாதாரம் மற்றும் மருத்துவ அடிப்படையிலும் பெரும்பாலான மக்களுக்கு போதுமான வசதி கிடைக்கப்பெறவில்லை. ஏப்ரல் 2020 தரவுகளின் படி, நாட்டில் சுமார் 1.7 கோடி பெண்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர். இந்த வேலையிழப்பு விகிதம் நாட்டின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு பாதகமாக அமையும் என ஆக்ஸ்பேம் குறிப்பிட்டுள்ளது.

கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து வரும் நிலையில், கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு உயர்ந்து வருவது கொரோனா பெருந்தொற்று காலத்திலும் மாறவில்லை. கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பயத்தை காட்டிலும், சமத்துவமின்மை விகிதம் அதிகரித்து வருவது தான் உண்மையில் பொருளாதாரம் சார்ந்த பயத்தை ஏற்படுத்துகிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஆர்.பி.ஜி. லைப் சயின்சஸ் – மூன்றாம் காலாண்டு வருவாய் ரூ.108 கோடி

ஆர்.பி.ஜி. லைப் சயின்சஸ் – மூன்றாம் காலாண்டு வருவாய் ரூ.108 கோடி 

Q3FY21 Revenue of Rs.103 Crore – RPG Life Sciences

 

இருநூறு வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட ஆர்.பி.ஜி. குழுமம் டயர், உட்கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் மருந்து துறையில் தொழில் புரிந்து வருகிறது. இந்த குழுமத்தின் துணை நிறுவனம் தான் சியட் டயர்ஸ்(CEAT). பில்லியன் டாலர் வருவாயை கொண்டிருக்கும் ஆர்.பி.ஜி. குழுமத்தின், மருந்து துறையில் உள்ள நிறுவனம் ஆர்.பி.ஜி. லைப் சயின்சஸ் நிறுவனம். 

 

மும்பையை தலைமையிடமாக கொண்டிருக்கும் ஆர்.பி.ஜி. லைப் சயின்சஸ் நிறுவனம் கடந்த 1993ம் ஆண்டு துவங்கப்பட்டது. உயிர் தொழில்நுட்பம்(Bio-technology), உடல்நலம், மொத்த மருந்துகள் உற்பத்தி மற்றும் பொதுவான மருந்து வணிகங்களில் ஈடுபட்டு வருகிறது. 

 

இந்நிறுவனத்தின் உற்பத்தி பிரேசில், மெக்சிகோ, தென் கொரியா, சீனா, சிலி, உக்ரைன், பால்டிக் நாடுகள் மற்றும் அர்ஜென்டினா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆர்.பி.ஜி. லைப் சயின்சஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.700 கோடி. கடன்-பங்கு விகிதம் 0.01 ஆகவும், வட்டி பாதுகாப்பு விகிதம் 54 மடங்கிலும் உள்ளது.

 

நிறுவனர்களின் பங்களிப்பு 72 சதவீதமாகவும், நிறுவனர்கள் சார்பில் பங்கு அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை. கடந்த பத்து வருட காலத்தில், நிறுவனத்தின் வருவாய் 9 சதவீதமும், லாபம் 12 சதவீதமும் வளர்ச்சி பெற்றுள்ளது. பங்கு மூலதனத்தின் மீதான வருவாய்(ROE) ஒரு வருட காலத்தில் 20 சதவீதமாகவும், ஐந்து வருட காலத்தில் 11 சதவீதமாகவும் உள்ளது.

 

2020-21ம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில்(Quarterly results) நிறுவனத்தின் வருவாய் ரூ.108 கோடியாகவும், செலவினம் 86 கோடி ரூபாயாகவும் உள்ளது. இயக்க லாப விகிதம்(Operating profit Margin) 20 சதவீதமாக இருப்பது கவனிக்கத்தக்கது. சொல்லப்பட்ட காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.13 கோடியாக உள்ளது. கடந்த 10 காலாண்டுகளில் காணப்படாத வருவாய் வளர்ச்சியும், லாப விகிதமும் தற்போது ஏற்பட்டுள்ளது.

 

நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு 183 கோடி ரூபாயாக  சொல்லப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மருந்து துறையின் தேவை காரணமாக இந்த பங்கின் விலை, மார்ச் 2020 வீழ்ச்சிக்கு பின்பு நூறு சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

    



வேளாண்மை – கோழி – மீன் வளர்ப்பு நிறுவன பங்குகளில் முதலீடு செய்ய விருப்பமா ? பங்குச்சந்தை அலசல்

வேளாண்மை – கோழி – மீன் வளர்ப்பு நிறுவன பங்குகளில் முதலீடு செய்ய விருப்பமா ? பங்குச்சந்தை அலசல் 

Agriculture – Poultry – Aquaculture – It’s Stock Insights

பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்கள் பொதுவாக பிரபல நிறுவனங்களிலும், அதிகம் அறியப்பட்ட துறைகளிலும் முதலீடு செய்வது வழக்கம். தேசிய பங்குச்சந்தையான நிப்டி(Nifty50) குறியீட்டில் அதிக பங்களிப்பை கொண்டிருக்கும் துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள். இதன் பங்களிப்பு 26.17 சதவீதமாக உள்ளது. தகவல் தொழில்நுட்பம் 21.50 சதவீதமும், எண்ணெய் மற்றும் எரிவாயு 14.83 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளது.

வாகன துறை 6.19 சதவீதமாகவும், நீடித்தது அல்லாத நுகர்வோர் துறை(Consumer Non-durables) 5 சதவீதமும் மற்றும் மருந்து துறை 3.37 சதவீதமாகவும் உள்ளது. தொலைத்தொடர்பு துறை(Telecom) 2.78 சதவீதத்தையும், பொறியியல் துறை 2.65 சதவீதத்தையும் கொண்டுள்ளது. இது போல உலோகங்கள் மற்றும் சுரங்க தொழில், ரசாயனம் ஆகிய துறைகள் முறையே 2.65 % மற்றும் 2.59 % பங்களிப்பை உள்ளடக்கியுள்ளது.

இதர பங்களிப்பில் புகையிலை(2.3 %), உணவு மற்றும் குளிர்பானங்கள்(2.27%), சிமெண்ட் மற்றும் கட்டுமானம்(2.17%), மற்ற பயன்பாடுகள்(Utilities) உள்ளன. பங்குச்சந்தை குறியீட்டில் அதிக பங்களிப்பை கொண்டிருக்கும் வங்கித்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பம் அனைத்து முதலீட்டாளர்களையும் ஈர்க்கும் துறைகளாக காணப்படுகிறது.

ஆனால் உண்மையில் அவை முதலீட்டாளர்களுக்கு, மற்ற துறைகளை காட்டிலும் நீண்டகாலத்தில் முதலீட்டு வருவாயை அளித்துள்ளதா ?

சுழற்சி முறை(Cyclical) மற்றும் பருவ கால தொழிலை செய்யும் துறைகள் ஏன் பெரும்பாலும் கண்டுகொள்ளப்படுவதில்லை ?

விவசாயம், விவசாயி, உணவு தேவை ஆகியவற்றை சொல்லும் பொது உலகம் வேளாண்மை, கால்நடை மற்றும் மீன் வளர்ப்பு தொழிலுக்கு போதுமான முதலீட்டை கொடுத்துள்ளதா ?

வேளாண்மை, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு தொழில் செய்யும் நிறுவனங்களில் நீங்கள் முதலீடு செய்ததுண்டா, இவற்றில் நீண்டகாலத்தில் லாபம் பார்ப்பது எப்படி ?

வாருங்கள், வரும் சனிக்கிழமை(13-02-2021) மாலை 05:15 மணிக்கு இணையம் வழியாக பேசுவோம்…

பதிவுக்கு,

Stock Insights(Premium Investing) – Registration

மூன்று துறைகள், ஐந்து வாரங்கள்(சனிக்கிழமைகளில்), பத்து நிறுவன பங்குகள் – அடிப்படை அலசல்.

இங்கே எந்த பங்குகளுக்கான பரிந்துரையும் சொல்லப்படாது. (Disclaimer பிரிவை வாசிக்கவும்). இது பங்கு தொழில் சார்ந்த ஒரு அடிப்படை அலசல் மட்டுமே.

கட்டணம்: ரூ. 499 மட்டும் 

பதிவுக்கு பின், இணைப்பு(Webinar) சார்ந்த விவரங்கள் உங்கள் மின்னஞ்சல் மற்றும் வாட்சாப் செயலிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் அரசு பொதுத்துறை நிறுவனங்கள் என்னென்ன ?

இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் அரசு பொதுத்துறை நிறுவனங்கள் என்னென்ன ?

PSU(Public Sector) Companies in the Indian Stock Market

பங்குச்சந்தை முதலீடு என சொன்னவுடன் பலருக்கு பணப்பாதுகாப்பை பற்றிய கேள்வி இருக்கும். நாம் நித்தமும் நாளிதழ்களில்(வணிக பக்கத்தில்) காணும் செய்தி மூன்று – பங்குச்சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மற்றும் தங்கத்தின் விலை ஏற்ற-இறக்கம். அனைத்து செய்தி ஊடகங்களிலும் இந்த மூன்றை பற்றிய தகவல் வராத நாட்கள் இல்லை எனலாம்.

இந்திய பங்குச்சந்தையின் வரலாறு சுமார் 150 வருடங்களுக்கு மேல். அப்படியிருந்தும், பங்குச்சந்தையின் மீதான பயத்தின் காரணம் என்ன ? சரியான விழிப்புணர்வும், தேவையான தகவலும் பகிரப்படாதது தான். நாம் இன்று நாள்தோறும் காணும் எந்தவொரு பொருளோ அல்லது சேவையோ, பங்குச்சந்தையில் உள்ள நிறுவனத்தை சார்ந்ததாக தான் இருந்திருக்கும். காலை பல் துவக்குவது முதல் இரவு தூக்கம் வரை, உங்கள் வாழ்வில் நுகரும் அத்தனை சேவையும் சந்தையை கடந்து தான் போக வேண்டும்.

உண்மையில் பங்குச்சந்தையில் பணப்பாதுகாப்பு இல்லையா ?

உங்களிடம் அப்படி யார் சொன்னது ? அரசாங்கம் சொன்னதா அல்லது நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனம் சொல்லியதா ?

பங்குச்சந்தை என்பது தொழில் சார்ந்த களம். தொழில் செய்யும் நிறுவனங்கள் பல  தங்கள் தொழிலுக்கு தேவையான முதலீட்டை ஈர்க்க பங்குச்சந்தைக்கு வரும். அங்கே யார் வேண்டுமானாலும், அவர்களுக்கு பிடித்த நிறுவன பங்குகளை வாங்கலாம். எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். ஆனால் பணத்திற்கான பாதுகாப்பு ?

ஆம், பாதுகாப்பு இல்லையென்றால் நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனம் அங்கே இருக்க கூடாது அல்லவா ! உங்கள் அரசாங்கமும், உங்களது சம்பளத்தில் பிடித்தம் செய்த தொகையை பங்குச்சந்தையில் முதலீடு செய்து வருகிறதே !

பங்குச்சந்தை என்பது ஒரு முதலீட்டு சாதனம். முதலீடு என்றாலே ரிஸ்க் தன்மை கொண்டது தான். ரியல் எஸ்டேட், தங்கம் மற்றும் தொழில் புரிவது போல. தங்கத்தின் ஏற்ற-இறக்கத்தை பற்றி நீங்கள் நித்தமும் கவலை கொள்வீர்களா ? அப்புறம் ஏன், பங்குச்சந்தையில் மட்டும் உங்களிடம் ஒரு வினோத போக்கு காணப்படுகிறது. தக்காளி விலை இறங்கினால் உங்களுக்கு மகிழ்ச்சி தானே, விவசாயிக்கு தான் சற்று பொருளாதார இழப்பு இருக்கும். உங்களுக்கு விலை குறைவாக கிடைத்தால் லாபம் தானே, நல்ல தக்காளியை வாங்க பழக வேண்டும். அவ்வளவு தான் பங்குச்சந்தையில்.

நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் பாதுகாப்பானது தானா ? உண்மையில் பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டவை தான். தீர்வு என்னவென்றால், ரிஸ்க் தன்மை கொண்டது தான் முதலீடு, அதனால் மட்டுமே உங்களால் நீண்டகாலத்தில் செல்வவளத்தை பெருக்க முடிகிறது – தங்கத்தில், வீட்டுமனையில், தொழிலில் மற்றும் பங்குச்சந்தையிலும். ஆனால் நாம் பங்குச்சந்தையில் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்றால் ஒரு ரியல் எஸ்டேட் அதிபரை போல, நகைக்கடை உரிமையாளரை போல, ரம்மி விளையாடுவது போல. அது உங்கள் வேலையல்ல… நீங்கள் ஏற்கனவே பார்க்கும் வேலையை பார்த்து கொண்டு அல்லது தொழிலை செய்து கொண்டு, உங்களிடம் உள்ள உபரி தொகையை(Surplus cash to wealth) சிறுக சிறுக முதலீடு செய்து நீண்டகாலத்தில் முதலீட்டு பெருக்கத்தை ஏற்படுத்துவதே. ஆனால் நாம் பங்குச்சந்தையில் நுழைந்தவுடன் ஒரு அனுபவம் கொண்ட மருத்துவரை போல செயல்பட்டு கொண்டிருக்கிறோம். அடிப்படை கற்றலை நாம் மேற்கொள்வதில்லை.

அம்பானி, அதானியை போல மாற வேண்டுமென்று வெறும் ஆறு மாதங்களில் அல்லது சில வாரங்களில் அடைய முயற்சிக்கிறோம். அவர்கள் பங்குச்சந்தையில் கிடைக்கப்பெறும் முதலீட்டை கொண்டு தொழில் தான் செய்து வருகின்றனர். நீங்கள் உங்களது கடினமான உழைப்பால் கிடைத்த ஊதியத்தை கொண்டு, சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருப்பது நல்லதல்ல. இன்னும் சிலரோ பங்குச்சந்தையை பகுதி நேர வேலையாகவும்(Day Trading), அதன் மூலம் வருவாய் நிறைய கிடைக்கப்பெறும் எனவும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

பொதுவாக பங்குச்சந்தையில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பை விட, தனியார் நிறுவனங்களின் பங்களிப்பும், அதன் செயல்பாடுகளும் அதிகம். பொதுத்துறை நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு தேவையான டிவிடெண்ட் தொகையை அளித்து வரும் நிலையில், ஈவுத்தொகையை(Dividend) மட்டுமே கருத்தில் கொள்வோர், தங்களது போர்ட்போலியோ பிரிவில் சிறிய அளவில் இது போன்ற பங்குகளை வைத்து கொள்ளலாம். ஆனால் அவை பெரும்பாலான சமயங்களில் முதலீட்டு பெருக்கத்தை ஏற்படுத்தாது என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் பொதுத்துறை நிறுவனங்களில் தான் முதலீடு செய்ய வேண்டுமென எண்ணினால், 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்குச்சந்தையில் உள்ளன. பொதுத்துறை நிறுவனங்கள் மகாரத்னா, நவரத்னா, மினிரத்னா என பிரிக்கப்பட்டுள்ளன.

பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களில் 45 மத்திய பொதுத்துறை நிறுவனங்களும், 12 பொதுத்துறை வங்கிகளும், மாநில அளவில் ஒரு நிறுவனமும் மற்றும் பிற பிரிவின் கீழ் ஒரு நிறுவனமும் உள்ளது. வங்கிகள் பிரிவில் எஸ்.பி.ஐ., கனரா வங்கி, இந்தியன் வங்கி, பஞ்சாப் நேஷனல், யூனியன் வங்கி, சென்ட்ரல் பேங்க் உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை வங்கிகளிலும் பங்குச்சந்தையில் உள்ளன.

இந்திய ரயில்வே சார்பில் ரைட்ஸ் லிமிடெட், ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட்(RVNL), இர்கான்(IRCON), ஐ.ஆர்.சி.டி.சி., கன்கார்(Concor), ஐ.ஆர்.எப்.சி. போன்ற நிறுவனங்கள் உள்ளன. நடப்பு வருடத்தில் ரயில்வேயின் ரயில் டெல் நிறுவனமும் இணைய உள்ளது.

எண்ணெய் நிறுவனத்தில் பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம்(HPCL), சென்னை பெட்ரோலியம், மங்களூரு பெட்ரோ கெமிக்கல், ஆயில் இந்தியா, ஓ.என்.ஜி.சி., கெயில், பால்மர் லாரி(Balmer Lawrie), என்ஜினீயர்ஸ் இந்தியா போன்ற நிறுவனங்கள் பொதுத்துறை பிரிவில் உள்ளன.

எரிசக்தி துறையில் எஸ்.ஜே.வி.என்.(SJVN), பவர் கிரிட், தேசிய வெப்ப மின் நிறுவனம்(NTPC), என்.எல்.சி.(NLC), என்.எச்.பி.சி.(NHPC), ரூரல் எலக்ட்ரிக்(REC) ஆகிய நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.

உலோகம் மற்றும் சுரங்க தொழிலில் கோல் இந்தியா, இந்துஸ்தான் காப்பர், எம்.எம்.டி.சி., மாயில்(MOIL), என்.எம்.டி.சி.(NMDC), செயில்(Steel Authority of India), குஜராத் மினரல், மிதானி, தேசிய அலுமினிய நிறுவனம் போன்ற நிறுவனங்களும், கனரக பொறியியல் துறையில் பெம்மல்(BEML), பாரத் டைனமிக்ஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ், பெல்(BHEL), இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் மற்றும் தொலைத்தொடர்பு துறையில் ஐ.டி.ஐ. நிறுவனமும் உள்ளது.

கப்பல் போக்குவரத்து துறையில் சில பொதுத்துறை நிறுவனங்களும் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. நாட்டில் சுமார் 250க்கும் மேற்பட்ட மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் இருக்கும் நிலையில், பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பு 25 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வருடங்களாக அரசு துறையில் உள்ள நிறுவனங்களில் பங்கு விலக்கல் நடவடிக்கையும் மத்திய அரசு சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நட்டத்தில் இயங்கும் நிறுவன பங்குகளை அரசு குறைத்து வருவது கவனத்தில் கொள்ள வேண்டியவை.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஐ.பி.ஓ. வெளியீட்டுக்கு தயாராகும் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ்

ஐ.பி.ஓ. வெளியீட்டுக்கு தயாராகும் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் 

Getting ready for the IPO this year – Star Health Insurance

நாட்டின் முதல் முழுமையான மருத்துவ காப்பீட்டு சேவையை அளித்த நிறுவனம், ஸ்டார் ஹெல்த் & அலைடு இன்சூரன்ஸ்(Star Health & Allied Insurance). 2006ம் ஆண்டு தனது தொழிலை துவங்கிய இந்நிறுவனம் மருத்துவம், தனிநபர் விபத்து காப்பீடு மற்றும் வெளிநாட்டு பயண காப்பீடு ஆகிய சேவைகளை வழங்கி வருகிறது. நாடு முழுவதும் 600 க்கும் மேற்பட்ட கிளைகளையும், 13,000 பணியாளர்களையும் கொண்டு ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது.

மருத்துவ காப்பீட்டு துறையில்(Standalone Health insurance) முன்னணியில் உள்ள இந்நிறுவனத்தின் 2019-20ம் நிதியாண்டுக்கான மொத்த எழுதப்பட்ட பிரீமியத்தின் மதிப்பு ரூ.6,865 கோடி. மார்ச் 2020 முடிவின் படி, நிறுவனத்தின் நிகர மதிப்பு 1,889 கோடி ரூபாய். நாடு முழுவதும் சுமார் 10,000 க்கும் மேற்பட்ட பணமில்லா சிகிச்சைக்கான மருத்துமனைகளை உள்ளடக்கியுள்ளது.

தமிழகத்தை தலைமையிடமாக கொண்டிருக்கும் இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரியாக திரு. ஜெகந்நாதன் உள்ளார். காப்பீட்டு துறையில் 50 வருடங்களுக்கு மேலான அனுபவமும், பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் முக்கிய பதவிகளை வகித்த அனுபவமும் இவருக்கு உண்டு. நிறுவனத்தின் முதன்மை முதலீட்டாளர்களாக பிரபல பங்குச்சந்தை முதலீட்டாளர் மற்றும் இந்தியாவின் வாரன் பப்பெட் என்றழைக்கப்படும் திரு. ராகேஷ் ஜூன்ஜூன்வாலா, மேடிசன் கேப்பிடல் மற்றும் வெஸ்ட்பிரிட்ஜ் கேப்பிடல் நிறுவனங்கள் உள்ளன.

இயக்குனர் குழுவில் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா, அனிசா மோத்வானி, பத்மஸ்ரீ கார்த்திகேயன், அருண் துக்கல் மற்றும் வெஸ்ட்பிரிட்ஜ், மேடிசன் கேப்பிடல் நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகள் உள்ளனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் மருத்துவ காப்பீட்டின் தேவை அதிகரித்து வந்தது குறிப்பிடத்தக்கது. அப்போதைய துவக்க நிலையில், ஸ்டார் ஹெல்த் நிறுவனமும் தனது பாலிசிதாரர்களுக்கான இன்சூரன்ஸ் தொகையை மருத்துவமனைகளில் அதிகமாக வழங்கியிருந்தது.

ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் மதிப்பு சுமார் மூன்று பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய பங்குச்சந்தையில், இந்த நிறுவனம் 3000 கோடி ரூபாய்க்கு அளவுக்கு முதலீட்டை திரட்ட உள்ளதாக தெரிகிறது. நிறுவனத்தின் சில்லறை சந்தை(Retail Segment) 92 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. நாட்டின் மொத்த மருத்துவ காப்பீட்டு சேவையில் 50 சதவீத பங்குகளை ஸ்டார் ஹெல்த் கொண்டுள்ளது.

ஐ.பி.ஓ.(IPO) வெளியீட்டை நிறைவு செய்தால், இந்திய பங்குச்சந்தைக்கு வரும் முதல் மருத்துவ காப்பீட்டு சேவை நிறுவனம் என்ற நிலையை ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் பெறும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இன்போசிஸ் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் – ரூ.5,197 கோடி

இன்போசிஸ் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் – ரூ.5,197 கோடி 

Infosys net profit of Rs.5,197 Crore – Q3FY21

இந்திய பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ், 2020-21ம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டு முடிவுகளை(Quarterly results) வெளியிட்டுள்ளது. மூன்றாம் காலண்டான டிசம்பர் 2020 காலத்தில் நிறுவனத்தின் வருவாய் 25,927 கோடி ரூபாயாகவும், செலவினம் 18,512 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.

சொல்லப்பட்ட காலாண்டில் இயக்க லாப விகிதம் 29 சதவீதமாக உள்ளது. இந்நிறுவனத்தின் சராசரி காலாண்டு இயக்க லாப விகிதம்(Operating Profit Margin) 25 சதவீதத்திற்கு மேலாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதர வருமானமாக 610 கோடி ரூபாய் சொல்லப்பட்டுள்ளது. மூன்றாம் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.5,197 கோடியாக உள்ளது.

நடப்பு நிதியாண்டின் ஒன்பது மாத முடிவில் நிறுவனத்தின் வருவாய் ரூ.63,415 கோடியாகவும், நிகர லாபம் 13,588 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இதுவரை பங்கு ஒன்றுக்கு 12 ரூபாய் ஈவுத்தொகையாக அளிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் காலாண்டில் ஈவுத்தொகை(Dividend) எதுவும் அறிவிக்கப்படவில்லை.

இன்போசிஸ்(Infosys) நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.5.84 லட்சம் கோடி. 1981ம் ஆண்டு 250 டாலர்களை கொண்டு, ஏழு பொறியியலார்களால் துவங்கப்பட்ட இந்நிறுவனம் இன்று பில்லியன் டாலர் பன்னாட்டு நிறுவனமாக மாறியுள்ளது. இதன் கிளைகள் பல நாடுகளிலும், நூறுக்கு மேற்பட்ட துணை நிறுவனங்களும், சுமார் 2.43 லட்சம் பணியாளர்களும் இன்போசிஸ் நிறுவனத்தின் வெற்றிக்கு அடையாளமாக உள்ளது.

நிறுவனத்தின் கடன்-பங்கு விகிதம்(Debt to Equity) 0.07 ஆகவும், வட்டி பாதுகாப்பு விகிதம் 134 மடங்கிலும் உள்ளது. கடந்த பத்து வருடங்களில் விற்பனை  வருவாய் 15 சதவீதமாகவும், லாபம் 10 சதவீதமாகவும் வளர்ச்சி பெற்றுள்ளது. கடந்த ஒரு வருட காலத்தில் இந்த பங்கின் விலை 80 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது.

நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு 69,492 கோடி ரூபாயாகவும், பணவரத்து(Cash flow) ஒவ்வொரு நிதியாண்டிலும் நிறுவனத்திற்கு சாதகமாக உள்ளது. நிறுவனர்கள் சார்பில் பங்குகள் அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் டிசம்பர் மாத சில்லரை விலை பணவீக்கம் – 4.59 சதவீதம்

நாட்டின் டிசம்பர் மாத சில்லரை விலை பணவீக்கம் – 4.59 சதவீதம் 

India’s Retail Inflation to 4.59 Percent – December 2020

நாட்டின் நுகர்வோர் விலை பணவீக்கம்(Consumer price index) என சொல்லப்படும் சில்லரை விலை பணவீக்கம், கடந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தில் சந்தை எதிர்பார்த்ததை விட குறைவான அளவில் முடிந்துள்ளது. பாரத ரிசர்வ் வங்கியின் குறுகிய கால இலக்காக 2-6 சதவீதம் என்ற நிலையை கொண்டுள்ளது.

கடந்த பல மாதங்களாக சில்லரை பணவீக்கம் கட்டுக்குள் இல்லாமல், மத்திய வங்கியின் இலக்கினை தாண்டி தான் வந்துள்ளது. வங்கி வட்டி குறைந்து வரும் நிலையில், நுகர்வோர் விலை பணவீக்க விகிதம் சற்று அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் டிசம்பர் மாதத்தில் எதிர்பாராமல், 4.59 சதவீதம் என்ற அளவில் முடிந்துள்ளது. 2020ம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் இது 6.93 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் 2020 மாத பணவீக்கம் கடந்த 15 மாதங்களில் காணப்படாத குறைவான விகிதமாக சொல்லப்படுகிறது. இதற்கு காரணமாக சொல்லப்படுவது உணவுப்பொருட்களில் காணப்பட்ட விலை குறைவு தான். முன்னர் 9.50 சதவீதமாக இருந்த உணவுப்பொருட்களின் பணவீக்க விகிதம் தற்போது 3.41 சதவீதமாக(டிசம்பர் 2020) இருந்துள்ளது.

புகையிலை பொருட்களின் பணவீக்கம் மட்டும் சற்று உயர்ந்து 10.74 சதவீதத்தில் நிறைவு பெற்றுள்ளது. நவம்பர் மாதத்தில் 3.19 சதவீதமாக இருந்த வீட்டுமனை துறை, டிசம்பர் மாதத்தில் 3.21 சதவீதமாக இருந்துள்ளது. இது போல ஒளி மற்றும் எரிபொருட்களின்(Light & Fuel) பணவீக்கம் 1.90 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக அதிகரித்துள்ளது.

விழா காலங்களில் காணப்பட்ட தேவையால், துணிமணிகள் மற்றும் காலணிகளின் விலைவாசியும் சற்று உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் முதன்முறையாக தற்போது தான் மத்திய வங்கியின் பணவீக்க இலக்கிற்குள் சில்லரை விலை பணவீக்க விகிதம் வந்துள்ளது. டிசம்பர் மாதத்திற்கு சந்தை எதிர்பார்த்த 5.28 சதவீதத்தை விட குறைவாகவும் பணவீக்க விகிதம்(CPI Retail Inflation) இருந்துள்ளது. அடுத்து வரும் காலக்கட்டங்களில் விலைவாசி குறையும் நிலையில், பாரத ரிசர்வ் வங்கியின் வட்டி விகித மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.

பொதுவாக பணவீக்கம் குறைவாக இருக்கும் போது, வங்கி வட்டி விகிதமும் குறைவாக தான் காணப்படும். இது பங்குச்சந்தைக்கு சாதகமான நிலையாக மாறும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வாராக்கடன் சிக்கல் – ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வாராக்கடன் சிக்கல் – ரிசர்வ் வங்கி எச்சரிக்கை  

Bad loans issue not seen in last 20 years – RBI Financial Stability Report 2021

கடந்த வெள்ளிக்கிழமை(08-01-2021) அன்று பாரத ரிசர்வ் வங்கி சார்பில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், கொரோனா பெருந்தொற்று ஊரடங்கின் போது நிதி சந்தையில் அனுமதிக்கப்பட்ட பணப்புழக்கத்தை திரும்ப பெற போவதாக பாரத ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. பணப்புழக்க மேலாண்மை கட்டமைப்பின்(Revised Liquidity Management Framework) கீழ் ஜனவரி 29,2021 அன்று வங்கிகளிடம் இருந்து ரூ.2,00,000 கோடியை ரிவர்ஸ் ரெப்போ விகிதத்தில் மத்திய வங்கி வாங்க உள்ளது.

இதன் காரணமாக சந்தையில் உள்ள பணப்புழக்கம் சற்று குறையும். மேலும் கொரோனாவுக்கு முன்னர் இருந்த சாதாரண பணப்புழக்கத்தை ஏற்படுத்த உள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ரிவர்ஸ் ரெப்போ(Reverse REPO) விகிதம் என்பது நாட்டில் உள்ள வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கி பணம் பெறுவது அல்லது கடன் பெறும் நடவடிக்கையாகும்.

சொல்லப்பட்ட நிகழ்வின் தொடர்ச்சியாக நேற்று(11-01-2021) வெளியிடப்பட்ட நிதி நிலைத்தன்மை அறிக்கையில்(Financial Stability Report) சில பொருளாதார விஷயங்கள் அலசப்பட்டன. பெருந்தொற்று காலத்தில், மத்திய வங்கியின் கொள்கை செயல்பாடுகள் பொருளாதார சரிவை குறைத்ததாகவும், தொழில் மற்றும் தனிநபர் வருவாயில் ஏற்பட்ட சிக்கலை மீட்டெடுப்பதற்கும் உதவியதாக ரிசர்வ் வங்கி சொல்லியுள்ளது.

தடுப்பூசி வளர்ச்சி நேர்மறையான செய்தியாக இருந்தாலும், இரண்டாம் அலை அதிகப்படும் நிலையில் அது பொருளாதாரத்தை மேலும் பாதிக்கலாம். வங்கிகளின் கடன் வளர்ச்சி அடக்கமாக உள்ளதாகவும், ஒழுங்குமுறை விநியோகங்களின் உதவியுடன் வங்கிகளின் செயல்திறன் மேம்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

அதே வேளையில் செப்டம்பர் 2020 முடிவின் படி, நாட்டில் உள்ள வணிக வங்கிகளின் ஒட்டுமொத்த வாராக்கடன் விகிதம்(GNPA) 7.5 சதவீதமாக இருந்துள்ளது. இது வரும் செப்டம்பர் 2021க்குள் 13.5 சதவீதமாக உயரக்கூடும் எனவும் பாரத ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வரக்கூடிய காலங்களில் உலக பொருளாதாரம் கடும் மந்தநிலையை அடையும் நிலையில், இந்த வாராக்கடன் விகிதம் 14.8 சதவீதம் வரை செல்லக்கூடும் எனவும் மத்திய வங்கி எச்சரித்துள்ளது.

கடந்தாண்டின் செப்டம்பர் காலத்தின் படி, பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக்கடன் விகிதம் 9.7 சதவீதமாக உள்ளது. அடிப்படை நிலையில்(Base Scenario) இந்த விகிதம் 2021ம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் 16.2 சதவீதம் வரை செல்லலாம் என சொல்லப்பட்டுள்ளது. இது தனியார் வங்கிகளில் 4.6 சதவீதத்திலிருந்து 7.9 சதவீதமாகவும், அன்னிய வங்கிகளில் 2.5 சதவீதத்திலிருந்து 5.4 சதவீதமாக செல்லும் என கூறப்பட்டுள்ளது.

கடுமையான பொருளாதார மந்தநிலையில் பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக்கடன் விகிதம் 17.6 சதவீதம், தனியார் வங்கிகளில் 8.8 சதவீதம் மற்றும் அன்னிய வங்கிகளில் 6.5 சதவீதமாக இருக்கலாம் என பாரத ரிசர்வ் தெரிவித்துள்ளது.

இது போன்ற நிலை கடந்த 20 வருடங்களில் காணப்படாத வாராக்கடன்  விகிதமாக இருக்கலாம். கடந்த சில வருடங்களாக மத்திய வங்கி சார்பில், நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளிலும், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களிலும் பணப்புழக்கத்தை ஏற்படுத்துவதற்காக மூலதன உட்செலுத்தல்(Capital Infusion) நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com